முனியாண்டிக்கு ஸ்தோத்திரம்
– வசந்தி முனீஸ்

கல்யாணத்துக்கு முன் ‘கிறிஸ்டி’யாக இருந்தவள். மாசானமுத்துவோடு கல்யாணம் முடிந்தப்பிறகு மாசானமுத்துவுக்காக ‘கிட்டு’வாக மாறிப்போனாள். ஞாயிற்றுக் கிழமைகளில் வேதக்கோயிலுக்குப் போய் மெழுவர்த்தி ஏற்றியவள். இப்போது ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு வாசல் கழுவி விளக்கேற்றுவாள். ஏனென்றால், மாசானமுத்துவின் குலதெய்வம் முனியாண்டி. முனியாண்டிக்கு ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளென்பதால், மாசானமுத்துவுக்காக அதிகாலை எழுந்து எல்லா வேலையையும் செய்து முடிப்பாள். அவ்வளவு தான்!
மற்றபடி கோவில் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டாள்.
மாசானமுத்து ஒருநாளும் கிட்டு விசயத்தில், விருப்பத்தில் தலையிட்டதேயில்லை. மாமியாக்காரி மண்டையப் போட்டப் பிறகுதான் கிட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்காள். இல்லையென்றால் ரெண்டுபேரும் பொழுது விடிஞ்சதிலிருந்து அடையுற வரைக்கும் சண்டையப் போட்டுக்கிட்டு நாறத்தான் செய்வார்கள். “ இந்த நாயிக்கிப் பொறந்தவங்கிட்ட படிச்சி படிச்சி சொன்னனே… நம்ம குடும்பத்துக்கு வேதக்காரி ஆவாதுன்னு. கேட்டானா..! என்னத்தக் காட்டி எடுபட்ட செரிக்கி எம்புள்ளய மயக்குனாளோ. கட்டுன்னா இவளத்தான் கட்டுவென்னு ஒத்தக் கால்ல நின்னான். கட்டிட்டு வந்த நாள்லருந்து நாள் கெழமப் பாக்காளா! நல்லநாள் அதுவுமா வெள்ளன எந்திச்சி வீடு வாசத் தூக்குறாளா; வெள்ளி-செவ்வா ஒரு ரசத்த வச்சோம் பருப்பக் கடஞ்சோம்மான்னு இல்லாம. கறி, கருவாடுன்னு வச்சி வீட்ட நாறடிக்கா! புருசனப் பறி கொடுத்தவமாறி எப்பும் பாரு பூவும் கெடையாது; பொட்டும் கெடையாது. “ என்று மாசானமுத்து அம்மா ஆரம்பிப்பாள்.
“ நா பூவும் பொட்டும் வைக்கிறேன். வைக்காமப் போறேன். ஒங்களுக்குத் தேவன்னா, பூவும் பொட்டும் வச்சிக்கிட்டு மேக்கருந்து கெழக்கவரைக்கும் ‘ஜிங்கு ஜிங்கு’ன்னு அலையுங்க ஒங்கள இப்பம் யாரு தடுக்கா! “ கிட்டு பதிலடி கொடுப்பாள்.
“ பாத்தீயால ஓன் பொண்டாட்டி பேசுறத. இந்த வயசுல நா ‘ஜிங்கு ஜிங்கு’ன்னு அலையனும்மா.” சிணுங்கத் தொடங்குவாள் மாசானமுத்து அம்மா.
“ எம்மோ! எதுக்கு இப்பம் நாடகம் போடுற. நீதான சும்மா இருந்தவக்கிட்ட கொசருயிழுத்த? “
“ ஏ.. முனியாண்டி அய்யா! பத்துமாசம் சொமந்து பெத்தப் புள்ளயே நாடாகமாடுறன்னு சொன்னப்பெறவு இன்னும் நா உசுரோடு இருக்கணும்மா. என் ஓலய எங்கக்கொண்டுப் போட்டுருக்க. ஊர்ல வாழ வேண்டியதெல்லாம் துள்ளத் துடிக்கச் சாவுது. எனக்கு சாக்காலம் வரமாட்டேங்குத.” வாசலில் உக்காந்து முற்றத்தில் மூக்கு சீந்துவாள்.
“ எப்படி நல்ல சாக்காலம் வரும் ஒங்களுக்கு? ஒரு பொண்ணுபுள்ளய கொஞ்ச நஞ்சப் பாடாப் படுத்துறீங்க.” வாய்க்குள் முணங்கும் கிட்டுவை, “ ஏட்டி இப்பம் நீ வாய மூடுறயா இல்லையா! கூட கூட பேசிக்கிட்டு. “ கோழிக்கூட்டுக்குள் ஒளிச்சிப் போட்ட குவாட்டர் பாட்டிலையெடுத்து கொஞ்சமும் நீர் சேர்க்காமல் கடகடவென குடித்துவிட்டு, கசப்பும் காட்டமும் தாங்காமல் காறித் துப்பிவிட்டு, “ ஒரு நாளு ஒங்க ரெண்டுப் பேத்தாள நாந்தான் தண்ணியில்லாக் கெணத்துல உழுந்து சாவப்போறேன். அப்புந்தான் நீங்க அடங்குவீங்க.” அவர் பங்குக்கு அவரும் ஒரு நாடகத்தைப் போட்டுவிட்டு குளிர் தாங்காமல் குப்பையில் சுருண்டுப் படுத்திருக்கும் குட்டி நாயைப்போல் குடித்த இடத்திலயே படுத்துவிடுவார் மாசானமுத்து.
தன் அம்மாவும் பொண்டாட்டியும் போடும் சண்டையைச் சாக்கா வைத்து சாராயத்தை சாத்து சாத்தென்று சாத்தியதால் மாசானமுத்துவுக்கு உடம்பில் தெம்பில்லாமல் போனது; உள்ளத்தில் கிட்டு மீது அன்பில்லாமல் போனது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு ‘குடி’ கூடிப்போனது; வாயத் திறந்தாலே வாய்க்கு வந்தபடி கிட்டுவைப் பேசுவது வழக்கமாகிவிட்டது. கருக்கலானாலே கைகள் நடுங்கத் தொடங்கிவிடும்; கால்கள் தானாய் மதுக்கடை நோக்கி நடக்கத் தொடங்கிவிடும். இப்போது அவருக்கு வயது ஐம்பது தாண்டுகிறது. காலை ஒரு ‘60’வது போட்டால் தான், அரை இட்லி உள்ளப்போகும். மதியம் ஒரு ‘90’ போட்டால் தான், ஒரு குத்துச் சோறு தொண்டையிலிறங்கும். மாலை ஒரு ‘குவாட்டர்’. இதில் ஒரு பொழுது ஒரு இம்மியளவு குறைந்தாலும் அந்த நாள் அவருக்குத் துக்கநாள் தான். கிட்டுவுக்கு ‘தொல்லை’நாள் தான்.
பத்து வருடங்களுக்குப் பிறகு மாசானமுத்துவின் தம்பிகள் முனியாண்டி கோவில் கொடைவிழா வந்த மகிழ்ச்சியான நாளில். கிட்டு காலையிலயே எல்லாருக்கும் பால் காப்பிப் போட்டுக் கொடுத்துவிட்டு, மாசானமுத்துவுக்குக் கடுங்காப்பிப் போட்டு ஆவிப் பறக்க எடுத்துக்கொண்டு வெளியே போனாள். படுத்தத் திண்ணையில் தலைகாணியைப் போர்வைப் போர்த்திக் கிடந்தது. போர்த்திக் கிடந்த மாசானமுத்துவைக் காணும். கூப்பிட்டுப் பார்த்தால் சத்தமில்லை. கடுங்காப்பியைக் கடுங்கோபத்துடன் அடுப்படியில் வைத்துவிட்டு, வீட்டின் பின்புறம் போட்ட ஏனத்தைக் கழுவப் போனாள் கிட்டு. அங்கு வானத்தைப் பார்த்து குவார்ட்டர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் மாசானமுத்து.
“ ச்சீ மனுசனா நீரு! கோயில் கொடையுமா காலங்காத்தால குடிச்சிக்கிட்டு. கொழுந்தமாருவ என்ன நெனப்பானுவ? வந்தவங்க என்ன சொல்லுவாங்க! இன்னைக்கி ஒரு நாளு குடிக்கலன்னா செத்தாப் போயிருவீரு. எங்கப் போனாலும் என் மானத்த வாங்குறதே ஒமக்குப் பொழப்பாப் போச்சி.“ ஏசியபடி ஏனத்தைக் கழுவினாள் கிட்டு.
“ எங்கவுள்ள கிறிக்கியா இருப்பா இவ. என்னமோ வெளியாளுமாறி பேசிட்டுருக்கா. மூணுபேரும் என் ஒடப்பொறப்பு; என் ரெத்தம் டி நாயே. இவனுவ சின்னப் புள்ளயா இருக்கும்போது, எங்க சித்திக்காரி சோளமாவக் கிண்டி வச்சிட்டு சின்ன மூலக்கரைக்கி வெள்ளன நெல்லலறுக்கப் போயிட்டு சாயந்தரங்காணுதான் வருவா. பசிக்கும்போதெல்லாம் நாந்தான் இவனுவளுக்கு மாவ உருண்டப் புடிச்சிக்குடுப்பென். மிஞ்சிப்போனா ஆறேழு உருண்ட வரும். இவனுவ மூணுபேத்துக்கும் ரெண்டு ரெண்டு குடுத்துட்டு நா ஒண்ணுதான் திம்பென். இன்னாருக்கானே மாரிமுத்து, இவங் கடக்குட்டிப் பயலாச்செ பசித் தாங்கமாட்டான்னு அதிலயும் பாதியக் குடுத்துடுவென். ஆனா, சாயிங்காலம் வேல முடிஞ்சி வரும்போது மறக்காம சித்தி சீனிக்கிழங்கு வாங்கிட்டு வந்து தருவா. அதையும் இவன் வயித்தத் தடவிக்கிட்டு, ‘என்னோவ்! எனக்கொன்னு தாயேன்’ன்னு கேப்பான். அதிலயும் கொஞ்சம் குடுத்துடுவென். தெரியுமாட்டி! “
“ மாவு உருண்டங்கிறதுனால குடுத்துட்டீரு. இதே கோட்ரா இருந்தா ஒத்தச் சொட்டு குடுத்துருப்பீயரா, உசுரோடத்தான் எங்கொழுந்தமார விட்டுருப்பீயரா? “ கிட்டு சொன்னதும் சிமெண்ட் தரையில் துட்டு விழுந்து ஓடுவதுபோல தம்பிகள் மூவரும் ‘கினுங் கினுங்’கென சிரித்தனர். கிட்டும் ஒரு சொட்டு உதடு பிரிக்காமல் சிரித்தாள். மாசானமுத்து வேப்பமுத்துபோல் சிரித்து, “ உண்மையச் சொல்றவன இந்த ஒலகம் என்னைக்குமே நம்பாது. பொய்யச் சொல்றவன ஒருநாளும் சந்தேகங்கூடப் படாது. சரித்தாயி, நீ நம்ப வேண்டா”மென குளிப்பற்குச் சோப்பு டப்பாவைத் தேடத் தொடங்கினார்.
அனைவரும் குளித்து சாப்பிட்டு முடித்துவிட்டு திண்ணையிலமர்ந்து சாய்ந்தரம் பூசைக்குத் தேவையான சாமான்களை பேப்பரில் எழுதி பக்கத்துவீட்டு பட்டு, சுரேஷ்யிடம் பணமும் பொருட்களை வாங்கி வர அரிசிச் சாக்குப்பை ரெண்டும் கொடுத்தனர். பட்டு மாசானமுத்துவைப் பார்த்து, “ மாமோய்! முனியாண்டிச் சாமிக்கு வைக்கிற முக்கியமான அயிட்டத்த மறந்துட்டியரே..” என்றான்.
“ அதெல்லாம் நேத்தே வாங்கியாச்சு. நீங்க இத மட்டும் சட்டுப்புட்டுன்னு வாங்கிட்டு வாங்க.” என்று விரட்டினார் இருவரையும் மாசானமுத்து.
“ அதானப்பாத்தேன் நீரு எத மறந்தாலும் கோட்ர மறக்கமாட்டியரே” பட்டு பைக்கில் பறந்துபோனதும், “என்னோவ் நம்ம சாமிக்கு இப்பும் கோட்ரு மட்டுந்தானா! எங்கம்ம சாமியாடும்போது பீடி, சுருட்டு, கஞ்சாலாம் வைப்பாங்களே.. அதெல்லாம் இப்பும் வைக்கிறீங்களா இல்லையா?” என்றான் பெரியமுத்து. “ அதெல்லாம் ஒண்ணு கொற வைக்காம ஒவ்வொரு கொடைக்கும் அவருக்கு என்னால ஏண்ட மட்டும் எல்லாம் செஞ்சுட்டுதான் வாரேன். ஆனா, அவருதான் நம்ம குடும்பத்த முழிச்சுப் பாக்கமாட்டுக்காரு.” சொல்லிவிட்டு தொட்டாச் சிணுங்கியாய் சுருங்கிப்போனது மாசானமுத்துவுக்கு முகம்.
மாலையானதும் பெண்கள் பொங்கப்பானை, பச்சரிசி, மண்டை வெல்லம், விறகு,பழ வகைகள், இனிப்பு வகைகள், கார வகைகள், ரோஜாப்பூ மாலைகள், வெள்ளை அரளி, கிரேந்திப்பூ ஆரங்களை எடுத்துச் சென்றனர். ஆண்கள் சேவல், கருத்தக்கிடா, வாழக்குழைகள், பூசை சாமான்களை கொண்டுச் சென்றனர். ஒருநேரத்துக் கொடையென்பதால் அரை செட்டு மேளம் மட்டுமே வரவழைக்கப்பட்டிருந்தது. கோயில் முன்னாடி நிற்கும் வேப்ப மரத்தில் கட்டிய மின்விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் வாத்தியக்கருவிகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். பீப்பி வாசிப்பவர் ‘பீபீ’ என்று வாசித்ததும் சிறுவர்கள் ‘ஈஈ’ என சிரித்து மரத்தைச் சுற்றி வந்தனர். மாசானமுத்து சுண்ணாம்பு அடிக்கப்பட்ட மூன்று மண் பூடங்களின் உச்சியில் தண்ணீர் ஊற்றிவிட்டு சந்தனம், குங்குமம், மஞ்செண்ணையை சாத்திவிட்டு, ஒவ்வொரு பூடத்திற்கும் தென்னங்குருத்தும் இளநியையும் வெட்டிவைத்து, தலை வாழை இலையில் பழங்களையும் இனிப்புகளையும் கார வகைகளையும் படையல் வைத்தார். சிகரெட், பீடி, சுருட்டு, கஞ்சா நான்கினையும் ஒரு தாளில் சுருட்டி சிறுவர்கள் பார்க்காதவாறு பூடத்தின் நடுவேயும், மதுப்பாட்டிலை விளக்காங்குழியின் உள்ளே மறைவாகவும் வைத்தார்.
பெண்கள் கற்களைக் கொண்டு அடுப்பு தயார்செய்து பானைக்கு சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து சூடத்தினைப் பொருத்தி அடுப்பில் போட்டு உலைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
பட்டுவும் சுரேசும், “ அண்ணாச்சி அடிக்கிற அடியில பத்து வருசமா வராத முனியாண்டிச்சாமி பாஞ்சி வரணும். பாத்துக்காரும்..” என்றார்கள்.
“ தம்பியோ! நம்ம அடியில முனியாண்டி எப்படி ஓடி வாரான்னு மட்டும் பாருங்க. சும்மா பிருபிருன்னு பிருத்து தள்ளிருவோம். ஆமா… பாட்லு எதாவது கெடக்கா? ஆளுக்கு செத்தோல போட்டோம்னா ஓங்கியடிக்க கொஞ்சம் தோதுவாருக்கும்.” என்றார் தவில்கார அண்ணாவி.
“ இப்படித்தான் லெத்திக்குளம் கொடையில ஓங்கியடிப்பேன் ஓங்கியடிப்பேன்னு ஒரு பாட்லயும் ஒத்தேல அடிச்சிப்புட்டு ஓடைக்குள்ள நீரு ஒருபக்கம் தவுலு ஒருபக்கம் உருண்டுட்டுக் கெடந்தக் கதலாம் எங்களுக்குத் தெரியும்…! கொடை முடியட்டும் அப்பறம் எல்லாம் தாரோம்.” என்று பட்டுவும் சுரேசும் நடையைக் கட்டினர்.
“ யக்கோ! கிட்டு மைனிய எங்க? இன்னும் ஆளக்காணும்.” என்றான் பெரியமுத்து. அடுப்பின் புகையெரிச்சலால் சிந்தியக் கண்ணீரைத் துடைத்தபடி, “ அவ நம்ம கோயிலுக்கெல்லாம் வர மாட்டா; நம்ம சாமியயெல்லாம் கும்புட மாட்டா.” என்றாள் மலர்.
“ மைனி பேரத்தான் மாத்திருக்கு. ஆளு இன்னும் வேதத்துல தான் இருக்கா! “
“ அவளாட்டும் பேரையாவது மாத்திருக்காளே. ஒங்க நொண்ணேங்காரு கல்யாணத்துக்கு முந்தியும் ஒரே…குடிதான். கல்யாணத்துக்கு அப்பறமும் ஒரே…குடிதான். அவரு மாத்ரம் மாறமாட்டாராம். எங்க அக்கா மட்டும் மாறனும்மா ஒங்களுக்கு? ” மலர் கேட்டக் கேள்வியில் பேச்சு மூச்சுயில்லை பெரியமுத்துக்கு.
பொங்கப் பானைப் பொங்கி வழிந்ததும் பெண்கள் குலவைச் சத்தமிட்டனர். பொங்கப் பானையில் கரண்டிப் போட்டுத் தோண்டி ஒவ்வொரு பூடத்திற்கும் சமமாய் வைத்து, கண்ணாப்பையைப் பட்டு கையில் கொடுத்து அடுப்பிலிருந்து கங்கு அள்ளி வரச் சொன்னார். தன் தம்பிகளை, “ எல, மூணுவெரும் சட்டையைக் கழட்டிட்டு சாரத்த நல்ல மடிச்சிக்கட்டி, துண்ட இறுக்க இடுப்புல கெட்டுங்க மொதல்ல. மேளக்கார அண்ணாவியளா எந்தீங்க” பூசைச் செய்ய தயாரானார் மாசானமுத்து. பட்டு கங்கள்ளிக் கொடுத்துவிட்டு கை மணியை எடுத்துக்கொண்டான். மாசானமுத்து இடது கையில் பெரிய மலையாள வெற்றிலையில் சூடத்தினைக் கொழுத்திக் கொண்டும், வலது கையில் கண்ணாப்பையிலிருந்தக் கங்கில் சாம்புராணி பவுடரைக் கொட்டி புகையும் நறுமணமும் காற்றில் கலக்க தீபராதனைக் காட்டத் தொடங்கினார். மெளக்காரர்கள் முனியாண்டிக்கு உகந்த அடியை மேனி அதிர அடிக்கத் தொடங்கினர். சுரேஷ் சந்தனக்கரைசலை பெரியமுத்து, சின்னத்துரை, மாரிமுத்து மூவருக்கும் உடம்பெங்கும் சாத்தினான். மெளக்காரர்கள் இடியாய் அடித்த அடியில் தெரு நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு முடுக்கில் போய் முடங்கிக் கொண்டன. கைக்குழந்தைகள் பயத்தில் ‘காள் காள்’ என கத்தின. பெண்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டும் கையெடுத்து முனியாண்டியைக் கும்பிட்டப்படியும் நின்றுக்கொண்டிருந்தனர். ஒருமணி நேரமாகியும் ஒருத்தர் மீதும் சாமி வரவில்லை. “ அண்ணே! நல்ல ஓங்கியடியும் சாமி கண்டிப்பா வரும்.” பட்டுவும் சுரேசும் மேளக்காரர்கள் பக்கம் போய் கத்தினார்கள். மேளக்காரர்கள் மீண்டுமடிக்கத் தொடங்கினார்கள். பீப்பிக்காரர் மூவரின் காதிலும் போய் ‘பீபீ’ என மூச்சியிழுத்து ஊதினார். பெரியமுத்து லேசாக அசைந்ததும், “ வந்துட்டாம்பா முனியாண்டி! வுடாத ஓங்கியடிப்பா.” மாசானமுத்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். பெரியமுத்து பொத்தென்று நின்றயிடத்திலேயே தரையில் விழுந்தார். மாசானமுத்து பதறிப்போய் எழுப்பினார். பட்டு தண்ணீர்க் கோரி வந்து முகத்தில் தெளித்ததும் மெதுவாய் கண் விழித்தார் பெரியமுத்து. “ எல தம்பி, என்னாச்சுல! “ மாசானமுத்து கேட்டதும், காலையில சுகரு மாத்திரப்போட மறந்துட்டேன்பா. அதான் இந்தப் புழுக்கத்துக்கும் மேளச் சத்தத்துக்கும் ஒரு மாறி கெறக்கமா வந்துட்டுண்ணே.“ என்றதும் பட்டுவும் சுரேசும் கைத்தாங்கலாப் பிடித்து பெரியமுத்துவை மரத்தடியில் தென்னந்தட்டியை விரித்து படுக்க வைத்தனர். “ மயிராண்டி முனியாண்டி வந்து ஆடுவான்னு பாத்தா..! இப்படி மயக்கம் போட்டு மல்லாக்க கெடக்குறான் பாரேன் மல்லாக்க.” என்று கிழவிமார்கள் பெரியமுத்துவைக் கேலி செய்தார்கள்.
“ சரி, நீங்க அடிங்கப்பா..! ” என்று மாசானமுத்து சொன்னதும் மீண்டும் மேளமடிக்கப்பட்டது. அரைமணி நேரமானதும் மாரிமுத்து தானாகவே இடுப்பில் கட்டியத் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு, யப்பா எனக்கெல்லாம் சாமியும் வராது; ஒண்ணும் வராது. ஆளவிடுங்க மொதல்ல.” என்று கொப்பரைத் தண்ணீரில் மூஞ்சியைக் கழுவிவிட்டு கோயிலை விட்டு கொஞ்சம் தூரம் தள்ளிக் கிடந்த மண் குவியலில் சரிந்து சொக்கலால் பீடியை சுகமாய் இழுத்து, வெண்புகையை வான் பார்த்து விட்டபடி கண் சொக்கிப்போனார். மாசானமுத்துவுக்கு கோபம் உச்சிக்கேறியது. “ இங்கரு எங்கிட்டயே ஓன் வேலயக் காட்டுறீயா! பத்து வருசமா ஆட ஆளுல்ல. அதனால நீ வரல்லன்னு போனாப் போவுதுன்னு சகிச்சிக்கிட்டென். ஆனா, இன்னைக்கி ஒருத்தனுக்கு மூணுபேரு இருக்கான். ஒருத்தன் மேல கூட நீ வராம அடம்புடிக்கன்னா ஒனக்கு எவ்வளவு கொழுப்புருக்கும். நல்ல கேட்டுக்கோ! இந்த வருசம் மட்டும் நீ வரலன்னு வச்சிக்க. அடுத்த வருசத்துலருந்து ஒனக்கு கொடையும் கெடையாது. ஒண்ணும் கெடையாது. ஓன் பூடம் மட்டும் மண்ணுல்ல, நீயும் மண்ணுதான்னு ஓன் தெசப்பக்கம் எட்டிகூடப் பாக்கமாட்டேன்.” மனசு நொந்து முனியாண்டி மண் பூடத்தினைப் பார்த்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி திட்டிக்கொணடிருந்தார் மாசானமுத்து.
“ ஓ மச்சான், ஒமக்கு மறகிற கழண்டுப்போச்சா! மனுசனப் பேசுற மாறி சாமியப் பேசாதீயும். ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிறப்போவுது. “ என்றாள் மலர். “ என்ன ஆனாலும் பரவாயில்ல. கடைசியா ஒரு தடவ உறுமிய மட்டும் அடிப்பா! “ என்று இருமியபடி கூறினார் மாசானமுத்து. உறுமிக்காரர், ‘ டவன் டவன் டவு’ என வேகமாக இழுத்து அடித்தார். பெண்கள் உரக்கக் குலவைச் சத்தமிட்டனர். ஆண்கள் ‘வுடாத அடி’ என்று கூச்சல்போட்டனர். சிறுவர்கள் சின்னத்துரையை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சின்னத்துரை அசராமல் குத்துக்கல்லாய் நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்து மாசானமுத்துவுக்கு நகம் வெட்டும்போது சதையை வெட்டியதுபோல் மனம் வலி கொண்டது.
“ ஏ… மாசானமுத்து இங்க வந்து பாரு! “ என்று மாசானமுத்துவின் எதிர் வீட்டுக் கிழவி கோயிலைப் பார்த்து ஓட முடியாமல் ஓடிப் போனாள். தான் கண்ட காட்சியைச் சொல்வதற்குள் கூட்டத்தை இடித்துத் தள்ளி மண் பூடத்தின் முன் மண்டியிட்டு ஆடிக்காற்றுக்கு அசைந்தாடும் மரங்களைப்போல் ஆடினாள். பின்னால் போய் முன்னால் வந்து முட்டும் செம்மறிக் கிடாவைப்போல் ஓடி வந்து ஓடி வந்து ‘ஏய்.., ம்…,’ என்று நாக்கைத் துருத்தினாள். தெருக்காரர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். மாசானமுத்துவின் முகத்தில் ஆனந்தத்தைவிட அதிர்ச்சி அதிகம் தெரிந்தது.
தெருப்பெண்கள், “ வேதக்காரி மேல எப்படி சாமி வரும்? இது பேய் பிசாசுவாத்தான் இருக்கும். மொதல்ல சூடத்தக் கொழுத்தி என்ன ஏதுன்னு விசாரிங்க.” என்றார்கள்.
மாசானமுத்து தட்டில் சூடத்தினைக் கொழுத்தி கிட்டு முன் நீட்டினார். கிட்டு சத்தியமடித்ததில் தட்டு நெளிந்தது. கூட்டத்திலொருத்தி ஓடிப்போய் வேப்பிலையைப் பறித்துக் கொடுத்தாள். பூச்சக்குட்டிகள் வேப்பிலையை ‘கருக் கருக்’கென்று கடிப்பதுபோல மென்றுத் தின்றதைப் பார்த்து தெருக்காரர்கள், “ முனியாண்டி வந்துட்டான்! நமக்கு இனி ஒரு கொறையும் வராது.” கழுத்தில் ஆரங்களையும் மாலைகளையும் போட்டனர்; கிட்டு காலில் விழுந்து ஆசிப்பெற்றனர். மாசானமுத்து கண்ணீர் மல்க பூடத்தைப் பார்த்து தோப்புக்கரணம் போட்டுவிட்டு, திருநீறு கொப்பரையிலிருந்து திருநீறையெடுத்துப் பூசி, வெட்டிய இளநியொன்றையெடுத்து கிட்டுவிடம் நீட்டினார். “ மொதல்ல சாராயத்த எடுப்பா! “ – கண்ணை உருட்டினாள் கிட்டு. மாசானமுத்து பட்டுவிடம் குவாட்டரையெடுத்துக் கொடுத்து, கொஞ்சமாக ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுக்கும்படி கண்ணைக் காட்டினார். பட்டு மூடியைத் திறக்கும் முன் அவனிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி படக்கென்று வாயில் கவிழ்த்தாள் கிட்டு. கூட்டம் ‘ யம்மாடி’ என்று வாயில் கை வைத்தது. மாசானமுத்து மலைத்துப்போனார். “ எடுப்பா பீடி சிகரெட்ட! ஒனக்கு ஒண்ணொண்ணும் சொல்லித் தரணுமா! கேக்காம குடுக்க மாட்டியா ஆங்.” நாக்கினை நாடிவரை நீட்டினாள். மாசானமுத்து பீடி சிகரெட்ட பற்றவைத்துக் கொடுத்தார். “ சுருட்ட எங்கப்பா! ” சுருட்டும் கொடுக்கப்பட்டது. மூன்றையும் ஒரே வாயில் திணித்து, நீராவி எஞ்சின் ரயிலைப்போல் புகைவிட்டாள். புகைக்கும் ஆண்களுக்குக்கூட அவள் புகைப்பதைப் பார்த்து புல்லரித்துவிட்டது. அடுத்து கஞ்சாவைக் கேட்பதற்குள் மாசானமுத்து அதை எடுத்து விளக்காங்குழியில் பின்னே ஒளித்துவைத்தார். நல்லவேளை அதைக் கேட்காமல், “ அடிப்பா மேளத்த “ என்றாள். மேளக்காரர்கள் சீனி வெடி, சில்வர் வெடி வெடிப்பதுபோல் வெளுத்துவாங்கினர். தூண்டிலில் சிக்கிய மீனைப்போல்
கிட்டு துள்ளி துள்ளி ஆடினாள். அடியில் வெட்டிய வாழையைப்போல் அப்படியே சரிந்து விழுந்து மேற்கும் கிழக்கும் உருண்டாள். சிறிது நேரங்கழித்து சிறு குழந்தை தாலாட்டுக்குக் கண் கிறங்குவதுபோல் கிறங்கிப்போனாள். மலர் ஓடிவந்து தூக்கிப்பிடித்து மாரோடு சாய்த்துக்கொண்டாள். மாசானமுத்து இளநியைக் கொடுத்தார். சிந்தி சிந்திக் குடித்துவிட்டு முந்தியை எடுத்து இடையில் சொருகிக்கொண்டு மலர் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல எந்திரித்து முனியாண்டியை கண்மூடி வணங்கினாள். மூன்று முறை தோப்புக்கரணம் போட்டாள்.
“ எ மலரு… அவள வீட்டுக்குக் கூட்டிட்டுப்போயி கட்டில்லக் கெடத்து. நாங்க படப்ப பிரிச்சிட்டு எல்லா சாமானையும் எடுத்துட்டு வாறோம்“ என்று மாசானமுத்து படைப்பைப் பிரித்து ஆளுக்கொரு பொருளையெடுத்துக்கொண்டு அனைவரும் வீடுவந்து சேர்ந்தனர்.
மறுநாள் காலை தன் தம்பிகளுக்கும் கொடைக்கு வந்த சொந்தபந்தங்களுக்கும் கிடாக்கறியைக் கொடுத்து பஸ் ஏத்திவிட்டு மாசானமுத்து வீட்டுக்கு வரும்போது நேரம் பனிரெண்டைத் தாண்டியிருந்தது. கசகசவென இருந்த உடம்பைக் கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்ற மாசானமுத்துவுக்குக் குட்டைத் தென்னைமரத்தடியில் குப்புறக் கிடந்த கிட்டுவைப் பார்த்து குலை நடுங்கிப்போனது. “ எ கிட்டு, என்னட்டி ஆச்சு ஒனக்கு…! “ என்று எழுப்பி மடியில் போட்டுக்கொண்டார். மரத்தடியைப் பார்த்தார். நேற்றிரவு குடித்ததுதெல்லாம் குடம் குடமாய் கக்கியிருந்தாள். வாயில் வழிந்த கோழையையும் மார்பில் வடிந்த வாந்தியையும் வெட்டியால் துடைத்து, தண்ணீர்த் தொட்டியில் கிட்டுவைச் சாய்த்து வைத்துவிட்டு, மாற்றுப் புடவையெடுக்க மாசானமுத்து போய் வருவதற்குள் கட்டியப் புடவையில் மூத்திரம் போயிருந்தாள்.
“ சாமி வந்தா கொஞ்சம் ஆற அமர ஆடனும். என்னமோ பரம்பரக் குடிகாரி மாறி பாட்ல தலகீழ கவுத்தா இப்படி கவுந்தடிச்சித்தான் படுக்கணும். மறவாப் போயிட்டு ஒண்ணுக்குப் போறவ. இன்னைக்கி ஒனக்கேத் தெரியாம ஒண்ணுக்குப் போயி கெடக்க. தண்ணி ஊத்தி குடுக்குறதுக்குள்ள ஒனக்கு சாமி அப்படி வருதுன்ன…! “ கிட்டுவைத் திட்டிக்கொண்டே குட்டைத் தென்னை மரத்திற்கும் எலுமிச்சை மரத்திற்கும் இடையே வேட்டியை மறைவாகக் கட்டி, வீச்சமடித்த கிட்டுவின் உடைகளையெல்லாம் அவிழ்த்து வாளியில் போட்டுவிட்டு உச்சந்தலையில் தண்ணீர் ஊற்றினார் மாசானமுத்து. கிட்டு பிறப்புறுப்பை ஒரு கையால் மூடியபடியும் ஒரு கையால் மாசானமுத்துக் காலினைப் பிடித்துக்கொண்டும், “ ஐயோ…அம்மா…மு..ம் “ என்று ஈனும் ஆட்டைப்போல் போதைக்கிறக்கத்தில் முக்கி முனங்கிக் கொண்டிருந்தாள். மாசானமுத்து குழந்தையைக் குளிப்பாட்டுவதுபோல் குளிப்பாட்டி, தலைத்துவட்டி, காதில் சேர்ந்த நீரை ஊதி வெளியேற்றி, கடுங்குளிருக்குக் கைகால் தெரியாமல் கைக்குழந்தையை முழுவதும் மூடி வெளியில் கொண்டு வருவதுபோல கிட்டுவைத் தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் உட்காரவைத்தார்.
குளித்தப்பிறகு கொஞ்சம் தெளிச்சலடைந்த கிட்டு, “ யோவ் கொடியில கெடக்குற அந்த நீலக்கலருப் பாவாடைய எடுத்துட்டு வாரும். “ என்று சொல்லிவிட்டு கட்டிலில் மடித்து வைத்திருந்த பிளவுஸை எடுத்து கைகளைத் திணிக்க முடியாமல் திணித்து இரு பொத்தானை மட்டும் போட்டாள். மாசானமுத்து பாவாடையை எடுத்துக்கொண்டு வந்து விரித்துப் பிடித்தபடி, நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் கிட்டுவை.“ ஏட்டி செவத்தப் புடிச்சிக்கா இல்ல என்ன புடிச்சிக்கிட்டு பாவாடையில கால உடு. தள்ளாடிக் கீழகீள வுழுந்து மண்டய ஒடச்சிகாத” என்று சொல்லி முடிக்கவும் கிட்டு ஒரு காலினை பாவாடைக்குள்ளும் ஒரு காலினை சிமெண்ட் தரையிலும் வைத்துத் தள்ளாடி மாசானமுத்து மீது விழுந்ததில் மரக்கதவு இடித்து மாசானமுத்துவுக்கு பின் மண்டையில் பலத்த அடி! வலித் தாங்காமல் மண்டையைத் தடவியபடி கோபத்தில் எழுந்து கிட்டுவைத் தூக்கி நிறுத்தி, பாவாடையைத் தலை வழியாக கீழிறக்கி, இடுப்பில் இறுக்கிக் கட்டி, கட்டிலில் படுக்க வைத்துக் காத்தாடியைப் போட்டுவிட்டார். கிட்டு புலம்பிக்கொண்டே உறங்கிப்போனாள். மாசானமுத்துவும் பற்றவைத்தப் பீடியின் கங்கு சட்டைப்பையில் விழுந்து ஓட்டைப் போட்டது கூட அறியாமல் வாசற்படியிலமர்ந்தபடியே குறட்டை விட்டு உறங்கிப்போனார்.
மாலை நான்கு மணிவாக்கில் கண் விழித்த கிட்டு. மெல்ல எழுந்து வாசற்படியில் உறங்கிக் கொண்டிருந்த மாசானமுத்துவை உசுப்பி, “ யோவ் ரொம்ப பசிக்குது. எந்திச்சிக் கொஞ்சம் சோறு போட்டுத்தாரும். “ என்றாள். “ இப்பும் ஒனக்கு ஒடம்புக்குப் பரவாயில்லையா! “ தூக்க அசதியில் கேட்டுவிட்டு, “ இரு! மலரு கறிக்கொழம்பு வச்சிக் குடுத்துட்டுப் போயிருக்கா! எடுத்துட்டு வாரேன்.“ தட்டில் சோறும் குழம்பும் சின்ன குத்துப்போனியில் தண்ணீரும் கொண்டு வந்து பட்டும் படாமலும் கொஞ்சமாய் குழம்பு ஊற்றி, அவளுக்குப் பிடித்த ஈரல் துண்டுகளை சோற்றுருண்டைக்குள் வைத்து ஊட்டிவிட்டார். நான்கைந்து வாய் வாங்கியவள், ஆறாவது வாய்க்கு அவர் கை நீட்டும்போது ‘ஆ’ காட்டாமல் அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். “ ஏட்டி, என்னாச்சு! கறிக்கொழம்பு ஓரப்பாவா இருக்கு! “ கண்ணீர்த் துடைத்து தண்ணீர்க் கொடுத்தார். பேருக்குக் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, “ ஒரு நா குவாட்டர்ல தண்ணி ஊத்தாமக் குடிச்சதுக்கே வயிறு என்னம்மா காந்துது; தொண்டத் தீப்புடிச்ச மாறி எரியுது; தல பாறாங்கல்லப் போட்ட மாறி எப்படி வலிக்கிது; வாயாலயெடுத்து எடுத்து கொடலுல ஒரு சொட்டுத் தண்ணி, ஒத்தப் பருக்கத் தங்கல; நிக்க முடியல நடக்க முடியல; எந்த லெவையும் தெரில, லெக்கும் தெரில; என்ன நடக்குன்னே ஒண்ணும் புரில. ஒரு நாளுக்கே இப்படி ஆவுதே… நீரு தெனைக்கும் தண்ணி ஊத்தாம குடிக்கிறீரு! அதுவும் காலங்காத்தால வெறும் வயித்துலக் குடிச்சா ஒடம்பு என்னத்துக்காவும். ஒம்மவிட்டா எனக்கு யாரு இருக்கா! நமக்குப் புள்ளக்குட்டியளும் கெடயாது. நல்லாருப்பீரு என்ன ஒத்தில அம்போன்னு விட்டுட்டுப் போயிராதீயும்.” மாசானமுத்து மார்பில் சாய்ந்து மாலை மாலையாய் கண்ணீர் வடித்தாள் கிட்டு. “ அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. நீ போயி படு ” என்று வீட்டுக்குப் பின்புறம் கைக்கழுவப் போனவர் கசிந்தக் கண்ணீரையும் தொட்டித் தண்ணீரில் கழுவிவிட்டு வீட்டு வெளித்திண்ணையிலமர்ந்து பீடியிழுக்கத் தொடங்கினார். கிட்டு வீட்டுக்குள் புழுக்கமாகயிருந்ததால் வீட்டு உள்முற்றத்தின் காற்றோட்டத்தில் பாய் விரித்துப் படுத்துக்கொண்டாள்.
கருக்கலானதும் பட்டுவுடன் சென்று மதுக் குடித்துவிட்டும் மதுப் பாட்டிலொன்று வாங்கிக்கொண்டும் வருவதுதான் மாசனமுத்துவின் வாடிக்கை. பட்டுவும் திண்ணையிலிருந்த மாசானமுத்துவை உரசியபடி பைக்கில் வந்து நின்று, “ மாம்ஸ் ஏறும் போலாமென்றான். “ மாசானமுத்து மௌனமாகயிருந்தார். “ ஓ மாம்ஸ், சீக்கிரம் ஏறித்தொலையும். மழ வர்றமாறி இருக்கு. “ அவசரப்படுத்தினான் பட்டு. மாசானமுத்து சட்டை உள்பையிலிருந்து இருநூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தார். “ ஒரு டைமண்ட் ரம்மும் அம்பரூவாவுக்கு பொறிச்சச் சிக்கணுதான. “ பட்டுக் கேட்டதும், “ எனக்கு இன்னைக்கி சரக்கு வேண்டாம் மருமவன. நேத்துக் குடிச்சக் குடியில ஒங்க அத்தக்காரி இன்னும் எந்திக்கல. வாயாலயெடுத்துத் தலத் தூக்க முடியாமக் கெடக்குறா! நம்மளும் சரக்கப் போட்டுட்டு மட்டயாயிட்டா அவளப் பாக்குறதுக்கு யாரு இருக்கா. அதனால தான் வேண்டாங்குறேன்.” என்று மாசானமுத்து சொன்னதைக் கேட்டு முற்றத்தில் படுத்திருந்தக் கிட்டு எழுந்து முனியாண்டி கோவிலிருக்கும் கிழக்குத் திசைப்பார்த்து, “முனியாண்டிய்யா! ஒமக்கு சோத்ரம்.”என்று மூன்று முறை சொல்லிவிட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறி வீட்டுக்குள் ஓடி சுவற்றில் மாட்டியிருந்த இயேசுவின் புகைப்படத்தினைத் தொட்டு, “ஏசப்பா! ஒமக்கும் சோத்ரம். நீங்க ரெண்டுபேருந்தான் எம்புருசனோட குடிய நிறுத்தி, அவருக்கு நல்ல ஆரோக்கியத்தக் கொடுக்கணும்; ஆசீர்வதிக்கணும்.” என்று முனியாண்டியிடமும் இயேசுவிடமும் வேண்டிக்கொண்டு மீண்டும் முற்றத்தில் வந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி படுத்துக்கொண்டாள்.
“ நீரு போயிட்டு வரும்போது ஓட்டல்ல அஞ்சி இட்லியும் வாயாலயெடுக்குறது நிக்கறதுக்கும், தலவலிப்போறதுக்கு மாத்திரையும் வாங்கிட்டு, மீதிக்கி…. “
“ மீதிக்கி என்னவோய் வாங்கிட்டு வரணும். சட்டுன்னு சொல்லுமய்யா! “ என்றான் பட்டு.
“ மீதிக்கி மல்லிப்பூ வாங்கிட்டு வாரும்.”
“ என்னது மல்லிப்பூவா ” வாய்ப்பிளந்தான் பட்டு.
“ நேத்து ஒங்க அத்தக் கழுத்துல மாலையப்போட்டு ஆடும்போதே ரொம்ப அழகா இருந்தா! தலயிலப் பூ வச்சா இன்னும் அழகாருப்பா மருமவன“ என்றார் மாசானமுத்து.
“ அப்படிபோடு! நேத்து சாமியாட்டம் இன்னைக்கு சாந்தி மூர்த்தமா! அடிச்சி நொறுக்கும்! “ என்ற பட்டுவை முதுகிலடிச்சி, “ சரியான வெளங்காவழி மருமவன் நீரு.. போயிட்டு சுருக்கா வாருமெ”ன்று வெட்கப்பட்டுக் கொண்டே வாசற்படியேறினார் மாசானமுத்து.
மாசானமுத்துவைப் பார்த்து சிப்பி முத்தாய் சிரித்து, வெட்கத்தில் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டாள் வீட்டு முற்றத்தில் படுத்திருந்தக் கிட்டு.
********************
வசந்தி முனீஸ்
8825665590
munees4185@gmail.com



Post Comment