முனைவர் மு.ரமேஷ் கதைகள்

-முனைவர் மு.ரமேஷ்
இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை - 600005. தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல்: arampozhila@gmail.com பேச, 9176949452.
அளவையியல் நோக்கில் கிளவியாக்கத்தைக் கற்பித்தல்
முன்னுரை
மொழியமைப்பையும் அதற்குள் செயல்படும் விதிகளையும் புரிந்து கொள்வதற்கு இலக்கணம் உதவுகிறது. இலக்கண அமைப்பையும் அதற்குள் செயல்படும் விதிகளையும் (தருக்கங்களையும்) புரிந்துகொள்ள உதவக் கூடியது தருக்கவியல் எனப்படும் அளவையியலாகும். எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, படுத்தல் அளவை, நீட்டல் அளவை என்பன புறவடிவுடைய பொருட்களை அளக்க உதவும் அளவைக் கருவிகளாகும். இது போன்று மொழியிலக்கணம் என்கிற பருண்மையை அளந்தறிய உதவக் கூடியது அளவையியலாகும். இது தருக்கவியல் என்று சொல்லப்படுகிறது. தருக்கம் உலக மெய்ம்மைகளைக் கண்டறிவதற்கு மெய்யியல் ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும். தமிழில் இயங்கியுள்ள தொல்லாசிரியர்களாக அறியப்படும் புனைவிலக்கியவாதிகளும் இலக்கணிகளும் உரைகாரர்களும் மெய்ம்மைகளையும் மெய்யியல்சார் அளவை முறைகளையும் நன்கு அறிந்தோராக உள்ளனர். தொல்காப்பியரும் இம்மரபில் வந்தவர் என்பதனை இலக்கணத்தை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. நாம் வினா – விடையமைப்பில் உரையாடிக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறோம். சொற்களைப் பிழையில்லாமல் பேசுவதற்கான வழிமுறைகளைக் கிளவியாக்கம் எடுத்துரைக்கிறது. இதனை நன்கு புரிந்துகொள்வதற்கு அளவையியல் உதவுகிறது. இதனால் அளவையியல் நோக்கில் கிளவியாக்கத்தைக் கற்பிக்கச் சில செய்திகள் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன . அந்த அளவில் அளவை, அதன் விளக்கம், அளவை வாதமும் இந்திய மெய்ம்மைவாதிகளும், அளவை வகை, அளவைப் போலி, கிளவியாக்க அமைப்பு, செப்பலும் வினாவும் வழுவும், வழு அமைதி, பெயர் முறைகள், இயற்கை -செயற்கை, இனஞ்செப்பல் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
அளவையியல் – விளக்கம்
உரையாடலில் இடம்பெறும் ஒரு கூற்றையோ கருத்தையோ கண்டு கேட்டு, உற்று, உய்த்து அறிந்து காரண காரிய அடிப்படையில் விளக்கும் முறைக்கு அளவையியல் என்று பெயர். இது நியாய சாஸ்திரம், தருக்க சாஸ்திரம் என்றும் வடமொழியில் சுட்டப்படுகிறது. பிரமாணம் என்பதுவும் இதனைக் குறிக்கும் இன்னொரு பெயராகும். நியாய ஸூத்ரா என்பது, தனித்த இத்துறையைச் விளக்கும் முதல் நூலாகும். வரலாறு நெடுக அளவையியல் பயிற்சியில் இருந்திருக்கிறது என்பதனை மணிமேகலை, நீலகேசி, சிவஞானபோதம், சர்வ தரிசன சங்கிரகம், உவமான சங்கிரகம் தொடங்கிப் பல நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது. கற்பித்தல் கற்றலுக்காக வேண்டி தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொருளுரைத்தல், உரை வரைதல், மொழிபெயர்த்தல் நடைபெற்றுள்ளன. இதனை, (A Manual of Logic – J .Velton , M .I . Tarkabhasha – – Kesava Misra . தருக்க சங்கிரகம், நியாயபோதினி, பத கிருத்தியம், அனுபதீயம் , நீலகண்டீயம் . The six systems of Indian Philosophy – Max Muller). மணிமேகலை, தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை . அநுமான விளக்கம் – திரு. நாராயணைய்யங்கார். சிவஞானசித்தியார், அளவை. நியாய இலக்கணம் – William Nevills. நூற்றொகை விளக்கம் – பி. சுந்தரம் பிள்ளை, செந்தமிழில், S . பால்வண்ண முதலியாரும் பிரபோத சைதன்னியரும் வரைந்த வியாசங்கள். Sanskrit – English Dictionary – Monier Williams. English – Sanskrit Dictionary – Monier Williams. தமிழ் அகராதி – Madras University . English – Tamil Dictionary – P. Percival Dictionnaire Francais – Tamoul – Deux Mission – Dictionaires Apostoliques ME. போன்றவற்றிலிருந்து அறியமுடிகிறது. நியாயம் செய்வோர், தருக்கமுறையில் விவாதிப்போர் நையாய்கர் எனப்படுவர். இவர்கள் நியாயம், வைசேடிகம் போன்ற மெய்யியல்வாதிகளாக எடுத்துரைக்கப்படுகின்றனர். பண்டைய இந்தியத் துணைக் கண்டத்தில் பத்துவகையான மெய்ம்மைப் பள்ளிகள் இருந்ததனை மணிமேகலைக் காப்பியம் விளக்குகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமய நிறுவனமாகவும் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பள்ளியும் தனித்தனிப் பிரமாணம் எனப்படுகிற அளவை முறையைப் பின்பற்றின. உலகாயதம், புத்தம், சமணம், வேதம், பிரம்மம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், ஆசீவகம் எனவரும் ஒவ்வொரு மெய்ம்மைப் பள்ளிக்கும் ஒவ்வொரு தலைவர்கள் இருந்தனர். தாங்கள் கொண்டிருந்த கருத்துநிலைக்கேற்ப அளவையை முதன்மைப்படுத்தினர்.
அளவை வகை
1.காட்சி
2. அனுமானம்
3.உவமை
4.நூல்
5.அருத்தாபத்தி
6. இயல்பு
7. ஐதீகம்
8. அபாவம்
9.மீட்சி
10.ஒழிபு
எனப் பத்து அளவைகள் பண்டைய காலத்தில் இருந்தன.
‘காண்டல் கருதல் உவமம் ஆகமம்
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு 27-010
ஐததீகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால்
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும்’ (மணி.27, 1-12)
இவற்றுள் காட்சி முதல் இயல்பு வரையுள்ள 6 அளவை முறைகளை முதன்மையாக உடைய ஆறு தரிசனங்கள் மெய்ம்மைப் பள்ளிகளாக நிலைபெற்றன. பிரகஸ்பதியைத் தலைவராக உடைய உலகாய்தம் காட்சியையும், கவுதம புத்தரைத் தலைவராக உடைய பவுத்தம் காட்சியோடு கருதலையும், கபிலரைத் தலைவராக உடைய சாங்கியம் காட்சி, கருதல் இவற்றோடு உவமையையும் அக்கபாதரைத் தலைவராக உடைய நியாயம் காட்சி, கருதல், உவமையோடு நூல் அல்லது ஆகமத்தையும், கனாதரைத் தலைவராக உடைய வைசேடிகம் காட்சி, கருதல், உவமை, நூலோடு அருத்தாபத்தியையும், சயமினியைத் தலைவராக உடைய மீமாம்ஸை மேலே சொன்ன ஐந்தோடு இயல்பையும் மெய்ம்மைகளை விளக்குவதற்கான அளவைகளைக் கைக்கொண்டன. தொல்காப்பியம் மொழி அமைப்பை விளக்குவதோடு மொழிப் புலனாக்கத்திற்கான அடிப்படை மெய்ம்மைகளையும் விளக்குகிறது.
மொழிப் புலனாக்கமும் உணர்ச்சி வாயில்களும்
மொழியை உள்வாங்கவும் வெளிப்படுத்தவுமான உடல் உறுப்புகளை, தொல்காப்பியர் உணர்ச்சி வாயில்கள் என்று சுட்டுகிறார். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐந்து உறுப்புகளினாலும் மொழி புலனாக்கம் செய்யப்படுகிறது. இவற்றை ‘ஐம்பொறிகள்’ என்று மெய்ம்மை வாதிகளும் பொறிவாயில்கள் என்று திருவள்ளுவரும் சுட்டுகின்றனர். இவ்வைந்து உணர்ச்சி வாயில்களால் புலமாக மாறும் ஒன்றுதான் மனம் என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். ‘உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே. (தொல், சொல், 776. தமிழண்ணல் பதிப்பு) ‘கண்ணினும் செவியினும் உணர்வுடைய மாந்தர்….’ (தொல், பொருள், தொகுதி-3. 1021. தமிழண்ணல்) ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொக மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. (மேலது 1526 ) போன்ற தொல்காப்பிய வரிகள் மொழிப் புலனாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன . இதனால் மனதை மொழிக் கிடங்கு என்று மொழியியல் உள்ளிட்ட நவீனக் கோட்பாடுகள் விளக்குகின்றன. காட்சி, கருதல் உள்ளிட்ட அளவை முறைகளுக்கான அடிப்படைகளும் இவைதாம்.
அடிப்படை அளவைகள்
காட்சிமுதலா மேலே சொல்லப்பட்டுள்ள பத்தும் அடிப்படை அளவைகளாகும். இலக்கணத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பிற்குள் சென்றவுடன் சில தொடர்களை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும். வினா வாக்கியமாகவோ செய்தி வாக்கியமாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக,
"இந்தச் செடி மரமாகும், மாமரத்தில் தங்கம் காய்க்கும், யானை போல மலை, வேப்பமரத்தில் பேய் இருக்கிறது, ஐ.பி.எல். இல் சென்னையணி வென்றது"போன்ற தொடர்களைச் சொல்லி உரையாடவேண்டும். ‘இந்தச் செடி மரமாகும்’ என்பது அனுமான அளவையாகும். செடி மரமாகிறது என்பதனை மனிதர்கள் அனுபவமாகக் கண்டுணர்ந்துள்ளனர். இது இக்காரணத்தால் இக்காரியம் உண்டு என்பதனைப் புரியவைக்க வேண்டும். ‘யானை போல மலையிருக்கிறது’- இது உவமையைச் சொல்லி விளக்குவதனால் உவமையளவையாகும். ‘மாமரத்தில் தங்கம் காய்க்கும்’ என்பதற்கு இணையானவை கற்பகத்தரு, அட்சயப் பாத்திரம் என்பவை. இதனை நூலின் வாயலாக அறிவதனால் இது நூல் அல்லது ஆகம அளவையாகும். ‘வேப்பமரத்தில் பேய் இருக்கிறது’ என்பது வழிவழியாகச் சொல்லப்படும் நம்பிக்கை; அதாவது ஐதீகம். ஆதலால் இது ஐதீக அளவையெனப்படும். ‘ஐ. பி. எல். இல் சென்னையணி வென்றது’ என்கிற தொடரில் குஜராத் அணி தோற்றது. என்பதனை மீட்டெடுக்கிறோம். இதனால் இது மீட்சியளவையாகும். இவற்றை ஆசிரியர்கள் முதலில் புரிந்துகொண்டு இலக்கணத்தை வாசிக்கவேண்டும். பிறகு மாணவர்களுக்குச் சொல்லவேண்டும். இதுபோல அடிப்படை அளவைகள் பத்தோடு அளவைப் போலிகள் எட்டு உள்ளன. அளவைப் போலிகளைப் புரிந்துகொள்வதன் மூலம் கிளவியாக்கத்தில் வரும் செப்பல், வினா, இவற்றில் வரும் மயக்கங்கள், வழு, வழுவமைதி, வழுக் காத்தல் போன்றவற்றைப் புரிந்து கொள்ளமுடியும்.
அளவைப் போலிகள்
மெய்ம்மைவாதிகள் பிரமாண ஆபாஸங்கள் எனச் சுட்டுவதனை, சீத்தலைச் சாத்தனார் அளவைப் போலிகள் எனத் தமிழ்ப்படுத்துகிறார்.
1. சுட்டுணர்வு – உண்மையை மட்டும் சுட்டுவது.
2. திரியக் கோடல் – வெயிலில் இருக்கும் சிப்பியை வெள்ளியென்று உணர்வது.
3. ஐய்யம் தோன்றுவது – குற்றியோ மகனோ என்று ஐயுறுவது.
4. தேராத் தெளிதல் – பொதுவெளியில் உள்ள கட்டையைத் தூரத்தில் இருந்துகொண்டு மகனென்று தெளிதல். 5. கண்டுணராமை – புலியால் வரும் தீமையை உணராமல் அதன் பக்கத்தில் இருத்தல்.
6. உணர்ந்ததை உணர்தல் – குளிருக்குத் தீக்காய்ந்தால் போய்விடும் என்பதனைக் குளிரும் போதெல்லாம் உணர்தல்.
7. இல்வழக்கு – வழக்கில் இல்லாதது ; முயல் கொம்பு.
8. நினைத்தல் – உனக்கு இவர்கள்தான் தாயும் தந்தையும் என்று சொன்னால் காரணமில்லாமல் அதனை நினைத்துக் கொண்டிருப்பது.
இவை போன்ற அளவைகள்தான் கிளவியாக்கத்தில் வருகின்றன.
கிளவியாக்கம் – விளக்கமும் அமைப்பும்
பொருள் மயக்கமோ, திரிபோ, வழுக்களோ, தடுமாற்றமோ இன்றிச் சொற்றொடர்களை ஆக்கிப் பயன்படுத்து வது குறித்து விளக்குவது கிளவியாக்கமாகும். திணை, பால், இயற்கை, செயற்கை, உள்ளிட்ட பெயர் வாக்கியங்களையும் வரவு, செலவு, தரவு, கொடை போன்ற வினை வாக்கியங்களையும் கிளவியாக்கம் விளக்குகிறது. 61 நூற்பாக்களைக் கொண்டுள்ள கிளவியாக்கம் பின்வரும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. திணை, பால், எண், விகுதிகள் -1, 10. வரையுள்ள நூற்பாக்கள் அமைகின்றன. திணை, பாலுக்கான புறனடை – 11,12. ஆகிய இரு நூற்பாக்கள் சுட்டுகின்றன. செப்பல், வினா எனச் சொல்லப்படுகிற விடை, வினா குறித்து 13 முதல் 16 வரையுள்ள நூற்பாக்கள் சுட்டுகின்றன. தகுதி வழக்கில் வரும் மூவடிவங்கள் குறித்து 17 ஆம் நூற்பாவும் (இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை) 18 ஆம் நூற்பாவும் சுட்டுகின்றன. இயற்கை, செயற்கை, ஆக்கத்திற்கான கரணங்கள் குறித்து 19 முதல் 21 வரையுள்ள நூற்பாக்கள் சுட்டுகின்றன. அடுத்த நிலையில் பால்மயக்கம், ஐயம், திரிபு, தெளிவு ஆகியன குறித்து 22 முதல் 25 வரையுள்ள நூற்பாக்கள் சுட்டுகின்றன. தன்மொழி ஆகியவை இந்தத் தொடர்வரிசையில் அமையும் என்பதனை 26 ஆம் நூற்பாவும் இலக்கணம் சொல்ல முடியாது -27 ஆம் நூற்பாவும் சுட்டுகின்றன. செல், வா, தா, கொடு – சொற்கள் மூவிடத்தும் வரும் – 28,29,30 ஆகிய நூற்பாக்கள் சுட்டுகின்றன. வினாவகை, விடைவகை – 31 முதல் 36.வரையுள்ள நூற்பாக்கள் சுட்டுகின்றன. சுட்டுப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள் , மூவிடப் பெயர்களை 38.முதல் 43.ஆம் வரையுள்ள நூற்பாக்கள் சுட்டுகின்றன. ஒருவன், ஒருத்தி ஆகியவை ஒருமை – 44. வியங்கோளில் திணைவிரவுப் பெயர்கள் சேர்ந்து வரும் – 45. வினமுடிபுகள் – வேறுவினை, பொதுவினை – யாழ் மீட்டினார், குழல் ஊதினார், பறை முழக்கினார் என வேறு வினை தருக – 46. யாழும், குழலும், பறையும் இயம்பினார் எனப் பொதுவினை தருக – 47 இரட்டைக்கிளவி பிரிந்து இசைக்காது – 48 ஒருபெயர்ப் பொதுச்சொல் – 49 பிரிசொல் -50 இருதிணைப் பெயர்களைச் சேர்த்து எண்ணினால் அஃறிணை முடிபு தரவேண்டும். – 51 பலபொருள் ஒருசொல் இரண்டு வகை – 52, 53, 54, 55 தெரித்துமொழி கிளவி – 56 முன்னத்தின் உணரும் கிளவி என்று – 57 எனினும் காலன் என்பது போன்ற சொல்லும் அமையும் – 60 இனம் செப்பல் – 61 என மாணவர்களுக்கு முதலில் அறிமுகம் செய்து அவர்களை எழுதவைக்க வேண்டும். வினா -விடை முறையிலான நமது பேச்சினைப் பிழையில்லாமல் உரையாடுவதற்காகத்தான் கிளவியாக்கம் என்பதனைத் தெளிவதற்கு அளவைகள் உதவும்.
திணை, பால் மயக்கங்களும் அளவைப் போலியும்
தொல்காப்பியர் கூறும் திணை, பால் மயக்கங்களை வழுக்கள் என்று உரையாசிரியர்கள் சுட்டுகின்றனர். வழுக்களை மெய்ம்மைவாதிகள் அளவைப் போலிகள் என்று சுட்டுகின்றனர். மயக்கங்களாகக் கிளவியாக்கத்தில் குறிப்பிடுவனவற்றை ஐயம், திரியக் கோடல், தேராது தெளிவு எனவரும் மூன்று அளவைப் போலிகளை வைத்து விளக்கமுடியும். எடுத்துக்காட்டாக, பெயரும் வினையும ஒத்த பாலில் வருதல் என்பதனைக் கிளவியாக்கம் பெயர்த் தொடரையும் வினைத் தொடரையும் பாலறி கிளவியில், பொருள் மயக்கத்திற்கு இடம் தராமல் பயன்படுத்தவேண்டும் என்று பின்வரும் நூற்பா மூலம் சுட்டுகிறது.
‘வினையின் தோன்றும் பால் அறி கிளவியும் பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே’.என்றால் இந்நூற்பாவின் தேவை என்ன? மரபுகள் மயங்கும்படியாகத் தொடர்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதைக் காட்டுகிறது என்கிற உண்மையை முதலில் உணர்த்துகிறது. தமிழில் பாலறி கிளவி என்றவுடன் இரு திணைகளுக்குள்ளும் வந்தமைகின்றன என்பதனை அருத்தாபத்தி என்கிற அளவையைக் கொண்டு உணரமுடிகிறது. மயக்கம் வழுக்களாக உள்ளன. திணை, பால், மரபு, செப்பல், வினா, இடம், காலம் என வழுக்கள் ஏழாகும். திருமகள் வந்தான்; திருமகள் வந்தது என்பவை திருமகள் வந்தாள் என்பதன் மயக்கங்களாகும். திருமகள் என்பவர் உயர்திணை யாகும். வந்ததென்பதன்வழி அஃறிணை முடிபைப் பெறுகிறது. என்பதனால் இது திணை வழுவாகும். அடுத்த நிலையில் திருமகள் வந்தான் என்பதில் பெண்பால் ஆண்பாலில் வந்துள்ளது. இது பால் வழுவாகும். திணை, பால் உள்ளிட்டவை ஒன்று மற்றொன்றாக மாற்றிப் பேசப்படுகின்றன. வாக்கியத்தில் இம்மயக்கங்களை அறிவதற்கு மக்கள் உயர்திணைக்குரியவர் என்பதனால் திணையைத் தனியாகச் சுட்ட, குறியீடுகள் எதுவும் இல்லை. ஆண், பெண், பலர் என்னும் முப்பாலை உணர்வதற்க்கு னஃ கான் ஒற்றே ளஃ கான் ஒற்றே என்கிறார் தொல்காப்பியர். ன், ள், ர் என்பன உயர்திணைக்குரிய மூன்று பால்களை உணர்த்தும் குறியீடாகவும் து, ன என்பன அஃறிணைக்குரிய இரு பால்களை உணர்த்தும் குறியீடுகளாகவும் உள்ளன. வாக்கியங்களில் இக்குறியீடுகள் மாறுவதனைக் கொண்டு மயக்கம் என்கிறோம். பால் மயக்குற்ற ஐயக்கிளவி என்பது இங்குக் கவனிக்கத் தக்கது. பால் மயக்குற்ற ஐயக்கிளவி பயனிலையில் பன்மை கொள்ளும் ஒருவன் கொல்லோ, ஒருத்தி கொல்லோ, தோன்றுபவர் -23 பால் மயக்கம் வந்தாலே அதனுள் திணை மயக்கமும் பெரும்பாலும் வந்துவிடும். இதனை ஐயக்கிளவி என்று தொல்காப்பியர் எட்டுவகை அளவைப் போலிகளுள் ஒன்றாகச் சொல்லுகிறார்.
இயற்கையும் செயற்கையும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தினையும் காட்சியில் கண்டவாறு, அதாவது உணர்ந்தவாறு கூறவேண்டும். கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய உணர்ச்சி வாயில் உணர்ந்தவாறு சொல்லுவதனால் இது காட்சியளவையாகும். தீ சுடும்; காற்று வீசும்; நீர் குளிரும் என்பனவாகும். அடுத்த நிலையில் செயற்கைப் பொருளை ஆக்கமோடு சொல்ல வேண்டும். ஊது குழல் என்பது ஊதுவதனால் இப்பெயர் பெறுகிறது. ஆக்கம் என்பதாவது காரண காரிய அடிப்படையில் அமையவேண்டும். எடுத்துக்காட்டு : பறவை பறப்பதனால் இப்பெயர் பெற்றது. இது போல வேற்றுமை, வினை உள்ளிட்ட தொடர்களை இன்னும் நேரடியாகவே அளவையைப் பயன்படுத்தி மிக விரிவாக விளக்கமுடியும்
முடிவுரை
மொழி போன்ற பருண்மையான பொருள்களை அளவிடும் முறை அளவையியலாகும். தருக்கம், நியாயம், பிரமாணம் போன்றவற்றின் தமிழாக்கம்தான் அளவை என்பதாகும். இவ்வாறு தமிழ்ப் படுத்தியவர் சீத்தலைச் சாததனாராவர். மெய்ம்மை வாதிகள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லுவதற்கு இம்முறையைக் கண்டறிந்தனர். பின்னர் இலக்கணிகள் மொழி மெய்ம்மைகளை விளக்குவதற்கு அளவைகளைக் கையாளுகின்றனர். அடுத்தநிலையில் இலக்கண உரையாசிரியர்கள் பின்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆவர். ஆனால் இக்காலத்தில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் பெரும்பாலும் இதனைக் கண்டுகொள்வதில்லை. மாணவர்களுக்கு அளவை முறைகளை எடுத்துச் சொல்லுதன் மூலம் மொழி குறித்த விரிவான பார்வைகளும் சிந்தனைகளும் வளரும். |
கலைச்சொற்கள் – Technical terms
1. மெய்ம்மையியல் – Philosophy
2. மொழி மெய்ம்மையியல் – Philolagy
3. அளவையியல் – Logic
4. வாயில் காட்சி – Comcept
5. உள்ள காட்சி – Jugement
6. deductive – காரணாநுமானம்
7. inductive – காரியாநுமானம்
8. Inference – அநுமிதி
பயன்பட்ட நூல்கள்
1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
2. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934
3. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932
4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962
5. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964
6. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963
7. தொல்காப்பியம் சொல்லதிகாரம் பதிப்பாசிரியர் தமிழண்ணல் வெளியீடு மீனாச்சி புத்தகநிலையம் மதுரை ஆண்டு 2010.
8. தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-3, பதிப்பாசிரியர் தமிழண்ணல் மீனாச்சி புத்தகநிலையம் மதுரை வெளியிட்ட ஆண்டு 2010.
9. தொல்காப்பியம் பொருளதிகாரம் தொகுதி-4, பதிப்பாசிரியர் தமிழண்ணல் மீனாச்சி புத்தகநிலையம் மதுரை வெளியிட்டாண்டு2010.
10. மணிமேகலைக்காப்பியம் விளக்க உரை
11. பொ.வே. சோமசுந்தரனார் தென்னிந்திய சைவசித்தாந்த நூல்ப்பதிப்புக் கழகம் 1971.
12. மணிமேகலை உ.வே.சாமிநாத அய்யர் மூன்றாம் பதிப்பு 1931.
13. அநுமானவிளக்கம் (இரண்டாம் பதிப்பு ) செந்தமிழ்ப் பிரசுரம் க. – மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை , மதுரை 1935
14. தருக்கசாஸ்த்திரம் ஞானபிரகாசர் யாழ்ப்பாணம் வெளியிட்ட ஆண்டு 1933.
15. அறிவு ஆராய்ச்சி இயல் (EPISTEMOLOGY)
16. இர . இராமானுஜாச்சாரி , எம் . ஏ . , தத்துவத்துறைத் தலைவர், கல்வித்துறைப் பதின்மர் தலைவர் ( Dean ),அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ,தமிழ் வெளியீட்டுக் கழகம் தமிழ்நாடு – அரசாங்கம்வெளியிட்ட ஆண்டு1966.
17. இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் கி . நாச்சிமுத்து பேரா . கி . நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்கோவை 641 020 . வெளியிட்ட ஆண்டு 2007.
18. அளவையியற் போலிகள் LOGICAL FALLACIESவே . யுகபாலசிங்க ம். , B. A. (HONS), M. A. (Phil) Dip – in – Ed. தேசிய நாலகப் பிரிவு பாதகர கலக செனா பாதிப்பாணம் வெளியிட்ட ஆண்டு 1999.
Post Comment