பழந்தமிழில் கவிதைச் சூழல்
ஆங்கில மூலம் -பேராசிரியர்.ஜார்ஜ் எல். ஹார்ட்
தமிழ் மொழிபெயர்ப்பாளர்- பேராசிரியர் மு.ரமேஷ்
பழந்தமிழ்க் கவிதைகளாகக் கிடைக்கின்ற எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் மொத்தம் 2381 பாக்களை உடையது. 473 புலவர்களால் எழுதப்பட்டது. இவற்றில் 102 பாக்களுக்கு புலவர்களது பெயர் தெரியவில்லை. ஆதலால், பாக்களில் இடம்பெறும் சிறப்புத் தொடர்களைக் கொண்டே புலவர்களது பெயர்கள் சுட்டப்படுகின்றன. இலக்கணமாகவும், கவிதையியலாகவும் இருக்கிற நூலுக்கு தொல்காப்பியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு தோன்றிய பதினெண் குறும்படைப்புகளுள் சில தொடர்ந்து உயிர்ப்பு மிக்கதாக இருக்கின்றன.
தொகைநூல்கள் அகம், புறம் என இரு பெரும் பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அகம் என்பது தலைவன், தலைவிக்கிடையே நிலவும் காதல் வாழ்க்கை குறித்து சொல்லுவது. மேலும் இது ஒரு குடும்பத்துக்குள் நிகழும் செயல்களைச் சுட்டுவதாகும். புறம் என்பது போரியல் சார்ந்ததாகும். அரசனின் வீரம், கொடை, கல்வி இவற்றோடு குடிமக்கள் சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமைகள், பேணவேண்டிய பொதுவான அறங்கள், ஒழுக்கங்கள் போன்றவற்றையும் பேசுகிறது.
எட்டுத்தொகையில் 5 தொகைநூல்கள் அகத்திணையைச் சார்ந்ததாகவும், 2 தொகைநூல்கள் புறத்திணையைச் சார்ந்ததாகவும், 1 அகம் புறம் ஆகிய இரண்டினையும் சார்ந்ததாகவும் உள்ளன. ஐங்குறுநூறு 500 குறுகிய பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 3 முதல் 5 அடிகளையுடையன. வெவ்வேறு ஐந்து புலவர்களால் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு புலவரும் ஓரகத் திணைக்கு நூறு பாடல் வீதம் எழுதியுள்ளனர். குறுந்தொகை 401 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 6 முதல் 8 அடிகளால் அமைந்துள்ளன. இவற்றை 203 புலவர்கள் எழுதியுள்ளனர்.
நற்றிணை 400 பாக்களை உடையது. ஒவ்வொரு பாடலும் 9 முதல் 12 அடிகளாலானவை. இவற்றை 192 புலவர்கள் எழுதியுள்ளனர். அகநானூறு 400 பாடல்களை உடையது, ஒவ்வொரு பாடலும் 13 முதல் 31 வரை ஆனவை. இவை 142 புலவர்களால் எழுதப்பட்டுள்ளன. கலித்தொகை 150 பாக்களை உடையது. இப்பாக்கள் 12 அடிகளை சிற்றெல்லையாகவும் 80 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டமைந்துள்ளன. கைக்கிளை, பெருந்திணை உள்ளிட்ட ஏழு அகத்திணைகளிலும் பாக்கள் அமைந்துள்ளன. இறுதியாக இரண்டு தொகை நூல்கள் புறப் பொருள் பற்றியன. புறநானூறு 400 பாக்களை உடையது. பாக்கள் 4 முதல் 40 வரையிலான அடிகளைப் பெற்றுள்ளன. 156 புலவர்களுடைய பாக்கள் இத்தொகுப்பில் உள்ளன. அடுத்துவரும் பதிற்றுப்பத்து, பத்து சேர அரசர்களைப் பற்றி பத்துப் புலவர்களால் பாடப்பட்டது. பத்து அரசர்களைக் குறித்த நூறு பாக்களுள் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை. ஆதலால், எட்டு அரசர்களைப் பற்றிய எண்பது பாக்கள் உள்ளது. அடுத்துள்ள பரிபாடல் கடவுள்களைப் பற்றியது. ஆதலால் இது அகம், புறம் என இரண்டுக்கும் பொதுவாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் இது 70 பாக்களைக் கொண்டது ஆயினும் 13 புலவர்கள் இயற்றிய 22 பாக்கள் மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள பத்துப் பாட்டு 103 அடிமுதல் 782 அடிகள் வரை ஆன நெடுங்கவிதைகளாகும். பத்து தனித்தனிப் புலவர்களால் பாடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கவிதைகளுக்குள் வரும் கடவுள் குறித்த புகழ்ச்சி விவரிப்புகள் அவர்களது அகம் அல்லது புறம் என்கிற கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் பொருந்தாதது. பத்துப்பாட்டு பரிபாடல் மற்றும் கலித்தொகைக்கு முந்தையது என்பதை கவிதைக்குள் வரும் விவரனை உணர்த்துகிறது. மற்றபடி மொழியியலையும் நடையியலையும் பார்த்தால் பரிபாடலும் கலித்தொகையும் பிந்தையன என்பது தெரிகிறது.
கவிதைக்குள் விவரிக்கப்பட்டுள்ள அரசர்களைக் குறித்ததான தகவல்களை மெய்ப்பிக்கும்வண்ணம் தொல்லியல் தரவுகளும் கிடைத்துள்ளன. புகலூர்க் கல்வெட்டில் சேர அரசர்கள் மற்றும் குறுநிலத் தலைவர்களது பெயர்கள் இருப்பதை ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டுகிறார். கல்வெட்டில் உள்ள எழுத்துக் குறியீடுகளின் வடிவத்தைப் பார்த்தால் கி.பி. இருநூற்றைச் சார்ந்தது என்கிறார். கல்வெட்டில் உள்ள பெயர்கள் பதிற்றுப்பத்திலும் பிற தொகை நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.இவற்றை ஆதாரமாகக் கொண்டு பார்த்தால் சிலப்பதிகாரம் சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்கவேண்டும். இலக்கிய விவரிப்பைக் கொண்டு மேலே கண்டவற்றை மதிப்பிடலாம். சேரன் செங்குட்டுவனின் அழைப்பை ஏற்று கயவாகு தமிழகம் வந்ததாக சிலப்பதிகாரம் சுட்டுகிறது.
இலங்கை அரசனான கயவாகு கி.பி. 173.முதல் கி.பி. 195. வரை ஆட்சியிலிருந்தவன். சேரன்செங்குட்டுவன் இவனது சமகாலத்தவனாக அறியப்படுகிறான். இலக்கியங்களும், வரலாற்று ஆதாரங்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்துகின்றன. தமிழக அரசர்கள் எவனர்களோடும், பிற மேற்குலக நாடுகளோடும் வணிகம் செய்ததை தொகைநூல்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தில் பேரரசுகள் உருவாயின என்பதை ரோமாபுரி நாணயங்களின் மூலம் அறியமுடிகிறது.
1 Iravatham Mahadevan, “Tamil Brahmi Inscriptions of the Sangam Age,” Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies (Madras, 1971), 1:94-95.
புகலூர்க் கல்வெட்டில் உள்ள பிராமி எழுத்துவடிவத்தையும், சொற்களையும் வைத்துக் கொண்டு பார்த்தால் இக்கல்வெட்டு கி.மு. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டுக்குரியதாகத் தோன்றும். இதில் உள்ள சேர அரசர்களினது தகவல் படி பார்த்தால் இக்கல்வெட்டு கி.பி. ஒன்றுமுதல் மூன்றாம் நூற்றாண்டுக்குரியதாகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பயன்படுத்திய பழைய பிராமி வடிவமே ஒருவேளை கி.பி. ஒன்று முதல் மூன்றாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் பயன்பாட்டிலிருந்திருக்கலாம். பழந்தமிழ் இலக்கியங்களுள் ஆறு தொகைநூல்கள் மிகவும் பழமையானவை. இவை கி.பி. முதல் முன்னூறு ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டன. இந்தக் காலத்துக்கு வெளியே அல்லது பிறகு எழுதப்பட்ட கவிதைகளில் மாறாத நிலைப்புத் தன்மையுடைய மொழியாற்றலும் உள்ளடக்கமும் இல்லை. ஆகவே ஆறு தொகைநூல்கள் மிகவும் பழமையானவை என்பது சந்தேகத்துக்கு இடம் அற்று தெளிவாகிறது. சேர அரசர்களின் பத்துத் தலைமுறைகளைப் பற்றிய செய்திகளைத் தொகைநூல்களும் சிலப்பதிகாரமும் சுட்டுகின்றன. எனினும் தொகைநூல் காலத்துக்குப் பிறகு சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.
கிரேக்க இலக்கியங்கள் பொநிஷியன் வரிவடிவத்தில் எழுதி பரப்பப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அந்தக் காலம் இப்போது முடிந்துவிட்டது. தமிழோடும் இந்நிகழ்ச்சி தொடர்புடையதாகக் காணப்படுகிறது.
தமிழில் மூன்று அமைப்புகள் சங்கம் என்ற பெயரில் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. சங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். கி.பி.9.ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார் அகபொருள் உரைகாரரான நக்கீரர் முச்சங்கம் குறித்த கதைகளை இயற்றியுள்ளார். இதில் சொல்லப்படுவதாவது தென்மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த முதல் சங்கம் 4440 ஆண்டுகளாக நிலைத்திருந்தது, இதில் 549 புலவர்கள் வீற்றிருந்தனர். கபாடபுறத்தைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த இரண்டாம் சங்கம் 3700 ஆண்டுகளாக நிலைத்திருந்தது. இதில் 59 புலவர்கள் வீற்றிருந்தனர். தென் மதுரையும் கபாடபுறமும் கடல் கோளால் அழிந்துவிட்டதனால் மூன்றாம் சங்கம் இப்போதுள்ள வடமதுரையில் இருந்தது. 1800 ஆண்டுகளாக நிலைத்திருந்தது. இதில் 49 புலவர்கள் வீற்றிருந்தனர் என்கிறது இக்கதை. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு நிலைப்புத் தன்மையைப் பெற்றுவிட்டது இக்கதை. எனினும் பழங்கால தமிழ் இலக்கியங்களில் முச்சங்கங்களுக்குரிய சான்றுகள் எதுவும் கிடையா.எனினும் ஏதாவது ஒரு புலவர்குழாம் அல்லது இலக்கிய அமைப்பு இருந்திருக்கவேண்டும். அதனைச் சிறப்பிக்கும் வகையில்தான் முக்கியத்துவம் அளித்து சிந்தித்துப் பார்க்க இயலாத அளவிற்குக் கதை புனையப்பட்டுள்ளது. சங்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களாகப் பாண்டிய அரசர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அனைத்து கவிதைகளிலிருந்தும் பெறப்படுவது என்னவென்றால் நீண்ட பாரம்பரியம் மிக்க புலவர் மரபு ஒன்றினால்தான் தொகை நூல்கள் எழுதித் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான். சங்கம் குறித்த இன்னொரு தகவலையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு சமணர்களால் 604 இல் சங்கம் என்ற ஒரு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததாகவும் பார்க்கமுடிகிறது.
2 Ibid., p. 92.
3 Jyoti Prasad Jain, The Jain Sources of the History of Ancient India (Delhi, 1964), pp. 160-161.
பழந்தமிழகத்தில் இருந்த புலவர் மன்றத்தை சங்கம் என்று மிகைப்படுத்தப்பட்டநிலையில் கதையாடப்படுகிறது. முதலில் இது குறித்து நான் சொல்லவருவது என்னவென்றால் 600 ஆண்டுகளாவது சங்கம் நிலைப்பெற்று இருந்திருக்கவேண்டும். அதன்பிறகுதான் தொகைநூல்கள் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும். நூல்கள் இயற்றப்பட்ட காலத்திற்குப் பிறகுதான் இந்த உண்மையை அடிப்படையாக வைத்துக் கொண்டு புராணக் கதை உருவாக்கப்பட்டது. எனினும் இது வரலாற்றை அறிய உதவாது.
தமிழின் இலக்கணமரபையும் கவிதையியல் மரபுகளையும்சுட்டுகின்ற தொல்காப்பியம் தொகைநூல்களுக்கு முன்பே இயற்றப்பட்டது என்கிற கருத்துகூட உண்டு. உண்மையில் இக்கருத்து மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்கப்படவேண்டியதாகிறது. பல்லவர் காலத்தில் வழங்கிய விராம சமஸ்கிருத கருத்துக்களைச் சுட்டுகிறது தொல்காப்பியம் என்கிறார் மகஹாதேவன். விராம சமஸ்கிருதம் சிலநூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கு இழந்து விட்டது. ஆகவே தொல்காப்பியத்தில் காணப்படுகிற சமஸ்கிருத மரபுகளுக்குரிய வரலாற்று ஆதாரங்களை அறிவதற்கு நல்வாய்ப்பு இல்லாமல் போயிற்று.
தொகைநூல்கள் காட்டும் தமிழ்க் கலாச்சாரங்களின் செல்வாக்கு வடபுலத்தில் இருப்பது குறித்து இயல் நான்கில் விவாதிக்கப்படுகிறது. வடபுலக் கருத்தியல்களின் தாக்கம் பழந்தமிழகத்தில் இருப்பது தொடர்பாக மட்டும் இங்கு விவாதிக்கப்படுகிறது. தென்னிந்திய வரலாறு குறித்த ஆய்வுக்காக பெரும்பாலோரால் நம்பகத்தன்மையோடு பெரிதும் போற்றப்படுபவருமான நீலகண்டசாஸ்திரியின் கருத்தானது வருமாறு. பழங்காலத்திய தமிழ்த் தொகைநூல்களிலே சமஸ்கிருத நிருவனம் சார் கருத்தியல்கள் ஒன்றுக்கு இரண்டு என்கிற விகிதத்தில் கலந்துள்ளன. திராவிட மொழிகளிலிருந்து இந்த உண்மை பிரிக்க இயலாதவாறு ஒருங்கிணைந்துள்ளது. ஆரம்பகால தமிழ் அதன் துவக்கத்திலேயே சொற்கள் கருத்தியல்கள் மெய்மைகள் நிறுவனங்கள் என்று வடபுல மூலங்களைக் கொண்டு சமஸ்கிருத மயமாக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தமிழ், கன்னடம். தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகியவற்றின் தனி மரபுகள் அழிக்கப்பட்டு இவை தீண்டத் தகாததாக தனித்துவிடப்பட்ட சேரிமொழிகளாக மாற்றப்பட்டுவிட்டன என்கிறார்.
4 K. A. Nilakantasastri, A History of South India from Prehistoric Times to the Fall of Vijayanagar, 3rd ed. (London, 1966), p. 22.
தமிழும் ஆரியமும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்துவிட்டன. இந்நிலையில் தமிழ் மூலங்கள் இவை, ஆரிய மூலங்கள் இவையெனப் பிரித்தறிவது சுலபமானதல்ல. அப்படியே பிரித்தாலும் தமிழின் அசல் தன்மையைட் தனித்தறிய இயலாது. எனவே இவ்வாறு செய்வது பொருளற்றது என நீலகண்டசாஸ்திரி எழுதுவதும் சரிதான் என்றால் பழந்தமிழகத்தில் இருந்த வடபுலக் கருத்து நிருவனங்களைக் குறித்து விளக்குவது இங்கு அவசியமானதாகும்.
ஆரியரின் கருத்துச் சார்பின்றி தனித் தன்மைவாய்ந்த இலக்கியங்கள் தமிழில் தோன்றின என்பதில் ஐயமில்லை. தமிழில் முழுமையாகப் பார்த்தால் சமஸ்கிருத சொற்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் கல்வெட்டுகளிலும் பிராமி வடிவத்தில் சமஸ்கிருதம் காணப்படுகிறது என்று நீலகண்டசாஸ்திரி மிகைப்படுத்திக் கூறுகிறார்.
பழந்தமிழ் தொகைநூல்களை வைத்துக் கொண்டு பார்க்கிறபோது இதன் மூலமாகப் பெறப்படுகிற தகவல் என்னவென்றால் தமிழில் சமஸ்கிருதம் படிப்படியாகத்தான் கலந்திருக்கிறது என்பதாகும். ஆனால் பிற திராவிட மொழி இலக்கியங்களில் நிலைமை இப்படியில்லை. குறிப்பாகச் சொன்னால்தெலுங்கு மொழியில் உள்ள கருத்தியலும் சொற்களும் சமஸ்கிருதம்தான். உண்மையில் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படுவது சமஸ்கிருதம் அன்று. அது பிராகிருதம் என அண்மையில் மகாதேவன் விளக்கினார். அதிலும் சில சொற்கள் தூய தமிழுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டுகிறார். பத்துப் பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப் படையில் இரண்டு விழுக்காடு அளவிற்கு மட்டுமே சமஸ்கிருத சொற்கள் காணப்படுகின்றன என்கிறார் j.v. செல்லையா. அதிலும் கூட தாமரை, முத்து போன்ற சொற்கள் திராவிட மூலத்துக்குரியவை. தமிழில் 9 விழுக்காடு அளவிற்கு சமஸ்கிருதம் கலந்திருக்கிறது என்றால் மகாபாரதத்தில் அதிக அளவிற்கு திராவிட மரபு காணப்படுகிறது.
«Ibid., p. 129.
7 Ibid., p. 117.
8 Mahadevan, “Tamil Brahmi Inscriptions.” p. 93.
9 Pattuppam, trans. J. V. Chelliah (Madras, 1962), p. 337.
பழந்தமிழ்த் தொகைநூல்களில் இந்திய ஆரிய மூலங்கள் பல காணப்பட்டாலும், தமிழ் தனது தனித் தன்மைகளை இழந்துவிட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.பழந்தமிழில் முழுமையும் சமஸ்கிருத சொற்கள் கலந்துவிட்டன என்கிற நீலகண்ட சாஸ்திரியின் கருத்தானது மிகவும் தவறானது. பழந்தமிழகத்தில் பலதரப்பட்ட வடபுலக் கருத்துநிருவனங்கள் இருந்தன. அதனால் பழந்தமிழ்ச் சமூகத்தில் வடபுலக் கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனாலும் தமிழ் தனக்குரிய தூய்மையான தனித் தன்மைவாய்ந்த சொற்செரிவோடுதான் இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
பழந்தமிழ்த் தொகைநூல்களின் விவரிப்பில் இந்திய ஆரிய மூலங்கள் பல காணப்பட்டாலும் தமிழ் தனது தனித் தன்மைகளை இழந்துவிட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் தனித் தன்மையை மேலும் விரிவாக அறிவதற்கு வெவ்வேறுபட்ட அடிப்படைமாதிரிகளைக் கொண்ட விளக்கங்கள் கீழ்க்காணும் வகையில் தரப்படுகின்றன. தமிழில் சமஸ்கிருத சொற்கள் வரநேரிட்டால் இம்மொழி அமைப்பில் உள்ள தன்மைகள் அதை அப்படியே கலக்க அனுமதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக ரூபா என்கிற சமஸ்கிருத சொல் தமிழ் ஒலிப்புநிலைக்கேற்ப உருவம் என்றுதான் வரும். வேதம் என்ற சமஸ்கிரத சொல் தமிழ்ப் பொருள் நிலைக்கேற்ப மறை என்று வருகிறது. குபேரா என்ற சமஸ்கிருத சொல் அதற்கு நிகரான தமிழ் மரபுநிலைக்கேற்ப மாநிதிக் கிழவன் என்று வருகிறது.
பிற திராவிட மொழிகளில் உள்ள ஆரம்பகால எழுத்துகள் எல்லாம் சமஸ்கிருதத்தின் செல்வாக்கினால் உருவாக்கப்பட்டவை. அடுத்தநிலையில் சென்று தமிழைப் பார்த்தால் வடக்கத்திய மொழிகளில் இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. தமிழ் தனக்குரிய தனித்துவத்தை நிறுவிக் கொண்டதன் மூலம் தென்னக மரபாக வெளிப்படுகிறது. தமிழகத்தில் வடக்கத்திய கருத்து நிருவனங்கள் வலிமையாக இருந்த போதிலும் வடசொல்லைக் கூட தனக்குரிய தனித்துவத்தோடுதான் உள்வாங்குகிறது. இது மேலும் அளவிடற்கறியது.
arampozhila@gmail.com

பேரா. மு.ரமேஷ்


Post Comment