இன்னும் எத்தனை நாள்

து.பெருமாள்
முனைவர் பட்ட ஆய்வாளர்
மலையில் பிறந்தோம்
மலையில்தான் இன்னும் வாழ்கிறோம்
எட்டு வழிச்சாலையும்,
நான்கு வழிச்சாலையும்
தலைவிரித்து ஆடுகின்ற
இந்த நாட்டில் தான் நாங்களும் வாழ்கின்றோம்
ஒருவழிச்சாலைக்கு கூட
ஒரு வழியும் இல்லாமல்.
ஐந்து வருடத்திற்கு
ஒரு முறை மட்டுமே
சிலர் டேப்புடனும்
சிலர் ரீலுடனும் சுற்றுகின்றார்கள்
எங்கள் மலைக்குள்
ஓட்டையும், ரோட்டையும் அளப்பதற்கு.

காட்டை வெட்டி
கரை ஒதுக்கி
பருவம் பார்த்து
பதம் பார்த்து
நாள் பார்த்து
நேரம் பார்த்து
ஏறு பூட்டி ஒழவெடுத்து
நிலத்தை
பதப்படுத்தி
பக்குவமாக்கி
விதை விதைத்து
வியர்வை சிந்தி
கலை எடுத்து
ஆடு, மாடு, பன்றி,
குரங்கு,முயல்,
வீட்டெருமை, காட்டெருமை ,
காட்டு யானை என
எல்லா விலங்கையும் விரட்டியடிக்க
பரண் அமைத்து ,
பந்தம் கொளுத்தி,
பறை இசைத்து,
பாட்டுப் பாடி ,
கூச்சலிட்டு
கர்ப்பிணித் தாய்வையிற்று
குழந்தைபோல்
ராப் பகலா பாதுகாத்தும்
சோத்துக்கு வழியில்லை
சோதனையால் தினம் தொல்லை
அத்தனையும் தான் கடந்து
ஐந்தாம் திங்களில்
அறுவடை செய்தும்
நாங்கள் என்ன
சொகம் கண்டோம்
என்ன பயன் எங்களுக்கு
எடுத்துச் செல்ல வழி இல்லையே.
காடு,
காட்டாற்று வெள்ளம் ,
மலை,
மலைச்சாரல்,
பாசிப் படிந்த பாறைகள்
அத்தனையும் கடந்து
இன்னும் எத்தனை நாள் சுமப்போமோ?
இறக்கி வைக்க நாள் வருமோ.!!
25/04/2025
இரவு:2.30 மணி
Post Comment