படைப்பாளிகளுக்கு கோட்பாடுகள் குறித்த புரிதல் இருக்கனும் – எழுத்தாளர் பெருமாள் முருகன்
31-12-2024 அன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களிடத்தில் நமது ஓதம் கலையிலக்கிய பன்னாட்டு இதழிற்காக நேர்காணல் எடுக்கப்பட்டது.
உரையாடல்
ஓதம் மின்னிதழுக்காக மு. ரமேஷ்.
ஓதம் மின்னிதழ் தொடங்குவது பற்றி எழுத்தாளர் அன்பிற்கினிய பெ.மு. அவர்களிடம் ஆகஸ்டு மாதம் தெரிவித்து ‘உங்களுடைய நேர்காணல் வேண்டும் என்று தெரிவித்தேன்’ உடனடியாக வாஞ்சையோடு விசாரித்து வைத்துக்கொண்டார். திரும்பவும் செப்டம்பர் மாதம் அவர் எங்கள் மாநிலக்கல்லூரிக்கு வந்தபோது கருத்தரங்கில் அவர் பேசிமுடித்த பிறகு சந்திக்கச் சென்றபோது மின்னிதழ் வந்துவிட்டதா? என்று அன்போடு கேட்டார். உங்கள் நேர்காணல் இல்லாமல் வராது என்றேன். அவருக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதற்காக நான் அப்படி சொல்லவில்லை. அவர் எழுத்தின்மீதும் செயல்பாட்டின்மீதும் கொண்ட மதிப்பினால் அப்படிச் சொன்னேன். செமஸ்ட்டர் விடுமுறையில் வைத்துக் கொள்ளலாம்! என்றார். மழை மற்றும் தேர்வுப் பணிகள் காரணமாக நவம்பர் மாதம் என்னால் பெ.மு. அவர்களை தொடர்புக்கொள்ள முடியவில்லை. நவம்பர் கடைசி தேதியில் தொடர்புக்கொண்டு கேட்டேன். டிசம்பரில் ஓதம் திறனாய்வு வெளி என்னும் பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் இருப்பது குறித்துச் சொல்லியும் அதனை நீங்கள் துவங்கி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அந்த நாட்களில் இத்தாலிக்குச் செல்லுவதாக சொல்லிவிட்டு, டிசம்பர் 27இல் சென்னைப் புத்தகக் காட்சி தொடங்குகிறது. அதற்கு நான் வருவேன். அப்போது நமது நேர்காணலை வைத்துக்கொள்ளலாம்! என்றார். டிசம்பர் 28 அன்று சனிக்கிழமை அன்பிற்கினிய ஆய்வாளரும் ஆசான் கல்லூரி உதவிப்பேராசிரியருமான நாராயணன் அவர்கள் என்னைச் சந்திக்க வந்தார். அப்போது நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் பெ.மு. அவர்களை பற்றி பேச்சுவந்தது. உடனே அய்யாவிற்கு அழைப்பு குடுங்க பேசிப்பார்கலாம்! என்றேன். உடனே அவரும் அய்யாவிற்கு அழைப்பு கொடுத்தார். நாங்கள் பேசினோம். டிசம்பர் 30, 31இல் வருவதாகச் சொன்னார். அதன்படியே டிசம்பர் 31 அதிகாலை 4 மணிக்கு என்னை அழைத்திருக்கிறார். நான் புத்தகக் காட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரதி அறக்கட்டளை சார்பில் கடை வைத்திருப்பதனால் அதற்கு உண்டான என்னுடைய பழைய நூல்களை லேப்டப்பில் ஏற்றித் தேடிக்கொண்டிருந்தேன். போனை சார்ஜில் போட்டிருந்தேன். 12 மணிக்கெல்லாம் திருவல்லிக்கேணிக்குச் சந்திக்க வரச்சொல்லி புலனத்தில் பதிவிட்டிருந்தார். இதையெல்லாம் பார்க்காமலே கல்லூரிக்கு விடுப்புச் சொல்லிவிட்டேன் துறைத்தலைவரிடம். பிறகு 8.30 மணியளவில் பெ.மு. அய்யா அவர்கள் என்னை போனில் அழைத்து ‘என்ன? நீங்க பதிவ பார்க்கமாட்டிங்கிறிங்க. என்னுடைய இன்னொருக் கூட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டேன். நீங்கள் 12 மணிக்கெல்லாம் வந்திடுங்க. 1.30க்கெல்லாம் முடிச்சிட்டு அடுத்தக் கூட்டத்திற்கு போகனும்’ என்றதும் எனக்கு உண்மையிலேயே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஏற்கனவே மாணவர்களிடமிருந்து வாங்கப்பட்ட வினாக்கள் எனக்கு மனநிறைவை தராததனால், அன்பிற்கினிய நண்பர் ஆய்வாளர் சிந்திக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கந்தசாமி அவர்களிடம் வினாக்களை அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பிய வினாக்கள் ஆய்வுநடையில் இருந்ததனால் அதையும் கொஞ்சம் பதுக்கி வைத்துவிட்டேன். ஓதம் மாணவர்கள் எல்லோரும் புத்தகக் காட்சிக்குப் பணியாளர்களாகச் சென்றுவிட்டதனாலும் நான் மனதில் எண்ணியிருந்த கேள்விகளை மட்டும் கேட்கலாம் என்று துணிந்து கிளம்பி விலங்கியல் இரண்டாமாண்டு மாணவர் அன்பிற்கினிய ஹரிநாத் அவர்களுக்கு தொடர்புக்கொண்டு அழைத்தபோது அவரும் வந்துவிட்டார்.

பெ.மு. தங்கியிருந்த அறைக்கே எங்களை அன்புடன் அழைத்து இந்த சிறப்பானதொரு நேர்காணலை எங்களுக்கு வழங்கினார். முன்னேற்பாடு இல்லாமையால் ஒலிப்பதிவு மட்டும் செய்யப்பட்டது. மாணவர் ஹரிநாத் அவர்களின் உதவியோடு ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
ஓதம்: அய்யா வணக்கம்!
பெ.மு: வணக்கம்.
ஓதம்: உங்களுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் எங்களுக்காக இந்த நேர்காணலைக் கொடுப்பதற்கு முதலில் நன்றியை எங்கள் ஓதம் சார்பில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஓதம்: சென்னை புத்தகக் காட்சியில் உங்களுடைய நூல்கள் ஏதேனும் வந்துள்ளதா?
பெ.மு: ஆமாம் சென்னைப் புத்தகக் காட்சிக்கு என்னுடைய மூன்று நூல்கள் வந்திருக்கு. போண்டுன்னு ஒரு சிறுகதை தொகுப்பு, ‘காதல் சரின்னா சாதி தப்பு’ன்னு கட்டுரை தொகுப்பு, ‘பாதிமலையேறின பாதகருஉ’ இவை மூன்றும் வந்திருக்கு. போண்டு 11 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு. காதல் சரியென்றால் சாதி தப்புங்கிற கட்டுரை நான் கல்லூரி முதல்வரா இருந்தப்ப எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள எழுதிருக்கென். பாதிமலையேறின பாதகருஉ என்னுடைய படைப்பு குறித்த அனுபவங்கள் படைப்பு உருவாவதற்கான காரணங்கள் எனது படைப்பின் பின்புலங்கள் இவைற்றையெல்லாம் எழுதியிருக்கென். இன்னூல் பல பத்திரிக்கைகளில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு.

ஓதம்: பாதகரு என்னும் சொல்லில் உங்கள் படைப்புகளில் இயல்பாக வருகிற பேச்சுவழக்குதொனி வருகிறதே?
பெ.மு: சிரித்துக்கொண்டே ஆமாம். இன்னொரு நண்பர்கூட சொன்னாரு பாதகருன்னு பேச்சுவழக்க தலைப்பா வச்சிருக்கிங்கன்னு. எங்க தாத்தாவ எங்க ஊர்ல அப்படித்தான் சொல்லுவாங்க. எங்க தாத்தாப் பற்றியக் கட்டுரை அது அப்படிங்கிறதனால அதையே தலைப்பா வச்சிட்டேன்.
ஓதம்: மொழியைப் பற்றி பேசும்போது நீங்க கொங்குவட்டார பண்பாட்டை பொதுமொழியில எழுதுரிங்க.
பெ.மு: ஆமாம் என்று ஆமோதிக்கிறார் சிறு புன்னைகையோடு.
ஓதம்: இப்படி எழுதும்போது உங்களுக்கு ஏற்படுகிற சிக்கல் மற்றும் சிறப்புகள் குறித்து சொல்லுங்கள்.
பெ.மு: எந்த வட்டாரமாயிருந்தாலும் பொதுமொழிய தவிர்க்க முடியாது. நவீன இலக்கியங்கள எழுதும்போது பொதுமொழியும் வட்டாரமொழியும் சேர்ந்துதான் வரும். படைப்புகளில் வருகிற பெரும்பாலும் உரையாடல்கள் வட்டார வழக்கில வருது. அதைகூட முழுசும் சொல்லமுடியாது சிலசொற்கள் வட்டார சொற்கள் வரும்.

நில அமைப்பிற்கேற்ப பண்பாடு, தொழில், வாழ்வியலு இவற்றிற்கேற்ப கொஞ்ச சொற்கள்தான் பொதுமொழியிலிருந்து மாறுபடும். வட்டாரசொற்களா வரும். வட்டாரவழக்கு பொதுமொழியிலிருந்து முழுசா துண்டிச்சிக்கிட்டு இருக்கும்ன்னு நாம நெனச்சிக்க கூடாது. அது பொதுமொழியோடு கலந்துதான் இருக்கும். பொதுமொழிதான வட்டாரத்திற்குரிய இயல்புகளையும் ஏற்றிருக்கும். கொஞ்ச கொஞ்சம் மாறுபடும். ஆகவே பொதுமொழியோடு வட்டாரமொழியும் கலந்துவருது. பேச்சுதொனியிருக்குங்க இல்லையா? அதுதான் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும். இதெல்லாம்தான் வட்டார வழக்கா கொள்ளப்படும். இதையெழுதுரப்போ எனக்கென்னா பிரச்சனை வருமுன்னா! பெரும்பாலும் ஆசிரியர் கூற்றா, பொதுமொழியிலதான எழுதுறோம் ஆனா ஒரு சில சமயங்களில வட்டார வழக்கும் வந்துரும். அது இயல்பா வருது. அது எனக்கு வட்டார சொல்லுன்னுகூட தெரியாது. இயல்பா வந்துரும் அத நா அப்படியே போட்டு எழுதிடுவேன்.
யாராவது வாசகர்கள் கேட்கும்போதுதான் இது என்னசொல்லு? இதற்கு என்ன அர்த்தம்? என்று கேட்கும்போதுதான் எனக்கு புரியும். ஓ! நாம வட்டார சொல்ல போட்டிருக்கோமுன்னு. 1990-1991 அந்த சமயம் ஈரான் – ஈராக் போர் வந்தது அப்போ நமக்கு மண்ணெண்ணைத் தட்டுப்பாடு வந்துச்சிங்க. அப்போவந்து பெரும்பாலோருக்கு சிலிண்டர் வசதி கிடையாது. மண்ணெண்ணை ஸ்டவ்வுதாங்க. வசதியானவங்க வீட்டிலதான் சிலிண்டர் இருக்கும். அதுகூட பதிவு பன்னுனா நாலுவருஷம் அஞ்சிவருஷமாகும் வருவதற்கு. அப்போ நான் சென்னையிலிருந்தேன். மண்ணெண்ணை கிடைக்காது பெருஞ்சிக்கலா இருந்தது சமைக்கிறதற்கு. ஏன்னா நகரத்தில விறகும் கிடைக்காது. அந்த சிக்கலவச்சி நா ஒரு சிறுகதையெழுதினேன். ‘முடக்கம்’ன்னு பேரு அந்த சிறுகதைக்கு. அதில நாயென்னா நெனச்சியெழுதினேன்னா சென்னையக் களமாக கொண்டு எழுதுறோம் பொதுமொழியிலதான் எழுதனும். வட்டாரமொழி வரக்கூடாது. அப்படின்னு எழுதின. ஆனா ஒரு நண்பர் சொன்னார் என்னதான் நீங்கள் பொதுமொழியில் எழுதினாலும் உங்க மொழி உங்கப் படைப்புல வந்துவிடுகிறது என்றார். ‘அவள் வட்டிலை கொண்டுவந்தாள்’ வட்டிலுங்கிறது எங்கவட்டார சொல்லு. அது சாப்பிடற தட்டக் குறிக்கிது. எவ்வளவுதான் தவிர்த்தாலும் பொதுமொழியோடு வட்டாரமொழி வந்துவிடுகிறது. அந்த சொல் சென்னைப் பண்பாட்டில் இல்லாதது. வட்டில் கொங்குவட்டார சொல்லு அது எனக்கு இயல்பா வந்துடுது.
அடுத்ததா பேச்சுமொழிய உரையாடலா எழுதும்போது வருகிற சிக்கல் என்னான்னா! எங்க ஊருல ‘இட்டேரறி’ அப்படின்னு ஒரு சொல்லு இருக்கு. அதற்கு இடையின ‘ரி இட்டேரி’இன்னு போடறதா? அல்லது வல்லின ‘றி இட்டேறி’இன்னு போடறதா? எது சரின்னு தெரியல. ஒலிப்பில வித்தியாசங்கிடையாது. நாமலா நெனச்சி போடறது. இது எழுதும்போது குழப்பத்த உருவாக்குது. பொதுமொழியில இந்த சொல்லுகிடையாது அதனாலதான். வட்டார வழக்க எழுதும்போது மயங்கொலிப்பிழை வரும். அந்ததந்த வட்டார நிலைமைக்கேற்ப எழுத்தாளர்கள் தாங்களாகவே எழுதி தீர்த்துக் கொள்ளவேண்டியதுதான் வேறவழியில்லை.
ஓதம்: உங்களுடைய முதல் நாவலான ‘ஏறுவெய்யிலில்’ மொழியிறுக்கமாக இருக்குன்னு சிலர் சொல்லறாங்க. அதுபற்றி ?
ஏறுவெய்யிலுல மொழியிறுக்கம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. ஏறுவெய்யில நா பிரியாதான் எழுதினே. நிலக்காட்சியெல்லாம் விரிவா இருக்கும். நீங்க சொல்லறது நிழல்முற்றத்தில மொழியிறுக்கமா இருக்கும்.
ஏன்னா ஒரு திரைப்படத்தை எப்படி எடிட் பன்னுவாங்களோ அப்படி நிழல்முற்றத்தில முயற்சிப் பண்ணினே. அத பாக்கும்போது அப்படி கட்டுப்பாடு வச்சிக்கிட்டு எழுதினதனால சிலவற்றை சொல்லமுடியலையோ. இன்னுங்கூட விவரமாக எழுதிருக்கலாமோ! என்று தோனினதுண்டு.
மொழியப் பொறுத்தவரை நா சுதந்திரமாத்தான் பயன்படுத்துறேன். நிழல் முற்றத்தை தவிர்த்து மற்ற எல்லா நாவல்களையும் சுதந்திரமா எழுதிருக்கேன். ஏறுவெய்யிலுல மொழியிறுக்கம் இருக்குன்னு எதவச்சி சொல்லுறாங்கின்னு எனக்கு தெரியல.
ஓதம்: ஏன்னா அந்நாவலில நெறைய விவசாயம் சார்ந்த வட்டார சொற்கள் வரும் அது புரியாமல் சொல்லுறாங்க. ஆனால் அந்த வட்டார சொற்களையும் புரியும்படியாக ஓரகராதியும் நீங்க போட்டிட்டிங்க.

பெ.மு: அந்த நாவலுக்காக அந்த அகராதிய கொண்டுவரவில்ல. அது கொங்குவட்டார சொல்லகராதி பொதுவானது. அது அந்த நாவலையும் புரிஞ்சிக்க உதவும்.
ஓதம்: ஆமாம். அதற்கு பதிலாகவும் உங்களுடைய கொங்குவட்டார சொல்லகராதி உதவுது. ஆர். சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாவை’ உங்களுடைய முன்னோடியாக கருதுறிங்க அதுபற்றி?
பெ.மு: நாகம்மா மட்டுமல்ல ஆர்.சண்முகசுந்தரம் அவர்கள் எனக்கு முன்னோடி. அதனாலதான் அவர என் முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கிட்டேன். க.நா.சு. கூட ஆர்.சண்முகசுந்தரம்தான் தமிழில் வட்டார நாவல தொடங்கி வச்சாரின்னு சொல்லுறார்.
ஓதம்: விஷயத் தெளிவு உள்ளவரின்னுசொல்லுறார்.
பெ.மு: ஆமாம். 1940களிலேயே கொங்குவட்டாரத்த கதையாக எழுதினாரு. எங்க தாத்தா கதைய எங்க தாத்தாவிற்கு தாத்தா கதைய எங்க முன்னோர் கதைய அவர் எழுதினாரு. 19ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டு கதைகள அவர் எழுதினார். குறிப்பாக சொன்னால் சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த கதைகளை அவர் எழுதினார். ஆக அத வாசிக்கிறபோது எனக்கு அப்படித்தான் தோனிச்சி. நா என்னா நெனச்சேன்னா! அவர் அந்தகால வாழ்க்கைமுறைய எழுதினாரு. அதிலிருந்து வாழ்க்கைமுறை எவ்வளவோ! மாறிவந்திருச்சி அத எழுதனும். அதன் தொடர்ச்சியாத்தான் எழுதுறேன். அப்படின்னு நெனச்சிதான் ஆர். சண்முகசுந்தரத்தை எனக்கு முன்னோடின்னு சொல்லுறேன்.
ஓதம்: திருஞானசம்பந்தர் தேவாரத்தில திருச்செங்கோடு பாடல் பெற்ற ஸ்தலமாயிருக்கு. அவர அடுத்து ஆர். சண்முகசுந்தரம், சி.ஆர். ரவிந்திரன் போன்றோருடைய எழுத்துகளில் கொங்குவட்டாரம் வந்தாலும் உங்களுடைய எழுத்துகளில்தான் அதற்கு ஓரிலக்கிய அங்கீகாரம் கிடைக்கிறது. இதுபற்றி உங்களுடைய கருத்து?
பெ.மு: நீங்க சொன்ன மாதிரி அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியிருக்கிறது. சங்க இலக்கியத்தில வருகிற புலவர் எ. செங்குன்றூர்க்கிழார் திருச்செங்கோடு என்று சொல்லுவதுண்டு. சிலப்பதிகாரத்தில கண்ணகி மலைக்கு போறதுகூட இந்தமலையின்னு சொல்லறதுண்டு. ‘அரும்பத உரையாசிரியர்’ குறிப்பு எழுதும்போது கண்ணகி போனமலை திருச்செங்கோடுன்னு எழுதுறாரு. அப்புறம் கொங்கர், கொங்கிளங்கோசர் அப்படின்னு வருது. தேவாரத்தில கொங்கு பகுதியில பாடல்பெற்ற ஸ்தலங்கள் 7 வருது. அதற்கப்புறம் 19ஆம் நூற்றாண்டில எழுதின ‘நடேச சாஸ்த்திரி’ சேலம் பகுதிய சார்ந்தவரு. அவர் கதைகளில கொங்கு ஊர்கள் வரும். அவர் பிராமணர் என்பதனால நில அமைப்பு பற்றிய விவரங்கள் எல்லாம் பெருசாயிருக்காது. அதனால அவருடையத வட்டார நாவலுன்னு சொல்லமுடியாது. ஆனா அந்த ஊர்களயெல்லாம் களமாவச்சி எழுதினவரு நடேச சாஸ்த்திரி. அந்த மரப முறையா தொடங்கிவச்சவர் ஆர்.சண்முகசுந்தரம்தான். அவர தொடர்ந்து சி.ஆர். ரவிந்திரன், சூரியகாந்தன். இவங்கெல்லாம் எழுதினாங்க. இன்னைக்கும் கா.சி. சிவக்குமார், எண். சிவராம், வாமு. கோமு. இவங்கெல்லாமு எழுதுறாங்க. கொங்குவட்டாரத்தின் நகரபகுதிய எழுதுறாங்க. அதில சுப்பிரபாரதி மணியன் இவர் திருப்பூர களமாக வச்சி நொய்யல் போன்றவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார். அடுத்ததா எம். கோபாலகிருஷ்ணன் இவரும் கொங்கு நகரப்பகுதிய எழுதுறார். இன்னும் ஒரு நாவல் இரு நாவல் எழுதினவங்க ஆர். வடிவேலு போன்றவங்க இருக்கிறாங்க. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இருக்காரில்ல! ‘பொன்னுசாமி நாவுக்கரசுடைய அப்பா’ அவர் ‘படுகளம்’ நாவல எழுதியிருக்கிறார். இப்படி நெறைய பேர் இருக்காங்க. என்னுடைய படைப்புகளில கூடுதலான அம்சம் அல்லது கூடுதலான சிறப்புன்னு நா சொல்லறது இரண்டு காரணங்கள் இருக்கு. ஒன்னுவந்து என்னுடைய படைப்புகளில விவசாயம் சார்ந்த வாழ்க்கை அழுத்தமாக இருக்கும். இன்னொன்னு கிராமப்புறங்களில இருக்கிற அனைத்து சாதிகளுக்கும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கும். ஆர். சண்முகசுந்தரம் நாவல்களில இப்படியிருக்காது. அவங்க எந்த சாதிய பிரதானமா வச்சிருக்காங்களோ குறிப்பாக ஆதிக்க சாதிய பற்றி மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவாங்க. என்னுடைய படைப்புல ஆதிக்க சாதியினர், இடைநில சாதியினர், ‘தொழிலாளர் சாதின்னு சொல்லுவாங்க இல்ல? நாவிதர், வண்ணார்’ அடுத்ததா ஒடுக்கப்பட்ட சாதியினர் இப்படி எல்லாரும் இருப்பாங்க.
கூளமாதாரி அருந்ததி சாதிய சார்ந்த சிறுவருடைய வாழ்க்கைய எழுதியிருக்கேன். அவங்கள மையமாவச்சி அவர்கள் கோணத்திலிருந்தே எழுதியிருக்கேன். மற்ற நாவல்களிலேயும் ஒரு கிராமத்தில இத்தன சாதிகள் இருக்கு என்று நீங்கள் உணர்வதற்கு அனைத்து சாதிகளுக்குமான குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் என்னுடைய நாவல்களில இருக்கும். என்னுடைய நாவல்கள வாசிக்கும்போது நீங்க உணருவிங்க. கிராமத்தை வச்சியெழுதின பெரும்பாலான ஆசிரியர்களின் நாவல்களில அப்படி தோணாது. ஒரு கிராமன்னா அதில ஒரே சாதியிருக்கிற மாதிரியும் அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவாங்க. என்னுடைய நாவல்களில அப்படியிருக்காது. அதனால்தான் இந்தக் கேள்விய நீங்க கேட்டிருக்கிங்க.
ஓதம்: ஆமாம்! கிராமத்தில இருக்கிற உள் பண்பாடுகள எழுதிரிங்க. பூக்குழியிலகூட தோளூர பத்தி நீங்க எழுதிரிங்கன்னா அதுவே தனியானதொரு புவியியலா அந்த ஊரசுத்தியிருக்கிற குடியிருப்புகள், சாதி, தெருக்கள் அவர்களுடைய வாழ்வியல் அப்படின்னு வந்துகிட்டேயிருக்கு. ஒரு மானுடவியலாளர்போல விவரிப்ப நீங்க கொண்டுவந்துறிங்க. ஒட்டுமொத்தமா உங்க படைப்புகள வாசிக்கிறபோது சாதியொழிப்பிற்கு இணக்கமான கருத்துகள வச்சிருக்கிங்க மேலோட்டமா பார்த்தா அப்படி தெரியாது. ஆனா நீங்க ஆரவாரமில்லாம சத்தமில்லாம சாதியொழிப்பு கருத்த நீங்க பரப்புறிங்க. இந்த சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது?
பெ.மு: என்னுடைய கல்லூரிக் காலத்தில மார்க்கிசியத்தை படிச்சிருக்கேன். அந்த வகுப்புகளில கலந்துக்கொண்டு முறையாக படிச்சிருக்கேன். 1990களில் பெரியாரை மறுவாசிப்பு செய்யறதுன்னும், அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி உருவான சிந்தனை அம்பேத்கரை வாசிக்கவும் உதவியது. இப்படியான சூழலில்தான் அனைத்து சாதியினரும் சமம் அல்லது சாதி கருத்தாக்கம் ஒழிக்கப்படவேண்டும் என்கிற சிந்தனை எனக்கு உருவாச்சு. இன்னொன்னு எனக்கு தோன்றியது என்னான்னா முற்போக்கு பேசுகிற இத்தகைய படைப்புகள் எல்லாம் பிரச்சாரமா இருக்கு என்கிற குற்றச்சாட்டு உண்டு. முற்போக்கு கருத்தியலை அந்த வாழ்வியல் பண்பாட்டோடு கலந்து எழுதவேண்டும் என்று தோணுச்சி. அப்பத்தான் அது கலையாகும். இல்லையின்னா கலைவேறாகவும் கருத்துவேறாகவும் பிரிஞ்சி நிக்கும். அந்தக் காலத்தில நா மனவோசையில இருந்தேன். அந்த ஆசிரியர் குழுவுல இருந்த பேராசிரியர் சீனிவாசன் நந்தனம் கல்லூரி பொருளியல் துறை பேராசிரியரா இருந்தாரு. அவர் நல்ல இலக்கியவாசகர். அவரோட எனக்கு நெருங்கிய பழக்கமுண்டு. அப்புறம் கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் ப.செயப்பிரகாசம் இவங்களோடு சேர்ந்து தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தபோது எனக்கு தோணியது இதுதான். கலையாகத்தான் நாம கருத்தை கொண்டுபோகனும். வாழ்க்கையத்தான் நாம எழுதனும். ‘கருத்துகள் படைப்பை துருத்தி நிற்கக் கூடாது’ அப்படின்னு நா மாணவனா இருந்தபோதே எழுதவந்த காலத்திலேயே உணர்ந்துக்கிட்டேன்.
அதனால என்னான்னா படைப்புள வைக்கிற பார்வைக் கோணம்தான். நீங்க பாத்திங்கன்னா சாதியொழிப்பு சாதியொழிப்புன்னு பேசின மட்டும் போதாது. சமூகத்தில சாதியெப்படியிருக்கு? அத நாம வெளிப்படுத்தனும். காட்சியின் மூலம் அத விவரிக்கனும். அப்போதான் கொஞ்சகொஞ்சமா அதுசார்ந்த உரையாடல் உருவாகும். பொதுவா கிராமத்த பத்தியெல்லாம் என்ன சொல்லுவாங்க? கிராமம் நல்லாயிருக்கு. கிராமம் ஆரோக்கியமானது. கிராமத்தில இருக்கிறவங்க எல்லாம் மிகவும் நேர்மையானவங்க. மேம்பட்டக் குணங்களை உடையவங்க. நகரம் இதற்கு எதிர்நிலையானது. நகரத்தில இருக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க. அப்படின்னு கிராமத்தை புனிதப்படுத்திவச்சிருக்காங்க இல்லையா! அத நாம மாத்தனும். கிராமம்னா சாதியிருக்கும். கிராம அமைப்பு சாதியை பாதுகாக்குது. ஒருத்தரையொருத்தர் பாக்கிறதலையோ! விருந்தோம்பலிலையோ! பாகுபாடு இருக்கிறது. போட்டிகள் நெறைய இருக்கிறது. உண்மையில் கொலைகள் அதிகமாக நடக்கிறது கிராமங்களிலதான். இப்படியிருக்கையில கிராமத்த புனிதமின்னு எப்படி சொல்லறது? அந்த வாழ்க்கை புனிதமுன்னு எப்படி சொல்லறது? இதைத்தான் நான் சொல்லவருவது. இன்னும் சொல்லப்போனால் நகரத்தைவிட பிரிவினைகள் அதிகமாக இருப்பது கிராமத்திலதான்.
நீங்க ஒரு கிராமத்திற்கு போனா என்ன பார்ப்பாங்க நீங்க என்ன சாதியின்னுதான் பார்ப்பாங்க. கிராமத்தில சாதியடிப்படையிலதான் குடியிருப்புகள் இருக்கின்றன. நீங்க எந்த குடியிருப்புக்கு போறிங்கன்னு பார்ப்பாங்க. இப்போ எங்கக் கிராமத்தையெடுத்துக்கிட்டங்கின்னா மூணு குடியிருப்பு பகுதிகள் இருக்கு. மூணு குடியிருப்பு பகுதின்னா! மூணு சாதிங்க இருக்கு. இப்படியிருக்குன்னா ஓரெழுத்தாளன் என்ன செய்யமுடியும்? இதில எந்த சம்பவமாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களுடைய பார்வையிலிருந்து பார்க்கணும். ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட சாதியினர் பக்கம்தான் நிற்கணும். ஆதிக்க சாதிகளின் அதிகாரம் எப்படி நுட்பமாக இருக்குங்கிறத வெளிக்கொண்டு வரணும். என்னுடைய படைப்புகள் அதைத்தான் செய்யுதுன்னு நெனைக்கிறேன். அதனாலதான் அதை நீங்க கேக்கறிங்க.
ஓதம்: நீங்க இந்த மாதிரியான சாதியொழிப்பு கருத்துகளை நிறுத்தி பிரச்சாரமா செய்யாம காட்சிப்பின்னலாகவும் சம்பவக்கோர்வையாகவும் கொண்டுபோறிங்க. இது உங்களிடம் அமைந்துள்ள சிறந்த வெளிப்பாடு.
பெ.மு: ஆமாம்!
ஓதம்: நீங்க தலித்தல்லாதோர் எழுதிய கொங்கு தலித் சிறுகதைகளத் தொகுத்து கொண்டுவந்திங்க. அந்த அனுபவம் பற்றி?
பெ.மு: ஆமாம்! அதில ஆதவன் தீச்சண்ணியாவை தவிர மற்ற எல்லோரும் தலித்தல்லாதோர். ஒரு காலத்தில தலித்தல்லாதவங்களும் தலித்துகளைப் பற்றி அவங்க பார்வையில கதையெழுதியிருக்காங்க. இதில எழுத்தாளர் என்ன சாதின்னு நான் பார்க்கல. கதை தலித்துகளைப் பற்றி இருக்கிறதா அப்படின்னு பார்த்து தொகுத்ததுதான். அந்தக் காலக்கட்டத்தில தலித்தல்லாதவர்கள் தலித்துகளப்பற்றி எழுதினாங்க. 90களில ஆதவன் தீச்சண்ணியா மட்டும்தான் தலித்தாக இருந்து தலித்து கதையெழுதினார். அதற்கு முன்னாடி பாத்திங்கன்னா ராஜாஜி, ஆர்.சண்முகசுந்தரம், பெ.தூரன் போன்றோரெல்லாம் தலித்துகளப் பற்றி எழுதியிருக்காங்க. அவங்களுடைய பார்வையில தலித்துகளப் பற்றி எப்படியெழுதியிருக்காங்க அதை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இப்பதிவ நான் செஞ்சேன்.

ஓதம்: இத்தொகுப்பு மக்களின் போதுமான கவனத்தை பெற்றதா?
பெ.மு: நல்ல வரவேற்பு இருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தில கூட தலித்திலக்கியம் ஒரு தாளா இருந்தது அதில பாடமா வச்சிருந்தாங்க. அத படிச்ச மாணவர்கள் எல்லாம் எங்கிட்ட நெறைய பேசினாங்க.
ஓதம்: உங்கள் படைப்புகளில் மெல்லிய சோகம் வந்துக்கொண்டேயிருக்கே! அதுபற்றி?
பெ.மு: நா கிராமத்த எழுதுறேன். கிராம வாழ்க்கையின்னா துயரங்கள் எப்போதும் இழையோடிக்கிட்டுதானிருக்கு. அப்புறம் இன்னும் பல காரணங்கள் இருக்கு. குறிப்பாசொன்னா! முன்னசொன்னமாதிரி கிராமங்களில சாதியிருக்கு. எல்லா சந்தர்ப்பங்களிலும் அது வந்துகிட்டேயிருக்கு. அந்த அடையாளத்த தாண்டி யாரும் வரமுடியாது. அது பெருந்துயரம் இல்லையா! இன்னொன்னு விவசாயம். விவசாயத்த எல்லோரும் வாழ்வியல்முறையின்னு சொல்லுறாங்க. அத ஒதுக்குறாங்க. நா என்ன சொல்லறன்னா!
அது ஒரு தொழில். பெரும்பகுதியினருக்கு வேலைக் கொடுக்கக்கூடிய ஒரு தொழில். அத இலாபகரமானதாக மாத்தனும். இயற்கைவிவசாயம்னு பேசறவங்க எல்லாம் என்ன சொல்லுறாங்க விவசாயம் ஒரு வாழ்க்கைமுறையின்னு சொல்லுறாங்க. தொழில் இல்லைங்கிறாங்க. என்னுடைய பார்வையில விவசாயம் ஒரு தொழில். அத வாழ்க்கைமுறையின்னு சொல்லியென்ன பண்றிங்க! விவசாயிகள் கஷ்டப்படுறாங்க நஷ்டப்படுறாங்கன்னு ஜஸ்ட்டிபை பண்றிங்க, நியாயப்படுத்துறிங்க. விவசாயம் உண்மையில் மிக கடினமான தொழில். எப்போதும் உழைக்கனும். அதற்கு இரவுபகல் பாக்கம உழைக்கனும். ஆடு, மாடு வச்சிருக்கிறவங்க இரவெல்லாம் அத கண்ணுமுழுச்சுப் பார்க்கனும். அதற்கு தீனி போடனும். பாம்பு கீம்பு வரும் நரிக்கிட்டயிருந்தும் பிற காட்டுவிலங்குக்கிட்ட இருந்தும் அதுகள காப்பாத்தனும். அப்புறம் பன்றி உள்ளிட்ட விலங்குகள் கிட்ட இருந்தும் பயிருகள காப்பாத்தனும். எல்லாம் இரவுல பாக்கனும். இப்படி நேரங்காலம் பாக்காம உழைக்குறாங்க. நாம சொல்லறமாதிரி எட்டுமணிநேரம் உழைப்பு. எட்டுமணிநேரம் உறக்கம், எட்டுமணிநேரம் ஓய்வு இப்படின்னு சொல்லமுடியாது. விவசாய வாழ்க்கையில இப்படியெல்லாம் பிரிச்சுப்பார்க்க முடியுமா? எங்க அம்மா ஆடு, மாடுகள வச்சி பால்கரந்துதான் என்னையெல்லாம் படிக்கவச்சாங்க. அதுகள விட்டுவிட்டு நல்லது கெட்டதான நிகழ்ச்சிக்கிக் கூட போகமுடியாது. வெளியூருக்கெல்லாம் போகமுடியாது. நெருங்கிய சொந்தமுன்னாகூட போகமுடியாது. அப்படியே போன கூட பால் கரக்கிற நேரத்திற்கு வந்திடனும். இரண்டுமணிக்கு பால்கறக்கனுமின்னா வந்துடுவாங்க. அதற்குரிய பணிகள முடிச்சிட்டுதான் போவாங்க. திரும்பவும் அந்த நேரம் வருகிறபோது வந்திடுவாங்க. எங்கையும் போகமுடியாது. அப்படிப்பட்ட ஒருவேலை முறையிருக்கு. அதில ஒரு துயரம் இழையோடிக்கிட்டுதான் இருக்கு. இன்னைக்கும் அப்படிதான் இருக்கு.
ஓதம்: நீங்க கவலையெல்லாம் எறச்சிருக்கிங்களா?
பெ.மு: ஊம். எங்க ஊர்பக்கம் அத ஏத்தமுன்னு சொல்லுவாங்க இரண்டு மாடுகட்டி எறைப்பாங்க. நான் செஞ்சிருக்கேன். எங்க அம்மா எல்லாவேலையும் செய்வாங்க. எத்தம் எறைப்பாங்க, ஏறு ஓட்டுவாங்க, வண்டி ஓட்டுவாங்க இப்படி எல்லாவேலையும் செய்வாங்க. நானும் செஞ்சிருக்கேன்.
ஓதம்: மாதொருபாகன், அர்த்தநாரி, ஆலவாயன் இந்த மூன்று நாவல்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைப் பற்றிய ஒரே கதை. அதுவும் ஒரு குறிப்பிட்டப் பண்பாட்டை பேசுகின்றன. அதில் மாதொருபாகன் பேசப்பட்ட அளவிற்கு பிற இரண்டு நாவல்களும் பேசப்பட்டதா?
பெ.மு: மாதொருபாகன் ஒரு சர்ச்சை காரணமா பேசப்பட்டது. எல்லாத்தையும்தான் வாசிக்கிறாங்க. அதிலும் குறிப்பா ஆலவாயன் நெறைய வாசகருக்கு பிடிச்சிருக்கு. தொடர்ச்சியாக வாசிக்கிறாங்க. இத ஒரு தனிநாவலா பாக்கறத்தில்ல. மூனையும் தொடர்ச்சியாகத்தான் வாசகர்கள் வாசிக்கிறாங்க.
ஓதம்: சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி, கீ.ரா.ஆவின் கிடை, உங்களுடைய பூனாச்சி அல்லது வெள்ளாட்டுக் குட்டியின் கதை, கூளமாதாரி இவையெல்லாம் ஆடுமேய்ப்போரை குறித்து விவரிக்கின்றன. மற்ற நாவல்களில இல்லாத சிறப்பு என்னான்னா உங்களுடைய கூளமாதாரியில அடிமை குறிப்பாக பண்ணை அடிமைமுறை குறித்த வாழ்வியலை எழுதியிருக்கிங்க. இது திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதா?
பெ.மு: அதுவந்து என்னுடைய பாலியகால நினைவு. நாங்க எங்க கிராமத்தில இருந்த குடியிருப்பில நாங்க இல்லை. எங்க நிலத்தில வீடுகட்டி குடியிருந்தோம். நாங்க ஆடு, மாடு நெறைய வச்சியிருந்தோம். எங்க நெலத்தில எங்க சொந்தக்காருங்க நெலத்தில எல்லாம் வேலைசெஞ்சது ஆளுக்காரங்கதான். அருந்ததிய சாதிய சார்ந்த பொண்ணுங்க பயங்கள ‘பண்ணைக்கட்டறதுன்னு சொல்லுவாங்க’ பண்ணைக்கு வந்து ஆடுமேய்ப்பாங்க. இது சார்ந்த பிறவேலைகளையும் செய்வாங்க. காலையில ஆச்சினா எழுந்து ஆடுமாடுகளைப் பார்த்திட்டு பள்ளிக்கூடம் போகனும் திரும்பவும் சாயங்காலம் வந்து அதேபோல ஆடுமாடுகளுக்குத் தேவையானத செய்யனும்.
சனி, ஞாயிறில முழுதும் அந்த பசங்களோடதான் நான் இருப்பேன். அவங்க ஏதேனும் ஒருநாள் வேலைக்கு வரலின்னா அன்னைக்கு நான் பள்ளிக்கூடத்திற்கு போகாம அவங்களுடைய வேலைய நான் பார்க்கனும். அதனால என்னுடைய வாழ்க்கையில அவங்க ஓரங்கமாக இருக்காங்க அவங்களையும் அதாவது அந்த சிறுவர்களையும் ஆடு மாடுகளையும் தவிர்த்துவிட்டு அந்த கதைய எழுதமுடியாது.
அப்புறம் அத எழுதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஏறுவெய்யில நீங்க படிச்சிருப்பிங்க. 13 வயசுவரை இருந்த எங்கநிலத்த அரசு ஊழியர் குடியிருப்புக்காக அரசாங்கம் எடுத்துக்கிடச்சி. அந்த நிலத்திலிருந்து வேறொரு நிலத்திற்கு விரட்டப்பட்டோம். புலம் பெயர்ந்து போனோம். என் மனசுக்குள்ள ஓரேக்கம் இருந்துக்கிட்டேயிருந்தது. 1991- 2000த்தில அந்த நெலத்தில புதுப்புது வீடுகளா வந்துக்கிட்டேயிருந்தது. அத பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆதங்கமா இருக்கும். அதிலிருந்து விடுபடறதற்கு எழுதவேண்டியிருந்தது. அதுதான் கூளமாதாரி. அத எழுதின பிறகுதான் எனக்கு விடுதலை ஏற்பட்டது.
அந்த நெலத்த எடுத்துக்கிட்ட பிறகு ஏற்பட்டத எழுதினது ஏறுவெய்யில். அதற்கு முன்னாடி இருந்த வாழ்க்கை இருக்குல்ல, அதுதான் கூளமாதாரி. அத எழுதின பிறகுதான் அந்த உணர்விலிருந்து விடுபட்டேன்.
ஓதம்: நீங்க சமீபமா வருகிற நாவல்களில இது அசூரர்களின் கதை இந்த உலகத்திற்குரிய கதையில்லை. அப்படின்னு எழுதிறிங்க அதபற்றி?
பெ.மு: அது மாதொருபாகன் பிரச்சனை வந்தததற்கு பிறகு மீண்டும் 2016லிருந்து எழுத தொடங்கும்போது கழிமுகம், நெடுநேரம், பூனாச்சி இந்த நாவல்களில் இக்குறிப்பைச் சேர்த்தேன். இந்த உலகத்தப்பத்தி எழுதறேன்னா இந்த கிராமங்களிள என்னயிருக்கு. சாதிதான் இருக்கு அதைப்பற்றிதான் எழுதவேண்டியிருக்கு. அப்புறம் இடம் எப்படி இந்த ஊரப்பத்தி எழுதலாம் அப்படிங்கற பிரச்சன மாதொருபாகனுக்கு இதுதான் பிரச்சன. நீங்க கற்பனையான ஊர் பேர போட்டிருந்த வந்திருக்காது. அப்புறம் சாதிய இழிவுப்படுதிறிங்க எங்க ஊர் பெண்களை இழிவுப்படுத்திறிங்க அப்படிங்கிறது. அப்போ இதுகளில இருந்து மீண்டுவருவதற்கு ஒரு வழி தேவைப்பட்டது. நாமலே இத தீர்த்துக்க வேண்டியிருக்கு. அப்புறம் படைப்பு நமக்கு நெறைய சுதந்திரத்தக் கொடுக்கிறதில்லையா! அப்புறம் பெரியார படிச்சதனால பெரியாரு என்னா சொல்லுறாரு புராணங்கள் எல்லாமே ஆரியத் திராவிட போராட்டம் என்கிறார். அதனால்தான் இந்தக் குறிப்பு எனக்கு உதவியா இருக்கு.
ஓதம்: நீங்க மரபார்ந்த தமிழ் படிச்சிருக்கிங்க ஆனா நவீனத்தன்மையோடு எழுதிறிங்க இயங்குறிங்க அதுபற்றி?
பெ.மு: அடிப்படையில நான் ஒரு எழுத்தாளன்தான். தமிழ்நாட்டில ஒரு எழுத்தாளனா இருந்து வாழமுடியாது. அதனால நான் படிச்சிக்கிட்டது தமிழ் இலக்கியம். விருப்பத்தோடுதான் படிச்சேன். அது எனக்கு நெறைய நன்மைகளையும் கொடுத்திருக்கு. பணிவாய்ப்பு பொருளாதாரம் அதுமட்டுமில்ல தொடர்ந்து இலக்கியத்தோடே வாழ்றது அந்த வாய்ப்பையும் கொடுத்திருக்கு. நம்ம தமிழ் மரபிலக்கியம் நமக்கு கிடைத்த செல்வம். நான் ஒரு எழுத்தாளனாக இருப்பதனால் நவீனப் பார்வை எனக்கு இயல்பாகவே வந்தது. அதோடு நான் படிசிக்கிட்ட மார்க்கிசியம், பெரியாரியம், அம்பேத்கரியம் இந்த வாழ்க்கைய எப்படி முன்னோக்கிப் பார்க்கனும் அப்படிங்கிற பார்வைய எனக்கு கொடுத்தது. நவீனங்கிறதென்ன? வாழ்க்கைய முன்னோக்கிப் பார்க்கிறதுதான். இந்த சமுதாயம் அடுத்தக்கட்டத்திற்கு எப்படி போகிறது. இதில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் நன்மைத்தரக்கூடியன என்னென்ன அதுதான் நவீனம். அந்தப் பார்வை எனக்கு எழுத்தாளனாக இருப்பதனால் கெடைச்சது.
ஓதம்: பெரும்பாலான இக்காலப் படைப்பாளர்கள் தமிழில் எழுதி பிரபலமானவர்கள் என்ன சொல்லுறாங்கன்னா படைப்பாளிக்கு கோட்பாடுகள் தேவையில்லைங்கிறாங்க அதுபற்றி?
பெ.மு: படைப்பாளிக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கனும். அவைகளில் ஒன்னு கோட்பாடுகளும். கோட்பாடுகள நேரடியாக பயன்படுத்திலன்னாகூட அதை படைப்பாளி தெரிந்து வச்சிருக்கனும். எந்த கோட்பாட்டிற்கும் நாம முழுமையாக நூறு சதவிகிதம் இருக்கமுடியாது. கோட்படுகளுக்குள் போதாமைகள் இருக்கும். குறைபாடுகள் இருக்கும். இத்துநெரப்பவேண்டியது இருக்கும். காலத்திற்கு ஒவ்வாத கருத்துகள் இருக்கும். அந்த உணர்வு படைப்பாளிக்கு இருக்கனும். அதேசமயத்தில் கோட்பாடு குறித்த புரிதல் படைப்பாளிகளுக்கு அவசியம் இருக்கனும். வாழ்க்கையிலிருக்கிற பல்வேறு துறைசார்ந்த அறிவாவது கட்டாயம் படைப்பாளிக்கு இருக்கனும் என்று நான் நினைக்கிறேன்.
ஓதம்: கீர்த்தனைகள எழுதினிங்க இல்ல! அதற்கு போதுமான வரவேற்பு இருக்கிறதா? அது உங்களுக்கு மகிழ்ச்சிய கொடுக்கிறதா?
பெ.மு: கட்டாயம் மகிழ்ச்சியக் கொடுக்குது. கடந்த டிசம்பர் 25 கிறிஸ்மஸ் அன்னைக்கு மீயூஸிக் அகாதமியில டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுத்தாங்க. அப்போ அவர் கச்சேரி பண்ணினார். என்னுடையக் கீர்த்தணைகளையும் பாடினார். ‘சுதந்திரம் வேண்டும்’ என்கிற பாடலை பாடின பிறகு அங்கிருந்த இசை ரசிகர்கள் சீட்டெழுதி மீண்டும் மீண்டும் பெருமாள் முருகன் பாடலை பாடுங்கன்னு கேட்டாங்க. அதபார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி எற்படுகிறது. என்னோடக் கீர்த்தணைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அது இப்போ ஆங்கிலத்தில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டு ஊடகங்களில் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கு. கருநாடக சங்கீதங்கள கேட்டுக்கொண்டிருக்கிற இரசிகர்கள் மத்தியில கீர்த்தணைகள் போய் சேர்ந்திருக்கு.
ஓதம்: சக எழுத்தாளர்களுடனான உங்கள் உறவு? எப்படி உங்களை அவர்கள் பார்க்கிறாங்க உங்களுடைய வளர்ச்சியை சிறப்புகளை குறித்து எப்படி பார்க்கிறாங்க?
பெ.மு: அத நீங்க சக எழுத்தாளர்கள்கிட்டதான் கேட்கனும். பொதுவா சமகால எழுத்தாளர்களோட பலருடன் எனக்கு நல்லுறவுதான் இருக்கு. சில எழுத்தாளர்களோட சில முரண்களும் இருக்குது. என்மேல கோபிச்சிட்டு பேசாம இருக்கிற எழுத்தாளர்களும் இருக்கிறாங்க. அதெல்லாம் சகஜம்தான். நான் யாரையும் பகைச்சிக்ககூடாதுங்கிற எண்ணமுடையவன்தான் நான். கருத்தியல்ரீதியான முரண்கள் இருக்கலாம். அதற்காக நட்பை துண்டிச்சிக்கக் கூடாது. அப்படிதான் நானிருக்கேன். அதனால நா பெரும்பாலானோரோட நல்லுறவுலதான் இருக்கேன்.
ஓதம்: மாணவர்களோட நீங்க நெருங்கிய தொடர்பில இருக்கிங்க. மாணவர்களோட சின்ன சின்னத் தருணத்தில்கூட போய் எட்டிப்பார்த்திடறிங்க. போகமுடியிலன்னாகூட போனில பேசிடுறிங்க. இதையெல்லாம் உங்க மாணவர்கள் பாராட்டி சொல்லுறாங்க. இவ்வளவு பணிகளுக்கிடையிலும் எப்படி உங்களால் முடிகிறது?
பெ.மு: மாணவர்கள் படிச்சுமுடிச்சிட்டுபோன பிறகும் என்னோடத் தொடர்பிலேயே இருக்காங்க. எனக்கு நெருக்கமானவர்களாகவும் உறவினர்கள் போலவும் மாறிடுறாங்க. அதனால அவங்களுடைய குடும்ப விழாக்களுக்கு போவேன். வாய்ப்பிருந்தா கட்டாயம் போவேன். அப்படியில்லன்னா போன் பண்ணி பேசுவேன். அதற்கு காரணம் அவங்க என்னோடத் தொடர்ந்து தொடர்பில இருக்கிறதுதான். அதனால என்னாச்சின்னா எங்க மாணவர்களுடைய பயங்க பொண்ணுங்க எல்லாம் எங்கிட்ட பேசுறாங்க. பலர் நாற்பது வயத கடந்தவங்க இருக்காங்க அவங்களப் பற்றியெல்லாம் எங்கிட்ட ரிப்போட் பண்ணுராங்க. அய்யா சொன்னா எங்கப்பா கேட்பாரு அப்படின்னு எங்கிட்ட பேசுறாங்க. என்று சிரிக்கிறார்.
ஓதம்: நீங்க உங்க மாணவர்களோட சேர்ந்து கூடு அமைப்பு மூலமா ‘சாதியும் நானும்’ நூலைக்கொண்டு வந்திங்க அந்த அனுபவத்தைச் சொல்லுங்க.
பெ.மு: எனக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே ஓரெண்ணம் தோன்றுச்சி. நாம சாதியொழிப்ப பற்றி கோட்பாட்டு ரீதியாக பேசிக்கிட்டேயிருக்கிறோம். சமூகத்திலவந்து சாதியெப்படி நுட்பமா செயல்படுதுங்கிறத பற்றி பெரியதா பதிவு எதுவுமில்ல. அந்த பதிவுகள எழுதறதற்கு பலர் அச்சமும்படுறாங்க. ஏன்னா சொந்தவாழ்க்கையில இருக்கிறதையெல்லாம் சொன்னா பாதிப்புவரும் ஒவ்வொருநாளும் சாதியபற்றி சிந்திக்காத நாளேயில்ல. ஆனா அதப்பற்றியப் பதிவுகள் நம்மக்கிட்ட இல்ல. சில சில பதிவுகள் மட்டும்தான் நம்மக்கிட்ட இருக்கு. பெரியார் அவருடைய பேச்சில எழுத்தில இருக்கு. ஆனா அது போதாது. அவருடைய அப்பா ஒரு வழக்குகாக பிராமண வழக்குரைஞரத் தேடி அவர் வீட்டிற்கே போனபோது அவருடைய சட்டைய கழற்றி கச்சத்தில வச்சிக்கிட்டு அவர்வீட்டு வாசலிலேயே நிற்கவச்சி பேசி அனுப்பிட்டார். உண்மையிலேயே பாத்திங்கனா பெரியாருடைய அப்பா பெரிய பணக்காரரு.
முதல நா என்ன நெனைச்சேன்னா சாதியப்பற்றி எழுத்தாளர்கள கொண்டு எழுதவக்கலாம். சாதி சமூகத்தில எப்படி உறவுக்கொண்டிருக்கு நுட்பமா எப்படி செயல்படுதுங்கிறத எழுத்தாளர்கள எழுதவக்கலாம். நா அப்போ காலச்சுவடு ஆசிரியக்குழுவில இருந்தேன். ஒரு கூட்டத்தில இதை சொன்னபோது நல்ல ஐடியான்னு எல்லோரும் வரவேத்தாங்க. ஆனா தனிப்பட்ட முறையில கேட்டபொது பலர் தயங்கினாங்க. பொதுவெளியில சாதியப்பற்றி பேசறது எழுதறது ஏதோ ஒரு தயக்கமிருக்கிறத நா பார்த்தேன். ஆனாலும் சாதிபற்றிய தனிமனித அனுபவங்கள் பதிவாச்சினா நல்லாயிருக்குமே என்று தோன்றிக்கிடேயிருந்துச்சி. அப்போ கூடு அமைப்பு இயங்கிக்கிட்டிருந்துச்சி. அப்போ கூடு ஐம்பதாவது நிகழ்வு வந்துச்சி இதற்கு சிறப்பா என்ன செய்யலாம் என்று மாணவர்கள் கேட்டாங்க. அப்போ பத்துபேர் கூடி பேசும்போது நா இத சொன்னேன். சாதியம் குறித்து நல்ல பதிவு இதுவர வரல. எழுத்தாளர்கள்கிட்டேல்லாம் சொன்னேன் ஆனாஅவங்க யாரும் எழுதல. அத நீங்க செய்யலாமே. நீங்க பலர் ஆசிரியர்களா இருக்கிங்க மாணவர்களா இருக்கிங்க நீங்க எழுதலாமேயென்றேன்.
அத நாம புத்தகமா கொண்டுவந்து கூடு ஐம்பதாவது நிகழ்ச்சிய சிறப்பாக கொண்டாடலாம் அப்படின்னு கருத்த முன்வச்சேன். எத்தனபேர் எழுது வாங்குவாங்கிற தயக்கமும் எனக்கிருந்தது. ஆனாலும் நல்லுசாமிங்கிற மாணவர் எழுதி தந்தார். அதில இருந்த சில குறைகளை நீக்கிவிட்டு அதையே எல்லோருக்கும் மாடலா தந்து விட்ட பிறகு எல்லோரும் எழுதினாங்க. மூணு மாசத்துக்குள்ள இக்கட்டுரைகள நாங்க தொகுத்துட்டோம். சில பேர்கள் எல்லாம் நேரடிய வேணமின்னு வந்தா பிரச்சனை வருமின்னு உறவு சிக்கல் வருமின்னு தவிர்த்திட்டு எழுதினாங்க. வெவ்வேறு சாதிய சார்ந்தவங்க எழுதினாங்க அது நல்ல வந்துச்சி. இந்த தொகுப்புக்கு நல்ல வரவேற்பும் இருந்துவருது. இன்றுவரை பல பதிப்புகள அது கண்டிருக்கு. இதற்கு முன்னுதாரணமே இல்ல. அதுமட்டுமில்ல அதுபோல இன்னொரு நூலும் இதுவரை தமிழ்ச்சூழலில வரல. திருப்பூர் கணேசன் அவர் அனுபவத்தை சிறுவெளியீடாகக் கொண்டுவந்திருக்கிறார்.
ஓதம்: அதுவும் மாணவர்களையேக் கொண்டு எழுதப்பட்டது. அதன்மூலம் சாதியொழிப்பைப் பற்றி அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வும் கொடுத்த மாதிரியாச்சு.
பெ.மு: அதில கவனிக்கத்தக்க ஒன்னு உண்டுன்னா அவங்களிள யாரும் சாதிய ஆதரிச்சி எழுதல. எல்லோருக்கும் சாதியொழிப்பு குறித்து ஒத்தக் கருத்து இருந்தது. இது எனக்கு ஆச்சிரியத்தக் கொடுத்தது. இத நா முன்னுரையிலேயே சொல்லியிருப்பேன்.
ஓதம்: ‘பீக்கதை’, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இந்த நூல்களுக்கு இருந்த வரவேற்பு மற்றும் நீங்க நெனைச்ச பயன்பாடு?
பெ.மு: பயன்பாடுன்னு நா ஒன்னும் நெனைக்கில. சிலவற்றை வெளிப்படையா பேசக்கூடாதுன்னு ஏதோ ஒரு காரணத்திற்காக வச்சிருக்காங்க. நா முதலில பீக்கதை தொகுப்பில இருக்கிற வேக்காடு கதைய எழுதினேன். அது திருச்செங்கோடு தொகுப்பில வந்திருந்தது. ஒரு முதிய பாட்டி முடியாத சூழ்நிலையில மலம் கழிக்கிறது அவங்களுக்கு எப்படி பிரச்சனையா இருக்குங்கிறத கதையா எழுதினேன். அந்த கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அது மனவோசை பத்திரிக்கையில வந்தபோதும் சரி அதற்கு அப்புறமும் கூட நல்ல கவனம் பெற்றது. அதற்கப்புறம் நான் இரண்டு மூன்று கதைகள எழுதினேன். இது கவனிக்கப்பட வேண்டியதுன்னு தோனிச்சு. ஒரு விருந்தினர் வராங்க அவங்களை நாம டீக்குடிங்கன்னு சொல்லுறோம். நாலஞ்சி மணிநேரம் பயணப்பட்டு வந்திருப்பாங்க நாம அவங்கள கழிப்பறைய பயன்படுத்துங்கன்னு ஏன் சொல்லறதில்ல! அவங்களுக்கும் அந்த தேவையிருக்கும் இல்லைங்களா? அவங்களும் அத கேட்கிறதற்கு தயங்கிறாங்க. உணவு நமக்கு எப்படி அத்தியாவசியத் தேவையோ கழிவை வெளியேற்றுவதும் நமக்கு அத்தியாவசியத்தேவை. ஆனா ஏன் தயங்கறாங்க? அப்படிங்கிற எண்ணம் அந்த கதைக்கு நல்ல வரவேற்பு வந்தபோது தோனிச்சு.
எனக்கு என்ன எண்ணம் வந்ததுன்னா மலம் பீ தொடர்பாக இதுவரை யாரெல்லாம் கதையெழுதிருக்காங்க அவற்றைத் தொகுத்து கொங்குசிறுகதை, கொங்குதலித் சிறுகதை போல வெளியிடுலாமே! அப்படின்னு பார்த்தபோது ஆறுகதைகள் கெடச்சது. ஆனா ஒரு தொகுப்பு அளவிற்கு வரல. அப்புறம் அந்த எழுத்தாளர்கள்கிட்டையெல்லாம் ஒப்புதல் வாங்கவேண்டியிருந்தது. ஒரு தொகுப்பு அளவிற்கு கதைகள் கிடைக்காததனாலும் நானே நாலு கதைகள அந்த சமயத்தில எழுதியிருந்தேன். அப்போ நண்பர் யு.மா. வாசுகி என்னா சொன்னாருன்னா நீங்களே இன்னும் சில கதைகள எழுதுங்க நாமலே பீக்கதையின்னு கொண்டு வந்திடலாம் அப்படின்னாரு. அப்படியெழுதி பார்த்ததுதான் அந்த கதை. நல்ல வரவேற்பிருந்தது. அந்த நூல அலமாரியில எல்லோருக்கும் தெரியும்படியா எல்லாம் வக்கமுடியுமா! அப்படின்னு நெனைச்சவங்க எல்லாம் உண்டு. ஆனாலும் அந்த கதைக்கு நல்ல வரவேற்பிருக்கிறது. அதுவந்து 25 ஆகிறது. இன்னைக்கு நாம கழிப்பறையப் பற்றியெல்லாம் வெளிப்படையாக பேசுவதற்கு அந்த தொகுப்பும் முக்கியமான காரணமாயிருக்கு.
நாம ஒருத்தர் வீட்டிற்கு போனோமுன்னா ரெஸ்ட்ரூம் எங்கிருக்குன்னு கேக்கறாங்க. அவங்களே ரெஸ்ட்ரூமிங்கிருக்குன்னு காட்டுறாங்க அந்த அளவிற்கு அது ஒரு மாற்றத்தைஏற்படுத்தியிருக்கு.
நா பீக்கதையெழுதினதாலதான் இந்த மாற்றம் முழுமையா வந்திருக்குன்னு சொல்ல வரல சமூகமே அதநோக்கி போயிருக்கு. அதில் சிறுபங்கு பீக்கதைக்கும் இருக்கு.
கெட்ட வார்த்தையும் அப்படித்தான். நான் கொங்குவட்டார சொல்லகராதிய தொகுத்தபோது அதில நெறைய கெட்டவார்த்தைகள் இருந்தன. வசவைக்குறிக்க கூடிய வார்த்தைகள் இருந்தன. கெட்ட வார்த்தையின்னு மக்கள் வழக்கை கருதி வச்சிருந்தாலும் அவை வசவை குறிக்கக்கூடியன.
அத அகராதியில போடலாமா வேண்டாமான்னு பார்த்தேன். அப்புறம் வேண்டாமின்னு தவிர்த்தேன். ஆங்கிலம் தெரிந்த நண்பர்களிடம் கேட்டபோது கெட்ட வார்த்தைக்கே ஆங்கிலத்தில தனியகராதியிருக்குது அப்படின்னு சொன்னாங்க. இது ஒரு அகராதி வசைச் சொல்லுக்கான அகராதி.
ஓதம்: ஒரு மொழியக்கத்துக்க நெனைக்கிறவங்க முதலில் கெட்ட வார்த்தையைத்தான் கத்துக்கிறாங்க!
பெ.மு: ஆமாம். அது ஒரு மொழியில நெறைய இருக்க கூடியது எல்லோரும் சகஜமா பயன்படுத்தக்கூடியது இல்லையா? இதைபற்றி நெறைய ஆய்வுகள் வந்திருக்கிறதுன்னு சொன்னாங்க. தமிழில் தேடிப்பார்த்தபோது க.ப. அறவாணன் மட்டும் ஒரேயொரு கட்டுரை ‘கழிப்பறை வாசகம்’ எழுதியிருந்தார். கழிப்பறைக்குள்ள போனங்கின்னா கரியில சிலவற்றை எழுதி வச்சிருப்பாங்க. ஆண்-பெண் உறுப்புகளைப் பற்றி அப்புறம் சில வாக்கியங்கள பேனாவில எழுதி வச்சிருப்பாங்க. அந்த மாதிரியான வாசகங்களை எடுத்துக்கிட்டு எந்த மாதிரியான மனநிலையிலிருந்து இது வருது ஏன் போயி அத ஒரு கழிப்பறையில எழுதுறாங்க அப்படின்னு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அத பார்த்தபோது ஆங்கிலத்தில நெறைய இதுமாதிரி வந்திருக்கிறது. ஏன் நாம தமிழில் இதபற்றியெழுதக்கூடாதுன்னு கெட்டவார்த்தைப் பேசுவோம்னு எழுதினேன். அதுவும் ஒரு புனைபெயரிலதான் மணல்வீடு பத்திரிக்கையில எழுதினேன். சமூகத்தில இத எப்படி எடுத்துக்குவாங்கன்னுப் புனைபெயரிலதான் எழுதினேன்.
ஓதம்: உங்களுக்கு நீங்களே மறுப்பெல்லாம் எழுதிக்கிட்டங்கிலே!
பெ.மு: ஆமாம் என்று பலமாக சிரிக்கிறார். அது நானில்லன்னு காட்டிக்கிறதற்காக. ஆனா அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 2016இல் நான் என்னுடைய புத்தகங்கள மீண்டுக்கொண்டு வந்தபோது அத நா கொண்டு வரல. மீண்டும் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோன்னு பயந்து கொண்டு வரல. அப்போ புத்தகக் கண்காட்சிக்கு வந்தவங்க கேட்டாங்க நான் பதிப்பாளரிடம் கேட்டேன். ஆமாம் அச்சில இல்லாட்டி கேட்கதான் செய்வாங்க அப்படின்னார். அதன் பிறகு கொண்டு வந்தோம். இன்னும் அதில் எழுதுவதற்கு நெறைய இருக்கு. அத எழுதனும்.
முதலில் இன்னூல் பெயர பார்த்து ஒதுங்கி போனவங்க எல்லாம் பிறகு படிச்சிப் பார்த்திட்டு நல்ல நூலுன்னு பாராட்டினாங்க.
ஓதம்: ஆண் குறியை குறிப்பதற்கு மாணின்னு பெயர் வச்சிருக்கிங்க அத எங்கிருந்து கண்டுபிடிச்சிங்க?
பெ.மு: அது எங்க ஊர் பேச்சுவழக்கு. மாணிய ஆட்டிக்கிட்டு போறான் அப்படிம்பாக. அப்புறம் பார்த்தா காளமேகத்திலையும் அந்த சொல்லு வருது ‘பருமாணிதைக்கும்’ அப்படின்னு காளமேகம் எழுதியிருக்கிறாரு. அதற்கு பொருள் சொல்லறவங்க எல்லாம் என்னா சொல்லுறாங்கின்னா ‘பரும் ஆணி தைக்கும்’ அப்படிங்கிறாங்க. சிலேடையில பரும் ஆணின்னும் வரும் பரு மாணின்னும் வரும். அப்படி பொருள் வரும்படியாகத்தான் காளமேகம் பாடியிருக்கிறார். அதனால மாணிங்கிறது பழையசொல் அப்படிங்கிறது என் எண்ணம். மக்கள் வழக்கில் இன்னும் மாணிங்கிற சொல் இருக்கு.
ஓதம்: நீங்க பதிப்புத்துறையிலும் இயங்கியிருக்கிங்க பதிப்பு மறுபதிப்பு நூலையெல்லாம் கொண்டு வந்திருக்கிங்க. இப்போது பதிப்பாளர்கள் முன்பு போல பதிப்புரைகளை எழுதுவதில்லை அப்படின்னு தோணுது. முன்பெல்லாம் பதிப்புரையே பெரிய ஆராய்ச்சி உரை போல இருக்கும். இப்போதும் அப்படிதான் இருக்கிறதா?
பெ.மு: முன்பெல்லாம் பழந்தமிழ் செய்யுள்கள் ஒலைச்சுவடியில இருந்தது. வெவ்வேறு உரைகள் இருந்தன. அதனால விரிவான ஆராய்ச்சி உரைகள எழுதினாங்க. இப்போ அதற்கான தேவையில்லாம போயிடுச்சி. பழந்தமிழ் செய்யுள்கள கொண்டுவருகிறபோது அந்த ஆய்வுரைகள தாண்டி எழுதுவதற்கு இப்போ பெருசா எழுத எதுவுமில்ல. அதையே மறுபதிப்பா கொண்டுவராங்க அந்த அடிப்படையிலதான் நீங்க கேக்கிறத பார்க்கலாம். நவீன இலக்கியங்கள பதிப்பிக்கிறாங்க பாருங்க அதில நல்ல முன்னுரைகள் வருது. விரிவான ஆராய்ச்சி உரையாக இருக்கிறது. ஆ.இரா. வேங்கடாசலபதி புதுமைப்பித்தனின் சிறுகதைகளை, மொழிபெயர்ப்பு கதைகளை, கட்டுரைகளை பதிப்பிச்சிருக்காரு. விரிவான ஆராய்ச்சி முன்னுரையெழுதி பதிப்பிச்சிருக்கிறார். அதுபோல உ.வே.சா.வுடைய கடிதக்கருவூலத்தப் பதிப்பிச்சிருக்கிறார். பழ. அதியமான் கு. அழகிரிசாமியோட சிறுகதைகளையும் கட்டுரைகளையும் பதிப்பிச்சிருக்கிறாரு அதிலும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையிருக்கு. அப்புறம் நா கு.ப.ரா.வுடைய சிறுகதைகளைப் பதிப்பிச்சிருக்கேன் அதிலும் விரிவான ஆராய்ச்சியுரைய எழுதியிருக்கிறேன். அதுமட்டுமில்லாம பதிப்புரை ஆய்வுரையின்னு தனித்தனியா பிரிச்சியெழுதியிருக்கோம். அதுபோல பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு ஒரு செம்பதிப்பு இன்னும் வரல. அதற்கு செம்பதிப்பு வருகிறபோது அதிலும் நல்ல ஆராய்ச்சியுரை எழுதனும். தேவைக்கேற்ப எழுதுகிற பழக்கம் இப்போ இருக்கு.
ஓதம்: உங்களுடைய பதிப்பு மறுபதிப்பு நூலுக்கான வரவேற்பு எப்படியிருந்தது?
பெ.மு: அது ஒரு துறைசார்ந்த நூல். அந்த துறையில ஆர்வம் இருக்கிறவங்க வாங்கி படிக்கிறாங்க. அந்த நூல் விற்பனையில இருக்கிறது. ஆனாலும் என்னுடைய நூல்களில குறைந்த பிரதிகள் வித்ததுன்னா அது பதிப்புகளும் மறுபதிப்புகளும்தான். அதற்கான காரணம் அது தமிழ் இலக்கியம் பயின்றவங்க பதிப்புத்துறையில ஆர்வம் இருக்கிறவங்க வாங்கி வாசிக்கிறாங்க. ஆனாலும் பொதுவாசகர்களும் வாங்கி வாசிக்கவேண்டுங்கிறதுதான் என்னுடைய எண்ணம். எந்த நூல வாங்கலாம் அப்படின்னு சிந்திச்சு வாங்கிறதற்கு அது வழிக்காட்டியாக இருக்கும். இப்போ திருக்குறளை வாங்கிராங்கன்னா எந்த பதிப்பை வாங்கலாங்கிறதை இன்னூல் மூலம் தெரிந்து கொண்டு வாங்கலாம். பதிப்புத்துறைக்கு வருகிறவர்கள் அது சார்ந்து ஆய்விலீடுபடக்கூடியவங்க எல்லாம் என்னுடைய நூலை நெறைய மேற்கோள் காட்டுறாங்க.
‘உங்க நூலான பதிப்புகளும் மறுபதிப்புகளும் நூல்’ நல்லாயிருக்குங்க சார். நவீன மொழியில எளிமையா எழுதியிருக்கிங்க. அது ஒரு கல்வியாளர்களுக்குரியதாக மட்டுமில்லாம பொதுவாசகர்களுக்கும் பயன்படும் வண்ணம் எழுதியிருக்கேன். இதற்கு முன்னாடி எழுதினவங்க எல்லாம் கல்வியாளர்களுக்கு புரியும்படியாக மட்டும் எழுதினாங்க. நீங்க நவீனமொழியில எழுதியிருக்கிங்க அப்புறம் அதில இருக்கிற அரசியலையெல்லாம் எழுதியிருக்கிங்க. இதையெல்லாம் பார்க்கிறபோது எங்களுக்கு வித்தியாசமா இருக்கு அப்படிங்கிறாங்க. அதனால நா எதிர்பார்த்ததற்கு மேல நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஓதம்: கழிமுகத்தில நவீன வாழ்க்கைமுறையில குடும்பத்தில் ஏற்படுகிற அல்லாட்டம் பற்றி நீங்க எழுதியிருக்கிங்க அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா?
பெ.மு: பூனாச்சிக்கு அப்புறம் நான் கழிமுகத்தை எழுதினேன். நா எதிர்பார்த்த அளவிற்கு அதற்கு வரவேற்பு இல்ல. பூனாச்சிக்கு கிடைத்த அளவிற்கு வரவேற்பு கழிமுகத்திற்கு கிடைக்கில. அது ஏன்னு எனக்குப்புரியல. ஒருவேற சமகாலப் பிரச்சனைய ரொம்ப காத்திரமா அது பேசுது! பெற்றோர்கள கடுமையா விமரிசிக்கிது. ஆசிரியர்களை பகடுமையா விமரிசிக்கிது. கல்வி நிறுவனங்களை வியாபரநிலையை விமரிசிக்கிது. இவற்றையெல்லாம் ஏற்றுகொள்ளக் கூடிய சூழலும் பக்குவமும் நம்ம சமூகத்திற்கு இல்லாம போச்சோ! அப்படின்னு எனக்கு தோனுது. ஆங்கிலத்திலையும் மொழிபெயர்ப்பாகி போயிருக்கிறது. இந்த தலைமுறைக்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது. ‘என்னுடைய பெற்றோர் எப்படியெல்லாம் நடந்துகிட்டாங்க அப்படிங்கறத நினைவூட்டிக்க’ இந்த நாவல் பயன்பட்டது. அப்படின்னு இந்த தலைமுறையினர் சொல்லுறாங்க. ஆனாலும் இன்னும் இந்த நாவல் விரிவாக பரந்துபட்ட வாசகர்களிடம் போயிருக்கனும். அப்படிங்கிறது என் எண்ணம்.

ஓதம்: நானும் கூட நாவல வாசிக்கிறபோது சமகால பிரச்சனைய இவ்வளவு சிறப்பா பகடியா சொல்லுதுங்கிறத உணர்ந்தேன்.
பெ.மு: அப்புறம் அந்த நாவல நானு பகடியில எழுதியிருக்கேன். இதுவரைக்கும் முழுமையாக ஒருநாவல இப்படி பகடியில எழுதியிருக்காங்களான்னு தெரியல. நாவல் முழுதுமே பகடியில எழுதியிருக்கேன். இப்போ சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையில பகடி வரும் அது கதையின் ஒரு பகுதி. நேஷ்னல் புக் டிரஸ்ட்டில ‘தர்பாரி ராகம் அப்படின்னு ஒரு நாவல் அது என்ன மொழிங்கிறத மறந்திட்டேன் அதில வரிக்குவரி பகடி’ தமிழில் அப்படி எழுதலாமின்னு நெனச்சியெழுதியிருக்கேன். அதில் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றியும் கண்டியிருக்கேன். ஆனா அத புரிஞ்சிகிட்டு தமிழ்சமூகம் வந்து உரிய மதிப்பைக் கொடுக்கில அப்படிங்கிற குறை என் மனசில இருக்கு.
ஓதம்: அந்த நாவலில பாத்திரங்களுக்கு அசூரர்கள் பேர வக்கிறதாகட்டும், பெண்கள் ஹெட்செட்டை மாட்டிக்கிட்டு வரதாகட்டும் அப்புறம் கல்வி நிறுவனங்களில ஆள பிடிச்சிக்கிட்டு போறதா இருக்கட்டும் எல்லாத்திலும் ஒரு பகடி போயிட்டிருக்கு. ஆனாலும் அந்த நாவல் போதுமான ரீச்சாகல. ஆகணும். இப்போதைய தமிழ் இலக்கிய சூழல் குறித்து?
பெ.மு: இப்போ தமிழிலக்கியச் சூழல் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்குன்னு நெனைக்கிறேன். காரணம் நெறைய புத்தகச் சந்தைகள் பெருகிவிட்டன. வாசிக்கிறவங்ககிட்ட புத்தகம் சென்று சேருவது பெருகியிருக்கு. வாசகர்களின் எண்ணிக்கை கூடியிருக்கு. இதையெல்லாம் பார்க்கிறபோதுதான் ஆரோக்கியமா இருக்குன்னு சொல்லறேன். நா 90களில புத்தகம் போட வந்தபோதெல்லாம் பதிப்பிக்கிறதற்கு பதிப்பகங்கள் கிடையாது. என்னுடைய முதல் நான்கு நூல்களையும் நான் சொந்தமா வெளியிட்டது. என்னுடைய நண்பர்களின் உதவியோட ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து அவர்களின் நிதியுதவியோட வெளியிட்டது. என்னுடைய புத்தகங்கள பதிப்பிக்கிறதற்காகவே பதிப்பகத்தைத் தொடங்கினோம். அப்புறம் அரசாங்கம் நூலகத்திற்கு புத்தகத்தை வாங்கிறாங்களா! பத்து பதினைந்து வருஷங்களா கூட வாங்கிலன்னா அப்படியே புத்தகங்களை பாதுகாத்து வைக்கனும். சரியா விற்பனையாகாது. புத்தகக் கண்காட்சியில இன்னைக்கு உள்ள நுழைய முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கிறது. அன்னைக்கெல்லாம் ஈயோட்டிக்கிட்டிருக்கும். எழுத்தாளர்கள் மட்டும்தான் நடமாடிக்கிட்டிருப்போம். ஆனா இன்னைக்கு எவ்வளவு பெரியமாற்றம்! நமது கல்வி மக்களுக்கு போய் சேர்ந்திருக்கு. அன்னைக்கு கல்வி கற்றோருடைய எண்ணிக்கை குறைவா இருந்துச்சி. கல்லூரிகளுடைய எண்ணிக்கையே நூறுக்குள்ளதான் இருந்திருக்கும். இன்னைக்கு அரசு கலைக்கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் அப்புறம் சுயநிதிக் கல்லூரிகள் அப்படின்னு பெருகியிருக்கு. அதனால கற்றோருடைய எண்ணிக்கையும் பெருகியிருக்கு. ஓரிலக்கிய நூல வாசிக்கிறதற்கு அடிப்படையில என்னவேணும்! அடிப்படையில ஒரு கல்வி வேணுமில்ல? அது இன்னைக்கு எல்லா சமூகத்திற்கும் சாதிகளுக்கும் கெடைச்சிருக்கு. அதனால பெருமளவு பெருகியிருக்குது. அப்போதைய நிலைய ஒப்பிடும்போது இது வளர்ச்சிதான். பத்துக்கோடி தமிழர்கள் இருக்கிறாங்க அந்த அடிப்படையில பார்த்தா இது போதாதுதான். ஆனாலும் அப்பத்திக்கும் இப்பத்திக்கும் பார்த்தால் எனக்கு திருப்திய குடுக்குது.
ஓதம்: உங்க மேல தனிமனித விமரிசனம் வந்தா அத எப்படி எதிர்கொள்ளுவிங்க?
பெ.மு: வாசகர்கள்கிட்ட இருந்து தனிமனித விமரிசனம் வரல. சில எழுத்தாளர்கள்கிட்ட இருந்து வந்திருக்கு. அதில உண்மைத்தன்மையிருக்குதா! அது என்னப் பின்னணியிலிருந்து வருது அப்படிங்கிறத பார்த்து உண்மையிலேயே எடுத்துக்கொள்ளுவதற்கு ஏதேனும் இருந்தா அத நா எடுத்துகிடுவேன். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கூட என்னுடைய படைப்புகள் சார்ந்தும் இயல்புகள் சார்ந்தும் விமரிசனங்களை வைப்பாங்க அத நா எடுத்துக்குவேன். பொதுவெளியிலும் அந்தமாதிரி வந்தா எடுத்துக்க வேண்டியிருந்தா எடுத்துக்குவேன். சும்மா பொய்யா குற்றம் சுமத்த வேண்டியும் இழிவுப்படுத்த வேண்டியும் வந்ததுன்னா அத நான் புறம் தள்ளிடுவேன். இத நான் உ.வே.சா.விடமிருந்து கற்றுக்கொண்டேன். உ.வே.சா. அவர்கள் சீவகசிந்தாமணிய பதிப்பிச்சபோது ஆறுமுகநாவலர் குழுவினர் அவரை கடுமையா விமரிசனம் பண்ணினாங்க. அவருடைய பதிப்புக் குறித்தும் அவர் சமணநூல பதிப்பிச்சிட்டாருன்னும் அவருடைய தனிமனித இயல்புகள் குறித்தும் தாக்கி இழிவுபடுத்தி நெறைய எழுதினாங்க. துண்டரிக்கையெல்லாம் போட்டாங்க. அவற்றையெல்லாம் அவர் சேகரிச்சி அதற்கு ஒரு பதில் எழுதினார். அப்போ அவருக்கு 30வயதுதான். அவரும் ஒரு துண்டரிக்கை போட்டு அனைவருக்கும் விநியோகிக்கனுமுன்னு நெனச்சாரு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த அவர் பேரு மறந்து போச்சு அவர்க்கிட்ட இருந்து வாங்கி கிழிச்சிப்போட்டுட்டாரு. {பெயர் தெரியாத ஒருவர் இந்துப்பத்திரிக்கையில் உ.வே.சா.வின் சீவகசிந்தாமணி பதிப்பிற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அதற்கு உ.வே.சா. சார்பில் சேலம் ராமசாமி முதலியார் எதிர்வினையாற்றினார். இலங்கைப் பொன்னைய்யாப்பிள்ளை அவர்கள் தானும் சீவகசிந்தாமணி பதிப்பிப்பதாக விளம்பரம் வந்திருந்தது. ஒருமுறை பூண்டி அரங்கநாதர் முதலியார் உ.வே.சா.வை இராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியிடம் அறிமுகப்படுத்தியபோது தகுதியில்லாமல் ஏன் சீவகசிந்தாமணியை பதிப்பிக்கிறாய் என்றார். அப்போது பூண்டி அரங்கநாத முதலியார் இதையெல்லாம் நீ கண்டுக்காத பதிப்புப் பணிய தொடர்ந்து கவனி என்று ஊக்கமளித்தார்.} . இப்படி உ.வே.சா.கிட்ட இருந்துதான் எடுத்துக்கிட்டேன்.
ஓதம்: சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, கீர்த்தணை இவற்றில் எது உங்களுக்கு மிக மனசுக்கு நெருக்கமானது.
பெ.மு: மனசுக்கு நெருக்கமானதுன்னா கவிதைதான். நா அவ்வப்போதுதான் கவிதைகளை எழுதிகிட்டு வரேன். நாவல் சிறுகதையெல்லாம் எழுத வந்ததற்கு அப்புறமும் சொந்த உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு ரொம்ப நெருக்கமானது கவிதைதான். சிறுகதை நாவல் அப்படின்னா திட்டமிடனும். உடனடியா உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு கவிதைதான்.
ஓதம்: உங்களுடைய படைப்புகளைப் படிச்சிட்டு முதல்முதலில் யார் கருத்து சொல்லுவாங்க?
பெ.மு: என் வீட்டில என் மனைவி சொல்லுவாங்க. அவங்களும் தமிழ்ப்பேராசிரியராக இருக்காங்க. அப்புறம் என் நண்பர்கள் சிலரிடம் அனுப்பி கருத்துக் கேட்பேன். அவர்கள் சொல்லறதையும்எடுத்துக்குவேன்.
ஓதம்: நீங்கள் எழுதுவதற்கேற்ற நேரம்?
பெ.மு: அது ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிமாறி வந்திருக்கு. இப்போ கேட்டிங்கன்னா காலை நேரம்தான். முன்னாடியெல்லாம் நானும் வேலைக்குப் போகனும் என் மனைவியும் வேலைக்குப் போகனும் பிள்ளைங்கள பாத்துக்கனும் அப்படின்னு இருந்ததனால பிள்ளைங்களெல்லாம் தூங்கின பிறகு இரவு நேரத்திலதான் எழுந்து படிக்கிறது எழுதறதுன்னு இருந்தது. இப்போ அப்படியில்ல காலை நேரத்திலதான் எழுதறேன்.
ஓதம்: உங்களுடைய பரபரப்பான பணி நெருக்கடிக்கு இடையிலும் எங்களுக்கு நேரம் ஒதுக்கி எங்களுடைய கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்த உங்களுக்கு நன்றி அய்யா.
பெ.மு: முறையாக எனது படைப்புகளை படிச்சிட்டுவந்து சிறந்த கேள்விகளைக் கேட்ட உங்களுக்கும் என்னுடைய நன்றியும் வாழ்த்துகளும். இன்னும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள் பிறகு பேசலாம்.
என்று மகிழ்வோடு விடைப்பெற்றோம்.
1 comment