48-வது சென்னைப் புத்தகக் காட்சி மதிப்பும் மாண்பும்

ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12வரை தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு உதவியோடு குறிப்பாக நிதியுதவியோடும் 48வது சென்னைப் புத்தகக் காட்சி  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. சுமார் 10,00,000 புத்தகங்கள் 900 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 27, 2024 அன்று மாலை 5 மணியளவில் இப்புத்தகக்காட்சியை தொடங்கி வைத்தார். இந்தியத் துணைக்கண்டத்தின் மேனாள் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் காலமானதனால் புத்தகக்காட்சியின் விரிவான தொடக்கவிழா தவிர்க்கப்பட்டு மிக சுருக்கமாகவும் எளிமையாகவும் தொடங்கிவைக்கப்பட்டது. 

சமூகநீதி சமவாய்ப்பு

இப்புத்தகக் காட்சியில் போற்றிப் பாராட்டத்தக்க ஒன்று என்னவென்றால் பெண்கள், ஆதித்திராவிடர், பழங்குடியினர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் என இருக்கும் சிறப்புப் பிரிவினரையும் கருத்தில் கொண்டு அரங்கம் வழங்கியதை குறிப்பிடலாம்.

திடலுக்குள் நுழைந்த உடன் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்களுக்கான அரங்கம் இருந்தது. ஒருவாரம் இவ்வரங்கம் காட்சிப்படுத்தப்பட்டது. புத்தக அரங்கிற்குள் சென்றால் ஒன்பது வாயில்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. கலைஞர் பாதை, பாவேந்தர் பாதை, கம்பர் பாதை, இளங்கோ பாதை, வள்ளலார் பாதை, வ.உ.சிதம்பரனார் பாதை, திருவள்ளுவர் பாதை என்று பெயர்சூட்டப்பட்டிருந்தன. அதனைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மகிழ்ச்சியைத் தந்தது. குறிப்பாக, இக்காலத் தலைமுறையினருக்கு இவ்வாளுமைகளை அறிமுகம் என்னும் நிலையில் நினைவூட்டுவதற்கான வாய்ப்பாகவும் இது திகழ்ந்தது. திருவள்ளுவர் பாதையில்தான் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு அரங்கம் வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் இது போற்றுதலுக்குரிய முன்னெடுப்பாகும்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓர் அரங்கம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரிய கொள்கை மற்றும் செயல்திட்டங்களால் சமூகநீதி, சமத்துவம், கல்வியியல், இடஒதுக்கீடு, அனைவருக்கும் அடிப்படை கல்வி, தாய்மொழி கல்வி, இல்லந்தோறும் கல்வி போன்றவற்றால் கல்வி கற்றோருடைய எண்ணிக்கை இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விட பெருகியிருக்கிறது. பரவலாக பயன்பாட்டிலும் இருக்கிறது. இதன் விளைவாக, எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது.   அனைத்து சாதி, சமய, பாலினம், மாற்றுத்திறனாளிகள் என்று தமிழ்சமூகமாக மைய நீரோட்டத்தில் வாசகர்களாகவும் எழுத்தாளர்களாகவும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். இதற்கு தமிழ்நாடரசின் கல்விக் கொள்கை அடிப்படைக் காரணம் என்றால் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்-விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாடும் மற்றொருக் காரணமாக குறிப்பிடமுடியும். சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைவருமே தங்களுடைய கடின உழைப்பைச் செலுத்தினர்.  

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரதி அறக்கட்டளையின் முயற்சி

2024 டிசம்பர் 27ல் தொடங்கி 2025 ஜனவரி12 வரை புத்தகக்காட்சி நடைபெறபோகிறது என்னும் அறிவிப்பு வந்த உடன் ‘மாற்றுத் திறனாளிகளுக்கான பாரதி அறக்கட்டளை’ நிறுவனரும் எங்கள் மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியருமான முனைவர் கெ. குமார் அவர்கள் ‘இவ்வாண்டு மாற்றுத் திறனாளிகளின் நூல்களை காட்சிப்படுத்தப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களை பொது வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் அதற்கு ஓர் அரங்கம் வேண்டும் யாரிடம் பேசலாம்! யாரை அனுகலாம்! தம்பி’ என்று என்னிடம் கேட்டார். உடனடியாக ப.ப.சியின் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் அன்பிற்கினிய தம்பி முனைவர் இராமஜெயம் அவர்களுக்கு நான் தொடர்புக்கொண்டு எங்களுக்கு சென்னைப் புத்தகக்காட்சியில் ஓர் அரங்கம் வேண்டும் அதற்கான வழிமுறையை சொல்லுங்கள் என்றேன். வாஞ்சையோடு கேட்டு கொண்டு உடனடியாக சொல்லுகிறேன் அய்யா! என்று சொல்லிவிட்டு மூன்று நிமிடம் கழித்து ப.ப.சியின் செயலர் ‘முருகன் அய்யாவிடம்’ சொல்லிவிட்டேன்! அவரும் உங்களை நேரில்வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார் என்றார். நான் (மு.ரமேஷ்), ஆய்வாளர் அய்யனார், பேராசிரியர் குமார் ஆகிய மூவரும் தேனம்பேட்டையில் உள்ள ப.ப.சி. அலுவலகத்திற்குச் சென்றோம். அப்போது நாங்கள் வழிதெரியாமல் சிரமம்படக்கூடாது என்பதற்காக ஒரு வழிகாட்டியை செயலர் முருகன் அய்யா அவர்கள் அனுப்பிவைத்திருந்தது எனக்கு நெகிழ்வைத் தந்தது. அவருடைய மனிதப் பண்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பரப்பரப்பான பணி நெருக்கடிகளுக்கு இடையிலும் எங்களை மிகுந்த அன்போடு அழைத்து அமரவைத்து எங்கள் கோரிக்கையை கேட்டுகொண்டு உங்களுடைய கோரிக்கையை ஒரு கடிதமாக எழுதி கூரியர் அனுப்புங்கள்! எனது மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள்! என்று சொல்லிவிட்டு என்னுடைய அலைபேசி எண்ணை வாங்கி கொள்ளுங்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்! என்றார்.  பிறகு கோரிக்கைக் கடிதத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரதி அறக்கட்டளையின் விவரங்களையும் இணைத்து பேரா. குமார் அவர்கள் ப.பா.சி. அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்.

ப.பா.சி அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே 102-ஆம் அரங்கு பாரதி அறக்கட்டளைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாற்றுத்திறனாளி படைப்பாளர்களுக்கு ஒரு தனியரங்கம்

48-வது சென்னைப் புத்தகக்காட்சியில் தென்னிந்திய பதிப்பாளர் புத்தக விற்பனையாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஆகியவை மாற்றுத்திறனாளி படைப்பாளர்களுக்கென்று தனியாக ஓர் அரங்கத்தை ஒதுக்கித் தந்தனர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆய்வுக்கட்டுரை, போட்டித் தேர்வுக்கான நூல்கள் என்று மாற்றுத்திறனாளி படைப்பாளர்களின் நூல்கள் முதல் முறையாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 

கோவையிலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் சுகுமாரன் அவர்களின் 5 நூல்கள், பேராசிரியர் குமார் அவர்களின் போட்டித் தேர்வுக்கான நூல்கள் உட்பட 8 நூல்கள், பேராசிரியர் சேலம் ஆத்தூர்க் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு. முருகேசன் அவர்களின் 1 நூல், பேராசிரியர் மு. ரமேஷ் அவர்களின் 12 நூல்கள், செங்கல்பட்டு கல்லூரி பேராசிரியர் நாகராஜன் அவர்களின் 2 நூல்கள், கௌரவ விரிவுரையாளர் சரவணன் அவர்களின் 1 நூல், மதுரை வெங்கடேசன் அவர்களின் 1 நூல் உட்பட 13 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் படைப்புகள் இவ்வரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.  2005 முதல் கடந்த 20 ஆண்டுகளாக சென்னைப் புத்தகக்காட்சிக்கு தொடர்ந்து வந்துக்கொண்டேயிருக்கிறேன். எனது ‘வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்’ கவிதை தொகுப்பை எடுத்துகொண்டு முதன்மை வாசலிலே நின்றுக்கொண்டு வருகிற போகிறவர்கள் இடத்தில் எல்லாம் இது என்னுடைய கவிதை தொகுப்பு வாங்குங்கள் எனக்கு நூல் வாங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் காசு தேவை என்று கெஞ்சிய காலம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலகாலம் நந்தனம் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் ரகுராமன் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரங்கை பயன்படுத்துவார். 2022ஆம் ஆண்டு சில படைப்பாளர்களிடம் அவர்தம் படைப்புகளை விழிப்புணர்வுக்காக வேண்டி வாங்கி வைத்தோம். அப்போது சிற்றரங்கில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து எழுத்தாளர் ஜமாலன் அவர்களை அழைத்து பேசவைத்தோம். அப்போது அவர் தென்னிந்திய பதிப்பாளர் புத்தக விற்பனையாளர் சங்கத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் 8 அம்ச கோரிக்கைகளை தமது முகநூல் வாயிலாக முன்வைத்தார். அவற்றுள் ஒன்று மாற்றுத்திறனாளர் படைப்பாளிகளுக்கு தனியரங்கம் ஒன்று ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என்பதகும். அது இவ்வாண்டு நிறைவேறியிருக்கிறது.

ஊடகங்களின் ஆதரவு

ஆனந்த விகடனிலிருந்து முதன்மையாசிரியர் வெ.நீலகண்டன், செய்தி ஆசிரியர் சயலபதி, மாணவ செய்தியாசிரியர் தாளமுத்து ஆகியோர் வந்து எங்களை சந்தித்து பேசி அரங்கத்தை பார்வையிட்டு செய்தி சேகரித்தனர். மாணவ செய்தியாசிரியரான தாளமுத்து அவர்கள் எம்மைப்பற்றி சிறப்பானதொரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

சிங்கப்பூர் தமிழ் மீடியாவிலிருந்து செய்தியாளர் சாய்ராம், செய்தியாளர் ஐஷ்வர்யா அவர்கள் வந்து செய்தி சேகரித்து சிறப்பாக வெளியிட்டனர். நியு இந்தியன் எக்ஸபிரஸிலிருந்தும் வந்து செய்தி சேகரித்தனர்.

பார்வையற்றோரின் கல்வி சவால்கள், தேவைகள், பிரைலி மொழியின் இன்றியமையாமை குறித்து ஜனவரி 6ஆம் நாள் அன்று தினமணி செய்திகளை வெளியிட்டிருந்தது. இதற்காக தினமணிக்கு தனியாக நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எம்மை அங்கிகரித்த ஆளுமைகள்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் அங்கிகாரத்திற்காகத்தான் ஏங்குகின்றனர். தாங்கள் செய்யும் செயலை தன்னிலைகளை தனித்துவத்தை யாரேனும் அங்கிகரிக்க மாட்டார்களா! என்று ஏங்குவோர்க்கு இடையில் நாங்களும்தான் இருக்கிறோம். எங்களை பொதுசமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளுவதற்கு பெரியோர்களின் அங்கீகாரம் எமக்கு தேவைப்படுகிறது. அந்தவகையில் எமது அரங்கை கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், காவல்துறையதிகாரிகள் என்று பலரும் வந்து பார்வையிட்டு நூல்களை வாங்கி கொண்டு வாழ்த்தி சென்றார்கள்.

முதல்நாளில் பெருமதிப்பிற்குரிய பாவலர் அறிவுமதி அவர்கள் வந்து நூல்களை வாங்கி வாழ்த்திச் சென்றார். திராவிடக் கழகத்தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களும் வந்து நூல்ஙளை வாங்கி கொண்டு எம்மை பாராட்டி சென்றார்கள். சென்னை நூலக ஆணைக்குழுத் தலைவர் பதிப்பாளர் கவிஞர் மனுஷயப்புத்திரன் ஒவ்வொருநாளும் எமது அரங்கத்திற்கு வந்து எம்மை வாழ்த்தியது மகிழ்வை தருகிறது.

தமிழ் உலகில் புகழின் உச்சத்திலிருக்கிற பெரும் பேச்சாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர், கவிதா ஜவகர் எமது அரங்கத்திற்கு வந்து நூல்களை வாங்கி கொண்டு மனமார வாழ்த்தினர். பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் எங்களை தங்களுடையப் பிள்ளைகளை அணைப்பது போல அணைத்துகொண்டது வாழ்வில் மறக்கமுடியாதது. 

புகழ்பெற்ற சிந்துவெளிப் பண்பாட்டாய்வாளர் பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் வந்து நூல்களை அவரே பார்த்துபார்த்து வாங்கி கொண்டு எங்களை அன்பொழுக அணைத்து வாழ்த்தி சென்றார்.

எங்கள் மாநிலக்கல்லூரி முதல்வரும் தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இணை இயக்குநருமான இரா. ராமன், எங்கள் மாநிலக்கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் சி.இரகு அவர்களும் எம்மை வந்து வாழ்த்தினர்.

எழுத்தாளர் ஜமாலன், திரைப்பட வசனகர்த்தா பேரா. சங்கர்தாஸ், பேரா. ஜெயபாலன், கவிஞர் தமிழ்த்தம்பி உள்ளிட்ட பலரும் வந்து நூல்களை வாங்கி எம்மை வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.

ஒவ்வொருநாளும் யார் பேச வருகிறார்கள் என்பதனை தெரிந்துக்கொண்டு பேச்சாளர்கள் மேடையில் இருக்கும்போதே அங்கு சென்று காத்திருந்து அவர்களிடத்தில் எம்மைப்பறி எடுத்துச் சொல்லி பேச்சாளர்களை அழைத்துவந்தவர் எங்கள் மாநிலக்கல்லூரி தமிழ்த் துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் மணிகண்டன் அவர்கள்தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

மாற்றுத்திறனாளி படைப்பாளர்களை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான பணியை செய்துள்ளது. இது உண்மையில் பாராட்டிற்குரியது. இந்த முயற்சிக்கு ஊடகங்களின் ஆதரவும் கிடைத்தது.  

மாற்றுத் திறனாளிகளுக்கான தனியரங்கம் புத்தகக் காட்சியிலிருக்கிறது என்னும் செய்தியை தெரிந்துகொண்ட ஊடகங்கள் பல அரங்கிற்கு வந்து பாரதி அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் குமார், கவிஞர் மு. ரமேஷ், மாணவர் க.மணிகண்டன் ஆகியோரிடம் பேட்டி கண்டும் அரங்கை பார்வையிட்டும் தத்தம் ஊடகங்களில் செய்தியை வெளியிட்டனர்.

முதல்நாள் தொடங்கி கடைசி நாள் வரையில் டி.டி. நியூஸ் (D.D. News) செய்தியாசிரியர் தினிஷா அவர்கள் எங்களை பற்றிய செய்திகளைச் சேகரித்து வெளியிட்டதோடு பிற செய்தி ஊடகங்களை எங்களிடத்தில் ஆற்றுப்படுத்திக் கொண்டே இருந்தார். தினகரன் செய்தியாளர் மணிகண்டன் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி  சன் நியூஸ், உள்ளிட்டோரை அழைத்துவந்து  எங்களைப்பற்றி செய்திகளைச் சேகரித்து வெளியிட்டார். நியூஸ்-18, புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகளும் மிக சுருக்கமாக எங்களை அடையாளப்படுத்தின.

இவ்வாறு எங்களை சிறப்பு செய்த தென்னிந்திய பதிப்பாளர் புத்தக விற்பனையாளர் சங்கத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு முதல்வர்-துணைமுதல்வர் உள்ளிட்டோருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post Comment