நெருப்புச் சமவெளி
மேலத்தாங்கல் மு. நளினி

துர்தேவதைகள் உலவும்
அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்
கீழ்த்திசையில்
கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறது
தீப்பிழம்பு
கேட்பாரற்றுச் சிந்திய
இரத்தத்துளிகளின் பெருக்கென
இதுபோன்றதொரு
கொதிக்கும் நதி
உலகில் இல்லை
சல்லடையாக்கப்பட்ட எங்கள் உடல்கள்
ஊற்றுக்கண்களாய்ப்
பூரித்துச் சீறுகின்றன
கிட்டியால் கால்களைப்
பிணித்துச் சரளை தொடுத்த சாட்டையால் தோலுரித்து
முட்ட முட்ட நீங்கள் ஊட்டிய சாணிப்பால்
எங்கள் கூடுகளின் வெப்பத்தால்
கனன்று கனன்று
கொப்புளித்துக் கிளம்புகிறது
மலையும் மடுவும்
காடும் கடலும்
சமவெளியாகும்
நெருப்புச் சமவெளி
வெளியெங்கும் கங்குகளானால் எதைப்பொசுக்குவீர்கள்



Post Comment