பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
-முகிலன்

பாழ்வெளிப் பரப்பின் படிந்த தீத்துகள்
ஊழ்*வெடித் ததிலோர் உறுதுகள் புவியாம்!
ஆங்கன் உயிர்த்துகள் தாங்கிய உலவுதுகள்
யாங்கும் உயிரினம் எனப்பட் டதுவே!
உருவும் வடியும் உயிர்வா ழிடமும்
உரிய குணமும் ஒன்றினுக் கொன்று
வேற்றுமைப் பட்டதாம்! மேவிய உயிர்க்கோ
மாற்ற மிலைகாண்! மாந்தப் பிறப்பிலோ
ஏற்ற மிறக்கம் யாண்டு கண்டனனோ?
கூற்றமெனச் சாதியர் கொண்ட கொள்கைக்(கு)
அயலாரைத் தூசெனும் அழிமனத்தர் பொய்யும்
கயமைசேர் ஆட்சியர் தன்னலக் காரர்
மதமெனும் போர்வை மாட்டிய தீயர்
கதைபல சொல்லிக் கண்மறைக்கு மூடர்
ஆடவர் பெண்டீர் உயர்வுதாழ்(வு) அறைகுவர்
இனமதைக் கொண்டீ னஞ்செய் அளியர்
இனமதைப் பொருளான் இயக்குந் தீங்கர்
யாவரும் மாந்த இனத்தைத் துண்டுதுண்டாய்
யாத்தனர்! என்பிழை? எல்லோரும் ஒன்றோவென்
றாலிலை பிறப்பே அனைவர்க்கும் ஒன்று
ஆளின் சிறப்பான் வேற்றுமை யாவரே!
நெஞ்சின் தன்மையும் நீரின் தண்மையும்
நஞ்சிலாச் செயலும் நல்லர் வகையினதாம்!
வஞ்சமும் களவுபொய் வாய்மை யிலாமையும்
நஞ்சு மனமும் நாணமில் செயலும்
தீயர் வகையினதாம்! திசையெட்டும்
நோக்குதின் இவையே சிறப்பின் பேதமே!
Post Comment