பிரார்த்தனை சீட்டுப் பிராதும் வெக்காளியம்மன் விசாரணையும்
- – ரவி சுப்ரமணியன்

மெல்லக்கொல்லும் நேசமும் பிரிவும்
நாணயத்தின் பக்கங்கள்
சோகத்தின் செல்லமான பின்
வலிகளின் நித்திய ஆசிர்வாதம் தவிர்க்க இயலாதது
இன்னுமா இதையெல்லாம் உன் அறிவு சொல்லவில்லை
சொல்கிறது
மாலையானால் மதுவுக்காய் தவுதாய்ப்பு
இடைவெளிகளில் நிக்கோட்டின் துரத்தல்
இதையெல்லாம் எதில் மோதி சிதைத்தாலும்
மாய வசீகரமாய் உயிர்ப்பித்து வருகிறதே
லாகிரியா விரதமா
வாழ்வா துறவா
தேகமா ஆன்மாவா
நிர்வாணமா பரிநிர்வாணமா
எல்லாம் தான்
ஒன்றும் செய்ய முடியாது மகனே
நீதானே
இத்தனை கோடி
இன்பம் வைத்தாய் தாயே….
sorry
next.
2.
நன்றன்று
கொன்றை முகை அவிழும்
கார்காலப் பொழுதொன்றில்
தாமதமாகவே கண்டு எடுத்து வந்தேன்
அனாதரவான அவ் ஒளியை
புன்னை மரத்தோரம் கவனிப்பாறின்றி
கீறல் கீறலாய் கிடந்ததை ஏந்தி அணைத்து நீவி
நீர்க்குவளை கண்கள் துடைத்து
மதர்த்த மார்பில் சாய்த்து
பொத்தி பொத்திக் காத்து வந்தேன்
கொன்றை மரக்கிளைகளிலே
ஊஞ்சலாடி கானம் கேட்ட பொழுதுகளில்
கவிந்திருந்த இருளும் விலகக் கண்டேன்
கற்சிலையில் எண்ணை தடவியதாய்
கருமையும் ஒளிர்ந்தது
மண்ணெல்லாம் குளிர
உள்ளொதுங்கி மறைந்ததெல்லாம் துளிர்க்க
எங்கெங்கும் மினுமினுப்பின் ஜ்வாஜ்வல்யம்
ஒளியின்றி நானில்லை
நானின்றி ஒளியில்லை
என்ன கண்ணேறோ
உறுத்து வந்த ஊழோ
சொற்ப காலத்தில் விலக துவங்கிற்று
ஒளி
மங்கிய ஒளியால்
மீண்டும் கரு வளையங்கள்
பித்தாகித் திரிந்த
ஒளியின் தடம் பதிந்த பாதையில்
கிடப்பவற்றின் மேலெல்லாம்
வேழத்தின் கால்கள்பட்டு
முறியும் மூங்கில்களாய் மற மறவென
இதோ பறந்துவந்து கிளையமர்ந்த
இந்த ஆந்தையின் கண்ணிமிமைத்தலில்
இன்னுமொரு அந்தகாரம்
யாரது போதனையோ
எதனதன் ஈர்ப்போ
அறியா வெறுப்போ
புரியா வன்மமோ
என்ன கசப்போ
ஏது சூதோ யானறியேன்
இருப்பினும் என்ன?
ஒருபோதும் மறவா மனத்தோடு
மறுபடியும் அச்சு பிறழாது
மகிழ்ந்திருக்கவே என் பிரார்த்தனை.
Post Comment