புதிய கடவுள்

சே. சரவணன்
“எழுத்தாளர்களுக்கு விருதினை வழங்கி சிறப்பானதொரு வாழ்த்துரை வழங்கிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்வின் தொடர்ச்சியாக இப்பொழுது விருது பெற்ற எழுத்தாளர்களின் ஏற்புரை நிகழ இருக்கிறது. சிறந்த படைப்புகளை சமூகத்திற்கு வழங்கிய பல எழுத்தாளர்களை சாகித்ய அகாடமி நிறுவனம் உலகிற்கு அடையாளப்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டு எழுத்தாளர் திரு.விரல்மொழியரை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் சாகித்ய அகாடமி பெருமை கொள்கிறது. சாகித்ய அகாடமி விருது பெறும் முதல் பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது. ‘வானவில்லற்ற வானம்’ எனும் புதினத்திற்காக விருதினை பெற்ற சிறப்புக்குரிய எழுத்தாளராக விளங்கும் திரு.விரல்மொழியர் அவர்கள் இப்பொழுது ஏற்புரையினை நிகழ்த்துவார்.
“இங்கு குழுமியுள்ள அனைவருக்கும் எனது வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ‘வானவில்லற்ற வானம்’ எனும் புதினத்திற்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஏற்புரையில் இந்நூலைக் குறித்து எதுவும் பேசப்போவதில்லை. விருதைப் பெற்றுக் கொடுத்த நூலைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசப் போகிறான் என்றுதானே யோசிக்கிறீர்கள். இங்கு உங்கள் முன் பேசுவதற்கு எனக்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. வெற்றி பெற்ற எழுத்தாளனாக என்னை நினைத்துப் பெருமைப்படுவதற்கு இங்கு ஒன்றுமில்லை. என் போன்ற பார்வைமாற்றுத் திறனாளிகள் நாள்தோறும் புத்தகங்களைப் படிப்பதிலும் படித்ததை எழுதுவதிலும் எதிர்கொள்ளும் சிக்கல்களை உங்கள் முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன் என்றாலும் தற்பொழுது வரையிலும் ஒரு பக்கத்தைப் படிப்பதற்குக்கூட பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

நான் எழுத்தாளனாக ஆனதற்குக் காரணம் என்னை போன்றவர்களின் வலிகளையும் நாள்தோறும் நாங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; அதன் மூலம் பார்வைமாற்றுத் திறனாளிகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற புரிதலை இந்தச் சமூகம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். பல அனுபவங்களைப் பெற்றவன் ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும் என்பார்கள். நான் பெற்ற அனுபவங்கள்தான் என்னையும் ஒரு எழுத்தாளனாக ஆக்கியிருக்கிறது என்று நம்புகிறேன். என் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
அது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவம். கேட்டால் உங்களுக்கு சிரிப்பு கூட வந்துவிடும். பொதுவாக மாணவர்கள் புத்தகம் வாங்கித்தரச் சொல்லி அழுவார்கள் அல்லது வாங்கிய புத்தகம் தொலைந்து விட்டால் அழுவார்கள், மற்றபடி வாங்கிய புத்தகத்தை இன்னமும் படிக்க முடியவில்லையே! என்று அழமாட்டார்கள் இல்லையா? ஆனால் பார்வைத்திறனால் பாதிக்கப்பட்டவர்கள் வாங்கிய புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே என்று எண்ணி அழும் நாட்கள் பல உண்டு. ஒருநாள் வகுப்பறையில் அமர்ந்து கொண்டிருந்தேன் முதல் மணி நேரத்திற்குரிய ஆசிரியர் வராததனால் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டாவது மணிக்குரிய ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைந்தார். மாணவர்களை அமைதிப்படுத்தவும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைத்த ஆசிரியர் பாடம் தொடர்பான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். உ.வே.சா.வைப் பற்றிய கேள்விகளாக அவை இருந்தன. எனது குரலைத் தவிர வேறு எவரின் குரலும் அந்த வகுப்பில் ஒலிக்கவில்லை. நான் அளித்த விடைகளைக் கேட்ட ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். அவரது கோபமும் தணிந்து, பிறகு ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக ஒரு செய்தியை அறிவித்தார். நாளை துறையில் பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது என்று கூறினார். உ.வே.சா.அவர்களின் தமிழ்ப்பணிகள் பற்றி மாணவர்கள் பேசலாம் என்று கூறினார். பிறகு சிறப்பாக என்னிடம் “நீ கண்டிப்பா அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் உன்னை எதிர்பார்ப்பேன்.” என்று கூறி பாடம் நடத்தத் தொடங்கினார்.
கல்லூரி முடிந்தபின் நான் கல்லூரி நூலகத்திற்குச் சென்று உ.வே.சா. அவர்களின் ‘என் சரித்திரம்’ நூலை எடுத்து வந்தேன். அன்று மாலையே நூலைப் படிப்பதற்காக கோடம்பாக்கம் விடுதியிலிருந்து குரோம்பேட்டை எம்.ஐ.டி இன்ஜினீரிங் கல்லுரிக்குப் புறப்பட்டேன். என்னுடைய போதாத நேரமோ என்னன்னு தெரியல, அந்த நேரம் பார்த்து மழை பெய்யத் தொடங்கிச்சு அதனால என்னுடைய நண்பர்கள் பலர் மழை பெய்வதனால் அன்று படிக்கச் செல்வதற்கு என்னுடன் வரவில்லை. நான் மட்டும் தனியாகப் புறப்பட்டுச் சென்றேன். கோடம்பாக்கத்தில் இரயில் ஏறிய நான் குரோம்பேட்டையில் இறங்கினேன். பைக்குள் குடை இருந்தும் அதைப் பயன்படுத்துவதற்கு அச்சமாக இருந்தது. ஏனென்றால் ஒரு கையில் வழிகாட்டிக் கோலையும் மற்றொரு கையில் குடையையும் பிடித்துக் கொண்டு நடந்து சென்றால் சிரமமாக இருக்கும். மழையில் நனைந்தபடியே நடந்து சென்றேன். படிப்பகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்களில் ஒருவர் வந்து எனது கையைப் பிடித்துக் கொண்டார். நான் நுழைய இருந்த அறைக்குள் என் போன்ற பல மாணவர்கள் ஏற்கனவே அமர்ந்திருப்பதனால் வேறொரு அறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். அதுபோலவே வேறொரு அறைக்குள் நுழைந்தோம். “இது எத்தனாவது அறை” என்று கேட்டேன். நான்கு என்று கூறினார். நான் அதிர்ந்து போனேன். மழையிலும் இவ்வளவு மாணவர்கள் படிக்க வந்திருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன். அந்த அறையில் அமர்ந்தபடி, படித்துக் காட்ட யாரேனும் வருவார்களா என்று நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தேன். நேரம் சென்று கொண்டிருந்தது.
நாளை நடக்க இருக்கக்கூடியப் போட்டியில் எனது பங்களிப்புக் குறித்து எனது மனம் கவலைப்பட்டது. போட்டிக்குத் தயாராக முடியாமல் போனால் ஒரு வாய்ப்பை இழந்து விடுவோமே என்று என் மனம் துடித்தது. எப்படியாவது இன்று இந்நூலின் சில பகுதிகளையாவது படித்துவிட வேண்டும் என்று விரும்பினேன். சில நிமிடங்கள் கழித்து நானிருந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தார். அவரிடம் “எனக்கு வாசிப்பாளர் இன்னமும் கிடைக்கவில்லையே” என்று கேட்டேன். அவர் “வாசிப்பாளர்கள் கிடைக்காமதான் இருக்காங்க. இன்னிக்கு மழை பெய்யறதனால நிறைய வாசிப்பாளர்கள் வரல.” என்று கூறிச் சென்று விட்டார். அதைக் கேட்டதும் எனக்கு மனமே உடைந்து போய்விட்டது. நான் படிக்கக்கூடிய இடத்திலும் தங்கக்கூடிய இடத்திலும் என்னைச் சுற்றிலும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் படித்துக் காட்டியிருந்தால், நான் எங்கோ இருக்கக் கூடிய ஒரு வாசிப்பு மையத்தைத் தேடி வந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போது நேரமும் வேகமாக ஒடிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு வாசிப்பாளர் “இன்று நேரம் முடிந்து விட்டது. நாளை மீதியைப் படித்துக் காட்டுகிறேன்” என்று கூறிக் கொண்டிருந்தார். அதைக் கேட்ட நான் உடனே நேரத்தைப் பார்த்தேன். வாசிப்பு நேரம் முடிந்து விட்டதை உணர்ந்து கொண்டேன். புத்தகத்தைக் கொண்டுவந்து ஒரு பக்கத்தைக் கூட படிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையினால் என் கண்கள் கலங்கிவிட்டன. எனது கண்ணீரானது திறந்து வைத்திருந்த நூலின் பக்கத்தின் மேல் விழுந்தது. அதைக் கண்ட ஒரு வாசிப்பாளர் ஓடிவந்து என்னிடம் “என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டார். நான் “பிரச்சினையெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இந்தப் புத்தகத்தை இன்று படிக்க முடியாம போச்சே என்று அழுவுறேன்” என்று கூறினேன். அதைக் கேட்ட அந்த வாசிப்பாளர் “இதுக்கா அழுவுறீங்க” என்று ஆச்சரியப்பட்டார். “இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க. உங்களைப் போன்றவர்களின் வாழ்வில் இது புதுசு இல்லையே அதனால கண்கலங்காமப் போய்ட்டு வாங்க நாளக்கிப் படிச்சுக்கலாம்” என்று சாதாரணமாகக் கூறிச் சென்று விட்டார். அதன்பின் நான் உ.வே.சா.வைச் சுமந்தபடி அவ்விடத்திலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கினேன்.

குரோம்பேட்டை இரயில் நிலையத்துக்குள் நான் நுழைந்தபோது கடற்கரைக்குச் செல்லும் இரயில் வந்து நின்றது. அந்த இரயிலில் ஏறுவதற்காக மக்கள் வேகமாக ஓடினார்கள். அப்பொழுது ஒருவர் எனது வழிகாட்டிக் கோலில் தடுக்கி கீழே விழுந்ததால் இரயிலையும் விட்டுவிட்டார். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தையெல்லாம் என்னிடம் வெளிப்படுத்தினார். “உன்னாலதான் நான் கீழே விழுந்தேன்” முட்டியில அடிபட்டிருக்கு வண்டியையும் விட்டுட்டேன் உனக்குதான் கண்ணு தெரியலல்ல குச்சியை வைச்சுகிட்டு அங்கும் இங்கும் ஏன் நடந்துகிட்டிருக்க உன்னமாதிரி ஆளுங்களால பொதுமக்களுக்கு நடந்து போறதில எவ்வளவு சிக்கல் ஏற்படுது தெரியுமா? ஒரு இடத்தில அமைதியா உட்காந்துட்டிருக்காம, அதுவும் இந்த இரவு நேரத்தில உங்களுக்கு அப்படி என்ன வேல வெளிய நடமாடுதற்கு” என்று என்னைநோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். நான் படிப்பதற்காக வெளியே வந்தேன் என்று சொன்னால் அவர் இன்னம்கூடக் கோபப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். என் போன்றவர்கள் வெளியே நடமாடக் கூடாது என்றால் நாங்கள் படிப்பதுதான் எப்படி என்று எண்ணிக்கொண்டேன். அவருக்கு பதில் எதுவும் கூறாமல் அவ்விடத்தைக் கடந்து விட்டேன்.
விடுதியை அடைந்த நான் அலைச்சல் மிகுதியால் சோர்வடைந்திருந்தேன். பசி உணர்வும் அதிகமாக இருந்தது. அதலால் சாப்பிடலாம் என்று விடுதி உணவகத்துக்குச் சென்றேன். அங்கு உணவு தீர்ந்து போயிருந்தது. ஏற்கனவே இருந்த பசியைக் காட்டிலும் உணவு தீர்ந்து போய்விட்டது என்பதை அறிந்தபிறகு பசி இன்னமும் அதிகமானது. அறிவுப்பசிக்கும் உணவு கிடைக்காமல் வயிற்றுப்பசிக்கும் உணவு கிடைக்காமல் அல்லாடினேன். பசியோடு உறங்கச் சென்றேன். மறுநாள் நான் கல்லூரிக்குச் செல்லவில்லை.
என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு கூற விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடும் முயற்சியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அந்தத் தொகுப்பு ஏறக்குறைய முடியும் தறுவாய். முன்னுரை மட்டும் எழுத வேண்டியதாக இருந்தது. எனது வாசிப்பாளர்களிடம் உதவி கேட்டிருந்தேன். தண்டையார்பேட்டையில் வசித்துக் கொண்டிருந்த ஒரு வாசிப்பாளர் தன் வீட்டிற்கு வருமாறு என்னை அழைத்திருந்தார். நானும் எனது நண்பரும் எங்களின் வழிகாட்டிக்கோலின் துணையோடு அவர் வீட்டை அடைந்தோம். முன்னுரை எழுதி முடிக்கப்பட்டது. சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதுதான் பாக்கி என்ற நிலை ஏற்பட்டது. இதனால் என் நண்பன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் உருவாவதற்கு ஊக்கமளித்தவன் அவன்தான். அதனால்தான் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. எழுதி உதவி செய்த வாசிப்பாளருக்கு நன்றி கூறிவிட்டு நாங்கள் இருவரும் புறப்பட்டோம். நான் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிகழ்வு அப்பொழுதுதான் நிகழ்ந்தது. இப்பொழுது அதை நினைத்துப் பார்த்தாலும் அன்று தெறித்த இரத்தத்தின் ஈரத்தை இப்பொழுதும் என்னால் உணர முடிகிறது. நன்றி கூறிவிட்டுப் புறப்பட்ட நாங்கள் தண்டையார்பேட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் வந்து சேர்ந்தோம். இரயில் நிலையத்துக்குச் செல்வதற்கான வழி தெரியாததனால்அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டோம். அவர்களின் உரையாடலிலிருந்து அவர்கள் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். மீண்டும் உதவி கேட்டோம். அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. வேறு யாரும் அங்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இறுதியாக ஒரு முறை கேட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்து அவர்களிடம் கேட்டோம். எந்த பதிலும் கூறாமல் அவர்களில் இருவர் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டனர்.
அன்று நான் ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதை என்னுடன் இருந்தவர்கள் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் என் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் கண்டிப்பாக அறிவீர்கள். புத்தகங்களைப் படித்துக் காட்டுவதற்கு வாசிப்பாளர்கள் இல்லாததனால் நாங்கள் இழக்கக்கூடியவை எண்ணற்றவையாக இருக்கின்றன. படிப்பதற்காக ஒருவர் எதையெல்லாம் இழக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்று உங்களிடமிருந்து பதில் வரும் அதாவது உயிரைத் தவிர. ஆம் நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்குத் தெரியாத ஒரு உண்மையைச் சொல்கிறேன் கேளுங்கள். என் போன்ற பார்வைமாற்றுத் திறனாளிகள் படிப்பதற்காக உயிரையும் விடுகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடியுமா?
இரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று நினைத்து அவர்களோடு சென்றோம். திடீரென்று அவர்கள் தண்டவாளத்தின் மீது நின்றார்கள். இரயில் ஹாரனை அடித்துக் கொண்டு வரும் சத்தமும் கேட்டது. எனக்கு பயம் பிடித்துக் கொண்டது. எனக்கு உதவி செய்தவரிடம் “ஏன் நிற்கிறீர்கள்? வாங்க போகலாம்” என்றேன். அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. அவர்கள் போதை மயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அப்பொழுது எனக்கு பயம் அதிகமாகியது. இவர்களை நம்பி இவர்களோடு நிற்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இவர்களை நம்பாமல் முன்னே செல்லவும் முடியாது. ஏனென்றால் வண்டி வராத தண்டவாளத்தின்மீது இவர்கள் எங்களை நிறுத்தி வைத்திருக்கலாம். இவர்களை நம்பாமல் முன்னே சென்றால் வண்டி வரும் தண்டவாளத்தில் நாங்களே சென்று சிக்கிக் கொள்ளக் கூடிய அபாயம் ஏற்படும். எனவே இவர்களை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாத ஒரு நிலை. இரயிலின் ஹார்ன் ஒலி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே வந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். இரயில் மோதுவதற்கு முன்பே உயிர் போன நிலையை நான் அடைந்தேன்.
திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நான் நிற்கும் தண்டவாளத்தின் மீதுதான் எனது நண்பனும் நின்று கொண்டிருக்கிறானா என்ற சந்தேகம்தான் அது. திடுக்கிட்டுப் போனேன். அவன் எனக்கு முன்னால் இருந்த தண்டவாளத்தின்மீது நின்று கொண்டிருந்தான். கண் இமைக்கும் நேரந்தான். வெந்நீரை மொண்டு என்முகத்தில் யாரோ ஊற்றியதுபோல் உணர்ந்தேன். அவ்வளவும் இருவரின் இரத்தம் என்பதை அறிந்தவுடன் நான் அடைந்த நிலையை வார்த்தையில் விவரிக்க முடியாது. நான் அவ்விடத்திலேயே மயக்கம் அடைந்தேன். மயக்கம் தெளிந்த பின் என் நண்பரும் அவனுக்கு உதவி செய்தவரும் இறந்து விட்டார்கள் என்பதை என்னிடம் தெரிவித்தார்கள். அந்தச் சம்பவத்திலிருந்து இன்னமும் நான் மீளவில்லை என்றால் அது மிகையல்ல.
படிப்பதற்காக வெளியே செல்லும் பொழுது உயிரையும் விடக்கூடிய நிலை ஏற்படும் என்றால் என் போன்றவர்கள் படிக்க முன்வருவார்களா என்பதே ஒரு மிகப்பெரிய கேள்விதான். இப்படிப்பட்ட வாழ்க்கைமுறைக்குள் இருந்துகொண்டுதான் நான் இந்த விருதை இப்பொழுது பெற்றிருக்கிறேன்.
நான் எதைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று இப்போது உங்களால் துல்லியமாக உணரமுடியும் என்று நான் நம்புகிறேன். பார்வைமாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாசிப்பாளர்கள்தான். எங்களைப் படைத்த கடவுள்கூட ஒரு குறைபாட்டுடன்தான் எங்களைப் படைத்திருக்கிறார். அந்தக் குறைபாட்டையும் மீறி நாங்கள் வளர்வதற்கு எங்களின் கரங்களைப் பிடித்துத் தூக்கிவிடக் கூடியவர்கள் வாசிப்பாளர்கள்தான். அத்தகைய வாசிப்பாளர்களுக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
சில பக்கங்களைப் படிப்பதற்கு உயிரைப் பணயம் வைக்கும் நாங்கள் சில நேரங்களில் சில மனிதர்களால் தன்மானத்தையும் பணயம் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றோம். நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். எனக்கே அன்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒரு புத்தகத்தைப் படிப்பதற்காக நாங்கள் குறிப்பாக பார்வை மாற்றுத் திறனாளிகளான பெண்கள் எவற்றையெல்லாம எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நீங்களே பாருங்களேன்.
நான் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த காலம் அது. எனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்த இடமும் அங்குதான். எங்கள் இருவருக்குமிடையே நட்பு மலர்ந்ததே ஒரு வித்தியாசமான உரையாடலிலிருந்துதான். ஒருநாள் வெண்பா, புத்தகம் படிப்பதற்கு, வாசிப்பாளர் வேண்டும் என்று என்னிடம் கேட்டார். என்னுடன் படிக்கக் கூடியவர் என்பதனால் நானும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினேன். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுப் பார்த்தீர்களா என்றும் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் முதலில் என்னைக் கோபப்பட வைத்தது. பின் என் போன்றவர்களின் வாழ்வில் இது எப்போதாவது நடக்கக் கூடியதுதான் என்று என் அறிவு உணர்த்தியது. வெண்பா என்னிடம் கூறியதை அப்படியே உங்களிடம் கூறுகிறேன்.
இன்குலாப் எழுதிய ஔவை என்ற நாடகத்தை வெண்பா படிக்க விரும்பியிருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாக முயன்றும் வாசிப்பாளர்கள் கிடைக்கவில்லை. தெரிந்த ஒரு நண்பரிடம் படித்துக் காட்ட முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் உங்கள் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன். என் தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய முடியுமா என்று கேட்டிருக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று வெண்பா கேட்க, என்னுடன் பாலுறவில் ஈடுபட நீங்கள் உடன்படுவீர்களா என்று சொல்லியிருக்கிறார். வெண்பா மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்து விட்டிருக்கிறார். என்னிடம் அதைப் பற்றிக் கூறும்போது வெண்பா சிறிதளவுகூட கோபத்தையோ வருத்தத்தையோ வெளிப்படுத்தவில்லை. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. உங்களுக்குக் கோபம் வரவில்லையா என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் நம்மைப் போன்றவர்கள் படிப்பதற்காக சில நேரங்களில் இத்தகைய சூழல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இவர் இல்லையென்றால் வேரொருவர் எனக்குப் படித்துக் காட்டப் போகிறார். நான் ஏன் கலங்க வேண்டும். ஆயிரம் தடைகள் வந்தாலும் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யத்தான் போகிறேன் என்று கூறினார். அவரது இந்தக் கூற்று அவர்மேல் எனக்கு இருந்த மதிப்பை பன்மடங்கு உயர்த்தி வாழ்க்கைத் துணையாகக் கொள்ள வைத்தது.

நாங்கள் எத்தகைய சிரமங்களை எதிர்கொள்கிறோம் என்று இப்பொழுது நன்றாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். எனது உரை உங்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கலாம். என் போன்றவர்களின் துயரம் மிகுந்த வாழ்வை எண்ணி ஒருசொட்டுக் கண்ணீரும் விட்டிருக்கலாம். எங்களுக்குத் தேவையானது உங்களின் அனுதாபத்திற்கும் மேலான ஆதரவே. அத்தகைய ஆதரவு கிடைக்குமானால் துயரம் மிகுந்த எங்கள் வாழ்வு ஒளிமயமாக மாறும். என் போன்றவர்கள் படிப்பதற்காக பலமணி நேரம் பயணித்துச் செல்லும் நிலை மாறவேண்டும். சமூகத்தில் வாசிப்பாளர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும். கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் ஒலிநூலகங்களையும் மின்நூலகங்களையும் அமைப்பதன் மூலம் பார்வைமாற்றுத் திறனாளிகளின் வாழ்வு மேம்படும். எழுத்தாளர்கள் நூல்களை வெளியிடும்போது ஒலிநூல்களாகவும் அவற்றை வெளியிட வேண்டும். பொது நூலகங்களில் பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கு படிப்பதற்கென்று தனி அறை ஒதுக்கப்பட வேண்டும்.
இத்தகைய மாறுதல்கள் சமூகத்தில் ஏற்படும்பொழுது பார்வைமாற்றுத் திறனாளிகளின் கல்விபயிலுதல் அதிகமாகும். அதன்மூலம் என்னைப்போன்ற பல பார்வைமாற்றுத் திறனாளிகள் வருங்காலத்தில் இவ்விருதைப் பெறுவதற்கான சூழல் ஏற்படும். இத்தகைய சூழல் தமிழ்மொழியில் மட்டுமல்லாமல் ஏனைய மொழிகளிலும் உருவாக வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன்.
நன்றி.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Post Comment