அவள் மட்டும் வரவே இல்லை
முனைவர். இரா பெரியதுரை..
காலம் மகிழ்ச்சியை கொடுக்கும் போது வாழ்க்கை சுகப்பட்டு விடுகிறது. அதே காலம் மகிழ்ச்சியை பறித்துக் கொள்ளும் போது வாழ்க்கை துயரப்பட்டு விடுகிறது. விதை விதைத்து, நாற்று நட்டு களை எடுத்து, கதிர் அறுத்து நெல்மணிகளை வீடு கொண்டு வரும்போது, வீடு நிறைகிறதோ இல்லையோ உழவனின் நெஞ்சம் நிறைந்துதான் போய் விடுகிறது. இல்லை என்று சொல்லிவிட்டாலும் அடுத்த முறை கொடுக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எப்போதும் உழவனின் இதயத்தில் துளித்து கொண்டே இருக்கும்.ஆறு மாதத்திற்கு ஒருமுறை அள்ளிக் கொடுக்கும் தாமிரபரணி தாயின் முலைப்பால் இன்று வரை வற்றவே இல்லை. அந்தத் தாயை என் இருள் பூசிய கண்களில் தொட்டு வணங்கி விட்டு,நீண்ட நாள் என் நெஞ்சில் தூங்கிக் கிடக்கும் அந்தக் கதையை சொல்லி விடுகிறேன்

அந்த கொழிஞ்சி ஓடை பக்கத்தில் தான் எங்களுக்கு ஒரு நான்கு ஏக்கர் நிலம் இருந்தது. நல்ல வளமான வண்டல் மண் படிந்த நன்செய் நிலம் அது. அந்த நிலத்தில் விளையும் வாழையும் நெல்லும்தான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தது.மேற்குவரப்பில் ஒரு மஞ்சனத்தி மரமும் கிழக்கு பரப்பில் இரண்டு மலைவேம்பு மரமும் தான் கொளுத்தும் வெயிலில் எங்கள் எல்லோருக்கும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தாய் மடியாய் இருந்தது. கொக்கு கூட்டங்களும், தூக்கணாங்குருவி கூட்டங்களும், மைனாக்களும், இன்னும் என்னென்னவோ பறவைகள் அந்த மரங்களின் கிளைகளை எந்த வித பேதமும் இல்லாமல் பகிர்ந்து கொண்டு முகாம் இட்டுக் கொண்டிருந்தன.
என் பெற்றோருக்கு நான் தான் கடைசி கண் தெரியாத பையன். எனக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் உண்டு. அவர்கள் இருவருக்குமே புறா முட்டைகளைப் போல கண்கள். அதனால்தான் அவர்கள் பார்வை உள்ளவர்கள். அந்தக் கண்ணு தெரியாத பையன் அவ்வளவு வேலையே செய்கிறான் புறா முட்டையை போல கண்ணை வைத்துக்கொண்டு ஒரு வேலை செய்வது கிடையாது ரெண்டு பேரும். என் அம்மா என் அண்ணனையும் என் அக்காவையும் பார்த்து அடிக்கடி அப்படித்தான் சொல்வாள்.அதனால்தான் அவர்களின் கண்களை நான் புறா முட்டை என்று குறிப்பிட்டேன். அவர்கள் இருவருமே பள்ளிக்கூடம் சென்று விடும் நிலையில் எனது பகல் பொழுதுகள் எல்லாம் என் பெற்றோருடன் வயல் காட்டிலேயே கழிந்து போனது. வயல்வெளிகளில் உள்ள மேடு பள்ளங்களில் நான் தடுமாறி கீழே விழும்போது என் உடலில் காயங்களை ஏற்படுத்தினாலும், அந்த அமிர்தமான ஓடை நீரும் பசும் அருகம்புல்லும் என் காயங்களுக்கு மருந்து போட்டு விடும். நான் தனித்து விடப்படும் போதெல்லாம் அந்த சலசலக்கும் நீரோடைகளும், அந்த மரக்கிளைகளில் இருந்து பேசிக் கொள்ளும் பறவைகளும்,காற்றில் அசைந்து என் உடலை தொட்டுத் தொட்டு பேசும் நெற்கதிர்களும் தான் எனக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தன அந்த நாட்களில்.
அது அந்த வருடத்தின் இரண்டாம் போக அறுவடை காலம். கோடையின் தொடக்கம் பங்குனி மாதம். கரிசல்பட்டி ஆட்கள் தான் எங்களுக்கு வழக்கமாக அறுவடை செய்து கொடுப்பார்கள். அறுவடை காலம் வந்தாலே, யாருக்கும் ஒருவரோடு ஒருவர் பேச நேரம் கிடைக்காது. ஆனாலும் மகிழ்ச்சியாய் எதையோ பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். வழக்கமாக பசிப்பதை விட அந்த நாட்களில் எல்லோருக்குமே பசி அதிகமாகவே இருக்கும். சாப்பாடு அதிகமாகவே தேவைப்படும். சாதாரண உப்பு ஊறுகாய் கஞ்சிக்கு கூட அவ்வளவு சுவையும் மனமும் அந்த நாட்களில் வந்து விடும். கஞ்சத்தனமான சம்சாரிகள் கூட உணவு படைப்பதில் கூலி ஆட்களுக்கு எந்த குறையும் வைத்து விட மாட்டார்கள்.
நடவு, பயிருக்கு உரம் இடுதல், மருந்து தெளித்தல், போன்ற சில வேலைகளை தவிர விவசாயத்தில் எல்லா வேலைகளையும் நானும் அழகாக செய்வேன். அந்த கூலி ஆட்களில் ஒருத்தி பெயர் செல்வ சாந்தி. என் தலையை வருடியபடி அடிக்கடி சொல்வாள் எங்க ராசாவுக்கு கடவுள் கண்ணை மட்டும் கொடுக்கலையே நல்ல மதிய கொடுத்து இருக்கானே. அவளின் அந்த பாசமான வருடலில் ஏதோ ஒரு இனம் புரியாத சொல்லத் தெரியாத ஏதோ ஒன்று கலந்திருக்கும். அவள் என் தாய் வயதை ஒத்து இருப்பாள். அவள் வேதக்காரி. அவள் கதிர்கட்டுகளை தூக்கும் போதும் கடினமான வேலைகளை செய்யும் போதும் இயேசுவே இரட்சியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பாள். நானும் அந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்ல பழகிப் போனேன். வேதக்காரப் பெண்ணைதான் உனக்கு கட்ட வேண்டும் என்று என் மதினி முறை உள்ள உறவுக்கார பெண் அடிக்கடி என்னை பார்த்து சொல்வாள். எங்க மரிய ராணியை நான் உனக்கு கட்டித் தாரேன் ராசா என்று செல்வ சாந்தி அப்போது எல்லோரிடத்திலும் சிரித்துக்கொண்டே சொல்வாள். அவள் மகளின் பெயர் மரியராணி என்பதை அப்போது நான் அறிந்து கொண்டேன்.ஒவ்வொரு முறையும் செல்வ சாந்தி அறுவடைக்கு வரும்போது எல்லாம் மரிய ராணியை பற்றி நான் தவறாது விசாரித்துக் கொள்வேன். அறுவடை காலங்களை விட ஒரு மகிழ்ச்சியான காலம் இயற்கையை நேசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இருந்து விட வாய்ப்பு இல்லை. ஐஸ் விற்பவர்கள் மிட்டாய் விற்பவர்கள் பாசிமணி ஊசி விற்பவர்கள், ஆயிரக்கணக்கில் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நெல் தரகர்கள், கிளி ஜோசியம் பார்ப்பவர்கள் சாமக் கோடாங்கிகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லோருக்கும் கூலியாக உள்ளவர்கள் நெல்லை மட்டுமே கொடுப்பார்கள்.
அறுவடை தொடங்கி 10 20 நாட்கள் எல்லோருக்குமே நல்ல வேலை இருக்கும் யாருக்கும் இருக்க கூட நேரம் கிடைக்காது. அதற்குப் பிறகு கோடையை கொண்டாட வேண்டியதுதான். கோடையில் நடக்கும் திருமணங்கள் கோயில் கொடை விழாக்கள் மஞ்சள் நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்கள் இப்படி நிறைய இருக்கும் அந்த கோடை காலத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல். வழக்கமாக அறுவடை நாட்களில் வந்து தங்கும் நாடோடி சமூக பாசி மணி ஊசி விற்பவர்கள் கோடை முடிந்து வைகாசி மாத காற்றடிக்கும் வரை எங்கள் ஊர் ரயில் நிலையம் அருகே கூடாரங்களில் தங்கி இருப்பார்கள். அந்த சமூகத்தில் உள்ள ஆண்கள் பகல் நேரங்களில் காடுகளுக்கு முயல் பறவைகளை வேட்டையாட சென்று விடுவார்கள். பெண்கள் எல்லோருமே பாசி மணி ஊசி விற்பதற்காக கிராமங்களுக்குளே வந்து விடுவார்கள்.
அவர்களில் சில பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்திருப்பார்கள். வயதுக்கு வந்த சில பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் கூட நடந்திருக்கும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் அவர்களின் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை சந்தித்து இருப்பார்கள். எங்கள் கிராமத்தில் வயதுக்கு வந்து பல ஆண்டுகள் திருமணமாகாத பெண்களும் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் போது எங்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கும். என்ன ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவர்கள் தங்கி இருக்கும் ஒவ்வொரு மாலை பொழுதும் மகிழ்ச்சியும் குதூகலமும் தான் அங்கே குடி கொண்டிருக்கும்.
நான் என்னுடைய நண்பர்கள் சிலரோடு அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அடிக்கடி செல்வேன். பறவைகளையும் சிறிய விலங்குகளையும் உணவுக்காக அவர்கள் சுடும் வாசனை அப்பப்பா சொல்ல வேண்டாம். அவர்கள் சுடும் கோதுமை ரொட்டி இருக்கிறதே அதற்கு அவ்வளவு சுவை.அவர்களில் சில ஆண்களும் பெண்களும் எங்களோடு நெருக்கமாக பழகியும் விடுவார்கள். ஒவ்வொரு அறுவடை காலத்திலும் எங்களுக்கு நெருக்கமான அந்த சமூகத்தினரை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு நெருக்கமானவர்களில் சிலர், சில அறுவடை காலங்களில் வராமல் போவதும் உண்டு. அந்த சமூகத்தினரை சந்திக்க இன்னும் ஆறு மாதம் நாங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற துயரம் எங்களைத் தொற்றிக் கொள்ளும் அவர்கள் வரும் வரை. எனக்கு கண் தெரியாது என்பதால் இன்னும் அதிக நெருக்கமாகவே அவர்களில் சிலர் என்னிடம் பழகுவார்கள். என்னிடம் பேசுபவர்களின் எல்லோருடைய பெயருமே எனக்கு அத்துபடி. அவர்களின் குரலைக் கேட்டு அவர்களை நான் பெயர் சொல்லி அழைப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போகும். சாமி நான் யாருன்னு கரெக்டா சொல்லு சாமி. சிலர் என்னிடத்தில் மிகவும் ஆர்வமாக கேட்பார்கள். நான் அவர்களை தொட்டுப் பேசுவதை எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் விரும்ப மாட்டார்கள். என்னை திட்டுவதை விட அவர்களை ஏசி விடுவார்கள். ஆனாலும் நான் அவர்களிடம் பேசிக் கொண்டே இருந்தேன்.
அவர்களின் பெயர்கள் எல்லாமே மிக வித்தியாசமாக இருக்கும். திருப்பதி, டில்லி பாபு, மெட்ராஸ் மகேஸ்வரி, தஞ்சாவூர் பஞ்சவர்ணம்,இப்படி எந்த ஊரில் தங்கி இருக்கும்போது அவங்களுக்கு குழந்தை பிறக்கிறதோ அந்த ஊரின் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்வார்கள் அவர்கள் பெயரோடு. எங்கள் வீட்டில் என் அக்கா வயசுக்கு வந்து வீட்டில் பள்ளிக்கு போகாமல் இருந்ததால் அந்த சமூகத்தில் உள்ள பல பெண்கள் பொருட்களை விற்பதற்காக எங்கள் வீட்டுக்கு வருவார்கள். எங்கள் வீட்டிலும் அவர்களுக்கு நெல் சாப்பாடு போன்றவை அதிகமாகவே கொடுப்போம். ஓய்வு நேரங்களில் என் அக்கா பீடி சுற்றுவதால்,ஓய்வு நேரங்களில் அந்த பெண்களோடு பேசிக்கொண்டே பீடி சுற்றுவாள்.ஆண்களில் சிலர் புகை பிடிப்பதற்காக கழிவு பீடிகளை என் அக்காவிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். அந்தப் பெண்கள் பொதுவாக எல்லோருமே சிகப்பு நிறத்தோடு நல்ல அழகாகவே இருப்பதாக என் அக்கா அடிக்கடி சொல்வாள். அவர்களில் ஒரு பெண் என் அக்காவுக்கு மிகவும் நெருக்கமானவள். அவளின் பெயர் சில்க் செல்லம்மாள். மறைந்த சில்க் ஸ்மிதாவின் பரம ரசிகை அவள் அதனால் அவளின் பெயரை சில்க் ஸ்மிதா என்று எல்லோருமே அவளை அழைப்பார்கள். அவள் பேசும் போதும் பாடும் போதும் அவளின் குரல் அவ்வளவு இனிமையாகவே இருக்கும். சகலகலா வல்லவன் திரைப்பட பாடல் நேத்து ராத்திரி அம்மா அதை அவ்வளவு அழகாக பாடுவாள் அவள்.
சில்க் செல்லம்மாவுக்கும் அனேகமாக என் வயது தான் இருக்கும். அனேகமாக அவள் 20 வயதுக்குள்ளேயே தான் இருப்பாள் என்று நினைக்கிறேன். 20 வயதிலும் அந்த நாட்களில் நான் ஒரு அரை கால் சட்டையுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தேன்.அவ்வளவு வசதி எங்களுக்கு இருந்த போதிலும் எனக்கு அந்த கிழிந்த அறக்கால் சட்டை வெளியே போட்டுக் கொள்வதற்கு போதும் என்று என் பெற்றோர் நினைத்து இருப்பார்கள் போலும். உடம்பில் சட்டை இல்லாமல் அந்த வெயிலில் அலைவது எனக்கு சவுகரியமாகவே தெரிந்தது.நல்ல சட்டைகளும் கால் சட்டைகளும் எனக்கு இருந்த போதிலும் ஏதாவது நல்ல நாட்களில் மட்டுமே அதை நான் அணிய அனுமதிக்க பட்டிருந்தேன்.என் வயது பையன்கள் எல்லோருமே லுங்கி கட்டி இருப்பார்கள் ஆனால் நான் மட்டும் கால் சட்டையோடு அவர்களோடு அலைந்து கொண்டிருந்தேன்.மற்ற பையன்களைப் போல நீயும் லுங்கி கட்டி சட்டை போட்டிருந்தால் மகாராசா மாதிரி இருப்ப என்று சில்க் செல்லம்மாள் ஒருமுறை என்னிடத்தில் சொன்னாள். அவள் சொன்னதை கேட்ட நான் பிடிவாதமாய் லுங்கி வாங்கித் தரச் சொல்லி லுங்கியும் சட்டையும் எப்போதும் அணியத் தொடங்கினேன். அந்த சமூகத்து பெண்கள் எப்படிப்பட்ட ஆடையில் இருப்பார்கள் என்பதை நான் பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் மற்ற பையன்களைப் போல நாகரீகமாய் ஆடை அணிய வேண்டும் என்ற சில்க் செல்லம்மாவின் அக்கறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் என்னிடத்தில் மிகவும் அன்பாகவே பழகினால். நானும் அவளும் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியே பேசிக் கொண்டிருந்தோம்.
எங்கள் ஊர்க்காரர்கள் யாரும் என்னையும் அவளையும் தவறாக நினைப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது நாங்கள் பேசிக் கொள்வதற்கு மிகவும் சவுகரியமாக இருந்தது. என் அண்ணன் மட்டும் அந்த நாட்களில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அண்ணனின் கல்லூரி தோழிகள் சிலர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் நாகரீகமாக தமிழோடு ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியது எனக்கு பிடித்துப் போயிருந்தது அதே நேரத்தில் நான் மட்டும் இப்படி படிக்காமல் இருந்து விட்டேனே என்ற ஏக்கம் எனக்குள் இருக்கத்தான் செய்தது.
எழுதப் படிக்கத்தான் என்னால் முடியாது. ஆனால் பிறர் பேசுவதை கேட்டும், வானொலி மூலமாக பல நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருப்பதாலும், நான் நல்ல கேள்வி அறிவை பெற்றிருந்தேன். குடும்ப வரவு செலவு கணக்குகளை மனத்தால் போடும் திறமையை நான் பெற்றிருந்தேன். எங்கள் வீட்டில் அறுவடை கால ஏல சீட்டு நடத்துவார்கள்.சீட்டு போடுபவர்கள் யார் யார் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்ற கணக்கை மிக துல்லியமாக சொல்லி விடுவேன். பாளையங்கோட்டையில் பார்வையற்றோருக்கான ஒரு பள்ளி இருப்பதை பலர் சொல்லியும் என் பெற்றோர் மூலமாகவும் நான் கேள்விப்பட்டிருந்தேன். எங்களின் போலித்தனமான குடும்ப கவுரவம் என்னை கல்வி கற்பதிலிருந்து காவு வாங்கி இருந்தது.ஆனால் இப்போது நான் உணர்கிறேன் படித்திருந்தால் எப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கும் என்று.செல்லம்மாள் அவ்வப்போது எனக்கு செலவுக்கு பணம் கூட கொடுப்பாள்.என் குடும்பத்தைக் காட்டிலும் செல்லம்மாளின் சிநேகம் எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அவள் எங்கள் ஊரில் தங்கி இருந்து வேறொரு ஊருக்கு இடம் பெயரும் அந்த நாள் வந்தது. மாலை 6 மணிக்கு மேல் அந்த சமூகப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அதற்கு முந்திய நாளில் நானும் செல்லம்மாவும், எங்கள் ஊர் சுடலை கோயில் ஆலமர நிழலில் பேசிக் கொண்டிருந்தோம். அவளின் பிரிவு எனக்கு அழுகையை வரவழைத்திருந்தது. நான் அழுவதை பார்த்த அவளும் அழுதே விட்டாள். முதன்முறையாக என்னை அவள் தொட்டு அவள் பாவாடையின் தலைப்பால் என் கண்ணீரைத் துடைத்தாள்.
அவள் என்னை அன்பாய் கட்டி தழுவி கூட ஆறுதல் சொன்னாள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்ற எதார்த்தம் அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதே நேரத்தில் அவளின் இதயத்திற்கு என்னை புறக்கணிக்க தெரிந்திருக்கவில்லை. அவள் என்னை விட நெடுநெடுவென நல்ல உயரம், அவள் உயரத்திற்கேற்ற பொருத்தமான உடல் வாகை பெற்றிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடையில் ஆங்காங்கே சில கிளிசல்களும் தென்பட்டன. அவளின் உடலில் இருந்து வந்த நெடி, அவள் என்னிடம் நெருக்கமாக பழகும் வரை எனக்கு பிடிக்காது தான். ஆனால் இப்போது அந்த நெடி கூட இலுப்பை மலர்களின் நறுமணத்தைக் கொண்டிருந்தது. தரையில் ஊன்றி இருந்த அந்த ஆலமரத்தின் விழுதுகள்,நெருக்கமாய் இருந்து எங்களின் பரிசுத்தமான அன்பின் பரிமாற்றத்திற்கு வேலி அமைத்திருந்தது. நாங்கள் இருவரும் எந்த வகையிலையாவது சேர்ந்து வாழ வேண்டும் என்ற அவளின் வேண்டுதல் மட்டும் சுடலை தெய்வத்தை நோக்கி இருந்தது. நானும் அவளும் எந்த சூழ்நிலையிலும், வார்த்தைகளால் எங்கள் காதலை இதுவரை சொல்லி இருக்க வில்லை. எங்களின் இதயங்கள் மட்டும் அதை எப்படி உணர்ந்து இருந்தது? எங்களிடம் அதை சொல்லிக் கொள்வதற்கு எந்த பதிலும் இல்லை. நாங்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு கலையவுமே, கோடை வெயிலுக்கு அந்த ஆலமரக் கிளைகளில் இளைப்பாரிக் கொண்டிருந்த பறவைகள் நான்கு திசைகளை நோக்கியும் பறந்து ஓடின.
மறுநாள் காலை ஆறு மணி ரயிலுக்கு அந்தக் கூட்டமே தங்களின் கூடாரங்களை களைத்துக் கொண்டு புறப்பட்டு சென்றது. அடுத்த அறுவடை நாளை நோக்கி அவளின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்த ஆறு மாத இடைவேளையில் என் அக்காவுக்கு பக்கத்து ஊரில் திருமணம் நடந்திருந்தது. என் அக்கா கணவரின் தங்கையை என் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அடுத்த வைகாசி தென்மேற்கு பருவக்காற்று வீச பொதிகை மலையில் சாரல் கட்டி தாமிரபரணி ஆற்றில் புது வெள்ளம் வரத் தொடங்கியிருந்தது. செல்லம்மாவின் நினைவுகளோடு நானும் என் பெற்றோருடன் வழக்கமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். தை மாத அறுவடை நாட்களும் வந்தன. வழக்கமான அந்த கூட்டத்தோடு செல்லம்மா வந்திருந்தாள். நானும் அவளும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொண்டுதான் இருந்தோம். அவள் எழுத வாசிக்க கற்று வைத்திருந்தாள். அவள் மிக நேர்த்தியாக சேலையும் கட்டி இருந்தாள். செல்லம்மா நீ சேலையில ரொம்ப நல்லா இருக்குடி என்று பலரும் அவளைப் பார்த்து சொல்வதை கேட்டு நான் அதைத் தெரிந்து கொண்டேன். அவள் மேனியில் இருந்த பழைய நெடி இப்போது இல்லை. அவளிடம் சந்தன நறுமணம் வீசியது. இந்த மாற்றம் எப்படி என்று நான் அவளை கேட்டேன். ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக அந்த சமூகத்தில் உள்ள அவளைப் போன்ற இளம்பிள்ளைகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் மறுவாழ்வுக்காக சுய தொழில்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகளும் அரசு கட்டிக் கொடுக்கப் போவதாக அவள் என்னிடத்தில் சொன்னாள். அவள் எனக்காக ஒரு மூன்று புல்லாங்குழல்களையும் வாங்கி வந்திருந்தாள்.
நானும் அவளும் அந்த நாட்களில் எண்பதுகளில் இலங்கை வானொலியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த இனிமையான பாடல்களை ஒருவருக்கொருவர் பாடிக்கொண்டே இருந்தோம். செல்லம்மா; முத்துப்பாண்டியன்;உன்னோட நினைப்பாகவே இருக்கிறான் போகும்போது அவனையும் இழுத்துட்டு போயிடு. என்னோட முருகா மச்சான் விளையாட்டாக அவளிடம் சொன்னார். ஏன் சாமி நானே இங்கே வந்துடறேன் என்று அவள் அவருக்கு பதில் சொன்னாள். செல்லம்மா சொன்னதை அவர் விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அறுவடை நாட்கள் முடியவும் அவளும் அவளின் கூட்டத்தோடு புறப்படும் நாளும் வந்தது. அடுத்த கோடை அறுவடை நாளில் அவளின் வருகையை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருந்தேன். அந்த கோடை அறுவடை மாதமும் வரத்தான் செய்தது ஆனால் அவள் மட்டும் வரவில்லை. ஆனால் அந்தக் கூட்டம் மட்டும் வந்தது. நான் செல்லமாவை அவர்களிடம் விசாரித்தேன். அவள் ஏதோ படித்துக் கொண்டிருப்பதாக அவர்களும் என்னிடத்தில் சொன்னார்கள்.
என்னோட சில்க் செல்லம்மா எப்படியாவது என்னை பார்க்க வருவாள் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு பொய்த்துப் போகவில்லை. வருடங்கள் மட்டும் பெருக்கி பெருக்கி தேய்ந்து போகும் விளக்குமாரை போல தேய்ந்து கொண்டே போனது. ஆனால் அவள் மட்டும் வந்த பாடு இல்லை. என் உறவுகள் எவரிடத்திலும் கிடைக்காத அன்பு பாசம் பரிவு எல்லாமே, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இருந்தது.அன்பில் உயர்ந்தவர்கள் மட்டும் தான் உறவாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்து கொண்டிருந்தேன். சில வருடங்களில் என் அம்மா முதலில் இறந்து போனாள். நானும் என் அப்பாவும் மட்டும் அந்த பெரிய வீட்டில் இருந்தோம்.
என் அண்ணனின் மனைவி தான் எங்கள் இருவருக்கும் சாப்பாடு வேண்டாத வெறுப்பாய் கொடுத்துக் கொண்டிருந்தாள். குடும்பத்தில் ஒரு பெண் மட்டும் இல்லை என்றால் உணவுக்காகவும் அன்புக்காகவும் ஒரு ஆண் படும் பாட்டை என் அப்பாவின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். எதற்கும் கலங்கிப் போய் விடாத என் அப்பா என் அம்மாவின் பிரிவால் மிகவும் உடைந்து தான் போயிருந்தார். போதிய பணம் இருந்தது எங்களிடம் ஆனால் அரவணைக்க அன்பு காட்ட எங்கள் இருவருக்குமே யாரும் இல்லை.என் அப்பாவுக்குப் பிறகு என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பயம் எனக்கு அதிகமாகவே இருந்தது. எனக்கு எப்படியாவது ஒரு ஏழை எளிய பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் அப்பா விரும்பினார். படிக்காத பார்வை இழந்த என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. ஒரு கட்டத்தில் என் அப்பாவும் என்னை விட்டு இறந்து போனார். எனக்கு வயது இப்போ 40 இருக்கும். நான் இப்போது தனி மரம் அதுவும் பட்ட மரம். அடுத்த வேளை உணவுக்கு என் அண்ணனை எதிர்பார்த்து நிற்கும் நிற்கதியற்றவன். அறுவடை நாட்களும் வசந்த காலங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. ஏன் அவள் மட்டும் வரவே இல்லை?
தொடர்புக்கு,
9442715777
Post Comment