வழி தேடி……

கனலி விஜயலட்சுமி

ரோபெரி டிவிஷன், எஸ்டாபிளிஸ்டு 1938
ஹூஸ்டன் என்று மிகப்பெரிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த அந்த அலுவலகத்தின் முன்னறையில் ரஞ்சனி அமர்ந்திருந்தாள். கடந்த பத்து நாட்களாக அவள் இங்கு வருவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தாள். இன்று எப்படியாவது டெபுட்டி சீஃப் ஆபிஸரைப் பார்த்து விட வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தாள்.

அவள் உடல் அங்கு இருந்தாலும் மனது அங்கு இல்லை. அது எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அவள் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நிகழ்கால நிகழ்வுகளின் அச்சுறுத்தல்களும் எதிர்கால வாழ்வின் வரட்சியும் அவளை ஒரு விதமான மனநிலைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அவள் அழவில்லை. அழுகை என்பது துக்கத்தின் தொடக்க நிலை போல் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

கடந்த நாட்களில் பல காவல்துறை அலுவலர்களைக் கண்டாலும் அவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. தனது காரியத்தில் ஏதாவது முடிவெடுக்க வேண்டும் என்றால் டெபுடி சீஃப் அல்லது சீஃப் போலீஸ் ஆபீஸரால் தான் முடியும் என்பதை அவள் இதற்குள் புரிந்து கொண்டிருந்தாள். அவரைச் சந்திப்பதற்கான ஒரு அப்பாயிண்ட்மெண்டுக்கு இத்தனை நாள் காத்திருக்க வேண்டி இருந்தது.

பன்னிரெண்டு மணிக்கு அவர் நேரம் கொடுத்திருந்தார். அந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதற்காக அவள் பத்து மணிக்கே அங்கு வந்து சேர்ந்து விட்டாள். அந்தக் காவல்துறை கொள்ளை தடுப்பு அலுவலகம் மிகப்பெரியதாக இருந்தது. அதன் பொது அலுவலகம் திறந்த வெளியாகப் பல அலுவலர்கள் ஆங்காங்கே அமர்ந்து பணி செய்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

உயர் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. நிறைய பெண் போலீசார்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இவள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து வெரித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி அவளிடம் வந்து நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்டார்.

வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ரஞ்சனிக்கு அவர் கேட்டது உரைக்கவில்லை. அவளைப் பிடித்து உலுக்கி மீண்டும் ஒருமுறை கேட்டபோது ரஞ்சனி சுயநினைவுக்கு வந்தாள்.

ஐயோ என்னை அழைத்து விட்டார்களா? நான் கவனிக்கவில்லை எங்கு போக வேண்டும் என்று பதறி அடித்து எழுந்தாள். இல்லை இல்லை யாரும் அழைக்கவில்லை நீண்ட நேரமாக நீ இங்கு இருப்பதைப் பார்த்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கத்தான் வந்தேன் என்றார்.

எனக்கு பன்னிரண்டு மணிக்கு டெபுட்டி சீஃபை சந்திக்க அப்பாயின்மென்ட் இருக்கிறது. அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள் ரஞ்சனி.

அதுக்கு இன்னும் முக்கால் மணி நேரம் நீ காத்திருக்க வேண்டும். என்று கூறிய அந்த அதிகாரி அப்போதுதான் ரஞ்சனியை உற்றுப் பார்த்து, நீ நனைந்திருக்கிறாய்…. கவனித்தாயா என்று அவளது மார்பை நோக்கிக் கூறினார்.

ரஞ்சனி பதட்டத்துடன் தன் மார்பை பார்த்தபோது பால் கசிந்து மேலாடைக்கு வெளியே நனைந்திருப்பதைக் கவனித்தாள். பெண்கள் ஓய்வறை எங்கு இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கண்டு ,தனது தோள்பையையும் எடுத்துக்கொண்டு அங்கு ஓடினாள். உள்ளே சென்று தனது பையில் இருந்த இரண்டு பிரஸ்ட் பம்பை எடுத்து மார்பில் பொருத்தி சிறிது நேரம் கழித்து சேகரித்து இருந்த பாலை ஒரு
பிளாஸ்க்கு போன்ற ஒரு குப்பியில் ஊற்றி அடைத்து வைத்தாள். பதினைந்து நாள் கூட ஆகாத தனது பச்சிளம் குழந்தையின் அழுகை காற்றில் மிதந்து வந்து அவள் காதில் இறங்கியது. அதைக் குறித்து எல்லாம் கவலைப்படும் மனநிலையில் இல்லை அவள் இப்போது.

எப்படியாவது அழுது, புரண்டு, காலைப் பிடித்தாவது தனது கோரிக்கையைக் கேட்கும்படி இந்த அதிகாரியிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்பதிலேயே மனதை ஒரு நிலைப் படுத்தி இருந்தாள் ரஞ்சனி. அந்த ஆழ்ந்த சிந்தனைகிடையில் வேறு எந்த செய்திகளும் அவளைச் சலனப்படுத்தவில்லை. மீண்டும் அவள் தனது பழைய இடத்திலேயே போய் அமர்ந்து தனது முறைக்காகக் காத்திருந்தாள். சற்று தூரத்தில் போய் தனது இருக்கையில் அமர்ந்து பணி செய்து கொண்டிருப்பினும் ஏனோ அந்த பெண் அதிகாரிக்கு இவளைப் பார்த்தபோது மனதிற்கு வருத்தமாக இருந்தது.

×××××××××
ஏய் ரெஞ்சு… நான் டல்லாஸ்ல ஆபீஸ்ல இருந்து வந்து கதவு திறக்கறத நீ ஹூஸ்டன்ல இருந்து பார்த்துட்டே இருந்தியா? எப்படி இவ்வளவு அக்யூரெட்டா கூப்பிட்டே? என்று ஃபோனை எடுத்து ஆச்சரியப்பட்டுக் கேட்டான் ரிஷி.

டேய் ரிஷி எனக்கு லேபர் பெயின் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு சாயந்திரம் மூணு மணிக்குப் பயங்கரமா இடுப்பு வலிச்சுது…. நான் கண்டுக்காம விட்டுட்டேன். ஆனா கரெக்டா ஒரு மணி நேரம் கழிச்சு அதே மாதிரி பெய்ன் வந்தது டா….. அடுத்த வாரம் தான் டெலிவரின்னு சொல்லி இருந்தாங்க ஆனா இப்படி நேரத்திலேயே வரும்னு தோணல….. ப்ளீஸ் வேகமா புறப்பட்டு வந்துடுடா… இங்கே யாரும் இல்லடா…‌‌ என்று ரஞ்சினி கூறியதைக் கேட்டபோது ரிஷிக்கு தூக்கி வாரிப் போட்டது.

அடுத்த வாரம் பிரசவம் என்பதால் ஊரிலிருந்து ரஞ்சனியின் அம்மாவையும் தனது அம்மாவையும் வரச் சொல்லி அவன் ஏற்பாடு செய்திருந்தான். அவனும் கூட இந்த வெள்ளிக்கிழமை போவதற்கு அலுவலகத்தில் முன்கூட்டியேவிடுப்பு கேட்டு வாங்கி இருந்தான். இப்படி திடீரென்று பிரசவ வலி வரும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. மட்டுமல்ல நாளை காலையில் அவன் அலுவலகத்தில் மிக முக்கியமான ஒரு கூட்டம் இருக்கிறது. அதில் இவன்தான் வரும் ஒரு வருடத்திற்கான திட்டத்தை வரவிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கிக் கூற வேண்டும் என்று தனது அதிகாரி சொன்னதை நினைத்துக் கொண்டான்.

ரஞ்சு இப்படி திடீர்னு சொன்னா என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. நாளைக்கு எனக்கு ஆபீஸ்ல ரொம்ப முக்கியமான ஒரு பிரசன்டேஷன் இருக்கு……. இப்பவே மணி ஏழு ஆயிடுச்சு… இனி நான் புறப்பட்டு இந்த ஓட்டக்கார ஓட்டிட்டாங்க வந்து சேர்றதுக்கே ஒருபாடு நேரமாயிடும். நாளைக்கு மதியம் நான் இங்கிருந்து கிளம்புனா போதுமா? எப்படியாவது நீ அட்ஜஸ்ட் பண்ண முடியுமா? என்று அப்பாவித்தனமாக தனது மனதில் உள்ளவற்றை அவளிடம் கேட்டான்.

டேய் ரிஷி உனக்குப் பைத்தியமா? எனக்கு லேபர் பெயின் ன்னு சொல்றேன்…. அதை நாளைக்கு மதியம் வரைக்கும் நீட்டி வைன்னு சொல்றியே உன் கிட்ட நான் என்ன சொல்றது? நான் ஏற்கனவே ஹாஸ்பிடல்ல கூப்பிட்டு சொல்லிட்டேன்…. போறதுக்கான பொருள் எல்லாமே எடுத்து வச்சுட்டேன் …. என் பிரண்டு ரீட்டா கிட்டவும் கூப்பிட்டு சொன்னேன். நீ வர்ற வரைக்கும் அவ கூட இருக்கிறதா சொன்னா…. ப்ளீஸ் டா வேகமாகப் புறப்பட்டு வந்துரு. டெலிவரி டைம்ல கணவன் கூட இருக்கணும்னு டாக்டர் என்கிட்ட ரொம்ப கண்டிப்பா சொல்லி இருக்காங்க… எப்படியாவது வந்து சேர்ந்திரு… இங்க மழை பேஞ்சுக்கிட்டு இருக்கு……. அனேகமா டல்லாஸ்லியும் மழைதான் இருக்கும்னு நினைக்கிறேன்….. கார்ல வரப்ப பத்திரமா வந்து சேரு….

ரிஷிக்கு அவள் கூறுவது சரி என்று தோன்றியது. அப்ப நான் இந்தக் காரிலேயே வந்துடுறேன்.. இப்பவே மேனேஜரைக் கூப்பிட்டு என்னோட சூழ்நிலையைச் சொல்லிட்டு புறப்பட்டு வந்தர்றேன். ஆனா இந்த வண்டி ஹைவேல எழுவது மைல் ஸ்பீடுல வர்றப்ப எங்காவது திடீர்னு நின்னுடுச்சுன்னா பெரிய விபத்தா போயிடும். அந்த வேகத்தை விட குறைந்த வேகத்தில் போகவும் முடியாது. அதான் நான் யோசிக்கிறேன்… என்றான் பலவற்றைச் சிந்தித்தபடி.

அப்போ ஒன்னு பண்ணுடா .. பேசாம நீ மேப்பு போடறப்ப மோட்டார் வேஸ் வேண்டாம்னு எடுத்துவிட்டுறு. கூகுள் மேப் உனக்கு வேற ஒரு ஆல்டர்நேட்டிவ் வழி காமிச்சு தரும். அதுல நீ தைரியமா வந்தரலாம். ஏதாவது வண்டி பிரச்சனையான கூட ட்ரிபிள் ஏய்கு ஃபோன் பண்ணு.உடனே வந்துருவாங்க… வேகமா கிளம்பி வா… டல்லாஸ்லிருந்து இங்கு வர நாலு மணி நேரம் வேணும். நீ மெதுவா வந்தாலும் அஞ்சு மணி நேரத்துக்குள்ள வந்துடலாம். நேரா நீ உட்லண்ட்ஸ் ஹாஸ்பிடலுக்கு வந்துரு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரீட்டா வந்துடுவா நான் அவ கூட ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆயிடுவேன்…. அநேகமா இப்ப எனக்கு வலி வரும்னு நினைக்கிறேன் லைட்டா வலிக்கத் தொடங்குது டா…..

அது எப்படி வலி வருதுங்கறது நீ என்ன ஜோசியம் சொல்றியா…?.

ரிஷி மடத்தனமா பேசாத.. லேபர் பெயின் ஃப்ரீக்கொண்டா வந்துட்டே இருக்கும்.. நேரமாக ஆக ஆக அதோட ஃப்ரீகுவன்சி கூடிட்டே இருக்கும்… முதல்ல ஒரு மணி நேரத்துக்கு ஒருக்கா வலி வந்தது. இப்ப எனக்கு முக்கால் மணி நேரத்துக்கு ஒருக்கா வலி வருது… சரியா.. என்றாள் சற்று கோபமாக.

ஏய் ரஞ்சி நான் சும்மா கிண்டலுக்கு வேண்டி சொன்னேன்…. போன வாரம் ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தோம் இல்ல எந்தப் பிரச்சனையும் இல்லே… ஹேப்பியா இரு. நார்மல் டெலிவரி நடக்கும்.. என்னோட கண்மணிப் பாப்பாவ நான் உடனே வந்து பாத்துருவேன். என்றான் கொஞ்சலாக.

இந்த ஊர் டாக்டர்கள் எதுக்கு தான் முதலிலேயே குழந்தை என்னதுன்னு சொல்றாங்களோ? தெரியல… குழந்தை பிறந்த பின்னால அது என்ன குழந்தைன்னு தெரியுறதுல தான் ஒரு கிக் இருக்கு. இது முதலிலேயே சொன்னதுனால நீ கண்மணின்னு பேர் கூட வச்சுட்ட பாரு… என்றாள்.

நம்ம ஊர்ல சொல்லக் கூடாதுன்னு சட்டம் இருக்கு. இங்க அப்படி இல்ல அதனால சொல்றாங்க. ஒரு விதத்துல அது நல்லது தானே. சரி நான் உன் கூட பேசிட்டு இருந்தா நேரத்துக்கு வர முடியாது நான் கிளம்புறேன்… வண்டி ஏறின பிறகு நான் உன்னக் கூப்பிடுறேன். என்று கூறி அவசரமாகப் போனை வைத்துவிட்டு கையில் கிடைத்த துணிகளை எடுத்து ஒரு பேக்கில் நிறைத்து வண்டியில் வைத்தான். கடந்த இரண்டு மாதங்களாக நேரம் இருக்கும் பொழுதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கில் குழந்தைக்காகத் தேடித்தேடி வாங்கிய ஆடைகளையும் விளையாட்டுப் பொருட்களையும் தேவையான பொருட்களையும் மிகப்பெரிய ஒரு ட்ராலியில் சேகரித்து வைத்திருந்தான். அதை மட்டும் மறக்காமல் வண்டியில் கொண்டு போய் வைத்தான். வயிற்றறைக் கிள்ளிய பசியைக் கூட கண்டுகொள்ளாமல் வீட்டை அடைத்துப் புறப்பட்டான்.

2012 மாடல் கியா ஸ்போர்டேஜ் வண்டி பார்ப்பதற்குக் கெத்தாக இருந்தாலும் நம்பி தூரம் போவதற்குப் பயமாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமில்லை என்று நினைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினான். பார்க்கில் இருந்து ரோட்டுக்கு வண்டியைத் திருப்பிய போது எங்கிருந்தோ ஜூலி நனைந்து ஓடி வந்து காரின் முன்னால் சாடியது.

அவசரமாகப் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய ரிஷி… ஐயோ அவசரத்தில் உன்னை மறந்து விட்டேன் பார்.. நல்ல வேளை நீ வந்தாய் இல்லாமல் இருந்தால் உன்னை அம்போ என்று விட்டுவிட்டுப் போய் இருப்பேன் என்று பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்து ஜூலியைப் பிடித்து அவசரமாக ஒரு பெட்டியில் இட்டு கொஞ்சம் அதன் உணவையும் எடுத்துக்கொண்டு மூன்றாவது வீட்டில் பெட் ஷாப் நடத்தும் மார்த்தாவிடம் கொண்டு விட்டான். தான் வருவதற்கு சில நாட்களாகும் அதுவரை ஜூலியைக் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.

மார்த்தா புன்னகையோடு ஜூலியை வாங்கிக்கொண்டு கவலைப்பட வேண்டாம் நான் நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் என்றாள். ஒரு நாளைக்கு இருபது டாலர் கொடுப்பதற்கு வருத்தமாக இருந்தாலும் குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்துக் கொள்வாள் என்பதை நினைத்து நிம்மதி அடைந்தான்.

இருவரும் டெல்லாஸில் வேலை செய்து கொண்டு இருந்தபோது ஒன்றும் தோன்றவில்லை. ஆறு மாதத்திற்கு முன்பு திடீரென்று ரஞ்சனிக்கு ஹூஸ்டனுக்குப் பணி மாற்றம் கிடைத்துப் போனபோது ரிஷி ஆடிப் போய்விட்டான். ஊரிலும் கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் அவன். தனியாக இருந்த போது அவன் ஒவ்வொரு நாளும் பயந்து செத்துக் கொண்டு இருந்தான் என்பதை அவன் யாரோடும் சொன்னதில்லை. அந்தத் தனிமை பயத்தைத் தீர்ப்பதற்குத்தான் ஜூலியை அவன் ரெண்டாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான்.

அது ஏதோ தான் பேசுவதை எல்லாம் புரிந்து கொள்வது போல் நினைத்துக் கொண்டு மாலையில் அலுவலகத்தில் இருந்து வருவது முதல் மறுநாள் காலை அலுவலகம் போகும் வரை அதனோடு பேசிக் கொண்டிருப்பான். ஜூலியும் அவனது நிலைமையைப் புரிந்து கொண்டது போல அவன் சொல்வதை எல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டும் சில வேலைகளில் அதற்கு தலையாட்டியோ மியாவ் என்று கூறியோ தனது எதிர்வினையை ஆற்றிக் கொண்டும் இருக்கும். அது அவனுக்குப் பெரிய நிம்மதியைத் தரும்.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டு மீண்டும் வண்டியில் ஏறி அமர்ந்து ரஞ்சனி சொன்னது போல் கூகுள் மேப்பில் ஆப்ஷனில் போய் மோட்டார் வேஸ் , டோள்வேஸ் என்ற இரண்டு ஆப்ஷனையும் ரத்து செய்து ஹூஸ்டன் வுட்லேண்ட் மருத்துவமனை முகவரியை இட்டு ஸ்டார்ட் பட்டனை அமர்த்தினான்.

ஹைவே அல்லாமல் வேறு ஏதோ குறுக்கு வழிகளை மேப் காட்டியது.
ஐந்து மணி நேரம் என்றும் காட்டியது. சரி என்று கூறிப் புறப்பட்டான். டல்லாஸ்தாண்டி வெளியே வந்து ஏதேதோ ஊடு வழிகளில் போய்க் கொண்டிருந்தான். இரண்டு மணி நேரம் போயிருப்பான் அப்போது ரஞ்சனி அவனை அழைத்து எங்கு வந்திருக்கிறாய் என்று கேட்டாள்.

தெரியவில்லை இங்கு எந்த ஊரும் இல்லை. இது ஏதோ உள்ளூர் வழிகளைக் காட்டுகிறது அதன் வழி வந்து கொண்டிருக்கிறேன் இன்னும் மூன்று மணி நேரம் காட்டுகிறது. மழை பெய்வதால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. வேகமாக வரவும் பயமாக இருக்கிறது எனவே மெல்ல வந்து கொண்டிருக்கிறேன் . நீ ஹாஸ்பிடலுக்கு போய் விட்டாயா? என்று கேட்டான்.

நான் இங்கு வந்து அட்மிட் ஆகி விட்டேன். லேபர் ரூமுக்கு பக்கத்தில் இருக்கும் பிரிவார்டு செக்ஷனில் என்னைக் கிடத்தி இருக்கிறார்கள். இப்போது வலி அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. வேகமாக வா.. என்னை உடனே லேபர் ரூமுக்குள் கொண்டு போவார்கள் என்று நினைக்கிறேன். நர்ஸ் வந்து நீ வந்து விட்டாயா என்று கேட்டார்.. என்றாள்.

ரிஷிக்குச் சிறகுகள் இருந்தால் பறந்து போயிருப்பான். தற்போது குழந்தை வேண்டாம் என்ற மனநிலையில் இருந்த ரஞ்சனியை ஊக்கமடையச் செய்து தான் குழந்தையை பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து தான் இந்த முடிவை எடுக்க வைத்தான். அந்தக் குழந்தையின் மீது அதீதமான ஒரு பாசப்பிணைப்பை இப்போதே அவன் ஏற்படுத்தியிருந்தான். பெண் குழந்தை என்று கேட்டவுடனேயே கண்மணி என்று பேரும் வைத்து விட்டான்.

நீ கவலைப்படாதே, நான் வேகமாகத் தான் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள் வந்து விடுவேன். போனில் சார்ஜ் தீர்ந்து விட்டது .காரில் சார்ஜர் போர்டலில் குத்தி வைத்தும் சார்ஜ் ஏற மாட்டேங்குது. பவர் பேங்க் எடுக்கவில்லை.ஃபோன் ஆஃப் ஆகிவிட்டால் என் நிலைமை திண்டாட்டம் தான். ஃபோன் பேசினால் உள்ள சார்ஜும் தீர்ந்துவிடும் நீ வைத்து விடு என்றான்.

ஐயோ… ஃபோன் இல்லாட்டி எப்படி நீ மேப் பார்க்க முடியும்? பேசாம ஹைவேயா இருந்தா எப்படியாவது போர்டு பார்த்து வந்து சேர்ந்திடலாம்… இப்ப அதுவும் முடியாதே? என்ன பண்ணுவ டா? என்றாள் தனது வலியை மறந்து பதட்டமாக.

இன்னும் ஒரு கட்டை இருக்கிறது பவர் சேவிங் போட்டு இருக்கிறேன். அநேகமாக அங்கு வரும் வரை இருக்கும் என்று நினைக்கிறேன் நீ அடிக்கடி கூப்பிட வேண்டாம். நான் நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகிறேன். தைரியமாக இரு அப்படி நான் வர லேட் ஆகி விட்டாலும் மனதை விட்டு விடாதே தைரியமாக நடந்து கொள் என்றான்.

சரி நான் போன் வைக்கிறேன் நீ இல்லாமல் நான் லேபர் ரூமுக்கு போக மாட்டேன் வேகமாக வந்துவிடு என்று கூறி ஃபோனைத் துண்டித்தாள்.

மழை சொத சொதவென்று பெய்து கொண்டு இருந்தது. அவ்வப்போது அடிக்கும் மின்னல் தூரத்தில் தெரியும் மரங்களையும் பறந்த புல்வெளிகளையும் வெளிச்சம் இட்டு காட்டி மறைந்தது. ஏற்கனவே சற்று பயந்த சுபாவம் உடைய ரிஷிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஐயோ திடீரென்று வண்டி நின்று விட்டால் என்ன செய்வது என்று யோசித்தான்… கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வீடோ மனித வாசமோ இருப்பதாக தெரியவில்லை…. திக்குத் தெரியாத காட்டில் அகப்பட்டுக் கொண்டது போன்ற ஒரு உணர்வு வந்து பயத்தைக் கிளறியது. நம்மூரில் இப்படி பல மையில் சுற்றளவுக்கு மனிதவாசம் இல்லாத பகுதிகள் இருக்குமா என்று சந்தேகமாக அவன் யோசித்தான்.

திடீரென்று இரண்டு நாய்கள் வண்டியின் குறுக்கே ஓடின. ஒருவேளை அது குள்ளநரியாக இருக்கும் என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தான். இருட்டில் அவற்றின் கண்கள் தீப்பிழம்பு போல மின்னியது. அத்துமீறி அதன் எல்லைக்குள் வந்து விட்டதால் ஏற்பட்ட கொலைவெறி அதன் கண்ணில் பளபளத்தது. வண்டிக்குள் பாதுகாப்பாக இருந்தும் கூட அவனுக்கு என்னவோ செய்தது.

எதிர்பாராத திருப்பங்களும் வளைவுகளும் இருந்ததால் வழியை அவதானித்து வேகமாக ஓட்டவும் முடியவில்லை. அவன் போன சாலையில் வேறு வண்டிகள் எதுவும் வரவில்லை. மேப் தன்னை ஏதோ ஒரு தவறான வழியில் கொண்டு போவது போன்ற ஒரு உள்ளுணர்வு அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் அமெரிக்காவில் மேப் இல்லாமல் ஒருக்காலும் வண்டி ஓட்ட முடியாது என்பதையும் அவன் அறிவான்.

அவன் அமெரிக்கா வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் ஏனோ அவன் மனது இந்த ஊரோடு ஒட்ட மறுத்தது. எப்படியாவது ஊருக்குத் திரும்பிப் போய் விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான். ஆனால் ரஞ்சனிக்கு இந்த ஊர் பிடித்துப் போய்விட்டது. அவளுக்குத் திரும்பப் போவதில் உடன்பாடு இல்லை. அவள் இல்லாமல் ரிஷிக்கு ஊருக்குப் போவதைக் குறித்து நினைத்தபோது வெறுமையாக இருந்தது. ரஞ்சனி பிடிவாதக்காரியாக இருந்தாலும் தன்மீது உயிரையே வைத்திருப்பதை அவன் அறிந்திருந்தான். என்ன ஆனாலும் தன் வாழ்வின் பல ஆண்டுகள் இந்த நாட்டில் இருந்தே ஆக வேண்டும் என்பதால் அதற்கேற்ப மனநிலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

சற்று சரிவான ஒரு சாலையில் அவன் வந்து கொண்டிருந்தபோது அதன் இறக்கத்தில் தண்ணீர் கட்டிக் கிடந்தது. மேற்கொண்டு போக முடியாத அளவு குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் சாலை எங்கு தண்ணீர் எங்கு என்று தெரியாத அளவு தேங்கி இருந்ததால் அதற்குள் வண்டியை இறக்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது. இதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதால் உள்ள கடவுள்களை எல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு மெதுவாக வண்டியை இறக்கினான்.

நல்லவேளை தூரத்தில் தெரிந்த வழியை நேர்கோடாகப் பிடித்து ஓட்டியது சரியான சாலையாக இருந்தது. வண்டி தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பெரும் இரைச்சலோடு முன்னேறி சாலையில் சென்று ஏறியது. போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.
தேவகியிடமிருந்து குழந்தையாக இருந்த கிருஷ்ணனை எடுத்துக்கொண்டு யமுனா நதியை வசுதேவர் கடந்த போது நதி இரண்டாகப் பிளந்து யசோதையின் வீட்டிற்குப் போக வழிவிட்ட அந்தக் காட்சி ஏனோ அவன் மனதில் தோன்றி மறைந்தது.

கண்மணி வளர்ந்து பெரிய பிள்ளை ஆன பின்பு அவள் பிறப்பைக் காணத் தான் வந்தபோது அனுபவித்த சிரமங்களை எல்லாம் கதை கதையாகக் கூற வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

பவர் சேவிங் மோடில் ஃபோனைப் போட்டு இருந்ததால் மேப் கூட சற்று இருட்டாகவே இருந்தது. இன்னும் ஒன்றரை மணி நேரம் இருப்பதாகக் காட்டியது. மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. எப்படியாவது அங்கு போகும் வரை போன் ஆஃப் ஆகி விடக்கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

சற்று நேராகத் தெரிந்த சாலைகளில் வழக்கத்துக்கு மாறாக வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று ரோட்டின் குறுக்கே ஏதோ கிடப்பது போல் தூரத்தில் தெரிந்தது. ஐயோ அது என்னது? சற்று வண்டியின் வேகத்தைக் குறைத்து மெதுவாக அங்கு போனபோது, ஒரு மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடப்பது தெரிந்தது. மரத்தின் வேர் சற்று தூரத்திலும் அதன் உச்சிக் கொம்புகள் சாலையிலும் கிடந்தன.

அதை நீக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. சாலையின் இரு பகுதிகளும் சரிந்து இருந்ததால் அதை மாற்றி ஓட்டிக்கொண்டு போக முடியாது. அவன் வெளியே இறங்குவதை நினைத்தபோது பயம் அவனை நடுக்கியது.வேறு வழி இல்லை என்றும் தெரிந்து. வண்டியை ஆஃப் செய்யாமல் வண்டியின் விளக்கை எரிய விட்டுக் கொண்டு கீழே இறங்கினான். வெறிகொண்டது போல குளிர் வந்து அணைத்துக் கொண்டது. ஒரு நிமிடம் திக்கு முக்காடிப் போனான். மழை நனையாமல் இருக்க தான் அணிந்திருந்த கோட்டின் பின்பகுதியை தலையில் குல்லா போல் தரித்துக்கொண்டு மரத்தின் அருகில் போய் பார்த்தான்.

அது ஏதோ ஒரு பழமரம். பிளம்ஸ் போன்ற ஒரு சிவந்த நிற பழம் மரம் விழுந்த போது சிதறி சாலை நிறையக் கிடந்தது. அதில் பல பழங்கள் சிதைந்து விபத்தில் சிக்கிய மனிதர்களின் ரத்தம் சிதறுவது போல அங்கங்கே சிதறி ரத்தக்குளமாக இருந்தது. மரம் சிறியதாக இருந்ததால் அதன் உச்சிக் கிளையைப் பிடித்து ஒரு புறமாக இழுத்து சாலையின் வெளியே போட்டான். அவன் எதிர்பார்த்ததை விட எளிமையாக அவன் இழுப்புக்கு இசைந்து மரம் வழி விட்டது. அவனுக்கு இருந்த பசியில் அதில் இரண்டு பழங்களை எடுத்துத் தின்றால் என்ன என்று யோசித்தான். வேண்டாம் முன்பின் தெரியாத ஏதாவது பழத்தைத் தின்று மயக்கமாகிவிட்டால் அது வேறு வினையாகி விடும் என்று நினைத்துக் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு திரும்ப வந்து வண்டியில் ஏறி வண்டியை விரட்டினான்.

தனக்கு இருக்கும் இந்த இருட்டு பயம் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிறு குழந்தையாக இருந்த போதே இப்படித்தான் அநியாயத்திற்குப் பயந்து கொண்டு இருந்ததை நினைத்தான். இதைப் பார்த்து கோபப்பட்ட அவனது தந்தை ஒருமுறை அதைப் போக்குவதற்கு ஒரு இருட்டறையில் அவனை இட்டு அடைத்து விடியும் வரை அவன் இருந்தால் அந்த இருட்டு பயம் போய்விடும் என்று போட்டதும் தான் பயத்தின் உச்ச நிலையில் மயங்கி மூர்ச்சையாகிக் கிடந்ததும் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததை உணர்ந்து அம்மா கதவை திறந்து பார்த்தபோது தான் பிணம் போல் கிடந்ததையும் பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நினைவுகளையும் மனம் இப்போது தேவையில்லாமல் அவனது நினைவுக்குக் கொண்டு வந்தது.

இந்த மனம் அப்படித்தான் எதை நினைக்க வேண்டாம் என்று நினைக்கிறோமோ எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையே திரும்பத் திரும்பக் கொண்டு வந்து கழுத்து அறுத்துக் கொண்டிருக்கும் என்று திட்டிக் கொண்டு ஏதாவது பாட்டாவது கேட்டால் இந்த மனநிலை மாறும் என்று நினைத்தான்.

வழக்கமாக அவன் தேடிக் கண்டுபிடித்து பென் ட்ரைவில்பதிவு செய்து வைத்திருந்த இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்களைத் தேடினான். ச்சே…. போன வாரம் நிர்மல் காப்பி செய்து விட்டுத் தருவதாகக் கூறி வாங்கியவன் இன்னும் தரவில்லை என்பது நினைவு வந்தது. மொத்தத்தில் எல்லாமே பிரச்சினையாக இருப்பது போல் உணர்ந்தான்.

திடீரென்று ஃபோன் அடித்தது. அமைதியாக இருந்தபோது அந்த சத்தம் அவனை அதிர்ச்சி அடையச் செய்தது. ரஞ்சனி தான் கூப்பிட்டாள்.

ரிஷி எனக்குச் சுத்தமா முடியல…. வலி தாங்கவே முடியல டா… என்னை லேபர் ரூமுக்குக் கூட்டிட்டுப் போறாங்க.. நீ வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? என்றால் வலியை சகித்துக் கொண்டு.

ரஞ்சி… இன்னும் ஒண்ணேகால் மணி நேரத்துல வந்துருவேன். நீ தைரியமா இரு ஐயோ போன்ல இன்னும் மூணு பர்சன்டேஜ் தான் சார்ஜ் இருக்கு. நீ போன் வை தைரியமா இரு. தைரியமா இரு. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும் நான் வந்துருவேன்… நான் உன் கூடவே இருக்கேன்னு நினைச்சுக்கோ… அதுதான் உண்மை. என்னோட பிசிகல் பாடி மட்டும் தான் இங்க இருக்கு…. தைரியமா இரு… அந்தக் கிருஷ்ணன் நம்மள கைவிட மாட்டாரு…. இப்ப நீ போன் வை. என்றான்.

சரி நீ பத்திரமா வந்துரு… ஃபோன் ஆஃப் ஆயிட்டா என்ன பண்ணுவ? என்றாள்.

நான் ஏதாவது பண்றேன் நீ இப்ப போன் வை….

என்று கூறி ஃபோன் இணைப்பைத் துண்டித்து விட்டு அதன் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தான். வெறும் இரண்டு சதவீதம் மட்டும் இருப்பதாகக் காட்டியது. ரிஷிக்கு தூக்கி வாரி போட்டது. மேப் இல்லாமல் நிச்சயமாக ஒரு அடி கூடப் போக முடியாது. இருட்டு ,மழை ,குளிர், மனித நடமாட்டமே இல்லாத பகுதி என எல்லாமே அச்சம் தருவதாக இருந்தது. கண்ணைக் கூர்மையாக்கிக் கொண்டு தூரத்தில் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்தான்.

ஒரு மையிலுக்கு அப்புறத்தில் ஒரு சிறு புள்ளி போல் வெளிச்சம் தெரிந்தது. போன உயிர் அவனுக்குத் திரும்ப வந்தது போல் இருந்தது. விளக்கைத் தேடி வரும் விட்டிலைப் போல் அந்த வெளிச்சத்தை இலக்காக்கி மிக வேகமாக வண்டியைச் செலுத்தினான். அவன் எதிர்பார்த்ததைப் போலவே அது ஒரு வீடு தான். உனக்கு ஒரு வழி கிடைத்து விட்டதல்லவா இனி என் அவசியமில்லை என்பது போல ஃபோன் களைத்துக் கண்ணை மூடிக்கொண்டது.

காரை சற்று ஒதுக்கி அந்த வீட்டின் கேட்ட அருகே நிறுத்தினான். வண்டிக்குள் இருந்தபடியே வீட்டை நோட்டமிட்டான். இடை இடையே வந்த மின்னல் அந்த வீட்டின் வடிவத்தை நன்கு உணர்த்தியது. ஒரு பெரிய வீடு அதை சுற்றிலும் மூன்றடி உயரத்தில் ஒரு மிகச்சிறிய வேலி இட்டு பெயருக்கு ஒரு கேட்டும் போடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் விளக்குகள் எரிந்தன. நிச்சயமாக வீட்டினுள் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

முன்பின் தெரியாதவர்களிடம் எப்படி போய் உதவி கேட்பது என்று தயக்கமாகவும் இருந்தது. ஒரே வழியாக இருந்தாலும் கூட போய்விடலாம் ஆங்காங்கே வளைவுகளும் பிரிவுச் சாலைகளும் இருப்பதால் எந்த வழியாகப் போய் சேர்வது என்று தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் ரஞ்சனி தன் வரவை பார்த்து ஆவலோடு காத்திருப்பதை நினைத்தபோது இறங்கி ஓடினால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு நிமிடத்தில் அவளுடன் இருக்க முடியாமல் போய்விட்டால் அது எப்போதும் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் என்று அவனுக்கு தோன்றியது.

வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் சாலையை நோக்கி இருந்ததால் கேட்ட அருகே இருட்டுக்குள் போக அவனுக்குப் பயமாக இருந்தது. வண்டிக்குள் எப்போதும் அவன் வைத்திருக்கும் மிக நீளமான டார்ச்சை எடுத்து தலை நனையாமல் இருக்க கோட்டின் பின்பகுதியை தலைக்கு மேல் தொப்பி போல் போட்டுக்கொண்டு இறங்கினான்.
கேட்டின் அருகே சென்று காலிங் பெல் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான் ஆனால் அப்படி எதுவும் இல்லை.

பலமாகப் பலமுறை கேட்டைத் தட்டி ஹெல்ப், ஹெல்ப், ஹெல்ப், என்று கத்தினான். யாரும் கேட்டது போல் தெரியவில்லை. ஆனால் வீட்டினுள் எரிந்த விளக்குகள் எல்லாம் அணைந்து மொத்தத்தில் இருட்டானது. ஒருவேளை மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று சந்தேகப்பட்டான். வீட்டின் உள்ளிருந்து மின்னல் போல வெளிச்சம் அவ்வப்போது மின்னி மறைந்தது.

ஒருவேளை மழை காரணமாக சத்தம் உள்ளே கேட்கவில்லை போல் இருக்கிறது என்று நினைத்து மூன்றடி உயரம் இருந்த அந்தச் சிறு வேலியை மிக எளிதாகத் தாண்டிக் குதித்து உள்ளே போய் கதவைத் தட்டினான். முதலில் மெதுவாகவும் பிறகு உரக்கவும் கதவை தட்டினான். டார்ச்சை திருப்பிப் பிடித்து கதவைத் தட்டிப் பார்த்தான். எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வினாடி வீணாவதிலும் அவனுக்கு வருத்தம் மிகுந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்த ஜன்னலையும் போய் தட்டிப் பார்த்தான். எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவ்வப்போது மின்னல் வந்து அவனது பயத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை கதவு ஜன்னல் எல்லாம் அடைத்திருப்பதால் சத்தம் உள்ளே போகாமல் இருக்கலாம். வீட்டின் பின் பகுதியில் ஏதாவது ஜன்னல் திறந்து இருக்கிறதா என்று பார்க்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்தான்.

ஒரு ஜன்னல் சற்று திறந்திருப்பது போல் தோன்றியது. அதைப் பலம் கொண்ட மட்டில் பிடித்து இழுத்தான். உள்ளே கொக்கி இடாவிட்டாலும் மிக இறுக்கமாக அது அடைக்கப்பட்டிருந்ததால் திறக்க மறுத்தது. சுற்றிலும் டார்ச் அடித்து பார்த்தபோது ஒரு செடி வளையாமல் இருக்க நிறுத்தப்பட்டிருந்த கம்பி தென்பட்டது. அதை எடுத்து ஜன்னலின் சிறு விரிசலில் புகுத்தி நெம்பினான்.


அம்மா எங்களுக்குப் பயமாக இருக்கிறது. நமது வீட்டின் முன்னால் ஒரு பெரிய கார் வந்து நின்றது. அதிலிருந்து சந்தேகத்திற்கு இடமான ஒரு திருடன் இறங்கி நமது கேட்டை பலமுறை தட்டி பிறகு மதிலை தாண்டிக் குதித்து உள்ளே வந்து கதவைத் தட்டுகிறான். பயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் கொள்ளைக்காரன் தான் என்று தெரிகிறது. அவன் கையில் பெரிய ஒரு ஆயுதம் வைத்திருக்கிறான். என்று பதட்டத்தோடு எல்லீஸ் கூறினான்.

பதறிப்போன மோனிகா….. ஃபோனை லவுட் ஸ்பீக்கரில் இட்டு கணவனும் கேட்கும்படி செய்தாள். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பெல்லிடர் அவசரமாக வண்டியை ஒதுக்கினார்.

உண்மையிலேயே அப்படி ஒரு மனிதன் வந்ததை நீங்கள் பார்த்தீர்களா? இல்லை பயத்தில் ஏதாவது கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

நானும் ராக்கெலும் எடுத்த போட்டோக்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம் பாருங்கள். என்றான்.

அவசரமாக பெல்லிடர் அந்த போட்டோக்களைப் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தோன்றியது. அவன் மதிலை குதித்து போதும் ஏதோ ஒரு ஆயுதத்தை வைத்து கதவைத் தட்டும் போதும், வீட்டின் பல இடங்களிலிருந்து உள்ளே பார்க்கும்போதும் என பல போட்டோக்கள் எடுத்திருந்தனர். வீட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாடியறையில் இருந்து கீழ்நோக்கி எடுத்திருக்கின்றனர்.

நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுவோம். இங்கு ஏதோ விபத்தின் காரணமாக பெரிய ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டோம். பயப்பட வேண்டாம் எல்லிஸ் நான் சொல்லுவதை கவனமாகக் கேள். எங்கள் படுக்கை அறையில் போய் எனது படுக்கை அருகில் இருக்கும் மேசையில் மூன்றாவது அறையை திறந்தால் அதற்குள் ஒரு காக்கிநிற கவருக்குள் எனது துப்பாக்கியை வைத்துள்ளேன்.

நான் இப்போதே போலீசை கூப்பிட்டுச் சொல்லுகிறேன். நாங்கள் வருவதற்குள் போலீஸ் வந்து விடும். பயப்பட வேண்டாம். ராக்கேலைப் பயப்பட வேண்டாம் என்று சொல். தைரியமாக இருங்கள். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்… என்று அவர்களை ஊக்கமூட்டினார்.

ஐயோ அப்பா… அந்த கொள்ளைக்காரன் இப்போது நமது கார்டனில் இருந்து ஒரு கம்பியை எடுத்து ஜன்னலைக் குத்தி திறக்கிறான். அந்த ஜன்னல் கதவு திறந்து கொண்டால் எளிமையாக வீட்டுக்குள் குதித்து விடலாம். ஐயோ என்ன செய்வது என்ன செய்வது……? என்று எல்லீஸ் பதறினான்.

உறுதியாக அவன் வீட்டினுள் நுழைய முயற்சி செய்கிறானா? என்று மீண்டும் உறுதி செய்வதற்காக ஒரு முறை கேட்டார்.

அதைப் போய் எடுத்து வா.
போன மாதம் எப்படிச் சுடுவது என்று நான் உனக்கு சொல்லிக் கொடுத்தது நினைவிருக்கிறதல்லவா? அவனைக் கவனித்துக் கொண்டிரு. உள்ளே நுழைவதற்கு அவன் முயற்சி செய்கிறான் என்று உறுதியாக உனக்கு தோன்றினால் அந்த நாயை நீ இந்த போட்டோ எடுத்த இடத்தில் இருந்து மிகச் சரியாகக் குறி வைத்து அவனைச் சுட்டுவிடு. முடிந்த அளவு காலுக்கு குறி வைத்து சுடு என்றார்.

நான் பொய் சொல்லவில்லை நான் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறேன் பாருங்கள் என்றான் மீண்டும். அவர் பார்த்த போது வந்தவன் மிகத் தீவிரமாக ஜன்னலை திறப்பதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தது தெரிந்தது. இனி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. துப்பாக்கியின் சேஃப்டி லாக்கை நீக்கிவிட்டு சரியாக அவன் காலைக் குறி வைத்துச் சுடு என்றார்.


ரிஷியின் கடின முயற்சியையும் அவனது அவசரத்தையும் புரிந்து கொண்டது போல ஜன்னல் மெல்ல திறந்து கொண்டது. அப்போதுதான் கவனித்தான் நம்ம ஊர் ஜன்னல் போல் அல்லாமல் கம்பிகள் எதுவும் இல்லாமல் வீட்டினுள் போவதற்கு ஏதுவாக கதவு போல் திறந்து கொண்டது. ஐயோ தான் தவறு செய்து விட்டோமோ என்று ஒரு வினாடி சிந்திப்பதற்க்குள் கிழக்குப் பகுதியில் உள்ள மேல் மாடியில் ஒரு ஜன்னல் திறக்கும் ஓசை கேட்டது.

மகிழ்ச்சியோடு திரும்பிப் பார்த்தான் அவ்வளவுதான் ஒரு தீப்பிழம்பு மிகத் துல்லியமாக அவன் அடிவயிற்றைத் துளைத்து முதுகெலும்பை உடைத்து வெளியேறியது. உலகின் ஒட்டுமொத்த வலியும் ஒரு வினாடிக்குள் எப்படித் தன் உடலுக்குள் வந்து சேர்ந்தது என்று யோசிக்கும் முன் உடல் இரண்டு முறை துள்ளி அப்படியே சரிந்தது. அவனது வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருந்த இருட்டு அவனை முற்றிலுமாக அணைத்து ஐக்கியமாக்கிக் கொண்டது. மழை செம்புலப் பெயல்நீராக்கி பெய்திறங்கியது.


நீங்கள் தான் ரேஞ்சானியா? என்று மோசமாக அவள் பெயரை உச்சரித்துக் கொண்டு ஒரு போலீஸ்காரன் அவளிடம் வந்து கேட்டான். ஆமாம் என்று கூறி இதற்காகவே காத்திருந்தது போல ரஞ்சனி துள்ளி எழுந்து அவன் பின்னால் நடந்தாள்.

மிக விசாலமான அந்த அறையின் நடுவில் போடப்பட்டிருந்த மேசைக்கு முன்பாக நிறைய இருக்கைகள் இருந்தன. அவள் எதிர்பார்த்ததற்கு முரணாகச் சிரித்த முகத்துடன் டெபூட்டி சீஃப் அவளை வந்து அமரும்படி கூறினார்.

சொல்லுங்கள் ரேஞ்சனி நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

சமீபத்தில் கொள்ளைக்காரன் என்று கருதி சுட்டுக் கொல்லப்பட்ட ரிஷியின் மனைவி நான். அன்று எனது டெலிவரிக்காகத் திடீரென்று புறப்பட்டு வந்தபோது ஃபோனில் ரீசார்ஜ் போய்விட்டதால் வேறு வழி இல்லாமல் உதவிக்காக அந்த வீட்டிற்குப் போனபோது அவன் கொள்ளையடிக்க வந்ததாக நினைத்து அந்த வீட்டுப் பையன் சுட்டுக்கொன்று விட்டான். இது உங்களுக்குத் தெரிந்தது தான். என்று கூறி அவளது மருத்துவ சான்றிதழ்களை காட்டினாள்.

அவன் கொள்ளைக்காரன் அல்ல. தயவுசெய்து அவன் கொள்ளைக்காரன் அல்ல என்று நீங்கள் வழக்கை மாற்றிப் பதிவு செய்ய வேண்டும். கிரிமினல் குற்றம் செய்து இறந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது என்பதற்காக நான் இதைக் கேட்கவில்லை. எனக்கு அந்த இன்சூரன்ஸ் தொகை வேண்டாம் என்று கூட எழுதி தந்து விடுகிறேன். ஆனால் அவன் கொள்ளைக்காரன் என்று குற்றம் சுமத்தப்பட்டு இறந்து விட்டதாக அறிந்தால் அவன் ஆத்மா கூட சாந்தி அடையாது. தயவுசெய்து அதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனது வக்கீலிடம் பேசிய போது நீங்கள் மிக தீவிரமாகச் சாட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர் சொன்னார். என்னால் நீதிமன்றத்தில் வழக்காடி இதை நிறுவ முடியாது என்று அவர் கூறிவிட்டார். தயவுசெய்து நீங்கள் செய்த வழக்குப் பதிவில் சிறு மாற்றம் செய்ய வேண்டுமென்று அழுகாத குறையாகக் கெஞ்சினாள்.

நீங்கள் தெரிந்து கூறுகிறீர்களா? தெரியாமல் பேசுகிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவன் குற்றவாளி இல்லை என்று சொன்னால் அவனைக் கொன்ற அந்தப் பையன் குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆவது சிறையில் இருக்க வேண்டி வரும். இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு மில்லியன் டாலர் உங்களுக்கு இழப்பீடு தர வேண்டி வரும். அது எப்படி சிறு மாற்றமாக இருக்கும்.?

மிஸஸ் ரேஞ்சனி.. உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது ஆனால் இதோ பாருங்கள் இந்தப் புகைப்படங்களை…. என்று அவர் எடுத்துக்காட்டிய புகைப்படங்களில் மிகத் தீவிரமாக வீட்டைக் கொள்ளையடிக்கும் ஒரு நபரைப் போல் ரிஷி தென்பட்டான்.

ஒரு வீட்டில் இரவு பதினோரு மணிக்கு ட்ரஸ் பாஸ் செய்து ஜன்னலைக் குத்தித் திறந்து வீட்டினுள் போக நினைப்பது எப்படி இன்னசென்ஸ் ஆக முடியும்? என்றார் குரலைக் கடுமையாக்கிக் கொண்டு.

எங்கள் ஊரில் இதுபோல ஒரு சூழலாக இருந்தால் வீடுகளில் போய் உதவி கேட்பது சாதாரணமான ஒரு செயல்தான். அவன் இங்கு வந்து குறைந்த கால அளவு தான் ஆகியிருக்கிறது எனவே இங்கிருக்கும் சட்டங்கள் அவனுக்குத் தெரியாது. என்றாள்.

சட்டம் குறித்து தெரியாது என்று சொல்வது ஒருக்காலும்
ஒரு எக்ஸ்கியூஸ் ஆகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்க எல்லாம் படித்தவர்கள் தானே?

புகைப்படங்களுக்கு இடையில் இருந்து குறிப்பாக ஒரு புகைப்படத்தை எடுத்துக்காட்டிப் பாருங்கள் அவன் கையில் எவ்வளவு பெரிய ஆயுதத்தை வைத்திருக்கிறான் எனக் காட்டினார்.

அதை உற்றுப் பார்த்த ரஞ்சனி… ஐயோ இது ஆயுதம் அல்ல அவன் காரில் எப்போதும் வைத்திருக்கும் ஒரு பெரிய டார்ச் லைட் என்றாள். அவர் பக்கத்தில் இருந்த காவல்காரனைக் கைகாட்டினார். அதை உணர்ந்து கொண்ட அவன் உள்ளே சென்று சற்று நேரத்தில் ஒரு கவரில் இட்ட பெரிய துப்பாக்கியை எடுத்து வந்தான். அதன் குழல் பகுதி அச்சு அசலாக ரிஷி வைத்திருந்த டார்ச் லைட் போல இருந்தது. இதுதான் அவன் வைத்திருந்த துப்பாக்கி. இதை க்ரைம் நடந்த இடத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். என்றார்.

இத்தனை சாட்சியங்கள் அவனுக்கு எதிராக இருக்கும் போது எப்படி வழக்கை மாற்றி எழுதச் சொல்லி நீங்கள் கேட்கலாம்? என்று அவளிடம் கேட்டார். டார்ச் லைட் போலவே உள்ள துப்பாக்கியைக் கூட இவர்கள் செட் செய்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த போது இங்கு இனிப் பேசிப் பயனில்லை என்று எழுந்தாள்.

தன் மகன் சிறைக்குப் போகாமல் இருக்க அந்த தந்தை செய்ததோ அல்லது ஒரு மில்லியன் டாலர் இழப்பீடு கொடுக்காமல் இருக்க இன்ஷூரன்ஸ் கம்பெனி செய்ததோ ஆகலாம். விரக்தியின் உச்சகட்டத்தில் முடிக்கி விடப்பட்ட பொம்மை போல் எழுந்து வெளியே வந்தாள். இனி என்ன செய்வது யாரைப்போய் பார்ப்பது? எப்படி என்னவனின் கள்ளமில்லா மனசை நிறுவுவது? என்று தெரியாமல் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியே நடந்தாள். ஐயோ ரிஷி உன் சாவுக்கு நானே காரணமாகி விட்டேனே என்று வாய்விட்டு கத்தினாள்.

அவளது ஃபோனில் ஒரு செய்து வந்ததற்கான ஒலி கேட்டது. அவளை அறியாமல் அதை எடுத்துத் திறந்து பார்த்தாள். அது ஒரு வாட்ஸப் செய்தி. சென்னையில் உள்ள அவளது தோழி அனுப்பி இருந்தாள். அதைச் சொடுக்கி திறந்து பார்த்தபோது

“அமெரிக்காவில் வீடு கொள்ளையடிக்க முயன்ற தமிழக இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்”என்று ஒரு பெரிய தலைப்பில் அவனது புகைப்படத்தோடு பத்திரிக்கைச் செய்தி வந்திருந்தது.அதில் ரிஷி கலங்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டாள். இப்போதும் அவளது மார்பு நனைந்திருந்தது சாரை சாரையாகக் கண்ணீர் விழுந்து.

kanaliviji@gmail.com

1 comment

comments user
கவிதா த

இதயம் கனக்கிறது.

Post Comment