எல்லாம் இதற்குத்தான்
ம.சோனியா

அன்று இரவிலிருந்தே குமாருக்கு உறக்கம் இல்லை. எல்லாம் மூத்த மகள் கவிதாவின் நினைப்புதான். என்ன செய்வதென அறியாமல் சுவற்றில் மாட்டப்பட்ட விளக்கைப் பார்த்தான். மங்கல் ஒளி கண்ணைக் கூசியது. சற்றுத் திரும்பி ரவியின் பக்கமாகச் சாய்ந்தான். கவிதாவும் மனைவி மலரும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர். காலை வெயில் முகத்தில் படவே கண்ணைத் தேய்த்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தான் குமார். கண்கள் சிவந்திருந்தன. தலையணைப் போர்வையை மடித்து வைத்துவிட்டு, நிலைவாசல் கதவருகே கன்னத்தில் கை வைத்தவாறு அமர்ந்தான்.
அடுக்களையிலிருந்து மலரின் குரல், “என்ன இப்ப நடந்துச்சு, கப்பலா கவுந்துடுச்சு. காலையில இருந்து இப்படி உட்கார்ந்து உசிரை வாங்குற ஒரு மகளுக்கு பண்ணுறதுக்கு முனங்குறியே…” வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் உதிர்த்துக் கொண்டு இருந்தாள். குமார் மலரின் பேச்சைக் கேட்க முடியாமல் உள்ளே வந்து கவிதா அருகே அமர்ந்து தலையை நீவிக் கொண்டு இருந்தான்.
‘இப்பத்தான் பொறந்த மாரி இருக்கு, உன்னக் கையிலே வெச்சு முத்தங்கொடுத்து கொஞ்சுன நாளெல்லாம் கெனாப்போல இருக்கு. பெரிய பொண்ண ஆயிட்டயே. நாளு எப்புடித்தான் போச்சோ?’ என்று மனத்துக்குள் பல எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிளைத்தன.
குமார் கூலி வேலை செய்பவன். அன்றாடம் வாங்கி வரும் 60 ரூபாய் பணம் குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இருக்கும். மலர் அக்கம் பக்கத்தில் வேலைக்குத் தேடினாலும் சரியான வேலை அமையவில்லை. இருந்தாலும் குமார் இருக்கும் குடியிருப்புப் பகுதி பாதுகாப்பு அற்றது என்னும் காரணத்தாலும் வீட்டில் இருக்கும் நிர்ப்பந்தம் அவளுக்கு. கவிதா, ரவி இரண்டு குழந்தைகள்தான் குமாருக்கு. இருவரும் அருகிலிருக்கும் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ஆங்கிலவழிக் கல்வி பயில வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் குடும்பச் சூழலால் அந்த எண்ணமும் கரைந்துப் போனது. இப்படிப் பலவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தான். மகள் கவிதா விழித்து, “என்னப்பா வேலைக்குப் போகல” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே அவிழ்ந்த கூந்தலைத் திருகி கொண்டையிட்டாள். படுத்த பாய், தலையணை, போர்வையை மடிக்க ஆரம்பித்தாள்.
மலர், “மணி என்ன ஆவுது? வயசுப்பொண்ணு எப்ப எந்திருக்குற” என்று கடுமையான குரலில் கேட்டுக்கொண்டே அருகில் தூங்கிய ரவியை எழுப்பி, “பால் பாக்கெட் வாங்கி வாடா செல்லம்” என்று கெஞ்சலாகக் கேட்டாள். கையை உதறிவிட்டான் ரவி. விசில் சத்தம் கேட்டதும் குப்பைக் கூடையை எடுத்துக் கொண்டு தெரு முனைக்கு வேகமாக ஓடினாள் மலர்.
குமார் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் சிறியதுதான். பெரிதாக வசதியில்லை. ஒரு கழிவறைக் கூடம்தான். எல்லோரும் காத்திருந்துதான் போக வேண்டும். வெயில் காலத்தில் எப்படியாவது வீட்டில் இருந்து சமாளித்துவிடலாம். மழைக்காலத்தில் சற்று சிரமம்தான். வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அதை அள்ளி அள்ளிக் கொட்டியே இரவு கழியும்.
குப்பையைக் கொட்டிவிட்டு மலர் குமார் அருகே சென்றாள். குமாரிடம்,
“என்ன யோசிச்சு வச்சுருக்கீங்க. ஊரில இருக்குற அண்ணணுக்குச் சொல்லிட்டேன். வீட்டுல சும்மா சிம்பிளா சடங்கு வச்சுருக்கோமுன்னு.” என்று பேச்சை நிறுத்தினாள்.
“பெரிய கூட்டமெல்லாம் இழுத்துக்க வேணாம். முக்கியமான ஆளுங்களுக்கு மட்டும் சொன்னா போதும்” என்றான் குமார்.
“ஆனா இப்ப பணத்துக்குதான் என்ன பண்றதுன்னு புரியல. யாரு கிட்டயாவது கடனா கேட்டுப் பாருங்களேன்.”
மலர் இப்படிச் சொன்னதும் குமாருக்கு உடனே முதலாளி நினைவு வரவே, ‘நீயும் என்னுடன் வா மலர்’ எனச் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றான். ‘நான் எதற்கு?’ என்றாள் மலர்.
“இல்ல வா. அவரு யாரையும் நம்ப மாட்டாரு. நீ வந்தா எதாவது கொடுப்பாருன்னு நம்பிக்கைதான். சம்பளப் பைசால புடிச்சுக்க சொல்லலாம்” என்று பேசிக்கொண்டே கொடியில் தொங்கிய சட்டையைப் போட்டுக் கொண்டான். சட்டை கசங்கியிருக்கவே கையாலே அதனைத் தேய்த்துக்கொண்டு தலை சீவினான். மலர் தன்னிடம் வைத்திருக்கும் நல்ல சேலையில் ஒன்றை எடுத்துக் கட்டிக்கொண்டு புறப்பட்டாள். பேருந்து நிறுத்தம் அருகே இருந்தமையால் நடந்துச் சென்றனர். போகும் வழிநெடுக, ‘முதலாளி போனவுடன் என்ன செய்வாரோ? அவமானப்படுத்தாமல் இருந்தால் சரி.’ பல கேள்விக் கணைகள் எழுந்தன குமாருக்கு.
“என்ன யோசனை?” மலர் குறுக்கிட்டாள். “நல்லதே நடக்கும் வாங்க.”
மலரின் ஆறுதலால் விரைவாக நடந்தான். இவ்வளவு காலம் வறுமையின் சூழலில் வாழ கற்றுக் கொண்டுவிட்டாள் மலர். ஓரளவு வசதியான குடும்பப் பெண்தான். குமாரும் நல்ல வேளையில்தான் இருந்தான். தவறான நண்பனின் செயலால் காட்டிக் கொடுக்கப்பட்டுத் துரத்தப்பட்டவன். காலம் புரட்டிப்போட திருச்சியில் வேலைக்குச் சேர்ந்தான். அங்கும் சரிப்படவில்லை. சென்னைக்கு வர வேண்டும். அங்கே போய் ஏதாவது கூலி வேலை பார்த்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற மலரின் வார்த்தையைத் தட்டாமல் வந்து சேர்ந்து வருடங்களும் ஓடின. பேருந்து பழுதியைப் பரப்பிக் கொண்டு வந்து நின்றது.
‘குமார் ஆர். கே .நகர் 2’ என டிக்கெட் எடுத்தான். கூட்ட நெரிசலால் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. கருவாட்டுக் கூடையுடன் ஒருவர் ஏறி, “அம்மா கொஞ்சம் அங்க நகர்ந்து போங்கம்மா” என்றதுமே மலர் விசுக்கென பெண்கள் இருக்கும் இருக்கைப் பக்கமாய் நகர்ந்தாள். கருவாடு வாடை குமாருக்குக் குடலைப் புரட்டியது. குமாருக்கு முதலாளி குறித்த எண்ணம் மீண்டும் குடிகொண்டது. நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கினர். பெரிய மேம்பாலச் சாலை வழியே நடந்து 2ஆவது தெருவில் திரும்பினான். மதிய நேரம் என்பதால் வெயில் சற்றுக் கடுமைதான். பெரிய கருப்பு நிறக் கதவு. உள்ளே இரண்டு வேட்டை நாய்கள். வாட்ச்மேன், “என்ன யாரப் பாக்கணும்?” என்று அதட்டும் குரலில் கேட்டார். கறுப்பு நிறம், பெரிய மீசை ஐயனார் போல இருந்தார். குமார், “முதலாளி…” என மெல்லமாக உச்சரித்து எச்சிலை முழுங்கினான். தனக்குரிய அடையாள அட்டையை நீட்டினான். புகைப்படம் ஓரம் சற்று நசுங்கியிருந்தது.
நம் தொழிற்சாலையில்தான் வேலைப் பார்க்கிறானா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இருவரையும் “இருப்பா வெயிட் பண்ணு. உள்ள ஒரு மீட்டீங்குல பிசியா இருக்காரு” என்றான் வாட்ச்மேன் கடுகடுத்த குரலில்.
மலர், “இப்படி வா. இங்க உட்காரு” என்று புல் தரையில் அமரச் செய்தாள். இரண்டு மணி நேரமாகியும் முதலாளி அழைக்கவில்லை.
வியர்வை வழிய முந்தானையில் துடைத்துக் கொண்டிருக்கும் மலரைப் பார்த்து கண் கலங்கினான் குமார்.
“முதலாளி உங்கள கம்பனிக்கு வரச் சொல்றாரு. போயி பாருங்க” என்றான் வாட்ச்மேன்.
“வாங்க கம்பனிக்குப் போயி பாக்கலாம்” என்றாள் மலர். இருவரும் கம்பனிக்குச் செல்லும் பேருந்தில் ஏறினர். கூட்ட நெரிசல். காலை சரியாகச் சாப்பிடாததால் வயிறு குமட்டிக்கொண்டு வந்தது குமாருக்கு. கம்பனி நிறுத்தத்தில் இறங்கினர் இருவரும். அங்கே சென்றும் ஒரு மணிநேரம் காத்திருந்தனர்.
“முதலாளி இன்னும் வரல போல. பேசமா போன் போடுங்க” என்றாள் மலர்.
“அது சரியா இருக்குமா?” என்றான் குமார்.
“அதெல்லாம் எல்லாம் சரியா வரும். பேசிப் பார்க்கலாம். போடுங்க.” என்றவள் முந்தானையால் வழிந்த வியர்வையைத் துடைத்தாள். குமார் அழைப்பு விடுத்தான். துண்டிக்கப்பட்டது. மறுதடவை முயற்சி செய்தான். அதுவும் கைவிட்டுப் போனது. ஹாரன் சத்தம் காதைக் கிழிக்க கருப்பு நிறக் கார் வந்து கம்பனி வாசலில் நின்றது. வெள்ளை நிற வேட்டியுடன், நல்ல நிறத்தில் உயரமாக ஒருவர் இறங்கினார்.
“ஏ… மலர். இதா முதலாளி” என்றவுடன் மலர் தரையிலிருந்து எழுந்து நின்று பரபரக்க முழித்தாள். இருவரையும் பார்த்தவர் பார்த்தும் பார்க்காதது போலக் கடந்தார்.
குமார் அவரைத் தொடர்ந்து செல்லவே, “என் ரூமுக்கு வாங்க” எனக் கையசைத்துவிட்டு நகர்ந்தார். இருவரும் அவரது அறைக்குச் சென்றனர். உள்ளே வந்தவர்களிடம், “என்ன விசயம் சொல்லுங்க? எனக்கு நிறைய வேல இருக்கு” என்று வேகமாகக் கேட்டார். “என்ன லீவு? நீங்க வேலைக்குப் போகல?” அடுத்தடுத்த கேள்விகளுக்குத் தயங்கினான் குமார்.
“இல்லிங்க ஐயா. எம் மவ பெரியவ ஆயிட்டா, செலவுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது. அதா வாங்கலாமுன்னு…” என்று தயங்கினான்.
உடனே அருகே இருந்த மலரை பார்த்தான். உடனே மலரும், “ஐயா நீங்க கொடுத்து உதவுனா புண்ணியமாயிருக்கும்” என்றாள். சட்டென அலமாரியைத் திறந்து 500 ரூபாயை எடுத்து கொடுத்தார். “சரி எல்லா வேலையையும் முடிச்சுட்டு வேலைக்கு வந்துருங்க” என்றார்.

“ரொம்ப நன்றிங்க ஐயா” என்றபடி இருவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். வீட்டிற்குச் செல்லும் பேருந்து வந்ததும் இருவரும் ஏறி உட்கார்ந்தனர். டிக்கெட் எடுக்கும் போது 500 ரூபாய் தாள் கையோடு வந்தது. அதை மடித்து வைத்துப் பார்த்த வண்ணமே வந்து கொண்டிருந்தான். இதற்குத்தானா இவ்வளவு பாடு?
Post Comment