இந்த நூல் என்ன சொல்லுது?
-தமிழ் மாணவன். சரண்ராஜ் மாசிலாமணி
“கங்கணம்” என்னும் சொல் திருவிழாக்களில் நினைவு மறவாமல் இருக்க கட்டும் கயிறு. ஒருவன் ஒரு செயலில் தீவிரமாக இருந்தால் உடனே யாராவது சொல்வார்கள் கங்கணம் கட்ட மாதிரி வேலை செய்ரான் பாரு. எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது நூலுக்குக் கங்கணம் என்ற பெயர் வைக்கும் பொழுதே தெரிந்து விடும். கங்கணத்துடன் தொடர்புடைய புதினமாக இருக்கக்கூடும் என்று தான். ஆனால் இதில் கங்கணம் சார்ந்த வேறொரு கருவை வைத்து எழுதியுள்ளார். எனது பார்வையில் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுமை என்று கூட சொல்லலாம். எனெனில் பெரும்பாலும் இக்காலத்தில் உள்ள இலக்கியங்கள் பெண்களை மையப்படுத்தி அவர்களின் துயரத்தைச் சொல்லும் வகையில் தான் அமைந்திருக்கின்றன. ஆனால் ஆசிரியர் ஆண்களின் துயரைச் சொல்லுகிறார் என்றால் அது புதுமை தானே.
ஓ! இப்படியும் இருக்கா?

கதையானது, குப்பன் என்னும் கூலிவேலை செய்பவரிடத்திலிருந்து தொடங்குகிறது. தனது மகனுக்குத் திருமணம் செய்ய பணம் வேண்டி தனது முதலாளியும் இப்புதினத்தின் நாயகனுமான மாரிமுத்துவிடம் கேட்க. தன்னை விட குறைந்த வயதிலுள்ள குப்பனின் மகனுக்கே திருமணம் ஆனால் தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் ஆறு மாதங்களுக்குப் பின் தருகிறேன் என்று கூறுவதாக தொடர்கிறது கதை. குப்பனின் மகன் மீது அவனுக்குப் பொறாமை என்று சொல்வதை விட ஏக்கம் என்று தான் சொல்ல வேண்டும். முப்பது வயதிற்கு மேல் ஆகியும் கூட திருமணம் ஆகாத ஒரு ஆணின் நிலை என்னவாக இருக்கும் என்பதை ஆசிரியர் நாசுக்காக கூறியுள்ளார் என்பதைப் பாராட்ட வேண்டும். தனது முதுமையின் வரவை எண்ணி அவன் அவ்வப்போது வருந்துவதும் அவற்றை மறைக்க ஒப்பனை செய்வதுமாக ஓடுகிறது கதை. அவரது தந்தை ஒரு மொடா குடிகாரன், தாயோ மகா பிடிவாதக்காரி என சாமானிய குடும்பங்களின் நிலையைக் கண்ணாடி போன்று எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர். இதில் மாரிமுத்துக்கு ஓரே ஆதரவு பாட்டி மட்டும் தான்.
அவனுக்குத் திருமணம் ஆகாததற்குக் காரணங்கள் சிறியவை என்றாலும் அது அவனைப் பெரிதும் பாதித்தது. அவற்றைத் திருத்த அவன் பெரிதும் கடினப்பட்டான். இருந்தும் என்ன பயன் எதுவும் மாறவில்லை. மாறியது மாரிமுத்து தான். அவனது அம்மாவை வெறுத்ததும் அதனால் தான். பலமுறை திருமண முயற்சிகள் எடுத்தும் ஒரு பயனும் இல்லை. திருமணம் செய்வதற்கு முன்பு பெண் கருப்பாக இருக்கிறாள் என்று காரணம் காட்டி வரதட்சணை அதிகமாக கேட்டதால் திருமணம் நின்று போனது. ஆணின் வீட்டைப் பார்க்க வந்த பெண் வீட்டார் மாரிமுத்துவின் விவசாய கோமன கோலத்தைப் பார்த்து, இவனுக்கா? பெண் தருவது என்ற கதைகள் பல உண்டு. தணவதி தாத்தா ஊருக்கே திருமணம் செய்து வைத்தாலும் தனது மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து பார்க்க முடியாதது மிகவும் சுவாரசியமான பகுதி. தனது தாத்தா வழி குடும்பத்துடன் இருந்த சண்டையை மறந்து தனக்குச் சேர வேண்டிய நிலத்தை அடைவதற்கு அவனது முயற்சிகளும் அதனால் பாட்டிக்கு ஏற்படும் பாதிப்பும் இந்த கதையின் முக்கிய திருப்பு முனைகளாக உள்ளது.
இப்படி கதை அவலமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது தான் இறுதியாக வந்தார் இராமன். தன் நண்பனுக்கு இருந்த துயரங்களை நீக்க ஒரு வழி சொன்னான் ஆனால் அதிலும் ஒரு சிக்கல். நண்பனுக்குப் பார்த்த பெண்ணிற்கு தந்தை யார் என்றே தெரியாது என்பது தான். எப்படியோ இதை மறைத்து திருமண ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்குகிறது. எப்படியோ மண்ணும் வருகிறது பெண்ணும் வருகிறாள் என்ற ஆனந்தத்தில் விட்ட பழக்கத்தை மீண்டும் தொடர்கிறான் மாரிமுத்து. அதுதான் கள்ளு மகிழ்ச்சியில் தனது உடல்நிலை சரியில்லாத பாட்டிக்கும் கொடுத்து மகிழ்ந்தான். இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கும் பொழுது அதையெல்லாம் கடப்பதற்கு இராமனின் உதவியுடன் கதை தொடர்ந்தது. அதில் ஒரு பிரச்சனை தான் பத்திரிக்கை அச்சிட்டுவது. தந்தை பெயர் தெரியாத பெண்ணிற்கு எப்படி விவரம் தருவது என்று பெருங்குழப்பம் . தனது ஒன்று விட்ட தம்பியான செல்வராஜிடம் உதவி கேட்டு அதற்கு தீர்வும் பெற்றுத் திருமண வேலைகள் தொடர்கின்றான்.
திருமணம் நிகழும் இரவில் தனது பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற்று வந்துவிடலாம் என்று நினைத்து, கங்கணம் கட்டி இருந்தாலும் பரவாயில்லை என்று மண்டபத்திலிருந்து வீட்டை நோக்கி கிளம்பினான் மாரிமுத்து. குப்பன் எவ்வளவு தடுத்தும் பாட்டியைப் பார்ப்பேன் என்று பறந்தவன். இறுதியில் தனது பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு இனி திருமணம் செய்வானா? இல்லை பாட்டி பார்ப்பானா ? என்று கேள்வியை மறைமுகமாக கேட்டு முடிக்கிறார் பெருமாள் முருகன்.
கேளுங்க சார்!
இந்த நூல் திருமணம் ஆகாத ஒரு முதிர்கண்ணனைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வட்டார வழக்குகள் ஏராளமாக கையாளப்பட்டிருக்கிறது. இது நாமக்கல் மாவட்டத்தின் வட்டார வழக்காக இருக்கலாம் என்பது எனது கருத்து. ஒரு ஆணின் உடல் ரீதியான பாலியல் பிரச்சனைகளைத் தெளிவாக கூறியிருக்கிறார் . அதிலும் மாரிமுத்துவின் ஏக்கம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் கதையின் தொடக்கத்திலிருந்து முடிவுக்கு ஒரு தொடர்பினை வைத்திருக்கிறார் பெருமாள் முருகன். தான் முதலில் பார்த்த ரோசாமணி என்னும் பெயருடைய பெண்ணின் நினைவில் வாடிய மாரிமுத்து. பிறகு ரோசா மணி என்னும் பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் முடிக்கப் போவதாக காட்டியிருக்கிறார். பாட்டிக்கு அவன் கொடுத்த இறுதியில் பாட்டியின் உயிரைக் காவு வாங்கியதையும் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி அனைத்திலும் தொடர்புகளும் சில இடங்களில் நம்மையே விளக்க வைக்கும் உளவியல் சார்ந்த கருத்துக்களையும் விளக்கி உள்ளார். நாம் செய்யும் சில தவறுகள் தவறு என்று தெரிந்த போதும் கூட அது நமது சூழலுக்குச் சரியாகத்தான் இருக்கிறது என்கின்ற மிகப்பெரும் மனித உளவியலை விளக்குவதாக அமைந்திருக்கிறது இந்நூல். மாரிமுத்து தன் பாட்டி தனது திருமணம் வரை தாங்குவாரா இல்லையா என்று கூறும் பொழுது உண்மையாகவே அவனுக்கு மனசாட்சி இருக்கிறதா என்று நம்மைச் சிந்திக்க வைத்தாலும் அது திருமணமாகாததால் வந்த தாக்கத்தை நமக்கு உணரச் செய்கிறது. தனக்கு திருமணமே நடந்து விடாதா என்று ஏக்கத்தின் விளைவாக இருக்கிறது என்பதை நன்கு உணரச் செய்கிறார் பெருமாள் முருகன். தனது தங்கை அற்ப காரணங்களைக் காட்டும் பொழுது அதைவிட தனக்கு பெரும் கடினங்கள் இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் இருக்கிறேன். ஆனால் நீ இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதா என்று தனது மனது எழுப்பும் கேள்விகள். அவளை அடித்து விடலாம் என்று தோன்றினாலும் கூட அதை கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்த வேலை நோக்கி நகர்வது இது போன்று வாழ்கையில் சகிப்புத் தன்மையுடன் உள்ள ஒரு கதாபாத்திரமாக மாரிமுத்து உள்ளான் .

கதையில் சாதி ரீதியான பிரச்சினைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது மாரிமுத்துவின் நண்பன் இராமனின் சிறு வயது நினைவுகளில் மாரிமுத்துவின் பாட்டி அவனைச் சாதியின் காரணத்தால் விரட்டியது போன்ற நிகழ்வுகள் அவ்வப்பொழுது வரும் . தணபதி தாத்தாவின் நகைச்சுவைகளும் மாரிமுத்துவின் உரையாடலும் மிகவும் சுவாரசியமான பகுதிகளாக உள்ளது . கதையின் போக்கும் நடையும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது எழுத்தாளரின் திறனை விளக்குகிறது. கதைகளிலே சொற்களை ஆசிரியர் இயல்பாக கையாண்டிருக்கிறார் . இது கதையின் போக்கை இயல்பாக மாற்றுகிறது . 90களின் முன்பு பெண் சிசு கொலை காரணமாக பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பலர் திருமணம் செய்யாமல் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு இந்த புதினம் எழுதப்பட்டுள்ளது.
பிரதிக்கு
நூல்: கங்கணம்
பக்க எண்ணிக்கை : 343
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : 390
1 comment