தொல்காப்பியத்தின் புணர்ச்சி இயல் பெயராய்வு
முனைவர்க. தேவிபாலா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை,
மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி,
வாணியம்பாடி – 635 751.
📞 9025330835
தொல்காப்பியத்தில் புணர்ச்சிக்கோட்பாடுகளை உணர்த்தும் இயல்களின் பெயர்வைப்பு முறையில்
- உயிரீறு, மெய்யீறுப் புணர்ச்சியை விளக்கும் இயலுக்கு உயிர்மயங்கியல், மெய்மயங்கியல் என்று பெயர் அமையும்போது குற்றியலுகரப்புணர்ச்சியை விளக்கும் இயலுக்கு மயங்கியல் என அமையாமல் குற்றியலுகரப்புணரியல்’ என ஏன் பெயர்அமைக்கப்பட்டுள்ளது?
- ‘உயிர்மயங்கியல்’ என்று கூறும்போது ‘மெய்மயங்கியல்’ என்று கூறாமல் ‘புள்ளிமயங்கியல்’ என ஏன் பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது?
- குற்றியலுகரப்புணர்ச்சிக்கெனத் தனி இயல் அமைக்கப்பட்டது ஏன்?
என்ற கேள்விகளை முன்வைத்து இக்கட்டுரையானது ஆராயப்பட்டுள்ளது.
மயங்கியல்/புணரியல்
சொற்களின் (சொற்களின் உச்சரிப்பின்) அடிப்படையில் புணர்ச்சி அமைந்தால் அதனைப் புணரியல் என்றேப் பார்க்க வேண்டும் என்றக் கருத்தைச் சில நூற்பாக்கள் வெளிப்படுத்துகின்றன. குற்றியலுகர எழுத்து ஓர் தனி எழுத்து அல்ல. மெய்யின் மேல் ஊர்ந்துவரும் ( குசுடுதுபுறு ) உகரச்சொல்லின் அடிப்படையில் குறுகிய உகரச்சொற்கள் எனக் கூறப்பட்டிருந்தாலும் குற்றியரலுகர எழுத்திற்கு உள்ள ( ஈற்றயல் எழுத்து) முன் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு குற்றியலுகரம் வகைப்படுத்தப்படுகிறது. குற்றியலுகர வகைக்கு ஏற்பப் புணர்ச்சிகளும் நடைபெறுகிறது. அதோடு
“ இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே கடப்பாடு அறிந்த புணரியலான ” (தொல் . 37)
என்ற நூற்பாவில் குற்றியலுகரப் புணர்ச்சி தோன்றும் விதத்தினை மயங்கியலான என்று கூறாமல் புணரியலான என்றுக் கூறப்பட்டுள்ளது. குற்றியலுகரப் புணரியலில் கூறப்பட்டுள்ள திசைப்பெயர்களின் புணர்ச்சி, எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி, அளவுநிறைப்பெயர்ப் புணர்ச்சி மற்றும் மற்ற பெயர்களின் புணர்ச்சியை நோக்கும்போது குற்றியலுகர எழுத்துகளில் (கு,சு,டு,து,பு,று) உகரம் கெட்டும் குற்றியலுகர எழுத்திற்கு முன்னும் வருமொழிச்சொல்லிலும் உள்ள எழுத்துகள் திரிந்து ஒலிக்கிறதே தவிர அதன் குற்றியலுகர மெய்யெழுத்துகள் திரிந்து புணரவில்லை. உதாரணமாக
- கொக்குக்கால் – வேற்றுமைப் புணர்ச்சியில் தோன்றல்
- தெற்கு + கிழக்கு= தென்கிழக்கு – திரிதல் விகாரம்
எடுத்துக்காட்டு 2 இல்தெற்கு என்பதில் உள்ள குற்றியலுகர எழுத்து(கு) கெட்டு அதற்கு முன்புள்ள எழுத்தான றகரமெய் னகரமெய்யாகத் திரிந்து புணர்ந்துள்ளது. இவ்வாறு குற்றியலுகர மெய்யெழுத்துத் திரிந்து அமையாது அதற்கு முன்புள்ள எழுத்துத் திரிந்து அமைகின்றது. இல்லையெனில் குற்றியலுகர எழுத்து முழுவதும் கெட்டுப் புணருகிறது. ஆனால் குற்றியலுகர எழுத்தில் உள்ள மெய்திரிந்து புணருவதில்லை.
எழுத்துகள் மயங்கி வருவதே மயக்கம் என்பது அறிந்தது. குற்றியலுகர எழுத்துப் புணர்ச்சியில் உள்ள மெய்யெழுத்து மயங்கி வருவதாக ஒரு புணர்ச்சியும் நடைபெறுவதில்லை. இதனை “மயக்கம் என்பது மணியுள் கோத்த நூல்போல நிற்பது. நிலைமொழியீற்றுக் குற்றுகரம் வருமொழி நாற்கணங்களோடும் புணருமிடத்து எய்தும் திரிபுகளைத் தனக்கு முன்னும் பின்னும் நிற்கும் எழுத்துகளே பெறத்தான் திரிபுறுதல் இன்மை”(கோபாலையர், 1927, ப.134) என்றும் “சொல்லோடு சொல் புணரும்பொழுது அவை மயக்கவிதி ஒன்று மட்டுமன்றி அல்வழி வேற்றுமை என்னும் பொருள் நோக்கையும் அடிப்படையாகக்கொண்டு அமைவனவாகலின் புணரியல் என வேறுபாடுக் காட்டினார் எனல் தகும்” (இன்னாசி, 1983, ப. 105)என்றும் கூறப்பட்டுள்ளது. ஆக குற்றியலுகர எழுத்துகள் திரிந்து வராமையால் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சியை மயக்கம் என்றுக் கூறாமல் புணர்ச்சி என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
புள்ளி x மெய்
தொல்காப்பியர் நூல்மரபு இயலில் மெய்எழுத்துகள் பற்றிய நூற்பாவில்
“ னகார இறுவாய்ப்
பதின்எண் எழுத்தும் மெய்என மொழிப” (தொல்.9)
இதில் மெய்யெழுத்து என்றுக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதன்பின்
“மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல்” ( தொல். 105)
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (தொல். 15)
என மெய்யெழுத்தின் இயல்பே புள்ளியோடு நிற்பதுதான் என்றுக் கூறியிருக்கிறார். “புள்ளிப்பெற்று வருவதே மெய்யெழுத்தின் தன்மையாகும் புள்ளிபெறும் எழுத்தைப் புள்ளி என்றே அழைப்பது ஆகுபெயர்” (இலக்குவனார் சி., 1961, ப. 67) என்றுக் கூறியுள்ளார். எனவே மெய்யெழுத்தின் இயற்கை (இயல்பு) தன்மையுணர்த்தும் பொருட்டு புள்ளிமயங்கியல் என்று தொல்காப்பியத்தில் பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது.
குற்றியலுகரப் புணர்ச்சியின் தனித்தன்மை
குற்றியலுகர எழுத்தானது இறுதியில் உயிர் எழுத்தைப் பெற்றிருப்பதால் அதனை உயிர்மயங்கியலில் இணைத்திருக்கலாம். இல்லையெனில் தொல்காப்பியர் கால குற்றியலுகர எழுத்துகள் புள்ளி வைத்தே எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் இதனைப் புள்ளிமயங்கியலில் இணைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு இரண்டு இயல்களிலும் இணைக்காமல் தனி இயல் அமைத்திருக்கிறார் என்றால் குற்றியலுகரச் சொற்களின் பயன்பாடு நூற்பாக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது புலப்படுகிறது. நன்னூலாரைப் போன்றே குற்றியலுகரப் புணர்ச்சியை உயிர்மயங்கியலில் இணைத்திருந்தால் அதனை முழுமையாக விளக்கியிருக்க முடியாது. நூற்பாக்களின் எண்ணிக்கையும் நீண்டு இருக்கும். இது ஒருபக்கம் இருந்தால் அதிகாரங்களை ஒன்பது ஒன்பதாகப் பிரித்தல் என்ற ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க முடியாமல் போயிருக்கும்.
மேற்கூறியக் காரணங்களெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர காரணத்தை ஆராய்வோமேயானால் குற்றியலுகர எழுத்து பொருள் வேறுபாட்டை உணர்த்தும் ஒரெழுத்தாக இருந்திருக்கிறது.
“ தொல்காப்பியரின் காலத்தில் குற்றியலுகரம் ஓரொலியனாக அமைந்தது மட்டுமன்றி அது செய்யுள் எழுத்தாகவும் கருதப்பட்டது. அதனாலே தொல்காப்பியர் குற்றியலுகரம் புணரும் வகைகளைக் கூற ஓர் இயலையே தனியாக அமைத்துள்ளார்” (சண்முகதாஸ். அ, 2008, ப.121) இங்கு குற்றியலுகரம் ஒலியன் என்றுக் கூறப்பட்டுள்ளதால் ஒலியனைப் பற்றி ஆராயப்பட வேண்டியுள்ளது. எல்லா எழுத்தும் ஒலியன் என்று கூறமுடியாது உச்சரிப்பில் மாறுபாடு காட்டும் ஒலியே ஒலியன் எனப்படுகிறது.
ஒலியனின் சிறப்புநோக்கி ஆராயக் குற்றியலுகர ஆறு எழுத்தும் ஒவ்வொன்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளை உடையது என்பது புலனாகிறது. இதோடு “சாதாரண ஒலி ஒலியன் ஆகாது. பொருள் வேறுபாடு காட்டும் பொழுதுதான் அது ஒலியனாகிறது” (முத்துச்சண்முகம், 1998, ப. 36) என்றுக் கூறுவதிலிருந்து ஒலியனின் முக்கியத்துவம் பெறப்படுகிறது. தொல்காப்பியர் எழுத்துகளின் நுண்மையான ஒலிப்பு முறையைப் பெற்றிருக்கிறார் என்பது குற்றியலுகரப் புணர்ச்சியை நோக்கும்போது புலனாகிறது. எந்த இடத்திலெல்லாம் ஒலி குறுகி ஒலிக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கெனத் தனிஇயல் அமைத்ததிலிருந்து அறிய முடிகிறது. இதனை “தமிழ்நூலார் குற்றியலுகர ஒலி நுட்பத்தை நன்கு அறிந்திருந்தனர் என்பது தொல்காப்பியர் இதற்கெனத் தனிஇயல் வகுத்து விரித்துக் கூறியிருப்பதிலிருந்தே நன்கு தெளியலாகும்” (இலக்குவனார். சி., 1961, ப. 70) என்பதிலிருந்தும் அறிய முடிகிறது.“ உயிரீராயினும் புணர்ச்சியில் அதன் சிறப்புக் கருதியே தனி எழுத்தாக வகுக்கப்பெற்ற குற்றியலுகர ஈற்றுச்சொற்களின் புணரும் முறையைக் குற்றியலுகரப் புணரியல் எனத் தனித்து விளக்குகிறார்” (ஆறுஅழகப்பன், 1927, ப.141) என்றும் ஒலியளவில் குற்றியலுகரம் உயிராக ஏற்கப் பெற்றாலும் புணர்ச்சிச் செய்கையினால் மெய்யெழுத்துகளை ஒத்துள்ளது.
மேற்கூறியக் கூற்றில் குற்றியலுகர எழுத்து உயிரீறு என்றுக் கூறப்பட்டிருந்தாலும் அது ஒரு தனியெழுத்து என்றுக் கருதவும் இடம்தருகிறது. “உயிர்த்தன்மை மெய்த்தன்மை இரண்டும் பெற்றுள்ளதோடன்றி ஒவ்வொன்றும் தத்தம் தன்மையினின்றும் மாறுபடாவாகலின் தனியெழுத்தெனக் கருதலே பொருத்தமாகும்” (ஜீன்லாரன்ஸ், 2001, ப.81) என்றுக் கூறி தனியெழுத்து என்றுக் கூறுவதற்குக் காரணம் கூறுகையில் மொழிமுதல் எழுத்து மற்றும் மொழிஇறுதி எழுத்துகளில் குற்றியலுகர எழுத்து தனியே கூறப்பட்டுள்ளது என்று விளக்கமும் தருகிறார். ஆனால், இவர் கூறுவது மொழி இறுதியெழுத்திற்குப் பொருந்தி வருமே தவிர மொழி முதலெழுத்திற்குப் பொருந்தி வருவதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ‘ந’கர மேறிய உகர (முறைப்பெயர்) குற்றியலுகரச்சொல் மட்டும் என்பது (நூற்பா எண் – 67) அறிய முடிகிறது. ஆனால், வேறொருக் காரணத்தை ஆராய்ந்தோமேயானால் சார்பு எழுத்துகளின் வகைகளைக் கூறும்போது குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்றுக் கூறியிருப்பார். இதனைக் கருத்தில் கொண்டு புணர்ச்சி குறித்த செய்திகளை ஆராயும்போது ஆய்தஎழுத்து மொழிஇறுதியாக வருவதில்லை. குற்றியலிகரம் மிகக்குறைவான இடங்களிலே புணர்க்கப்படுகின்றன. ஆனால் குற்றியலுகர எழுத்து அப்படியில்லை. அது மொழி இறுதியெழுத்தாக உள்ளது. அதிலும் பெயர்ச்சொற்களும், திசைப்பெயர்களும், எண்ணுப்பெயர்களும் அதிகமாக உள்ளன. இதனை “குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் பரவலான வழக்கும் அதற்கு தனிஇயல் அமைத்திடத் தூண்டியிருக்கலாம்” .( இன்னாசி, 1983, ப. 91) என்றும் “அளவுநிறை எண்ணுப்பெயர்கள் வழக்கில் மிகுதியாகப் பயின்று வருகின்றன. அவற்றைத் தனிப்பகுதியாக எடுத்துச்சொல்லும் அளவுக்கு அவை மிகுந்துள்ளன. எனவே தொல்காப்பியர் தனிஇயல் அமைத்தார்”(தட்சிணாமூர்த்தி. வை., ப.30) என்றும் கூறுவதிலிருந்தும் எண்ணுப்பெயர்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது.
குற்றியலுகர எழுத்துகள் உகர இறுதியெழுத்து என்பதைவிட அது தனியெழுத்தாக இருந்தமையாலும் பொருள்வேறுபாடு உணர்த்தும் ஒலியனாகக் கருதப்பட்டதாலும் குற்றியலுகர எழுத்தின் சிறப்புக் கருதியும் அதன் பயன்பாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டும் தொல்காப்பியர் குற்றியலுகரச் சொற்களின் புணர்ச்சிகளை விளக்கத் தனியே இயல் வகுத்திருக்கிறார் என்பது புலனாகிறது.
குற்றியலுகரப் புணர்ச்சியில் குற்றியலுகர மெய்யெழுத்து மயங்கி அமையாததால் புணரியல் என்றும் மெய்யெழுத்தின் வடிவமைப்பை சிறப்பிக்க புள்ளிமயங்கியல் என்றும் குற்றியலுகரச் சொற்களின் சிறப்புக் கருதியும் பயன்பாட்டுத் தேவையைக் கருதியும் குற்றியலுகரப் புணர்ச்சிக்குத் தனிஇயல் வகுத்தும் தொல்காப்பியர் இயல் வகுத்துப் பெயர் அமைத்துள்ளார்.
உதவிய நூல்கள்
- ஆறு அழகப்பன், (1927) இலக்கணக் கருவூலம். (முதற்பதிப்பு) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை.
- இலக்குவனார். சி., (1961). தொல்காப்பிய ஆராய்ச்சி. ( முதற்பதிப்பு) வள்ளுவர் பதிப்பகம், புதுப்பேட்டை.
- இளவழகன். கோ., (2003). தொல்காப்பியம், எழுத்ததிகாரம் (இளம்பூரணர் உரை). (முதற்பதிப்பு). தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
- இன்னாசி, (1983). எழுத்தியல் (மூன்றாம் பதிப்பு). அபிராமி பப்ளிகேஷன், சென்னை.
- கோபாலையர். தி.வே., (2017). எழுத்திலக்கணப் பேரகராதி 1, (முதற்பதிப்பு). வி.கே.பப்ளிகேஸன், சென்னை.
- சண்முகதாஸ். அ,(2008). தமிழ்மொழி இலக்கண இயல்புகள், (முதற்பதிப்பு) நியூ செஞ்சுரி புக் அவுஸ்,சென்னை.
- முத்துச்சண்முகம், (1998). இக்கால மொழியியல், (முதற்பதிப்பு). முல்லை நிலையம், சென்னை.
- ஜீன்வாரன்ஸ். செ, (2001). தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடுகள், (முதற்பதிப்பு). உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
Post Comment