புஷ்பவர்ணமாசம் – தெலுங்கு மூலம்: சாமான்யா, தமிழில்: க.மாரியப்பன்
அன்றைய தினம் என் மருமகளுக்கு முதல் மொட்டை எடுத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் கிராமத் தேவதை காமட்சியம்மன் கோயிலுக்கு இடப்புறம் இருக்கிறது சுப்பராயுடு புத்து. நாங்கள் எல்லாரும் அங்கே சேர்ந்தோம். முதல் முடியிறக்குவதால் குழந்தை பாவம் கோரமாக அழுதது. சிலர் பொங்கல் வைக்க அடுப்புக் கல்லைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கள் கோயில் வளாகம் முழுவதும் பரந்து விரிந்து கலகலவென்று ஆடுகிற, வெயிலில் வெள்ளியைப்போல் ஜொலித்தது பெரிய அரசமரம், அதைச் சுற்றிலும் உயரமாகக் கட்டப்பட்ட மேடை உள்ளது. புத்துக்கு அருகில் நடக்கிற சடங்குகளைக் கண்டு எரிச்சல் வந்து, நான் அந்த மேடைக்கு மேலே ஏறி, கோயில் வளாகத்தில் அங்கங்கே சுற்றித்திரியும் பக்தர்களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தேன்.
கோயிலுக்கு வலப்பக்க மண்டபத்தூணில் யாரோ ஒருபெண். மிகவும் அழகாக இருந்தாள். நான் கண்ணாடியை எடுத்துத் துடைத்துவிட்டு மறுபடியும் அவளைப் பார்த்தேன். மாதுளைப்பூ நிற ஜரிகைச் சேலையில் கொஞ்சம் வாடின தாழம்பூப்போல இருந்தாள். அவளின் உடல் நிறமாக இருந்தாலும் சரி, சேலை நிறத்தின் அற்புதக் கலவையாக இருந்தாலும் சரி, அவளுடைய அழகு உங்களைக் கட்டாயமாக அவளை நோக்கி இழுக்கும். ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது எனக்கு. இவள் யார்? இதற்கு முன்பு எப்பொழுதும் இங்கே பார்த்ததில்லையே…? யாரிடம் கேட்பது இவளைப் பற்றி… யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது விநாயகர் சன்னதியிலிருந்து வெளியே வந்தான் சிறிய அர்ச்சகன் சேஷாச்சார்யா. சேஷா சிறுபிராயத்தில் என் ஆடல்பாடல் குழுவில் முக்கிய உறுப்பினர். என்னைவிட ஏழெட்டு வருடங்கள் சிறியவன். அவனை அழைத்துக் கிசுகிசுத்து “என்ன சேஷா! என்ன சங்கதி இதுக்கு நடுவுல ஒருவேளை தவம் செய்ய ஆரம்பிச்சிட்டயா என்ன? தேவகன்னிகையைக் கோயிலுக்கு வரவச்சிருக்குற” என்றேன். தலையும் வாலும் இல்லாத என் வார்த்தைகளுக்கு அசல் சின்னப்பிளைப்போல அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு, “ தேவகன்னிகை எங்க பெரியக்கா?” என்றான் ஆச்சர்யப்பட்டு, நான் இன்னும் கிசுகிசுத்து, “அதோ அங்கே அந்த மண்டபத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கிறாளே அவ தேவகன்னிகை இல்லாம வேற யாரு” என்றேன். அதைக் கேட்டு சேஷா முகத்தை விகாரமாக வைத்துக் கொண்டு, “தேவகன்னிகை இல்லை பெரியக்கா, பேயி” என்றான் பூவையும் தேங்காய் மூடியையும் கைகளில் திணித்து.
அப்பொழுது அங்கே வந்த என் அத்தை “பெரியவளே நட நட எங்கப் போனாலும் அங்க சிநேகிதிகள் ஒரே பேச்சு… எல்லாரும் ஒன்ன தேடிட்டு இருக்காங்க” என்றார். நான் மேடையிலிருந்து இறங்கி அத்தையின் பின்னால் நடந்துகொண்டே அவளைப் பார்த்தேன். அதே உணர்வு. மாதுளம்பூ நிறப் பட்டுப்புடவையில் சுற்றப்பட்ட தாழம்பூமொட்டைப் பார்ப்பது போலிருந்தது. இவளா பேயி, இந்தச் சேஷா சின்ன வயசுலயிருந்து வேப்பங்காய் மாதிரி முகத்த சுழிப்பான். இப்ப அது பனங்காய் சைஸ்க்கு ஆகிவிட்டது. எங்க கோயிலுக்குப் பேய் பிடித்த நிறையப் பேரை அழைத்து வருவார்கள். நிறையப் பேர் குணமாகிப் போவார்கள், ஆனால், அவர்கள் யாரும் இவளைப் போலச் சுத்தமாக இருக்கமாட்டார்கள், எதற்கோ அவளிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. அவளின் சௌந்தர்யத்தின் காரணமாகவோ… என் அத்தையின் கைகளில் இருந்து என் கைகளை விடுவித்துக் கொண்டு “இதோ அத்தை உங்க பின்னாடியே வரேன் ஆனா நீங்க முன்னாடி போங்க” என்று மண்டபத்தை நோக்கி நடந்தேன்.
பூமாதிரி அந்தத் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள், அசையாமலோ, மனதிற்குள்ளான தியானத்திலோ. நான் அமைதியாக, தியானத்திற்கு வந்த பக்தைப்போல அவளுக்குக் கொஞ்சம் இடப்புறத்தில் அமர்ந்து, சேஷா கொடுத்த தேங்காய்மூடியை உடைக்கத் தொடங்கினேன். அவள் சுயஉணர்வில் இல்லை. பக்கத்தில் இன்னும் அழகாயிருந்தாள். சுருள் முடி, முழுதும் சிரிக்கும் உதடுகள்.
சிறிது நேரம் கழித்துக் கைக்குக் கிடைத்த சின்னத் தேங்காத் துண்டை அவளிடம் நீட்டி, அறிமுகமாகும் விதமாகச் சிரித்து, “எடுத்துக்கோங்க” என்றேன். அவள் சிறிது புன்னகைத்து “தேங்க்யூ” என்றாள். அப்பாடா இவள் பேய் கிடையாது தேவதைதான். ஆனா எப்படி விசாரிப்பது? கொஞ்சம் பலமாக மூச்சை இழுத்து தையரியத்தோடு “எனக்கு இந்த ஊரு தான். ஆனா ஒங்கள இதுக்கு முன்னாடி எப்பயும் இங்க பார்த்தமாதரி ஞாபகம் இல்ல” என்றேன். அவள் நான் சொன்னதைக் கேட்டு, பல்லவி இல்லாத பாடல்போல “இதுக்கு முன்னாடி எப்பயும் இங்க நா வரல! பேய் பிடிச்சுருக்காம் எனக்கு! பேய் பிடிக்கணும்னு நா மிகத் தீவிரமா வேண்டிக்கிட்டுயிருக்கன்… ஆனா பேய் பிடிக்கலன்னு சொல்றன். யாரும் கேட்கல. இங்க கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா எனக்கு இந்த இடம் பிடிச்சுருக்கு. பொழுது சாஞ்சா போதும் அந்த மரத்து மேல எத்தனை பறவைகள் வரும் தெரியுமா. அவனோட சேர்ந்து விதவிதமான பறவைகள் வரும், வண்ண வண்ணமானவை, அழகைப் பின்னால் அழைத்துக் கொண்டு வருபவன் அவன்” என்றாள்.
எனக்குக் குழப்பமாகத் தோன்றியது. என்ன பேசுறா இவ, சேஷா சொன்னதுபோல இவ வேற எதுவும்மா? ஆனா டூ கூயூரியஸ். அதுக்குதான் தலையசைத்து “நீங்க ரொம்ப அழகா இருக்குறீங்க. எவ்வளவு நேரமானாலும் பார்த்துகிட்டேயிருக்கத் தோணுது…ஆமா இத்தனைக்கும் யார் அவன்” என்றேன்.
“யாரு”
“அதுதான். இப்ப நீங்க சொன்னீங்க இல்லையா, சௌந்தர்யத்தைப் பின்னால் அழைத்து வருபவன் அவன் என்று”
“ஓ! அவனா, அவன் பேய்! பேரு எனக்கும் தெரியாது”
நான் ஆச்சர்யம் அடைந்தேன். தலையை ஒருமுறை ஆட்டிவிட்டு, போகலாம் என்று யோசித்தேன். பகல் மத்தியானத்தை நோக்கி நகர்ந்தது. சுப்பராயுடு புத்துக்கு அருகில், அடுப்புக்கு மூன்று கற்கள் கிடைத்ததுபோல அங்கே மெல்லிய புகை எழுந்தது. எதற்கோ போகமுடியாமல் நின்று, அவளைப் பார்த்து “பேய் இருக்குனு சொல்றீங்களா?” என்றேன். அவள் “பேய் இருக்கு, புஷ்பவர்ணமாசத்தில் பிறந்தவங்க கண்ணுக்குத் தெரியும்” என்றாள். “புஷ்பவர்ணமாசமா…” அதென்ன மாசம்? நா எப்பயும் கேள்விபட்டதில்ல அந்தப் பேரை, ஒருவேளை புஷ்ய மாசத்தைத் தான் இவ இப்படிச் சொல்றாளோ என்னமோ என்று நினைத்துக் கொண்டு, “அப்படியா… நீங்க எங்க பார்த்தீங்க பேயை?” என்றேன்.

அவள் சொன்னாள் “ஒரு நாள் மத்தியானம் பனிரெண்டு மணியிருக்கும். வைகாசி மாதம் கடைசி நாள். என் படுக்கையறையில் தலையணையில சாய்ந்துகொண்டு, ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய ஜன்னல் எங்களுடையது. ஜன்னலிலிருந்து உள்ளே வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது செண்பக மரம். அந்தப் பூவின் நிறம், மதுரமான அந்த வாசனை மிக நன்றாகயிருக்கும். அதற்குப் பின்னால் கொய்யா மரம், மிகப் பெரியது. எங்கள் அத்தை குடித்தனம் வந்தபொழுது வைத்தது. அதுகூடப் பூ பூத்தது. வெள்ளைக் கொய்யாப் பூக்கள். அதற்குப் பின்னால் மாமரம். “பேனிஷான்’, அந்த வருடத்தில் நிறையக் காய்ப்புக் காய்த்தது. கொத்துக் கொத்தாகக் காய்கள் ஆடிக் கொண்டிருந்தன. அந்த அழகான வண்ணங்களின் கலவை எவ்வளவோ நன்றாகயிருக்கும், அதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
நீண்ட நேரமாக ஒரு குயிலின் ஏக்கம், அதே வேலையாக யாரையோ அழைத்ததுபோல் கூவியது. நான் எழுந்து, நன்றாக அமர்ந்து மாமரத்தின் ஒவ்வொரு மூலையிலும் குயிலைத் தேடத் தொடங்கினேன். அதோ அப்பொழுது பார்த்தேன் அந்தப் பேயை… அது அவனே. குயில் அவன் தோளின்மேல் இருந்தது. முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. மரத்துக்கு அடியில் இலையோடு இலையாக அவன். தியானத்தில், எங்கேயோ தூரத்தில் ஈடுபட்டு மூழ்கி, சரீரம் மட்டும் அங்கே இருப்பதுபோல். நான் எதும் பிரமையில் விழுந்திருந்தேனா? எழுந்து டேபிள் மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து, அறையில் மூன்று நான்கு முறை அங்கும் இங்கும் நடந்து, மறுபடியும் வந்து பார்த்தேன். அவன் அங்கேயே, அப்படியே இருந்தான். சுற்றி பிஞ்சு, நடுத்தர மாம்பழங்கள், தோளின்மேல் குயில், இலைக் காற்றுக்கு அங்கும் இங்கும் அசைகிற அவன்மேல் விழுகிற ஒளிநிழலாக நட்சத்திரங்கள், யோசித்தால் இப்பொழுது தோன்றுகிறது “எவ்வளவு அழகான காட்சி அது’ என்று.
என் அம்மம்மா எப்பொழுதும் சொல்வாள், புஷ்பவர்ண மாசத்தில் பிறந்தவர்களுக்குப் பேய்கள் கண்களுக்குத் தெரியும் என்று. என் அம்மாகூட அதே மாதத்தில் பிறந்தாள். எவ்வளவு அழகாயிருப்பாள் எங்கள் அம்மா. செடிகள், வண்ணத்துப்பூச்சிகள், வானம், நட்சத்திரம், மழைத் துளிகள் எல்லாவற்றையும் விரும்பினாள், இனிமையாகப் பாடுவாள், நன்றாக எழுதுவாள். எவ்வளவு நன்றாகயிருக்கும் தெரியுமா! ஒருவேளை என் அம்மம்மா அந்த மாதத்தில் பிறக்கவில்லையென்று நினைக்கிறேன் அவளின் நகைகள், வாகனங்கள், சுற்றிலும் அவளுக்குப் பணி செய்யும் வேலையாட்கள் என எல்லாவற்றையும் விரும்புவாள். என் அம்மா சும்மா சும்மா என் அப்பாவுடன் சண்டையிட்டு, என்னைத் தூக்கிக்கொண்டு எங்க அம்மம்மாவிடம் சென்றாள். ஆனால், எங்க அம்மம்மா மறுபடியும் அம்மாவை அப்பாவிடம் அனுப்பிவைத்தாள். ஒருநாள் என் அம்மா இறந்துவிட்டாள். அப்பொழுதிலிருந்து நான் அம்மம்மாவிடேமே வளர்ந்தேன். என் அம்மம்மாவும் நானும் புஷ்பவர்ணமாசத்திலேயே பிறந்ததற்கு மிகவும் பயந்தோம். அந்தப் பேயைப் பார்த்ததும் எனக்கு அவையெல்லாம் நினைவுக்கு வந்தன.
அப்படியே நான் சுமார் ஒரு வாரம் அந்தப் பேயைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் பார்த்துக் கொண்டே இருக்கும்பொழுது எனக்கு ஒரு நாள் அவனிடம் பேசவேண்டும் என்று தோன்றியது. என்ன செய்ய எப்படி அவனுடைய கவனத்தை என்பக்கம் திருப்பவேண்டும். யோசித்து யோசித்துக் கடைசியில் வேலைக்காரர்களை அழைத்துவந்து, பக்குவமான மாம்பழங்களைப் பறியுங்கள் என்று சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே அந்த மனிதர்களின் சலசலப்பில் அவன் தியானத்திலிருந்து வெளியே வந்தான்.
பேய்களில் முனிஸ்வரன் என்ற பேய்கூட இருக்குமாம். அது எப்பொழுதும் மௌனமாக இருக்குமாம் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். இவன் அது கிடையாதல்லவா என்று எண்ணி, “நீங்க எனக்குத் தெரியுறீங்க அதோ அந்த அறையிலிருந்து உங்களைப் பார்த்தேன். உங்ககிட்ட பேசணும்னு தோனுச்சி” என்று சொன்னேன்.அவன் தலையை வளைத்து உயரமான அந்த மரத்திலிருந்து என்னைப் பார்த்தான். அதன்பிறகு நிமிடத்தில் அவன் அங்கே இல்லை. ஒவ்வொரு கிளை கிளையாக வளைத்துத் தேடினாலும் அவன் அங்கே தென்படவில்லை. என் பேச்சைக் கேட்டு, மாங்காயைப் பறிப்பவர்கள், அவர்களிடம் தான் நான் பேசுகிறேனோ என்று நினைத்துக் கொண்டார்கள். நான் வேகவேகமாக என் அறைக்கு வந்து அங்கிருந்து பார்த்தேன். அவன் இல்லை. அதற்குப்பிறகு தினந்தோறும் அவனைத் தேடினேன். மத்தியானவேளையில் தான் அவன் எனக்குத் தெரிந்தான். அதற்காக, தினசரி மத்தியானம் அதே வேலையாக இருந்தேன், ஆனால் அவன் மறுபடியும் கண்ணுக்குத் தென்படவில்லை.
ஒருநாள் பகல் முழுக்க மிகுதியாக வெயில் சுட்டெரித்தது, இரவு மணி ஏழெட்டு ஆனதும் மழை பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலுமாக ஆகாயம் சிவப்பாக மாறி உக்கிர ரூபமாகியது. இரவு முழுக்க மழையே. மழையைக் கேட்டுக்கொண்டே தூங்கிப் போனேன். விடியற்காலையில் எழுந்து பார்த்தேன், எவ்வளவு பயங்கரம்…! மாங்காய்கள் பிஞ்சோடுகூட உதிர்ந்துபோயின. இலைகள், அங்கங்கே விழுந்து கிடந்த கிளைகள்… பெரிய யுத்தகளம்போல இருந்தது அங்கே. அதோ அன்றைக்கு மத்தியானம், மீண்டும் பார்த்தேன் அவனை. எவ்வளவு முகம் நிறையப் பயம், வேகவேகமாக எழுந்து, மரத்துக்குக் கீழே சென்றேன். ராத்திரி மழைக்கு நனைந்த பறவைகள் பதறிப்போய் அவனருகில் ஒய்வெடுக்கின்றன. நான் தலையை மேலே உயர்த்தி, “இத்தனை நாட்கள் வரவில்லையே, என்ன ஆச்சு?” என்றேன். அவன் என்னைப் பார்த்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, போர்டுமேல் வரைந்த படத்தை டஸ்டரால் அழித்தால் எப்படி அழியுமோ அப்படி அழிந்திருந்தான். பறவைகள் மட்டும் மிச்சமிருந்தன.
எனக்கு அழுகை வந்தது. அறைக்கு வந்து மாமரத்தை நோக்கி பார்த்தால், எதற்கோ தெரியாது… ராத்திரி பெய்த உக்கிரமான மழை, இடி மின்னலோடு கூடிய மழை, அந்த மாதிரி வந்தது அழுகை. கதவைத் தாழிட்டு, தேம்பித் தேம்பி அழுது அழுது படுத்துக்கொண்டேன். மேலும் ஒரு மணி நேரம் கழித்து என்று நினைக்கிறேன் விழிப்பு வந்தது. மாமரம் பக்கம் பார்ப்பதற்குத் தலையைத் திருப்பினேனோ இல்லையோ, என் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு செண்பகமரத்தின் கிளை மேலே அமர்ந்திருந்தான் அவன். என் விழிப்பிற்காகக் காத்திருந்ததுபோல, கவலையோடு “எதற்கு அந்த அழுகை?” என்றான். நான் அவனைப் பார்த்தேன். வழக்கம்போல அவனைச் சுற்றிப் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், இப்பொழுது செண்பகப்பூக்கள்.. பார்த்துப் பார்த்து, அவனைக் கண்கள் முழுக்க நிரப்பிக்கொண்டு “தெரியாது” என்றேன். அவன் அமைதியாக மாமரத்தையே பார்த்து, நீண்டநேரம் கழித்து “ஒரே நாள்ல்ல மழை, மரத்தைப் பாருங்க எப்படி ஆகிவிட்டது பைத்தியக்காரிபோல” என்றான். அவன் முகம் முழுக்கப் பயம்.
அப்படித் தொடங்கியது எங்கள் அறிமுகம். அவன் “நீலமேகக் காட்டோடு பேசுகிற, அந்தப் பாஷையைப்” பேசுபவன். முதலில் அந்தப் பாஷை எனக்குப் புரியவில்லை. பிறகு மெதுவாகக் கற்றுக் கொண்டேன். அந்தப் பாஷை, அவனின் பேச்சு எப்படி இருந்ததென்றால், அவனிடம் பேசிய பிறகு இதயம், மழைத்துளியில் நனைந்த பூமிபோல மாறியது.
அந்தப் புதிதிலேயே ஒருமுறை கேட்டேன் “இந்த வீட்டோடு உங்களுக்கு ஏதேனும் சம்பந்தம் உள்ளதா” என்று. எதற்குக் கேட்டேனோ நிஜமாக எனக்குத் தெரியாது. அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் பயத்தோடு தலையசைத்து “இந்த வீட்டில் அவள் இருக்கிறாள்” என்றான்.
“அவளென்றால்?”
“நானும் அவளும் விரும்பினோம். அறுவடைக்கு வந்த விளைச்சலை யானைக்கூட்டம் துவம்சம் செய்யுமே… அப்படி அவர்கள் வீட்டில் அவர்கள் அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். அதற்குப் பிறகு நான் இப்படியாகிவிட்டேன். இந்த மாமரம் இருக்கும் இடத்தில். ஏழு மாமரங்கள் வளர்ந்து… இறந்து.. வளர்ந்தன. ஆனால் அவள் அந்த வீட்டிலிருந்து வெளியே வரமாட்டாள். எவ்வளவு வேண்டிக்கொண்டாலும்…” அவன் கண்களில் கண்ணீர். அவனை எப்படி ஆறுதல் படுத்துவது.
எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. எனக்குத் திருமணமான புதிதில் ஒரு மத்தியானம் தலைக்குக் குளித்து, எதற்கோ அழுதுகொண்டு வெறும் படுக்கைமேல் படுத்தேன். படுக்கையின் மேல் பரந்து விரிந்த என் கூந்தல். எதற்கோ, அந்தத் தூக்கத்தில் யாரோ பெரிய வெள்ளைக் கண்கள் உள்ள ஒருத்தி குளிர்ச்சியாக என் நெற்றியை, கூந்தலைத் தடவிக் கொடுத்ததுபோல், என் துக்கத்தை ஆறுதல்படுத்தியதுபோல் பிரமை எனக்குள் ஏற்பட்டது. என் அம்மாவோ என்று நினைத்துக் கொண்டேன் அப்பொழுது. ஆனால் இல்லை. அவள், இவன் சொன்ன அவள். அவனிடம் சொன்னேன் “அவள் வெள்ளையாக இருப்பாளா?” என்றேன். அவன் துக்கத்திலிருந்து வெளிவந்து “அவள் சுத்தமான முத்துபோல இருப்பாள்” என்றான் நெகிழ்ச்சியோடு. அவ்வளவுதான் அதன் பிறகு எங்கள் நடுவில் அந்தப் பேச்சு எப்பொழுதும் வரவில்லை.
அவன் எந்தப் புராதானக்காலத்தவனோ, எப்பொழுது உள்ளவனோ, எங்குள்ளவனோ எனக்கு என்ன அவசியம்? இந்த விவரங்களையெல்லாம் கேட்டு நான் என்ன செய்யப்போறேன்? அதுமட்டும் இல்லாமல் துக்கத்தில் நிரம்பியிருந்த அவன் கடந்தகாலத்தை நான் எதற்கு அசைக்கவேண்டும். அதற்குதான் ஏழு மாமரத்தை அவனின் கடந்தகாலத்தை நான் எப்பொழுதும் குறிப்பிடவில்லை.
படிப்படியாக அவன் எனக்கு ஒரு அடிமையானான். செண்பகப்பூ மரத்தின்மேல் அவன் வருவது தாமதம் ஆனதும் எங்கெங்கிருந்தோ பறவைகள் வந்து என் ஜன்னல்மேலே, என் மேலே, அவனின் மேலே வந்து உட்காரும். என்னென்னவோ பாடல்கள் பாடின. அந்தப் பாடல்களால் எங்கள் பேச்சுககள் எங்களுக்கே சிலசமயம் கேட்பது கிடையாது. அந்தப் பறவைகளில் ஒரு குயில் என் அறைக்கு உள்ளே வந்து கூடு கட்டத் தொடங்கியது. எங்கிருந்தோ குச்சிகளைக் பொறுக்கிக் கொண்டுவந்து கூடு கட்டும். தவறுதலாக அது எங்கே ஃபேன் இறக்கையில் அடிபட்டு இறந்துவிடுமோவென்று எனக்குப் பயம் வந்தது. ஃபேன் சுவிட்சுக்குத் தடிமனான டேப் ஒன்றை ஒட்டவைத்து ஃபேன் சுற்றாதவாறு செய்தேன்.
அப்பொழுது கேட்டார் என் கணவர்; “ஃபேன் சுவிட்ச்சை எதற்கு இப்படிச் செய்தாய்” என்று. நான் வழக்கம்போலச் சொன்னேன் “குயில் கூடு கட்டுகிறது, ஃபேன் இறக்கைப் பட்டால் செத்துப்போயிடும்” என்று. விசித்திரமாக என் கணவர் என்னை நோக்கிக் கோபப் பார்வை பார்த்து “குயில் கூடா? எங்க? நிஜமா குயில் கூடுகட்டும்னு எப்பவாது கேட்டிருக்கிறயா?” என்று வாதம் செய்ய ஆரம்பித்தார்.
நான் பொறுமையாக ஸ்டூல் கொண்டுவந்து குயில் பொறுக்கி வந்த குச்சிகளை, பாதி முடிவடைந்திருந்த கூட்டைக் காண்பித்தேன். அப்பொழுது குயில், ஜன்னல் கம்பியில் நின்று என் கணவரைப் பார்த்துக் கொண்டிருந்ததுகூட. இருந்தாலும் சரி அது எதுவும் என் கணவர் கண்களில் படவில்லை. என்னைச் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கினார். வீட்டில் உள்ளவர்கள், நான் அவரிடம் பேசும்பொழுது திருட்டுத் தனமாக ஒட்டுக் கேட்பார்கள். ஏதோ பைத்தியக்கார பாஷையில் பேசுறனாம், சிரிக்கிறனாம். அந்த விசயத்தை என் கணவர் ஒரு ராத்திரி குறிப்பிட்டார். நான் எப்படிச் சொல்வது, நீலமேகக் காட்டில் பேசுகிற பாஷை ஒன்று இருக்கிறதென்று.. அவருக்கு நான் எப்படிப் புரியவைக்க முடியும்? அவர் புஷ்பவர்ண மாசத்தில் பிறக்கவில்லை அல்லவா. அந்தப் பேயை, அதே அவனை நான் எப்படி இவருக்குக் காட்டமுடியும், அதற்குத்தான் அதெல்லாம் ஒன்னுமில்லை, ஏதோ பாட்டு கத்துக்கிட்டு இருக்குறன், என்று நான் சொன்னேன்.
அப்பொழுதிலிருந்து ஜாக்கிரதையாக இருக்கத் தொடங்கினேன். எங்கள் வீட்டிற்குப் பின்னால் பத்துப் பன்னிரெண்டு படிகள்மேல் இரண்டு அறைகள் உள்ளன. ஒன்றில் எப்பொழுதோ ஒரு சமையல்காரி இருந்தாளாம். ஒருமுறை அவள் ஊருக்குச்சென்று மறுபடியும் திரும்ப வரவில்லை. எதற்கோ அந்த அறைக்கு, நான் வந்ததில் இருந்து பூட்டுப் போட்டிருப்பதையே பார்த்திருக்கிறேனே தவிர, திறந்திருந்ததைப் பார்த்ததில்லை. அதற்கு அருகில் இன்னொரு சின்ன ரூம் இருக்கிறது. அதில், எங்கள் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பக்குவமான பழங்களை வைத்து மூட்டம் போடுவார்கள். வித விதமான பழங்கள். மூட்டம் போட்ட பிறகு வீட்டுக்குள் எடுத்து வருவார்கள். அந்த அறை நன்றாக இருக்கும். வண்ண வண்ணப் பழங்களோடு, பல வித வாசனை கலவைகளோடு…
நாங்கள் இருவரும் அங்கே சந்திப்போம். அங்கே ஜன்னலுக்கு வெளியே அவன், உள்ளே நான், பூமிக்கும் ஆகாயத்திற்கும் நடுவில் ஜன்னல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித் தோன்றியது எனக்கு. ஒருமுறை அவன் இரண்டு மூன்று நாட்கள் வரவில்லை. அப்பொழுது நான் அவனுக்கு, ராத்திரி முழுக்க அமர்ந்து என் மனம் முழுக்கக் கடிதம் எழுதுவேன். ஒருநாள் அப்படியே நான் மனதை மேசையில் விரித்து எழுதி உட்கார்ந்திருந்தேன். மேசை முழுவதும் தங்க வண்ணத்தில் ஒளிர்ந்தது. அவனின் நினைவுகள் என் உதடுகளின்மேல் புன்னகையை வரவழைத்தது. நான் எழுதிக் கொண்டேயிருந்தான். திடீரென்று என் கணவர் தூக்கத்திலிருந்து எழுந்து, “என்ன செஞ்சுட்டு இருக்குற?” என்றார். அவ்வளவுதான் நான் வேகவேகமாக என் மனதையெல்லாம் உருவி என் இரண்டு கைகளுக்குத் தள்ளி, கஷ்டப்பட்டு அந்த ஒளியை எல்லாம் மறைத்து மறைத்து “எதுவும் இல்ல ஏதோ எழுதிட்டு இருக்குறன்” என்றேன். அவர் ஆச்சர்யமடைந்து “இருட்டுல என்ன எழுதுற” என்றார். இருட்டா! எங்க இருட்டு! பள பளன்னு மின்னுற அளவுக்கு இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது… நான் மௌனமாகினேன். என் கணவர் வெறுப்படைந்து “வந்து படு” என்று கத்தினார். நான் மெதுவாக எழுந்துபோய்ப் படுத்தேன்.
மறுநாள் அவன் வந்தான். கடிதத்தை வாசித்தாயா என்று நான் அவனைக் கேட்கவில்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. அந்தக் கடிதத்தை எப்படிப் படிக்கவேண்டுமோ அவனுக்குத் தெரியும்.
அந்த நாட்களில் நாங்கள் மணிக்கணக்காகப் பேசிக்கொள்வோம். என்ன பேசினோமோ அவை எதுவும் இப்பொழுது கொஞ்சம்கூட நினைவில் இல்லை. ஆனால், அவனிடம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதற்கென்றால் அவன், இருளை அகற்றும் சூரியனைப்போல, வேறொரு பிரபஞ்சத்தின் கனவுபோல, கனவுக்கே கனவுபோல உரையாடுபவன். மலையில் பிறந்த அநாதி பாடல் போன்றவன். அவனுக்குப் பறவைகளின் பாஷை, பூக்களின் பாஷை எல்லாம் தெரியும். ஒருமுறை என் முன்பே என் நாய் அவனிடம் பேசுவதை நான் பார்த்தேன்.
எங்கள் வீட்டில் என்னைப் பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாயின. நான் ஒருத்தியே போய் அந்த மூலை அறையில் அமர்ந்திருக்கிறேன் என்று, எனக்குள் நானே பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கத் தொடங்கினார்கள். என் கணவர் வெறுத்துப்போய் என் அம்மம்மா வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். எல்லாரிடமும் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் சென்றிருக்கிறாள் என்று சொல்லி வைத்தார். எங்கள் ஊரென்றால் வழக்கமான நாட்களில் எனக்கு எவ்வளவோ சந்தோசம்தான் ஆனால் இந்த முறை அப்படித் தோன்றவில்லை. என் ஆடைகளையெல்லாம் எனக்குத் தெரியமலேயே வேலைக்காரி எப்பொழுதோ தயார் நிலையில் எடுத்து வைத்திருந்தாள். ராத்திரி பத்து மணிக்கு என் கணவர் “கிளம்பு” என்றார். நான் முதலில் முரண்டுபிடித்தேன், அழுதேன், அவனுக்குச் சொல்லாமல் எப்படிச் செல்வேன்? அவன் என்னைத் தேட மாட்டானா… என்ன நினைப்பான், இனி எப்பொழுதும் வராமல் கண்ணுக்குத் தெரியமால் போய்விடுவானா?
என் கணவர், அம்மம்மாவிடம் என்னென்னவோ சொன்னார். நான் பேசுகிற பைத்தியக்கார பாஷை குறித்துச் சொன்னார். கேட்டு கேட்டு என் அம்மம்மா “என்ன செய்யுறதுப்பா எல்லாம் இருந்தும் சுகமாக இருக்குற தலையெழுத்து என் தலையில எழுதல அந்தக் கடவுளு, இல்லன்னா அம்மாவைப்போலப் புஷ்பவர்ணமாசத்துல பொறக்கணுமா” என அழத் தொடங்கினாள்.
நான் என் அம்மம்மாவுடன் கோயில்கள், மசூதிகள் எல்லாம் சுற்றினேன். எனக்கு எதுவும் இல்லையென்று சொன்னாலும் என் அம்மம்மா கேட்கவில்லை. நீலமேகக் காட்டில் பேசுகிற பாஷை குறித்துச் சொல்லப் போகும் போதெல்லாம் படபடவென்று கைகளால் தலையில் அடித்துக் கொள்வாள். நான் மேலும் பயந்து அந்தப் பேச்சை எடுப்பதையே விட்டுவிட்டேன். சில நாட்களுக்குப் பின் நான் தேறிவிட்டேன் என்று சொல்லி என் அம்மம்மா என்னை எங்கள் வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டாள்.

அன்றைக்குத் தலைக்குக் குளித்து, ஜன்னல் அருகே அமர்ந்து, விரல்களால் தலையைச் சிக்கல் எடுத்துக் கொண்டிருந்தேன். பயமாக இருந்தது. அவன் இனி வரமாட்டானா… என்னை மறந்துவிட்டானா! என்று. அவன் வந்தான். அவனோடு வந்த பறவைகள், தீவனம் கொண்டுவந்த அம்மாவிற்கு வாயைத் திறந்து கத்தும் குஞ்சுப் பறவைகள். அப்படி என்னைப் பார்த்தும் பார்க்காததுமாகக் கத்த தொடங்கின. அவனை அப்படிப் பார்த்ததும் எனக்கு ஒரேயடியாக லட்சம் கம்பிகள் இருக்கிற பெரிய பஞ்சாரத்தில் அவனையும் அவனின் பறவைகளையும் அப்படியே அடைக்கவேண்டும் என்று தோன்றியது. அவன் என்னைப் பார்த்து தொண்டையைக் கனைத்து, மிக மந்தமாக “இத்தனை நாட்கள் எங்க போயிருந்த வீணாதரி” என்றான். அதுதான் அவன் வாயைத் திறந்து என் பெயரை முதல்முறையாகச் சொன்னது. நான் எப்பொழுதும் அவனுக்கு என் பெயரைச் சொன்னதில்லை, அவனின் பெயரையும் கேட்டதில்லை. அதன் பிறகு இன்னொருமுறை அவன் என்னைப் பெயர் சொல்லி அழைத்தான் எங்கள் மொத்த அறிமுகத்தில்.
அவன் வாயால் என் பெயரைக் கேட்டதும் ஒரேயடியாகச் சரீரம் எல்லாம் சட்டென்று நடுங்கியது. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த உற்சாகத்திலிருந்து வெளியே வருவதற்கு முன்பே, அவன் மிகுந்த முரட்டுத்தனமாக, “என்ன தொண்டை வலியா? பேசவில்லையே ஏன்..? சொல்றதுக்கென்ன..? என்று ஒருமையில் அதட்டினான். அந்த அதட்டலுக்குச் சிரிப்பு வந்தது. அவனின் அக்கறைக்கு அழுகை பொங்கிவந்தது. சிரித்து, கண்ணீரைக் கண்களிலேயே மறைத்துக்கொண்டு “அசல் பேயி மாதிரியே பேசுறீங்க” என்றேன். அவன் மெதுவாக அமைதியானான். “எத்தனை யோசனைகள் தெரியுமா? ராத்திரி பகலா அந்த மாமரத்து மேலயே உக்காந்திருந்தேன் தெரியுமா?” என்றான். அதற்குள்ளாக ஏதோ நினைவுக்கு வந்ததுபோல “உனக்குக் கோலம் போட தெரியுமா? என்றான் பைத்தியம்போல. மீண்டும் “பண்டிகைக்கு என்ன சேலை கட்டுவீங்க” என்றான். நான் திக்குமுக்காடினேன் அந்தப் புதிய புதிய கேள்விகளுக்கு. எப்படியோ மனம் தளர்ந்து “காட்டுப் பச்சை வண்ணச் சேலை, ஆகாச நீல ரவிக்கை” என்றேன். அவன் கண்களை மூடிக்கொண்டு தியானத்தோடு “மழைத்துளிப்பட்டதும் வரும் மண் வாசனைப்போல இருக்கிறாய்” என்றான்.
அன்றைக்கு இரவு, என் கணவர் பணியின் காரணமாக எங்கேயோ வேறு ஊருக்குச் சென்றார். அவன் மொட்டுக்கள் விடுகிற செண்பக மரத்தின்மேல், நான் ஜன்னலுக்கு உள்ளே அமர்ந்து வெண்ணிலாவின் அணைப்பில் நனைந்து முத்தமிட்டு. சந்திரன் ஆகாயத்தில் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கு வேகவேகமாக நீச்சலடித்துக் கொண்டிருந்தான். அப்படி நீச்சலடிக்கிற சந்திரனில் கொஞ்சப் பகுதியை எடுத்துக்கொண்டு, இருபத்து நான்கு இதழ்கள் கொண்ட பூ ஒன்றை செய்து எனக்குக் கொடுத்தான். அந்தப் பூ தகத் தகவென்று மின்னியது. நறுமணம் பரப்பியது. அதனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு விடியற்காலையில், எப்பொழுதோ அவன் சென்றதும் தூங்கிப்போனேன்.
மறுநாள் எழுந்ததிலிருந்து ஏதோ பயம். ஓர் இடத்திலும் நிலைநிறுத்திக்கொள்ள முடியாத பயம். எனக்கு எதோ வேண்டும், ஏதோ கிடையாது, எனக்கு அவன் வேண்டும், எனக்கே எனக்குச் சொந்தமாக வேண்டும், அவன் என்னுடையவனாகி நான் அவனுடையவளாகி, இதயத்திலிருந்து பொங்கிப் பொங்கி வந்தது துக்கம். அழுதுகொண்டிருக்க என் அறையில் கூடு கட்டும் குயில் என்னையே கண் இமைக்காமல் பார்க்கத் தொடங்கியது. பார்த்துப் பார்த்துக் கடைசியில் “அவன்ட்ட நா சொல்றன் அழாதே” என்றது.
அவன் வந்தான், இப்பொழுது அவனின் முகம் ஒளியாக இருந்தது. உதட்டில் புன்னகை இருந்தது. அவன் வந்ததும் வராததுமாயக்; குயில் சென்று அவன் தோளின்மேல் உட்கார்ந்து, ஒரு பாட்டுப் பாடத் தொடங்கியது. “இலைப்பச்சைப் பாட்டு”. பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அவனின் முகம் வெளிறத் தொடங்கியது. பாடல் முடிந்ததும், குயிலைத் தோளிலிருந்து கைக்கு எடுத்து, “நீ பாடினாதான் எனக்குத் தெரியும்னு நினைச்சயா குயிலே” என்றான்.
நான் தலைகுனிந்து கொண்டு அமர்ந்திருந்தேன். மனம் முழுக்கக் கவலையாக, பயமாக இருந்தது. பயம் புகையாகச் சூழ்ந்துகொண்டு மூச்சுவிட முடியாத அளவு இருந்தது. ஆனாலும் அப்படியே பயத்தோடு சொன்னேன் “எனக்கு நீங்க வேணும்” என்று. அவன் எதையும் பேசவில்லை நீண்டநேரமாக. கடைசியில் “நீங்க அவனின் மனைவி வீணாதரி, உங்களை எப்படி ஏற்றுக்கொள்வேன்” என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. செண்பகத்தைத் தீண்டிவரும் காற்றுக்குப் பறவைகள் எல்லாம் அமைதியாக, எந்த அரவமும் இன்றி அமர்ந்திருந்தன. அந்த நிசப்தத்திலிருந்து நான் பிடிவாதமாக “எனக்கு நீயே வேண்டும்” என்றேன். இந்த ஒற்றை வாக்கியம் எனக்குள் எப்படிப் பிறந்ததோ… மறுபடியும் இரட்டித்து “எனக்கு நீயே வேண்டும்” என்றேன். எனக்கு அதுமட்டும்தான் தெரியும்.
அவன் பெருமூச்சுவிட்டு, “உனக்கு இப்படிப்பட்ட யோசனை வருவதற்கு நான் செய்த தவறென்ன?” என்றான். அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, திடீரென்று என் மனதில் ஒரு செடி துளிர்விடுவதைப் பார்த்தேன். அது வேகமாக மேலே வந்துகொண்டிருக்கிறது. நான் அந்தச் செடியையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் “எனக்கு உன்னிடம் பேசுவது பிடித்திருக்கிறது. இருந்தாலும் நான் அவளைக் காதலிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா. நாம் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான்” என்றான். நான் எதுவும் பேசவில்லை. என் மனதில் வளர்ந்த செடி மேலும் வளராமல் பிடுங்கி, கோடரியால் சின்னச் சின்னத் துண்டுகளாகச் செய்து ஜன்னலில் இருந்து எறிந்தேன். அவன் அதைப் பார்த்தான், பயத்தோடு “உன்னுடையது நல்ல வாழ்க்கை வீணா, இது உனக்கு நல்லதில்லை, கொஞ்சமும் நல்லதில்லை” என்றான். நான் சும்மாயிருந்தேன். அவன் ஏழு மாமர அளவிற்குப் பழமையானவன். ஒரு கோடைகால நீலமேகம், அவனுக்கு விருப்பமான ஏழு மாமரங்களை என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்தவன், அவனிடம் பதிலுக்குப் பதில் பேசுவது எனக்கு எப்படிச் சாத்தியம்?. சாத்தியம் ஆகலாம், ஆகாமல் போகலாம் இந்த விசயம். எப்படி இருந்தாலும், எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவுதான். நான் சும்மாவிருந்தேன். அவன் சென்றுவிட்டான்.
அடுத்த நாள் அவன் வரவில்லை, அதன் பிறகு பல நாட்களாகியும் வரவில்லை. துணி அலமாரியில் மறைத்துவைத்திருந்த நிலவுப்பூ கைப்பிடி சாம்பலாகிவிட்டது. நான் உள்ளுக்குள் ஒடுங்கிப் போனேன். இருப்பினும் அட்டமா சித்திகளில் மூன்று சித்துக்கள் பிராப்தி, பிராகாம்யா, வஸித்துவம் பெறவேண்டும் என்று தீவிரமாகத் தியானிப்பேன். யாரிடமும் பேசுபவள் கிடையாது, அறையின் கதவை அடைத்துக் கொள்வேன். சாப்பிடுவது ஒன்றும் இல்லை. ஒரே ஒரு சிந்தனை ‘அவன் வேண்டும், இந்த நிகழ்வுக்கு முன்னிருந்த இயல்பு நிலை வேறு எப்படி சாத்தியமாகும்? என்னமோ இதெல்லாம் கிடையாது, எனக்கு அவன் வேண்டும்.
ஒருநாள் அவன் வந்தான். என் அவதாரத்தைப் பார்த்து பயந்து, வருத்தப்பட்டு, கடைசியில் சொன்னான் “ஏன் இப்படி?” என்று. நான் “ஏன் வருவதை நிறுத்தினாய்?” என்றேன். அவன் தலை குனிந்துகொண்டான். அவனைச் சுற்றி இப்பொழுது பறவைகள் இல்லை. “தப்பு செய்தேனோ என்னமோ?” இதெல்லாம் எப்படி நடந்தது. அவனிடம் என்ன கேட்டபது, நான் என்ன செய்ய முடியும் அவனை? அவன் என்ன தரமுடியும் எனக்கு? என்னிடம் இல்லாது என்னது? எங்கள் நடுவிலிருக்கிற ஜன்னலை யாரும் நீக்கவாமுடியும்? ஒருத்தொருக்கொருத்தர் என்ன செய்ய முடியும்? இதெல்லாம் சரிதான், இருந்தாலும் சரி அவன் எனக்கு வேண்டும், நீ என்னுடையவள் என்று அவன் என்னிடம் சொல்ல வேண்டும்.
என் மௌனத்தையும், எண்ணங்களையும் கலைத்து அவன் “வரக்கூடாது என்பதல்ல, வராம இருக்கணும்னு கிடையாது, நீ நல்லா இருக்கணும் உன் வாழ்க்கை நல்லாயிருக்கு. நீ வேண்டுவது நல்லது இல்லை” என்றான். ஏழு மாமரங்களைப் பார்த்தவன் அல்லவா அவன், அதனால் அழுகையை நிறுத்தி சிரித்துச் சும்மாவிருந்தேன். அவன் சென்றுவிட்டான்.
எங்கள் இருவரின் அறிமுக நாட்களின் தொடக்கத்தில், அவன், எனக்கு ஒரு கோமேதகம் பதித்த அட்டிகையைக் கொடுத்தான். சிறிய குன்றிமணி அளவு உள்ள கல் அது. பசுக் கோமியத்தின் நிறத்தில், கங்கு நிறத்தில் ஒளிர்ந்தது. அதுவென்றால் எனக்கு மிகவும் விருப்பம். எப்பொழுதும் என் நெஞ்சில் அழகாக நிறுத்தி வைத்திருந்தேன். எப்பொழுதெல்லாம் அவன் வருவதை நிறுத்தினானோ, அப்பொழுதிலிருந்து அது நாள்தோறும் சிறிது சிறிதாக வளரத் தொடங்கியது. அளவுக்கு அதிகமான சுமை, தாங்கமுடியாத அளவிற்கான சுமை, கழுத்து வளையும் அளவிற்கான சுமை, எந்தப் பணியும் தள்ளி வைக்க முடியாத அளவிற்குச் சுமை, அந்தச் சுமையைச் சுமப்பதைவிட இறந்துவிடலாம் அல்லவா ஹாயாகத் தோன்றும் அளவிற்கான சுமையைக் கொண்டது அந்தக் கல்.
முதலில் அதை அகற்ற வேண்டும் என்று முயற்சித்தேன். எனக்குக் கையே வரவில்லை. ‘நீ கொடுத்ததை நீயே எடுத்துட்டுப்போ” என்று அவனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் எதற்குச் சொல்லவேண்டும். அவனுக்குத் தெரியாதா. அதற்குத் தான் ஒரு சாணைக்கல்லை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்க்கத் தொடங்கினேன், கதவைத் தாழிட்டுக்கொண்டு தேய்த்தேன், ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்னை உளவு பார்த்தார்கள். எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று, இதெல்லாம் பேயின் சேட்டைகள் என்று முடிவு செய்தனர். அவர்களிடம் நான் சொன்னேன், நீங்கள் நினைப்பதுபோல எந்தப் பேயும் என்னைப் பிடிக்கவில்லை, பிடிக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருக்கிறேன் என்று. கோமேதகத்தைக் கூடக் காட்டினேன். என்ன சொன்னாலும் எதைக் காட்டினாலும் அவர்களுக்குக் கொஞ்சம்கூடப் புரியவில்லை.எங்கே உன் கோமேதகம்? எங்கே உன் பேய்? என்றார்கள். என்னை இங்கே அழைத்துவந்து விட்டுவிட்டார்கள். எனக்கு எந்தப் பயமும் இல்லை, இங்கே மிகவும் நன்றாக இருக்கிறது. எப்பொழுதோ ஒரு நாள் அவன் வருவான். எங்கள் இருவரிடையில் பேச்சு இல்லையென்றாலும், என்னைப் பற்றி அவன் நினைக்கும் தருணங்கள், அவனைப் பற்றி நான் நினைக்கும் தருணங்கள், அவனுக்கு எப்பொழுதும் தெரிந்து கொண்டே இருக்கும். இந்தக் காற்றிலேயோ, இந்தக் கிளையிலோ ஒளிந்து அவன் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். எனக்குத் தெரியும். இப்படிச் சொல்வதையெலாம் நீங்கள் நம்புகிறீர்களா, பாருங்கள் பெரிய மாங்காய் அளவிறக்கு வளர்ந்து போயிருக்கிறது இந்தக் கோமேதகம். உனக்குத் தெரிகிறதா?” என்றாள் அவள். நான் அந்தப் பிரமையிலிருந்து வெளிவந்து அவளது நெஞ்சைப் பார்த்தேன். முதலில் எதுவும் தெரியவில்லை, இரண்டாவது முறை தெரிந்தது ‘பாறாங்கல் அளவிலான கோமேதகம்” தனதனவென்று எரிந்துகொண்டிருக்கிற நெருப்பு நிறத்தில.
நான் பயத்தோடு அவளைப் பார்த்து “உன்னோட தப்போ என்னவோ அவன் முதலில் சொன்னான் அல்லா அவன் யாரையோ காதலிக்கிறான் என்று” என்றேன். அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். “அவன் என்னைக் காதலிக்கிறான் என்ற பிரமை அடைந்தாயா நீ?” என்றாள். நான் தலையசைத்தேன். நம் மத்தியில் நடந்துபோகிற காற்றுக்குக் கூடத் தெளிவற்ற தன்மை இருக்கிறது. அதை உனக்கு எப்படி வேண்டுமோ அப்படி வளைக்கலாம். எனக்கு விரும்பியபடி நான், அவனுக்கு விரும்பியபடி அவன் சொல்லிக் கொள்ளலாம். உன் பெயர் என்னவோ எனக்குத் தெரியாது ஆனால், உனக்கு ஒரு விசயம் சொல்லவா, யானைகளை அடக்கும் பாகன்கள், யானைகளோடு ஒரு பிரத்யேக பாஷையில் பேசுவார்கள், அது உனக்கு ஐடியா இருக்கிறதா? ஒருமுறை நான் ஒரு பாகனை இண்டர்வியூ செய்தேன். “யானைகளிடம் அன்பை வெளிப்படுத்த எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் நீங்கள்” என்று. அந்தக் கேள்விக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா “அதற்கு எந்த வார்த்தைகளும் தேவை இல்லை. நம் கைகளில், நடத்தையில் இருந்து நம் அன்பையும் பாசத்தையும் உணர்கிறது” என்று. காதலும் அப்படிப்பட்டதென்று. அதற்குப் பாஷை தேவையில்லை, அந்த வீட்டில் இருந்தவரை இஷ்டபட்டாரென்று தானே நீங்கள் கேட்டீர்கள், அந்த வீட்டில் இருந்தவர் வேறு யாரோ இல்லை “என் மற்றொன்றான நான்” என்றாள்.
அவளை அழைத்துச் செல்ல யாரோ வந்தார். நான் எழுந்து எங்களவர்களை நோக்கி நடந்தேன். செல்கிற வழியில் யாரோ ஒரு பெண் மண்ணில் புரண்டு புரண்டு அழுதுகொண்டிருந்தாள். “அடியே காமாட்சி, என்னை விட்டுடு.. என்னை விட்டுடு… என் கைகளைக் கட்டிப்போடாதடி காமாட்சி, நா சிறுவனை அழைச்சுட்டு போறதுக்கே வந்துருக்கேன் காமாட்சி, அவன் மேல எனக்கு மோகம் காமாட்சி, நான் இத விட மாட்டேன்..” என்று அழுதாள். எதற்கோ பயம் வந்தது. சிறுவயதிலிருந்து அம்மன் கோவிலைச் சுற்றி, பேய் பிடித்தவர்களைப் பார்த்துக்கொண்டே வளர்ந்தேன். எப்பொழுதும் பயம் வந்ததில்லை. இப்பொழுது என்னவோ முதல் முறையாகப் பயம் வந்தது. இதுவரை நான் உணரமுடியாத “புஷ்பவர்ணமாசத்”தை உணரத் தொடங்கினேன். பயம், அவள் சொன்ன புகையாக மூச்சுவிடமுடியாமல் என்னைச் சூழத் தொடங்கியது.
சாமான்யா

24,ஆகஸ்ட் 1978இல் பிறந்தார். இவரின் முதல் கதை “கல்பனா” 26 ஜூன் 2011இல் ஆதிவாரம் ஆந்திரஜோதியில் வெளிவந்தது. “கொத்தக்கூடம் போரகாடிக்கோ லவ் லட்டர்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இவர் ஓர் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் ஆவார். தெலுங்கு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர் க. மாரியப்பன்

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குப்பம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். மஹாவித்துவான், அத்தங்கி மலை, கருமிளகுக்கொடி போன்றன இவரின் மொழிபெயர்ப்புகளாகும். அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது, திருப்பூர் இலக்கிய விருது பெற்றவர்.
Post Comment