சாயக்காகிதம்
துவரை பாலன்

கொலைபசி அதனால் தான் எப்போதையும்விட இப்போது அதிகமாகவே சாப்பிட்டு விட்டான். மேலும் தொகை அதிகமாக இருந்ததும் ஒரு காரணம். ஏனெனில் இந்தியாவில் இரண்டு விதமான மனிதர்கள்தான், ஒன்று பணத்துக்காக ஓடுபவர்கள் இரண்டு பணத்தை வைத்துக்கொண்டு ஓடுபவர்கள். ஒருவழியாக இனிமேல் வயிற்றில் ஏதும் போடமுடியாது என்றான பிறகு இருக்கையைவிட்டு எழுந்து கை கழுவி விட்டு பில் தொகையைக் கொடுக்கப்போனான். ஆங்காங்கே மின் விசிறிகள் சுழன்ற வண்ணமிருந்தன. உணவு விநியோகிப்பவர் ஒவ்வொரு இருக்கையையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு குழந்தை சாப்பிடாமல் அடம் பிடிதுக்கொண்டிருந்தது. அக்குழந்தையின் அம்மா சாப்பிட்டால் தான் விளையாட பக்கத்து வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறினார். ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
கல்லாப்பெட்டி அருகே சென்றான். முதலாளிக்குப் பின்புறமாக பெரிய ஏழுமலையான் படம் வண்ண விளக்குகளால் மின்னிக்கொண்டிருந்தன. மேசைமீது காகிதங்களும், ஒரு கிண்ணத்தில் சீரக மிட்டாயும் இருந்தது. ஊதுவத்தியின் மணமே அனைவரையும் உள்ளே வருமாறு அழைத்தது.
“என்ன சாப்டிங்க” என்றார் கடைக்காரர்.
“ரெண்டு தோச, ரெண்டு ஆம்லெட், ஒரு கொத்து” என்று குரல் தூக்கவே சொன்னான் கையில் ரூபாய் இருக்கும் தைரியத்தில். ஏனெனில் பணம் தரும் தைரியத்தை, இந்த உலகில் வேறு என்ன கொடுத்துவிடமுடியும்.
“ரெண்டு தோச 80, ஆம்லெட் ரெண்டு 40, கொத்து ஒன்னு 80 மொத்தம் 200 தம்பி” என்றார்.
தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். நோட்டை வாங்கிய கடைக்காரர் அந்த ஐந்நூறு ரூபாய்த்தாளை முன்னும் பின்னும் பார்த்தார். பலநாள் குளிக்காதவனைப்போல அழுக்கேறி நோட்டின் நடுப்பகுதி நைந்து போயிருந்தது. பலமுறை மடிக்கப்பட்டதால் தலையில் வகிடு எடுப்பதைப்போல நடுவே கோடும் விழுந்திருந்தது.

“என்ன தம்பி வேற நோட்டு இருந்தா கொடுப்பா இல்லைனா போன்ல போடுபா, நோட்டு இவ்வளவு டேமேஜா இருக்கேபா ” .
“வேற நோட்டு இல்ல அண்ணா இதா இருக்கு, ஒரு எடத்துல வேலைக்குப் போயிருந்த அவங்க சம்பளமா கொடுத்ததுதா இந்தக் காசு”.
“நீ சம்பளமா வாங்கினியோ கிம்பளமா வாங்கினியோ, நா வாங்கமாட்ட, இதுபோகாது. வேற நோட்டு கொடு இல்லயா உள்ள போயி டேபுளத்தொட” என்று கறாராகப் பேசிவிட்டார் கடையின் உரிமையாளர். அவனுக்கு ஏனோ மலையாள எழுத்தாளர் பஷீர் நினைவுக்கு வந்து போனார்.
அவனுக்கு வேறு யாரிடமும் கேட்க மனம் வரவில்லை. முடிந்தவரை யாரிடமும் கையேந்தாமல் பார்த்துக்கொண்டான். கேட்டால் அவனுக்காக பணம் அனுப்ப நண்பர்கள் ஓரிண்டு பேர் இருக்கிறார்கள். இருந்தாலும் அவன் கேட்கவில்லை. அக்கவுண்டில் பணம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு அவன் இன்னும் சம்பாரிக்கவில்லை. ஏனெனில் அன்றாடம் கிடைக்கும் முந்நூறு ரூபாய் வாடகைக்கும் சாப்பட்டிற்குமே சரியாக இருந்தது.
இவனிடம் இப்படி ரூபாய் நோட்டுக்கள் கந்தலாக வருவது முதல் முறை அல்ல. கடைக்காரர்களுக்கு இவனைப் பார்த்தால் ஏமாளியாகத் தெரியுமோ என்னவோ, அம்பது ரூபாய் கொடுத்துப் பொருள் வாங்கினாலும், நூறு ரூபாய் கொடுத்துப் பொருள் வாங்கினாலும் மீதம் வரும் சில்லறையில் எப்படியும் ஒன்று அல்லது இரண்டு நோட்டுக்கள் கந்தலாகத்தான் வந்து சேரும். மாற்றிக்கேட்டால் வேறு இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை தெரிந்தவர் ஒருவர் வீட்டில் ஒட்டடை அடித்துவிட்டு நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு வந்தான். பத்து நிமிட வேலைதான். ஒருவேளை சாப்பாட்டிற்காகவாவது ஆகுமே என்றுதான் போனான். வரும் வழியில் உணவகம் ஒன்று இருந்தது. மதிய வெய்யில் சாலையில் இருந்த தாரையெல்லாம் உருக்கியிருந்தது. தக்காளி சாதம் ஒன்றை பார்சல் வாங்கிக்கொண்டான்.
“எவ்வளவு ங்க”
“ஒரு தக்காளியா”
“ஆமா”
‘அம்பது ரூபா”

இந்தாங்க என்று புது நூறு ரூபாய் தாளைச் சட்டைப்பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தான். இந்தப்பா என்று இரண்டாக மடித்த அய்ம்பது ரூபாய்த்தாளை கொடுத்தார் கடைக்காரர். வாங்கியதும் பிரித்துப் பார்த்தான் அய்ம்பது ரூபாய்க்கான நீல நிறம் மறைந்து செம்மண்ணும் கொஞ்சம் சொட்டு நீலமும் கலந்தது போன்ற நிறத்தோடு கசங்கிப்போயிருந்தது. அண்ணா வேற குடுனா என்றான், சுத்தமாக சில்லறை இல்லை இதுதான் இருக்கிறது வேறு இல்லை, வேண்டுமென்றால் எடுத்துக்கொள் இல்லையென்றால் உணவை வைத்துவிட்டு காசைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். நேரம் வேறு மதிய உணவு உண்ணும் காலத்தைக் கடந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி வாங்கிகொண்டு வந்தான். அந்த நோட்டை திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே வந்தான். ஏனெனில் அடுத்த நாள் சோப்பும் பற்பசையும் வாங்கியாக வேண்டும்.
மளிகைக்கடைக்குச் சென்றாலும் இதே நிலைதான். ஒருமுறை புது அய்ம்பது ரூபாய்த்தாளைக் கொடுத்து பத்துரூபாய் குளியல் வழலையும் (சோப்பும்) இருபதுரூபாய் பற்பசையும் வாங்கினான்.
“தம்பி வேற எதும் வேணுமா? “
“அவ்வளவுதா ஓனர் மீதி சில்லற குடுங்க, அந்தக்கடைகாரரை அவன் அப்படித்தான் அழைப்பான்.”
இந்தா என்று, அவன் எதிர்பார்த்தது போலவே கந்தல் நோட்டையேதான் கொடுத்தார். மடித்து மடித்து நடுப்பகுதியின் மேல் பகுதியும் கீழ்பகுதியும் நெற்றிப்பொட்டளவு கிழிந்துபோயிருந்தது.
“என்ன ஓனர் நா எவ்வளவு புது நோட்டாக்கொடுத்தா இப்டி பழைய நோட்டக்கொடுக்கிறிங்க”
“எல்லாம் கெவர்மெண்ட் அடிக்கிற நோட்டுதா கொண்டுபோ, வேற இல்ல “
“யாரும் இத வாங்குவாங்கலானு தெரியலயே”
“வாங்காமலாம் இருக்கமாட்டாங்கபா, இல்லைனா கொண்டா நா வாங்கிக்கிற” என்றார் கடைக்காரர். அவருக்கு கிழிந்த நோட்டை தள்ளிவிட்டதில் மகிழ்ச்சி. சரி என்று அறை மனதோடு அறையை நோக்கி நடந்தான். இப்படித்தான் பணவிடயத்தில் ஒருவர் மழிச்சியாக இருக்க ஒருவர் துன்பப்பட வேண்டியுள்ளது. சில நேரங்களில் கோபத்தில் அதுமாதிரியான நோட்டுக்களை கிழித்துப்போட்டும் இருக்கிறான்.

அவன் நோட்டைக்கிழிக்கவில்லை, இந்த நாட்டினைகிழித்தான். அவ்வளவு கோபம் இந்திய ரிசர்வ் வங்கியின் மீது. ஏனெனில் சில வெளிநாட்டு ரூபத்தாள்களைப் பார்த்திருக்கிறான் மொடமொடவென்று நெகிழியால் செய்தது போல மடிப்பில்லாமல் இருக்கும். இவ்வளவு ஏன் இந்திய ரூபாயின் மதிப்பை விட குறைந்த மதிப்பு கொண்ட இலங்கையின் ரூபாய் நோட்டைக்கூட இலங்கை நண்பன் ஒருவனிடம் இருந்து வாங்கிப்பார்த்திருக்கிறான். அந்த நோட்டும் மேற்குறிப்பிட்டதுபோலவே இருந்தது. ஆனால் இந்திய ரூபாய்த்தாள்கள் மட்டும் ஏன் இப்படி என்று அவனுக்கு விளங்கவில்லை. இந்திய ரூபாய் நோட்டில் விதவிதமாகச் சாயம் இருக்கிறதே தவிர திடம் இல்லை.
இன்னொரு நாள் மதிய உணவுக்காகத் தனது அறைக்குப் பக்கத்தில் இருந்த மாருதி உணவகத்திற்குச் சென்று தக்காளிச் சோறும் அவித்த முட்டையும் வாங்கிவிட்டு நூறுரூபாய்த்தாளைக் கொடுத்தான். பரிமாறுபவர் 60 ரூபா ஆச்சு பத்து ரூபா இருக்கா 50 ரூபாயா தர என்றார். அவன் இல்லை என்றான். இருங்க சில்லற மாத்திட்டு வரேனென்று பக்கத்தில் இருந்த தனது முதலாளியின் மளிகைக்கடைக்குள் சென்றார். உணவகத்தையும் மளிகைக்கடையையும் சேர்த்தே நடத்தி வருகிறார் உரிமையாளர். அவன் வேலை செய்யும் உதயம் காய்கறிக்கடைக்குப் பக்கத்தில் இருக்கும் சுந்தரம் பழமுதிர் நிலையத்தில் தான் இவரும் தன் கடைக்குப் பழங்கள் எடுக்க வருவார். மளிகைக்கடையோடு பழங்களும் விற்பனை செய்கிறார். அப்படி பழம் எடுக்க வந்த ஒரு நாள் நம்ம கடைல வந்து சாப்டுபா ருசி நல்ல இருக்கும் என்று அடிக்கடி சொல்வார். அதனால் தான் மதியத்தில் இங்கு வருகிறான். சிறிது நேரத்தில் சில்லறை 40 ரூபாயை மட்டும் வாங்கிவந்து கொடுத்தார். நோட்டை வாங்கிப்பார்த்தான் புதிதாக வந்த இரண்டு இருபது ரூபாய்த்தாளும் பழயதாகி, அழுக்கடைந்து, நடுவே கிழிந்து மேல் ஓரம் கரையான் அரித்துபோல இருந்தது.
“என்னங்க இது நோட்டு இப்பிடி இருக்கு.”
“ஓனருதாபா கொடுத்தாரு. “
“ஓனருதா கொடுத்தாரா, சரி விடுங்க நா அவருகிட்டயே மாத்திக்கிற கொஞ்சம் பொருள் வாங்கனும்.”
“சரி நீங்களே மாத்திக்கங்க.”
மளிகைக்கடைக்குள் சென்றான்.
“ண்ணோவ் என்னங்க இது நோட்டு. “
“ஏ இதுக்கு என்ன. “
“இத எப்டி நா மாத்துரது சொல்லுங்க, இந்தாங்க நா பொருளே எடுத்துகுர” என்று 30 ரூபாக்கு பொருள் எடுத்தான். மீதி பத்து ரூபாய்த்தாள் புதியதாக வந்தது.
“அது மாதிரி நெறைய நோட்டு ஏங்கிட்ட சேந்து போச்சுங்க”
“ம்ம், வேற நோட்டு இல்ல” என்று கூறியவாறே முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டார். ஏனெனில் முன்பு நடந்த 50 ரூபாய் நிகழ்வும் இந்தக்கடையில் தான் நடந்தது அதனால் தான் இப்போது உடனே கேட்டுவிட்டான்.
அதன் பிறகு இரண்டு மூன்று முறை கடைக்குப் போனான் ஆனால் அவர் அவனோடு பேசுவதை நிறுத்திக் கொண்டார். அதைப்பற்றி அவன் வருத்தம் கொள்ளவில்லை. இப்படித்தான் பலரும் அவனோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். இப்பொழுதெல்லாம் எந்தக் கடைக்குச் சென்றாலும் பொருளுக்கான விலையைச் சில்லறையாகவோ அல்லது தன்னிடம் இருக்கும் முழுத் தொகைக்கு வரும் பொருளையோ வாங்கிவிடுகிறான். மீதி வராமல் பார்த்துக் கொள்கிறான். அப்படி இருந்தும் கிழிந்த நோட்டுக்களின் வரத்துக் குறைந்தபாடில்லை. இதனால் தான் எல்லோரும் இணையப் பரிவர்த்தனைக்கு மாறுகிறார்களோ!
Post Comment