காலவெளியில் தமிழ்வெளி
மேனாள் இயக்குநர், புதுச்சேரி
ொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனம், புதுச்சேரி.
தமிழ் அறிவு மரபு
இந்திய அறிவு மரபில் தமிழ்ச்சிந்தனை மரபு தனித்த வீச்சுடையது என்பதை நாமறிவோம்.
இலக்கணம், இலக்கியம், சமூக உருவாக்கம், பண்பாட்டசைவுகள், கலை பரிமாணங்கள், சமயம், தத்துவம், அழகியல் முதலானவற்றின் செல்நெறிகள்
இத்துணைக்கண்டத்தின் வரலாற்றோடு கட்டமைக்கப்பட்டவை.
இந்த வரலாற்றுக் கட்டமைப்பில், தமிழ்ச்சிந்தனை மரபில் கணக்கற்ற கருத்தாக்கங்களும் கோட்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளன.
ஆயினும் ‘வெளி’ பற்றிய புரிதல் இன்னும் விரிவுபெற வேண்டியதாகவே உள்ளது. நாடகம், இன்னபிற நிகழ்த்துதல், சடங்காற்றுகை,
திரைப்படம் முதலான களங்களில் இப்புரிதல் விரிந்து வருகிறது. இலக்கியத் தளத்திலிருந்து ஆழமான நுட்பங்களை இதுவரை
நாம் அடையவில்லை. அதனைப் பேராசிரியர் க.காசிமாரியப்பன் நம் வசப்படுத்தியிருக்கிறார். இதன்வழி ஒரு காத்திரமான ஆய்வு
ஆளுமை ஒளிர்கிறார். அவருடைய முப்பதாண்டுக்கால ஆய்வு அனுபவத்தின் ஊடாக இந்த நூல் நம்வசப்பட்டிருக்கிறது.
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நிலமின்றியும் அமையாது என்பதால் அதனையும் முதற் பொருளாக்கினார் தொல்காப்பியர்.
உயிரினங்கள் அனைத்தும் இவ்வுலகில் காலூன்றுவதற்கு நிலமே ஆதாரமாகும். நிலம் வெறும் மண் ஆகாது; சடப்பொருளும் ஆகாது.
அது வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே சமூகவயப்பட்டுள்ளது; பண்பாட்டுவயப்படுள்ளது; மதவயப்பட்டுள்ளது;
இன்னும் எல்லாமுமாக மனிதவயுள்ளது.
பண்டைய தமிழ் மரபில் ஒவ்வொரு நிலமும் ஒரு தனி உலகமாகும்.
- மாயோன் மேய காடுறை உலகமும்
- சேயோன் மேய மைவரை உலகமும்
- வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
- வருணன் மேய பெருமணல் உலகமும்
என்று வரையறுத்தார் தொல்காப்பியர் (அகத்திணை.5). தமிழ் அறிவாராய்ச்சி மரபின் தொடக்கம் தொல்காப்பியம்.
ஒவ்வோர் உலகத்திற்கும் முதல், கரு, உரி வெவ்வேறானதாக உருவாக்கப்பட்டன. இந்த நான்கு உலகங்களிலிருந்தே
‘தமிழுலகம்’ உருவாக்கம் பெற்று வந்துள்ளது.
இந்த நான்கு தனிமரபுகளைப் பொது / கூட்டு மரபாக்கிய வரலாறு தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நெடிய அறுபடாத வரலாறாகும். இதில் ‘வெளி’ சார்ந்த வகிபாகம் மிக முக்கியமானது.
உண்மையில் ‘வெளி’ என்பது நிலத்தோடும் இடத்தோடும் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் அசைவியக்கங்களால் உருவாக்கப்படுவது. இது உருவமாகவும் அருவமாகவும் நீட்சி பெறவல்லது. வாழ்வாகவும், வாழ்வு முறையாகவும் அமைகின்ற பண்பாடு போல, வெளியும் அவ்வாறே உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பண்பாடும் தனக்கான வெளிகளைத் தாமே கட்டமைத்துக்கொள்கின்றது. இவற்றில் உலகளாவிய பொதுமைப்பாடுகள் சில இருந்தாலும், தனித்துவங்களே மிகுதி. அவையே அந்தப் பண்பாட்டின் அடையாளம்.
தமிழ்ச் சமூகத்தின் ‘வெளி’ பற்றிய தனித்துவங்களைக் காசிமாரியப்பன் இந்த நூலில் ஓர் அறிவாராய்ச்சி முறையிலும், பொருள்கோடல் முறையிலும் தேடியிருக்கிறார். உட்சபட்ச அறிவு உழைப்பாக இது விளைந்திருக்கிறது. ஓர் அகவயமான, அச்சு அசலான முறையியல் மூலம் தமிழ் வெளிகளை ஆராய்ந்திருக்கிறார். தன் ஆய்வுக்கான தரவுகளை அளவையியல் சார்ந்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார். அவற்றை அளவையியலின் (தர்க்கவியல்) இரண்டு முக்கியமான அணுகுமுறைகளாகிய தொகுப்பாய்வு வழியும் (In Ductive Method), பகுப்பாய்வு வழியும் (Dedictive method) பொருள்கோடல் செய்கிறார். கூர்மையான தம் பார்வையோடு மிகுந்த நுட்பங்களைப் பேசுகிறார். தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம் ஊடாக, சமகாலப் படைப்பிலக்கியம் வரை தமிழ் ‘வெளி’கள் கண்டு வந்துள்ள திரிபுவடிவங்களையும் உருமாற்றங்களையும் புதிய வெளிச்சத்தில் காட்சிப்படுத்துகிறார். தமிழ் வெளிக்கு இந்த நூல் ஒரு கண்திறப்பு எனலாம்.
இந்த நூலில் என்னைக் கவர்ந்த ஒரு விடயம் என்னவெனில் நூலாசிரியரின் அகவய ஆய்வுமுறை. தமிழ் மரபின் சிந்தனைக் கூறுகளையும் கருத்துருவாக்கங்களையும் நம்முடைய மரபிலிருந்தே ஆராய்வது இந்த நூலின் களமாகும். கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நம்மைக் கவ்விப் பிடித்துள்ள மேலைக்கோட்பாடுகளிலிருந்து நூலாசிரியர் விலகி நிற்கிறார். தமக்கான இயல் மரபில் பயணித்துள்ளார். அயல் பார்வைகளைவிட இயல் பார்வைகளின் மூலம் உட்கிடக்கைகளை ஊடறுத்துச் சொல்ல முடியும் என்பதை இந்த நூலில் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்நூலில் தொல்காப்பியம் போல ஓர் அசலான அமைப்பிய அணுகுமுறை அடி நீரோட்டமாக ஓடுவதை அறிஞர்கள் இனங்காண முடியும். காசிமாரியப்பனின் முப்பதாண்டுக்கால ஆய்வு அனுபவம் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
இந்நூல் வெளி பற்றிய வரையறையிலிருந்து தொடங்குகிறது. தொல்காப்பிய ‘வெளி’யிலிருந்து பண்டைய தமிழர் வாழ்வியல் கருத்தாக்கங்களைக் கூர்ந்து நோக்குகிறார் காசிமாரியப்பன். எத்திணையிலும் பெண் கடவுள் கருப்பொருளாகவில்லை. உணர்வுகளுக்கும் பொழுதுகளுக்கும் உறவுள்ளது. அதனாலேயே உடல்வெளியானது புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய பன்மைப் பரிமாணங்களை அடைகிறது. இவை எல்லாம் முதல் இயலின் பேசுபொருளாகும்.
தமிழ் வெளியும் வைதிக வெளியும் கொண்டுள்ள அடிப்படை வேறுபாடுகளையும் முதல் இயலில் விவாதிக்கிறார் நூலாசிரியர். மேலும் மனுதர்மம் தொடங்கி, மணிமேகலை ஊடாக வெளி கண்டடைந்த கருத்துருவாக்கங்களையும் நுணுகி அலசியிருக்கிறார். இவை யாவற்றையும் ஆழமான விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்த இயலின் இறுதியில் சோழர் காலச் சாதி முறையும் ஊர் அமைப்பும் உண்டாக்கிய ‘வெளி’களை மிகுந்த கவனத்துடன் அணுகியிருக்கிறார். பிரம்மதேயங்கள் (தனியூர்) தொடங்கி தீண்டாமையை வெளிப்படுத்திய சேரி வரை சாதிய வெளியாக எவ்வாறு பரிணமித்தன என்பதைத் தகுந்த தரவுகளுடன் விவாதித்திருக்கிறார்.
அடுத்ததாகப் பட்டினப்பாலையில் பெண்வெளியை அழித்த ஆண்வெளியை ஆராய்ந்துள்ளார். பெண் சுயாட்சி வலுவிழந்துவிட்டதை இலக்கிய வரலாற்று அணுகுமுறையில் பேசியிருக்கிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும் தாந்திரிக வழிபாடு (பஞ்சமகரங்கள்) சார்ந்தவை. இதனைச் சிந்துவெளியோடும் ஒப்பிட்டுக்காட்டுகிறார். இது நூலாசிரியரின் பரந்த ஆழமான தேடலைக் காட்டுகிறது.
பண்டைய பெண்வெளியின் கூறுகளான கொண்டி மகளிர் (மீயாற்றல் மகளிர்), வளமைச் சடங்குகள், பாவை நோன்பு முதலானவற்றை சக்தி மரபுக்குரிய தாந்திரிக வெளியாக முன்னிலைப்படுத்துகிறார். இதன் பின்னர் பெண்வெளி வீழ்த்தப்பட்டு ஆண்வெளி ஆதிக்கம் பெறுவதை வேந்தர் வெளி, வேலும் கோலும் முதலான இன்னும் பிற கருத்தினங்கள் வழி உசாவுகிறார். பண்டைத் தமிழ் மரபில் ஆதிப் பெண்வெளி பின்னர் உருவான ஆண்வெளியால் எவ்வாறு தேய்ந்துபோனது என்பதை மிகுந்த கவனத்துடன் பரிசீலித்துள்ளார். ஒரு பெறுமதியான வாசிப்பையும், ஒரு விசாலமான புரிதலையும் காட்சிப்படுத்துகிறார்.
பட்டினப்பாலைக்கடுத்து மதுரைக்காஞ்சியை நூலாசிரியர் ஆராய்கிறார். இது நிலையாமையைப் பேசினாலும் போரை விதந்து பாடுகிறது. சங்ககாலம் பெரிதும் வீரயுகக் காலம் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. மதுரைக்காஞ்சி காட்டும் அகம் x புறம், காதல் x வீரம் சார்ந்த இன்னபிற எதிரிணைகளை ஆய்வுப் பொருளாக்குகிறார். கூடவே சீறூர் வெளி x பேரூர் வெளி, பேரரசு உருவாக்கம், கடவுளும் வேந்தனும் ஒன்றாதல், தொன்முது கடவுள், போரின் வெளிகள் உள்ளிட்ட இன்னும் பல கருத்தினங்களை ஆய்வுக்குட்படுத்துகிறார். இதன்வழித் தமிழ்ச் சமூக வரலாற்றில் பெண்வெளி ஒடுங்குதலும் ஆண்வெளி ஓங்குதலும் எவ்வாறு பண்பாட்டுவயப்படுத்தப்பட்டன என்பதை ஒரு விழுமியக் கருத்தாக்கமாக விவாதிக்கிறார். மிக நுணுக்கமான நுட்பங்களை நம் வசப்படுத்துகிறார்.
மதுரைக்காஞ்சியைத் தொடர்ந்து பதிற்றுப்பத்து வழி பண்டைத் தமிழ்ச் சமூகம் கட்டமைத்த பண்பாட்டு வெளிகளை முன்னெடுக்கிறார் காசிமாரியப்பன். சங்க இலக்கியத்தில் சேர இலக்கியமாகிய பதிற்றுப்பத்திற்குத் தனியிடம் உண்டு. அது தொல் தாய்வழித் தேயமாகும். மருதத் திணையைப் பேசாத இலக்கியமாகும். இன்னும் பல தனித்துவங்களும் இதற்குண்டு. இந்த இயலில் நூலாசிரியர் காட்டும் பன்முக வெளிகள் வரலாற்றின் கட்டமைப்பாக உருவெடுத்தன எனக் காண்கிறோம்; ‘வெளி’யின் புதிய புதிய பரிமாணங்களைக் காண்கிறோம்.
பண்டைத் தமிழ் மக்களின் சமூகப் பண்பாட்டு ‘வெளி’களை முதல் நான்கு இயல்களில் நான்கு வகையான இலக்கியங்கள் மூலம் பேசியிருக்கிறார். இந்த வெளிகள் யாவும் டி.என்.ஏ. மரபணுக்கள் போல சங்கிலித் தொடராக அமைகின்றன; தமிழ் மரபின் பண்புகளை வெளிக்காட்டுகின்றன. இவை யாவற்றையும் தமிழ்ச் சமூக வரலாறு எனும் சட்டகத்திற்குள் நிலைநிறுத்தி ஓர் ‘ஒன்றுபட்ட ஒருங்கிணைப்பு’ அணுகுமுறையோடு (Inclusive approach) நம் புரிதலைப் புதிய தடத்தில் கொண்டுசெல்கிறார்.
சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து சமகால இலக்கியத்தில் ‘வெளி’ பற்றிய பரப்பை ஏழு இயல்களில் விவரித்துப் பேசுகிறார். இந்த முன்னெடுப்பு தமிழின் நெடும் பயணத்தை அறிய உதவுகிறது. பூமணி நாவல்களில் பாலைத் திணை வெளியும் சமய வெளியுப் பற்றி ஆராய்கிறார். தொடர்ந்து தலித் நாவல்களில் அகவல விருப்பம் புறவல வெறுப்பும் பற்றிப் பேசுகிறார். அடுத்து ‘பிறகு, சங்கதி’ நாவல்களில் புல வெளியேற்றம் பற்றி அலசுகிறார். தஞ்சை வட்டாரத்திற்குரிய சோலை.சுந்தரபெருமாளின் மூன்று நாவல்கள் ஊடாக ஒடுக்கப்பட்டோரின் வெளியை விசாலப்படுத்திக் காட்டுகிறார். இதற்கடுத்து தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’ நாவல் மூலம் மாற்று மரபின் உருவாக்கத்தைக் காட்டுகிறார். இறுதியாக, பெருமாள்முருகனின் இரண்டு நாவல்கள் மூலம் புதிய ‘வெளி’களைப் பேசுகிறார்.
தமிழ்ப் பண்பாடு நீண்ட நெடிய அறுபடாத மரபுடையது என்பதை நாமறிவோம். அது வரலாற்றின் ஊடே மிகு அசைவியக்கம் சார்ந்தும் இயங்கி வந்துள்ளது என்பதை இலக்கியங்களும் நிரூபித்துக் காட்டுகின்றன. அதனை நூலாசிரியர் காசிமாரியப்பன் நம்முன் வானவில் போல கண்கவர் வண்ணங்களுடன் காட்சிப்படுத்துகிறார்.
தமிழின் இந்த நீண்ட வரலாற்றின் ஊடாக நிகழந்துள்ள மறைக்கப்பட்ட வெளி, ஒதுக்கப்பட்ட வெளி (பரத்தையர் சேரி), விருப்பத்திற்குரியது / விருப்பத்திற்கு மாறானது, நிலையானது / மாறக்கூடியது, உடன் நிற்பது / தூர நிற்பது, நிலைகுடி சார்ந்தது / அலைகுடி சார்ந்தது, ஒன்றிணைப்பது / வேறுபடுத்துவது, புனிதமானது / பொதுவானது, ஆணுக்குரியது / பெண்ணுக்குரியது, அதிகாரம் சார்ந்தது / அதிகாரம் சாராதது எனப் பன்முகக் கருத்தாக்கங்களைத் தமிழ்‘வெளி’கள் பேசுகின்றன. இவை பற்றிய ஒரு முழுநீள எடுத்துரைப்பை ஆழமான நேர்த்தியான ஆய்வாகக் செய்திருக்கிறார் பேராசிரியர் காசிமாரியப்பன். ஒரு விழுமியப்படைப்பு இது. தமிழ்ப் புலமையுலகம் பெரிதும் வரவேற்றுப் பாராட்டி மகிழும் என நம்புகிறேன்.
– பக்தவத்சல பாரதி
புதுச்சேரி
நூல் பெயர்: கள் மணக்கும் பக்கங்கள் – தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்.
ஆசிரியர்: க.காசிமாரியப்பன்
ஆண்டு: டிசம்பர் 2024
வெளியீடு: காலச்சுவடு

1 comment