இலக்கியங்களில் காணப்படும் யாழ்க் கருவி
முனைவர் ம.பாபு,
உதவிப் பேராசிரியர்,
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.
m.varunbabu8@gmail.com
9659985020

தமிழர்கள் வாழ்வில் தொன்று தொட்டே கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகள் அவர்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து வந்திருக்கின்றன. குறிப்பாக இசைக்கலை போரிலும், பொது வாழ்விலும், மாந்தர்தம் தன் வாழ்க்கையிலும் இணைந்து நின்றிருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை இசையும், இசைக்கருவிகளும் பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களாக எங்கும் நீக்கமற நிறைந்து நின்றிருக்கின்றன. ஆனால், அவற்றின் சிறப்புக்கூறுகளைக் கூட உணர முடியாதவாறு நாம் அவற்றை இழந்து விட்டோம். தமிழர் தம் பெருமைக்குரிய யாழ்க் கருவி முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. பார்க்கக் கூட ஒரு கருவி கிடைக்கவில்லை. இந்நிலையில் நிகண்டுகள், இலக்கிய இலக்கண நூல்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள், ஓவியங்கள், செவிவழிச் செய்திகள் போன்றவற்றின் வாயிலாக ஓரளவு பழந்தமிழரின் இசைச் சிறப்பை ஊகிக்க முடிகிறது. அத்தகைய யாழ்க் கருவிகள் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மூவகைத்தமிழ்
இயற்றமி ழிசைத்தமிழ் நாடகத் தமிழென
வகைப்படச் சாற்றினர் மதியுணர்ந் தோரே (பிங்.1332)
இசை என்ற சொல்லுக்கு வழங்கும் வேறு பெயர்களையும், இசை என்ற பெயர் வேறு சொற்களுக்கு வழங்குவதையும் நிகண்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.
இசை – புகழ், சொல், பாட்டு
இசைபுகழ் கிளவி பாட்டாம் (சூ.பதினொன்றாவது தொகுதி,சகரவெதுகை 10)
இசை – புகழ், ஒலி, சொல் (10,12)
இசையே புகழு மொழியு நாதமும் (பிங்.3158)
நாதம் என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசைக்கு அடிப்படை என்பது இங்கே கருதத்தக்கது.
வேதகிரியார் சூடாமணி இசை என்ற சொல்லுக்குத் தரும் வேறு சொற்கள்: புகழ், வண்ணம், பொன், சொல், இனிமை, பண்பு, இசைப்பு, இசைப்பாட்டு, வாசி என்ற சொல்லுக்கு இசை என்ற பெயரையும் இந்த நிகண்டு தருகிறது.
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையில் முருகனின் நிலை கூறும் இடத்தில் முருகனை வணங்கிப்பாடும் மகளிர் யாழ் ஆரவாரித்தது போன்ற இனிய குரலை உடையவர்கள்.
“நரம்பு ஆர்த்தன்ன விண்குரற் றொகுதியொடு” (திரு.212)
திருவாவினன்குடியில் முருகன் தங்கி இருப்பது விவரிக்கப்படுகிறது.
கந்தவர் யாழ் வாசிப்பதைக் கூறும் பகுதி
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னியம் புனர (திரு.140-142)
செவியாலே சுருதியை உணர்ந்து கட்டிய திவவினை உடைய நல்ல யாழ் இசையைப் பயின்ற நல்ல உள்ளத்தால் மென்மையான மொழியை உடைய கந்தருவர் இனிய நரம்பை வாசிக்கிறார்கள்.
பொருநராற்றுப்படை
பாடியவர் – முடத்தாமக் கண்ணியார்
பாட்டுடைத்தலைவன் – கரிகால் பெருவளத்தான்
யாழின் உறுப்புக்களான பந்தல், போர்வை, ஆணி, வறுவாய், மருப்பு, திவவு ஆகியவை விவரிக்கப்படுகின்றன.
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை
எய்யா விளஞ்சூற் செய்யோ எவ்வயிற்று
ஐதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
‘ துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி
எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்-நா வில்லா வமைவரு வறுவாய்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள் முன்கை யாய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின்
ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல் (பொரு. 4-18)
யாழின் தோற்றம்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்கு மெய்ந்நின்ற வமைவரு காட்சி (பொரு.19-20)
மணப்பெண்ணை அலங்கரித்தது போன்ற யாழிற்குரிய தெய்வம் நிற்பது போல் அழகுடன் விளங்குகிறது.
யாழின் சிறப்பு
ஆறலை கள்வர் படைவிட வருளின்
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை (பொரு.21-22)
ஆறலைக் கள்வர் தம் ஆயுதங்களைக் கைவிட்டு தம்முடைய மறக்குணத்தையும் மாற்றும் குற்றமற்ற பாலை யாழ்.
யாழ் இசைத்தல்
வார்த்தல், வடித்தல், உந்துதல், உறழ்தல் ஆகிய யாழிற்கு உரிய நுட்பங்களைக் கைக் கொண்டு இசைத்துச் சீரையுடைய தேவபாணிகளை நீர்மையுடன் இசைக்கிறார்கள் (பொரு.23-24)
துடிபோல் ஒலிக்கும் ஆந்தைகளை உடைய குடிப்பாக்கத்தில் (கடற்கரைக் குடியிருப்பில்) யாழ் போல் ஒலிக்கும் வண்டின் பாட்டிற்கு ஏற்ப மயில் ஆடும்.
துடிக்குடிஞைக் குடிப்பாக்கத்து
யாழ் வண்டின் கொளைக் கேற்ப (பொரு.210-211)
சிறுபாணாற்றுப்படை
பாடியவர் : இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.
பாட்டுடைத் தலைவன்: ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்.
சங்ககாலத்தில் பாடுவோர் பாணர் எனப்பட்டனர். சிறுபாணர், பெரும்பாணர் என்று பாணர் இருவகைப்படுவர்.
இன்குரல் சீறியாழ் இடவயிற்றிழீஇ (சிறு.35)
சீறியாழினை இடப்பக்கத்தே தழுவிக்கொண்டு என்று பொருள்படும்.
சிற்பங்களில் காணப்படும் சில இசைக் கருவிகள் யாழ், வீணை, முழவு, தவில், பறை போன்ற இசைக்கருவிகளாக உள்ளன. சிற்பங்களின் இசைக்கலை சார்ந்த காட்சிகள், நடனக்காட்சிகள், இசைக்கருவி வாசிக்கும் நபர்களின் உருவங்கள் போன்றவையும் இடம்பெறுகின்றன.
பெரும்பாணாற்றுப்படை
பாடியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாட்டுடைத்தலைவன் : தொண்டைமான் இளந்திரையன்
‘பேரியாழ் முறையுளிக் கழிப்பி’ (பெரும்.462)
பேரியாழை முறைப்படி வாசித்து என்று பொருள்படும். பேரியாழின் உறுப்புக்கள், வில் யாழின் அமைப்பு, செய்யும் முறை, நாதத்தின் அளவு ஆகியன பெரும்பாணாற்றுப்படையில் காணப்படும்.
யாழ் என்பதன் பொருள்
இது ஒரு நரம்புக் கருவி ஆகும். பல சிற்பங்களில் யாழ் வாசிக்கும் நபர்கள் அல்லது யாழ் சிற்பங்கள் காணப்படுகின்றன.
யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் என்பதற்கு நரம்புகளால் ஆக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.
இவற்றில் நரம்புக் கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைக் கருவியாகும். நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழி வந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது. யாழ் கேள்வி என்ற பெயரையும் கொண்டுள்ளது (சுவாமி விபுலானந்தர்., யாழ் நூல், கரந்தைத் தமிழ்க்கல்லூரி, தஞ்சாவூர் 1947).
ஸ்ருதி என்ற வடமொழிச் சொல்லின் பொருள் கேள்வி என்பதாகும். ஸ்ருதியை உடையதால் யாழுக்குக் கேள்வி என்ற பெயர் உண்டு. இங்கு யாழ் கேள்வி என்று குறிப்பிடப்படுகிறது.
இலக்கியங்களில் யாழ்
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் போன்ற இலக்கியங்களில் யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள், யாழின் உறுப்பமைதி குறிப்புகள் காணப்படுகின்றன.
சிலப்பதிகாரம்
யாழ் வகைகள், யாழின் உறுப்புகள், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எப்படி இசைப்பது என்பதற்கான இலக்கணங்கள் போன்றவை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
சீவக சிந்தாமணி
காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் யாழிசைப் போட்டி நடந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் யாழுக்கு நேரக்கூடிய குற்றங்கள், யாழுடன் சேர்த்து பாடுவதற்கான இலக்கணம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
தேவாரப் பதிகங்கள்
திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப்பதிகங்களில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அழகாக யாழில் வாசித்திருக்கின்றார்.
முல்லைப்பாட்டு
நெல்லும் மலரும் தூவி வணங்கி விரிச்சி கேட்டு நிற்கின்றனர். அப்பூவில் வண்டுகள் ஆரவாரிக்கின்றன. யாழிசை போன்ற ஓசை உடைய வண்டுகள் என்று அவை வருணிக்கப்படுகின்றன.
”யாழிசை இனவண்டு ஆர்ப்ப” (முல்லை.8)
நெடுநல்வாடை
கூதிர் காலத்தின் ஈரத்தன்மை காரணமாக யாழினது நரம்பு மாறுபட்டு இருக்கிறது. ஆடல் மகளிர் தாம் பாடப் போகின்ற பாடலை யாழிலே இசைக்க வேண்டும். அந்நரம்புகளைத் தம் முலையின் வெப்பத்தில் தடவி கரிய கோட்டினை உடைய சீறியாழைப் பண்முறையில் நிறுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆடல் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையின் திரிந்த இன்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇக்
கருக்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப (நெடு.67-70)
குறிஞ்சிப்பாட்டு
யாழிசை
அணிமிகு வரிமிஞறு ஆர்ப்ப
மிஞறுகள் ஆர்க்கின்றன. அவை யாழ் இசையின் அழகான பாட்டினை உடையவாம்.
பட்டினப்பாலை
அங்காடித் தெருவில் வெறியாடுதற்குரிய முருகனுக்கும் கோயில்களில் உள்ள கடவுளர்க்கும் திருநாள் நடந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் பாடும் மகளிருடன் குழல், யாழ், முழவு, முரசு ஆகிய கருவிகள் ஒலிக்கின்றன.
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவுஅறா வியல் ஆவணத்து (பட்டின.155-158)
மதுரைக்காஞ்சி
யாழில் பண்ணுப் பெயர்த்து வாசித்தால் ஏராளமான இராகங்கள் கிடைக்கும். அதைப் போல நன்னனுடைய ஊர்களும் பல பொருட்களை உடையன.
நல்லியாழ்
பண்ணுப்பெயர்த் தன்ன (ம.கா. 450-451)
நன்பல உடைத்து (ம.கா. 455)
நல்ல யாழில் மருதப் பண்ணை, இசைத்து இளைப்பாறிச் செல்லுங்கள் (469-470) என்று கூற இருப்பதன் வாயிலாக மருதநிலத்திற்கு உரியதாகிய மருதப்பண் கூறப்பட்டுள்ளது.
நெல் அறுப்பவர் தண்ணுமை வாசிப்பார்கள் (471)
அடியார்க்கு நல்லார் காட்டும் யாழ்
மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் கையால் எட்டுச் சாண் (சராசரி ஒன்பது அங்குலம்) உயரம் இருப்பர். பெருங்கலம் என்னும் பேரியாழின் உயரமோ பன்னிரண்டு சாண். இதன் கோட்டினது (வளைவுப் பகுதியின் குறுக்களவு) ஒரு சாண்.
ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் என 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் (தமிழில் எழுந்த ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர்) குறிப்பிடுகிறார். (“From yazh to Guitar – An Overview” – Prof. V V Subramanyam. Retrieved 1 சனவரி 2017)
யாழ் அமைப்பு
யாழ் ஒரு மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத் தோல் என்று பெயர். போர்வைத் தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. (மாடகம் என்பது யாழ், வீணை போன்ற வாத்தியங்களில் நரம்பை இறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும் இது முறுக்காணி என்றும் அழைக்கப்படுகிறது). அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்(செல்லத்துரை, சே.ச., தென்னக இசையியல், ப:103. வைகறைப்பதிப்பகம், திண்டுக்கல்-1984).
சீறியாழின் அமைப்பு
“பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை அகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்து
அமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல்குர லாக
நூல்நெறி மரபில் பண்ணி” (சிறு.221-230)
சீறியாழின் அமைப்பு கூறப்பட்டுள்ளது. கருத்தரங்கு பாம்பின் தலையைப் பிடித்தது போல், தண்டியில் நெருக்கமாகச் சுற்றி நெகிழ்ந்தும் இறுகியும் நரம்புகள் அமைந்த வார்கட்டு; மணியை வரிசையாக அடுக்கி வைத்தாற் போன்ற ஆணிகளின் அழகு; வயிறு சேர்ந்து வகையாய் அமைந்த பத்தர்; (பத்தரின் நடுப்பகுதி வயிறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது). புடைத்துக் காணப்படுவதால் அகளம் என்று பெயர் பெறுகிறது.
அகளம் – தாழடி – யாழ்ப் பத்தர்
குமிழும் பழத்தின் நிறத்தைப் போலப் பொலியும் போர்வைத் தோல்; தேனை ஒழுக விட்டது போன்றும் முறுக்கு அடங்கியதுமான நரம்புகள். பாடும் துறைகளில் முற்றுப்பாட, பயன் விளைகின்ற இசைகளைக் கொண்ட இனிய யாழை இசை நூல்களின் மரபுப்படி குரல் குரலாகக் கொண்டு இசைத்தான்.
பொன்வார்த் தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயிற் றழீஇ
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
சைவல் பாண்மகன் கடனறிந்து இயக்க (சிறு.34-36)
பொன்னை உருக்கி வார்த்தது போன்ற முறுக்கு உடைய சீறியாழை இடப்பக்கத்தே தழுவிக்கொண்டு நட்டபாடைப்பண் முற்றுப்பெற்ற பாலைப் பண்ணை யாழை இசைக்க வல்ல பாண்மகன் வாசிக்கும் முறை அறிந்து வாசிக்கிறான்.
வில் யாழின் அமைப்பு
குமிழ மரத்தின் உட்புறம் கூடாகிய கொம்பில் மரநாரை வளைத்துக் கட்டி வில்யாழ் செய்யப்பட்டதாக இப்பகுதி விளக்குகிறது.
சங்க நூல்கள் யாழின் உறுப்புகள்
பத்தல், வறுவாய், யாப்பு, பச்சை, போர்வை, துரப்பமை ஆணி, உந்து, நரம்பு, கவைக்கடை, மருப்பு, துவவு ஆகியவற்றைச் சங்க நூல்கள் யாழின் உறுப்புகளாக குறிப்பிடுகின்றன.
யாழின் தோற்றம்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி
வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
உள்ளகம் புரையு மூட்டுறு பச்சைப்
பரியரைக் கழுகின் பாளையும் பசும்பூக்
கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை
உருக்கி யன்ன பொருத்தறு போர்வை
சுனைவறந் தன்ன விருடூங்கு வறுவாய்ப்
பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பின்
பொன்வார்ந்த தன்ன புரியடங்கு நரம்பின்
தொடையமை கேள்வி இடவயிற் றழீஇ (பெரும். 4-16)
“பாதிரிப்பூவை இரண்டாகப் பிளந்து போன்ற செந்நிறம் கொண்ட தோலால் ஆன யாழ். பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற இரண்டு துளைகளை இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள்ளே இருண்டிருப்பது போன்ற வாயினைக் கொண்டது. கையில் ஏந்தும் யாழின் கடைப்பாகம் பிறைநிலவு போன்றது. வளைசோர்ந்த பெண்களின் கைவலையல்களைப் போன்ற வார்க்கட்டு உடையது. நீலமலை போன்ற முறுக்கிய நரம்புகள் கொண்ட யாழ்” (பெரும்பாணாற்றுப்படை, பாடல் வரிகள் 3-15) என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.
யாழ் வகைகள்
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கல்லாடம் என்னும் நூல் யாழ் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.

- வில் யாழ் (21 நரம்புகளை உடையது)
- பேரி யாழ் (21 நரம்புகளை உடையது)
- மகர யாழ்(19 நரம்புகளை உடையது)
- சகோட யாழ் (14 நரம்புகளை உடையது)
- கீசக யாழ் (100 நரம்புகளை உடையது)
- செங்கோட்டி யாழ் (7 நரம்புகளை உடையது)
- சீறியாழ் (7 நரம்புகளை உடையது)
நாரத பெரியாழ், ஆதிகால பெரியாழ், தும்புரு யாழ், மருத்துவயாழ், ஆதியாழ், கிளி யாழ், வல்லகி யாழ், குறிஞ்சி யாழ், பாலை யாழ், மருத யாழ், முல்லை யாழ் எனப் பல வகைகள் இருந்ததாக பண்டைய நூல்கள் கூறுகின்றன.
பேரியாழ் செங்கோட்டி யாழ்பின் சகோடயாழ்
வார்மருத யாழ்நால் வகையாழாம் (நாம.465)
பேரியாழுஞ் சகோட யாழு
மகரயாழுஞ் செங்கோட்டி யாழு
மெனநால் வகையா ழினாம மாகும் (பிங்.1401)
மகர யாழ் யவன தேசத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகக் கூறப்படுகிறது. சாத்தான் குளம் அ. இராகவன் என்பவர் தனது (சாத்தான்குளம் அ.இராகவன், ‘இசையும் யாழும்’) நூலில் 24 வகையான யாழ்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (செல்லத்துரை, சே.ச., தென்னக இசையியல், ப: 103, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல் 1984).
முடிவுரை
இலக்கியங்களில் வாயிலாக யாழ் வாசிப்பு, பல்வகை யாழ்கள், யாழின் உறுப்பமைதிகள் போன்ற குறிப்புகள் அறிய முடிகிறது. பத்துப்பாட்டிலுள்ள நூல்களில் ஏராளமான இசைச் செய்திகள், குறிப்பாக இசைக்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. யாழ்கள், அவற்றின் உறுப்புகள், அவற்றின் அமைப்பு ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. தவத்திரு. விபுலாநந்த அடிகளாருக்கு பண்டைய யாழ்க் கருவிகளை மீட்டுருவாக்கித்தர பத்துப்பாட்டு நூல்களே அடிப்படையாக நின்றன. இந்நூல்கள் இசைத் துறையினரால் ஆழ்ந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் பண்டைய இசைக் கருவிகள் பலவற்றை மீட்டுருவாக்கித் தரமுடியும்.
முதன்மை நூல் பட்டியல்
- சூடாமணி நிகண்டு, கழக வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு,1996.
- திவாகரம், முதல் தொகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, முதல் பதிப்பு, 1990.
- திவாகரம், இரண்டாம் தொகுதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, முதல் பதிப்பு, 1993.
- நாமதீப நிகண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985.
- பிங்கல நிகண்டு கழக வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு, 1968.
- வேதகிரியார் சூடாமணி நிகண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு, 1997.
- பத்துப்பாட்டு – உ.வே.சா.தொ.ஆ., தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 1986.
- பத்துப்பாட்டு – வை.மு.நரசிம்மன், ப.ஆ., வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை – 1961.
துணைநூல் பட்டியல்
- சூடாமணி நிகண்டு
- திவாகர நிகண்டு
- பிங்கல நிகண்டு
- யாழ் நூல்
Post Comment