தமிழ், சமஸ்கிருதச் செவ்வியல் உறவுத் தேடல்களின் கதை

கா.விக்னேஷ்

முனைவர்பட்ட ஆய்வாளர்,

சிறப்புநிலைத் தமிழ்த்துறை,

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம்,

புதுதில்லி.

8695350475

vaishnavicky07@gmail.com

            கடந்த அக்டோபர் 2023 –இல் காலச்சுவடு பதிப்பகம்தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவுஎனும் தலைப்பில் ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டது. அவற்றின் திப்பாசிரியர்கள் தமிழின் சுட்டத்தக்க முன்னத்திகளான சு.இராசாராம், .கா.பெருமாள் ஆகியோராவர். இவர்களின் ஆய்வு முன்னுரையோடு தொடங்கும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றை மறு ஆக்கம் செய்யவேண்டியதன் தேவையை வலியுறுத்துவதாக அமைகிறது.

            அந்த முன்னுரையில், பழம் இந்திய மொழிகளாக விளங்குபவை தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகியன. இவற்றிற்கிடையிலான உறவைத் தொல்காப்பியம் தொடங்கி நவீன காலம் வரையிலான இணைவு, முரண் ஆகிய செய்திகளை முன்னிறுத்தி விளக்குகின்றனர். முன்னுரையே ஆய்வுரையாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. “ஒருதலைச் சார்பான நிலைப்பாடுகளைத் தவிர்த்து, வரலாற்று உணர்வோடு சமகாலச் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழல்களின் பின்னணியில் திராவிட, ஆரிய உறவைக் காண்பதே இந்நூலின் நோக்கம். குறிப்பாகத் தமிழ்மொழி மீதான சமஸ்கிருத மொழிச் செல்வாக்கையோ சமஸ்கிருதமொழி மீதான தமிழ்மொழிச் செல்வாக்கையோ குறித்துப் பேசும்போது மொழிப்பகைமைக்கு நீர்வார்ப்பது இந்நூலின் நோக்கமன்று. இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் இக்கட்டுப்பாட்டுடன் தமிழ், சமஸ்கிருத உறவை அணுகுகிறது”(.28) எனும் பதிப்பாசிரியர்களின் அறிவிப்போடு நூலுக்குள் பயணிக்க எத்தனிக்கையில் உண்மையில் அவ்வாறுதான் கட்டுரைகள் அமைந்துள்ளனவா என்பதையும் நோக்குதல் அவசியமாகப்படுகிறது. இந்த எழுத்துரை பதினெட்டு கட்டுரைகளை விவாதப் பொருளாக எடுத்துக்கொள்கிறது. அவையாவன;

  1. தமிழின் மொழி உறவுகள் (.அண்ணாமலை),
  2.  வடமொழியும் தமிழும் (எஸ்.வையாபுரிப்பிள்ளை),
  3. தமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் மோதலின் கதை (கி.நாச்சிமுத்து),
  4.  தமிழ் சமஸ்கிருத உறவு: சங்க காலம் (செ.வை.சண்முகம்),
  5.  வடமொழிதென்மொழி: ஓர் ஆய்வு நோக்கு (மு.கு.ஜகந்நாதராஜா),
  6. ஆய்வியற்போக்கில் தமிழும் வடமொழியும் (ஜெ.அரங்கராஜ்),
  7.  தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை (இரா.அறவேந்தன்),
  8. தொல்காப்பியமும் வடமொழி உறவும்: இருப்பும் இல்லாமையும் (சிலம்பு நா.செல்வராசு),
  9. தொல்காப்பியம் எழுந்ததின் நோக்கம் (வரலாற்றுப் பிண்ணனியில் ஓர் ஆய்வு) (கு.மீனாட்சி),
  10.  தொல்காப்பியமும் பாணினீயமும்: இருவேறு இலக்கண மரபுகள் (.பாலசுப்பிரமணியன்),
  11.  தமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு (ரா.ராமச்சந்திரன்),
  12.  பழந்தமிழ் இலக்கியங்கள்: அதன் அறிவுத் தொன்மையும் எதிர்காலமும் (ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழில்பு.கமலக்கண்ணன்),
  13. தமிழ்சமஸ்கிருத இலக்கியங்களில் இயற்கையை அணுகும் இருவேறு முறைகள் (வாசு.அரங்கநாதன்),
  14. அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும் (ஸிக்பிரட் லைன்ஹார்டு, தமிழில்பு.கமலக்கண்ணன்),
  15. வடமொழி இதிகாசப் பொருண்மைக்குச் சங்க இலக்கியத்தின் நன்கொடை (..மணவாளன்),
  16. சங்க இலக்கியங்களில் வைதி நெறியின் சூழலும் செல்வாக்கும் (பா.சங்கரேஸ்வரி),
  17. தமிழரின் சமஸ்கிருத ஆக்கங்கள் (இரா.சீனிவாசன்),
  18. தமிழர் வளர்த்த சமஸ்கிருதம் (.பத்மநாபன்) ஆகிய கட்டுரைகள் குறித்து இங்கு விவாதிக்கப்படவுள்ளன. இத்தெரிவு கால, பொருண்மையை அடிப்படைகளைக் கொண்டு வரிசைப்படுத்தி விளக்கப்படுகின்றன. அதாவது தொல்காப்பியம், சங்க இலக்கியம் எனும் பொருண்மை, காலம் அடிப்படையாகிறது. ஒவ்வொரு கட்டுரையின் சாரத்தைப் பின்வரும் பகுதிகளில் விளக்கலாம்.

 .அண்ணாமலையின் தமிழின் மொழி உறவுகள் எனும் கட்டுரை தொல்காப்பியம் தொடங்கி சமகாலம் வரையிலான தமிழ், சமஸ்கிருதத்திற்கு இடையிலான இலக்கண உறவைப் புலப்படுத்தும் விதமாக அமைகிறது. அவற்றுள் கவனப்படுத்தப்படும் செய்திகளாவன; மொழி உறவு என்பது சொல், சொல்லுக்கான பொருள், சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளியல் ஆகிய தளங்களில் உருவாகும். தமிழ்ச் சமூகம் இருமொழிய நிலையைக் கொண்டிருந்தது. இன்று தமிழ்ஆங்கிலம் இருப்பதுபோல அன்று தமிழ்சமஸ்கிருதம் இருந்தது. மொழிகளுக்கிடையிலான உறவு ஏற்படக் காரணமாக அந்தஸ்து, தேவை ஆகிய இரு நிலைகளைக் குறிப்பிடுகிறார். இவற்றின்வழிக் கிடைக்கப்பெற்ற இலக்கிய உத்திகள் தமிழில் அதிகம் கலந்துள்ளன என்கிறார். அவை எம்மொழியும் சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் பொது அறிவுக் கருத்தோட்டத்திலிருந்து பெற்றுக்கொண்டுள்ளன (ஜார்ஜ் எல்.ஹார்டின் பொதுமூலம் கருத்தோடு இணையுமிடம்). இவை சொல், பொருள் எனும் தளத்தில் பயின்று வந்துள்ளமையைப் பின்வருமாறு விளக்குகிறார்.

தொகைச் சொற்களில் வினைத்தொகை தமிழிற்குரிய தனித்துவமான மரபாகும். வேற்றுமை என்பது காரகத்தின் வழிவந்ததே. சில தன்மைகள் மாற்றமடைந்துள்ளன. அகம், புறம் என்பது தமிழ் மரபிற்கு உரியன. இதுவே அறம், பொருள், இன்பம் என்று தொல்காப்பியத்திலேயே வலியுறுத்தப்பட்டமை வடமொழி பாற்பட்டது உள்ளிட்ட கருத்துகளைக் குறிப்பிடுகிறார். இதன் அடிப்படை பாணினீயத்திலிருந்து தொல்காப்பியர் பெற்றுக்கொண்டார் என்பதே. வடமொழியிலிருந்து தொல்காப்பியர் இலக்கண உத்திகளை எடுத்துக்கொண்டார் என்பதையே இக்கட்டுரையில் விவாதிக்கிறார். பொது மூலத்தைத் தொடக்கத்தில் குறிப்பிட்டாலும் அதுகுறித்து விவாதிக்காது சமஸ்கிருத மூலத்திலிருந்தே தொல்காப்பியர் பெற்றுக்கொண்டார் என்பதை வலியுறுத்துவதாகவே இக்கட்டுரை அமைகிறது. அதேநேரத்தில் உள்ளுறை உவமம், ஏனை உவமம் ஆகியன தொல்காப்பியத்தின் தனித்தன்மையவை என்கிறார்.

வடமொழியும் தமிழும் எனும் வையாபுரிப்பிள்ளையின் கட்டுரை தோன்றிய சூழல் குறித்து அறிந்துகொள்வது அவசியமாகும். 1820 –இல் செந்தமிழ் இருபதாம் தொகுதியில் பாணினியலகு தீபிகை எனும் வடமொழி இலக்கண நூலினைப் பதிப்பித்த வையாபுரிப்பிள்ளை அதன் முன்னுரையில் வடமொழி, தமிழின் செவிலித்தாய் என்று குறிப்பிட்டார். இதற்கு மறுப்புரையாக இலங்கையைச் சேர்ந்த இராஜையனார் ஒரு கட்டுரையை எழுதுகிறார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்டதே இக்கட்டுரையாகும். இச்செய்தியைப் பின்னர் விவாதிக்க இருக்கும் அரங்கராஜின் கட்டுரையிலிருந்து பெறமுடிகிறது. இவற்றுள் விவாதிக்கப்பெற்றுள்ளதன் சாரம் யாதெனில்,

தொல்காப்பியம் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டுள்ளது எனும் தொனியிலேயே கட்டுரை தொடங்குகிறது. தமிழிலுள்ள சொற்கள் (Vocabulary), தமிழ் நூல் விஷங்கள் (Subject Matter), தமிழிலக்கிய மரபு (Literary Tradition) ஆகியன யாவும் சமஸ்கிருத மரபிலிருந்தே தாக்கம்பெற்றன. அகமும் புறமுமே தமிழ் மரபின. அறம் எனும் கருத்தாக்கம் சமஸ்கிருதவயப்பட்டது என்கிறார். சதுவர்க்கம், த்ரிவர்க்கோ, தர்ம காமாத்தை ஆகியவற்றிலிருந்தே இவை தோன்றின உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது இக்கட்டுரை.

தமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் மோதலின் கதை எனும் தலைப்பிலமைந்த கட்டுரை, தமிழின் நெடுங்கணக்கு முறை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டது என்பது தவறு, அது இந்தியாவின் பொதுவான அறிவுக் கருத்தோட்டத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம். தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள், இலக்கணக் கொள்கைகள் பெரிதும் தமிழின் தனித்துவமான அமைப்பைக் கொண்டவையே. சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் கடன்பெற்றுள்ளது மறுக்கவியலாதது. ஆனால் பெரிதும் பெயர்ச்சொற்களே கடனாகப் பெறப்பட்டுள்ளது. வினைச்சொற்கள் மிகவும் குறைந்த அளவே உள்ளன. சொற்பொருள் அமைப்பு, தொடரமைப்பு ஆகிய நிலைகளிலும் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களிலும் வடமொழியின் தாக்கம் இருப்பதாக எடுத்துகிரைக்கிறார் நாச்சிமுத்து. தூது எனும் இலக்கியவகை இந்தியாவின் பொதுச்சூழலிலிருந்து உருவாகியிருக்கலாம் என்கிறார் (ஜார்ஜ் எல்.ஹார்ட் தூது இலக்கியம் சமஸ்கிருத மரபில் இல்லாதது. இம்மரபு தமிழிலேயே உள்ளது என்கிறார்). மேலும் பக்தி இலக்கியம், கல்வெட்டு, சிற்றிலக்கியம், உரை எனத் தமிழிலக்கிய வரலாறு நெடுகிலும் வடமொழிக்கும் தமிழுக்கும் இடையிலான காதல் மோதல் கதையை எடுத்துரைப்பதாக அமைகிறது இக்கட்டுரை.

தமிழ் சமஸ்கிருத உறவு: சங்க காலம் எனும் செ.வை.சண்முகத்தின் கட்டுரை தொல்காப்பியத்தின் செய்யுளீட்டச் சொற்கள் குறித்த செய்திகள், மொழிபெயர்ப்பு செய்ய விதித்திருக்கும் விதிமுறைகள், எழுத்து நிலையிலும் சொல் நிலையிலும் வடமொழித் தாக்கம் தமிழில் இருப்பது, குறிப்பாகத் தமிழ் நெடுங்கணக்கு முறை சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டதே. சங்க இலக்கியம், பிற்கால இலக்கியங்களில் சமஸ்கிருத இலக்கிய, இலக்கணக் கொள்கைகளின் தாக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார். இன்றைய மேலைக் கோட்பாட்டு நூலை நூலாசிரியரின் கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு தமிழ்த் தன்மைக்கு இயைய எழுதுவதுபோன்ற அமைப்பையே நன்னூல் போன்ற இலக்கண நூற்கள் செய்துள்ளன உள்ளிட்ட கருத்துகளை இக்கட்டுரையின் வழி விவாதிக்கிறார் செ.வை. சண்முகம்.

வடமொழிதென்மொழி: ஓர் ஆய்வு நோக்கு எனும் மு.கு.ஜகந்நாதராஜாவின் கட்டுரை, வடமொழியின் (சமஸ்கிருதம், பிராகிருதம்) நெடுங்கணக்கு மரபே இந்தியா முழுமைக்கும் பொதுவான மரபாக அமைந்துள்ளது. இதுவே தமிழிலும் பின்பற்றப்படுகிறது. வடமொழியும் தமிழும் கலந்தமைக்குச் சான்று கிரந்த எழுத்துகளே ஆகும். இவ்வெழுத்துகள் தென்னகப் பிராமணர்களுக்குரியது என்கிறார் ஜகந்நாதராஜா. மேலும் தொல் திராவிடத்திலிருந்தே தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தோன்றியதாகவும் மலையாளமே தமிழிலிருந்து தோன்றியதென்றும் வாதிடுகிறார். தொல்திராவிடம் என்பது தமிழ் இல்லை என்பதும் இவர் வாதமாகும்.

ஆய்வியற்போக்கில் தமிழும் வடமொழியும் எனும் அரங்கராஜின் கட்டுரை முன்னர் விளக்கிய செ.வை.சண்முகத்தின் கட்டுரையை மறுத்து எழுந்ததாகும். பொருண்மை அடிப்படையில் நோக்குவோமாயின் இதுவரை விளக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளுக்கும் மறுப்புரைப்பதாகவே அமைந்துள்ளது எனலாம். நெடுங்கணக்கு என்பது குழந்தைகள் எளிமையாகக் கற்கும் நிலையிலேயே அமைக்கப்படும். குறில் அதையடுத்து நெடில் எனும் நிலையிலும் இணமான எழுத்துகள் தொடர்ந்துவருமாறு மெய்யெழுத்துகளின் வரிசையும் குழந்தைகள் இசை நயத்தோடு எளிமையாக மனனம் செய்யவே அமைக்கப்பட்டது என்கிறார். மேலும் தொல்காப்பியத்திலேயே எழுத்தின் வடிவம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறார். செ.வை.சண்முகத்தின் இத்தகைய கருத்து யூகமே என மறுத்துரைக்கிறார். ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டிஎன்று தொல்காப்பியம் குறிப்பிடுவதன்வழி மயங்கும் முறைகளும் உண்டென்கிறார். இப்போதுள்ள எழுத்து மரபு மயங்காமரபாகும். ஜார்ஜ் எல்.ஹார்ட் தமிழ் நெடுங்கணக்கு முறையே இந்தியா முழுமைக்கும் பரவியதாகக் கூறும் கருத்தினைக் கூறி வடமொழிக்கான நெடுங்கணக்கு முறை தமிழிலிருந்தே சென்றிருக்க வேண்டுமென்கிறார்.

வடமொழிக்கு நாடகவகை கிரேக்கத்தின் தாக்கத்தினாலே கிடைத்தது என்று நவாலியூர் நடராசன் கருத்துவழி நிறுவுகிறார். மேலும் விருத்தப்பா தமிழிற்குரியதென்றும் கட்டளைக் கலித்துறையே வடமொழியிலிருந்து பெறப்பட்டது. அதுவும் இங்கு சிறப்புப் பெறவில்லை என்கிறார். சித்திரக்கவி தமிழிலில்லை என்பது தவறு. பாமகர், தண்டி காலத்திலேயே ஞானசம்பந்தர் ஏகபாதம், சக்கரமாற்று, கோமுத்திரி ஆகிய சித்திரக்கவி படைப்புகளைத் தமிழுக்களித்ததாகவும் அதோடு தண்டியும் பாமகருங்கூட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களே என்றும் குறிப்பிட்டுத் தமிழின் தனித்துவத்தை நிறுவுகிறார்.

தமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை எனும் அறவேந்தனின் கட்டுரை, தொல்காப்பியம் தொடங்கி பாட்டியல் இலக்கணம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவாதித்துள்ளது. தொல்காப்பியக் கலைச் சொற்கள் தமிழின் பாற்பட்டன. பிற்கால இலக்கணங்களான வீரசோழியம் தொடங்கி முத்துவீரியம்வரை சமஸ்கிருத வருணப்பாகுபாடு உள்ளதாகக் குறிப்பிடும் இவர், தமிழ்ப் படைப்புகளில் இப்பண்பு வெளிப்படவில்லை; இது அவைதிக மரபின் வெளிப்பாடே என்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கணங்கள் தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் மொழித்தூய்மை உணர்வே என்கிறார். மேலும் மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதம் உயர்ந்தது எனும் கருத்தாக்கம் உள்ளது. தமிழில் அவ்வாறில்லை உள்ளிட்ட கருத்துகள் இக்கட்டுரையில் விவாதிக்கப்படுகின்.

தொல்காப்பியமும் வடமொழி உறவும்: இருப்பும் இல்லாமையும் எனும் சிலம்பு நா.செல்வராசின் கட்டுரை சமூகவியல் பின்புலத்தில் தொல்காப்பியத்தை அவைதிகப் படைப்பாக முன்னிறுத்துவதாக அமைகிறது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனும் பிரிவுகளைச் சுட்டுகிறது தொல்காப்பியம். இது வடமொழி வருணக் கோட்பாட்டிலிருந்து மாறுபட்டது. வருணம் வேளாளரைச் சூத்திரர் என்கிறது. மருதத்திணையில் செழிப்பான வாழ்வு வாழ்ந்த அவர்களைத் தொல்காப்பியம் சூத்திரர், மற்ற வருணத்தினருக்கு ஏவல் வேலை செய்பவர் என்பது போன்று குறிப்பிடவில்லை. தொல்காப்பியமே மருதநிலப் படைப்பு உள்ளிட்ட விடயங்களைக் குறிப்பிடும் செல்வராசு வருணம் வேறு தமிழிலுள்ள சாதி அமைப்பு வேறு என்று வாதிடுகிறார். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சாதிப்பிரிவுகள் வருணத்தில் அடங்காது என்றும் குறிப்பிடுகிறார். இந்நிலையில் தொல்காப்பியத்தை வருணபேதமற்ற இலக்கணமாகவே கருதவேண்டும் என்கிறார். அறவேந்தன், தொல்காப்பியத்தில் உள்ள வைதிகச் செய்திகளை நீக்கிவிட்டால் சங்க இலக்கியத்தில் அவை இருப்பதைத் தவிர்க்கமுடியுமா எனும் கருத்தை முன்வைக்கிறார். செல்வராசின் இந்தக் கட்டுரை அவர் கருத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வலியுறுத்துகிறது எனலாம்.

தொல்காப்பியம் எழுந்ததன் நோக்கம் (வரலாற்றுப் பின்னணியில் ஓர் ஆய்வு) எனும் மீனாட்சியின் கட்டுரை இலக்கண உருவாக்கம் குறித்தான மூன்று கருத்துகளை முன்வைக்கிறது. அவை; 1. ஒருமொழிபேசும் மக்கள் வேறுமொழி பேசும் மக்களிடம் தொடர்புகொள்ள, 2. பிறமொழியில் சிறந்த இலக்கணம் இருப்பதைக் கண்டு தனக்கும் உருவாக்க எண்ணுதல், 3. வேற்றுமொழியாளர்களுக்குத் தங்கள் மொழியைக் கற்பிக்க ஆகியவற்றை இலக்கண உருவாக்கத்திற்கு அடிப்படையாகக் குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து விலகிய நிலையில் சமஸ்கிருத இலக்கணம் உருவானது. பாலி மொழி அரச ஆதரவோடு செழித்தோங்கியபோது தம்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சவுணர்வில் தூய்மை, புனிதம் எனும் பண்பில் சமஸ்கிருத இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையிலேயே இந்தோஐரோப்பியமொழி சமஸ்கிருதமானது என்கிறார் மீனாட்சி.

தொல்காப்பியத்தைப் பொருத்தவரை அது பிறமொழியாளர் தமிழ்க் கற்கவே உருவாக்கப்பட்டது. எழுத்ததிகாரத்தின் நோக்கம் அதுவே என்கிறார். நெடுங்கணக்கு வைப்புமுறையில் , , எனும் எழுத்துகள் இறுதியில் இடம்பெறுவது பாலி, பிராகிருதம், சமஸ்கிருதத்தில் இல்லாத எழுத்துகளை இவ்வாறு அமைப்பதன் மூலம் கற்போர் எளிதாக விளங்கிக்கொள்ளவே என்கிறார். அதாவது பாலிமொழியில் போதனைகள் வழங்கிய பௌத்தமதத் துறவிகளுக்குக் கற்பிக்கவே எழுத்ததிகாரம் உருவாக்கப்பட்டதென்கிறார். சொல்லதிகாரத்தின் நோக்கம் தமிழின் தனித்துவத்தை நிறுவுவதே. அதன் நோக்கம் வேறு எனும் நிலையில் இவ்விரண்டு அதிகாரங்களும் வெவ்வேறு ஆட்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்.

தொல்காப்பியமும் பாணினீயமும் இருவேறு இலக்கண மரபுகள் எனும் .பாலசுப்பிரமணியனின் கட்டுரை மொழியியல் நோக்கில் அஷ்டாத்யாயியின் இலக்கணக் கொள்கைகளையும் தொல்காப்பிய இலக்கணக் கொள்கைகளையும் ஒப்பிட்டு, இவை வெவ்வேறு மரபின என்று நிறுவுகிறது. இவற்றுள் விவாதிக்கப்பெறும் செய்திகளாவன; மொழியியல் கூறுகளை ஆய்வதே பாணினீயம், பண்பாட்டுக் கூறுகளையும் சேர்த்து ஆராய்வது தொல்காப்பியம். இதுவே அடிப்படை வேறுபாடாகும். தொல்காப்பியம் தன்னிறைவான இலக்கணம். பாணினீயம் துணைநூற்களைக் கொண்டவை. அவையின்றி இதைப் புரிந்துகொள்ளுதல் இயலாத காரியம். ‘அஷ்டாத்யாயி அடிப்படையில் சொல்லை ஆராயும் நூலே; தொடரியல், பொருண்மையியல் கூறுகள் துணைபுரியப் பயன்படுவனவே. தொல்காப்பியச் சொல்லதிகாரம் தொடரிலக்கணத்தையே அடிப்படையாகக் கொண்டமைகிறது’(.268) உள்ளிட்ட கருத்துகளை மொழியியல் தரவுகளோடு நிறுவுகிறார் கட்டுரையாளர்.

தமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு எனும் ராமச்சந்திரனின் கட்டுரை மொக்கல்லானம் (பாலி), அஷ்டாத்யாயி (சமஸ்கிருதம்), தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இலக்கண நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்கிறது. வேற்றுமை உருபுகள் சிலவிடங்களில் தமிழோடு ஒத்த நிலையிலும் எதிர்மறை வேற்றுமை எனும் நிலையில் கச்சாயனம், மொக்கல்லானம், வீரசோழியம் ஆகியவற்றிற்கு அஷ்டாத்யாயியே அடிப்படை எனும் ஆய்வு முடிவைத் தருவதாக அமைகிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள்: அதன் அறிவுத் தொன்மையும் எதிர்காலமும் எனும் ஜார்ஜ் எல்.ஹார்டின் கட்டுரை தமிழ் இலக்கிய வரலாற்றை மறுவிசாரணை செய்வதாக அமைகிறது. எளிய மக்களின் காதலுணர்வைப் பாடும் இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. இதுவே பிராகிருதச் ட்டசாயியிலும் இடம்பெறுகிறது. தமிழில் வருணப் பாகுபாடு இல்லை. இதில் பாணன், பறையன், துடியன், வேலன் உள்ளிட்ட பிரிவுகளே இருந்தன. இவர்கள் அணங்கு எனும் ஆற்றலை அடக்குபவர்களாக இருப்பதால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். அந்த அணங்கு உறையப்பெற்ற பெண், மன்னன், தலைமகன் ஆகியோர் புனித ஆற்றல் அடைகின்றனர். திருமணத்திற்கு முன் ஆண் மேற்கொள்ளும் பயணம் அவனைப் புனித ஆற்றல் மிக்கவனாகவும் திருமணத்திற்குத் தகுதி உடையவனாகவும் ஆக்குகிறது. இதே பயணம் சட்டசாயியில் இடம்பெற்றாலும் அது திருமணத்திற்குத் தகுதியானதாகக் கருதப்படவில்லை. அந்த ஆற்றல் மிக்க மன்னன், கணவன் இறந்தால் முறையே சுற்றி இருப்போரும் மனைவியும் இறத்தல் வேண்டும். இல்லையெனில் அப்புனித ஆற்றல் தூய்மையிழந்து துன்பத்தைத் தரும்.

தென்னிந்தியா வந்த பிராமணர்கள் உயர்ந்ததாகக் கருதப்பட்ட திராவிடப் பண்பாட்டையே பின்பற்றினர். குறிப்பாக விதவைகளுக்கு விதிக்கப்படும் சடங்குகள், வீரனின் குடுமி பிராமணனின் குடுமியாதல், தீட்டு போன்ற கருத்தாக்கங்கள் தமிழர்களிடமிருந்து சென்றவையே. அதாவது பிராமணர்கள் தமிழ் மயமானார்கள், பிராமணரல்லாதோர் சமஸ்கிருதமயமானார்கள் உள்ளிட்ட கருத்துகளை விவாதிக்கும் குறிப்பாக இந்தியத் தொல்லிசை மரபு திராவிடத்தையே அடிப்படையாகக் கொண்டது என்கிறார். ஹார்ட் தமிழுக்கு மூலம் தக்காணத்திலிருந்தே பெறப்பட்டதென்கிறார். மெய்ப்பாட்டியல் ரஸத்தோடு மிகநெருங்கிய தொடர்புகொண்டதென்கிறார். ஆனால் இதற்கு மூலம் திராவிடமே. சமஸ்கிருதம் அதிலிருந்து தான் பெற்றதா என்பதை என்னால் சொல்லமுடியவில்லை என்கிறார். இவ்விடம் குழப்பமாக அமைகிறது. வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததென்று சொல்லும்போது உண்டாகும் வேகம் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்றது என்று சொல்வதில் ஏன் குறைகிறது எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ்சமஸ்கிருத இலக்கியங்களில் இயற்கையை அணுகும் இருவேறு முறைகள் எனும் வாசு.அரங்கநாதனின் கட்டுரை உள்ளுறை உவமமாக இயற்கையை விவரிக்கும் பாங்கு தமிழைப்போல் சமஸ்கிருதத்தில் அமையப்பெறவில்லை என்று குறிப்பிடுகிறது. இதைக் கடல், வானம், மான் எனும் உவமைப் பயன்பாடுகளின் வழி விளக்குகிறது. மழைக்கான குறிப்பைத் தமிழ் இலக்கியங்கள் வானத்தோடு தொடர்புபடுத்திப் பாடுகின்றன. ஆனால் சமஸ்கிருத மரபில் மேகத்தோடு தொடர்புபடுத்தி வெளிப்படையாகப் பாடப்பட்டுள்ளன. இந்நிலையில் இவையிரண்டும் இருவேறுமரபின என்பதை அறியமுடியும். மேலும் உவமைகளின் வழி மெய்ப்பாடுகளை அறியமுடியும். ஆந்தையின் அலல் அச்சம் எனும் மெய்ப்பாட்டை உணர்த்துவதாய் அமைகிறது. ஆனால் சமஸ்கிருதத்தில் அவ்வாறில்லை. உவமையியலை அடுத்து மெய்ப்பாட்டியல் அமைந்திருப்பது இதை விளக்கவே உள்ளிட்ட கருத்துகளைக் கட்டுரை விவாதிக்கிறது.

அகப்பொருளும் சமஸ்கிருத முக்தகப் பாடல்களும் எனும் ஸிக்பிரட் லைன்ஹார்டின் கட்டுரை முக்தகப் (தனிப்பாடல்) பாடல்கள் தமிழ் அகமரபை அடிப்படையாகக் கொண்டதுவே என்று குறிப்பிடுகிறது. குறிப்பாகத் திணையமைப்பில் விவரிக்கப்படும் உரிப்பொருள் பண்பு சமஸ்கிருத முக்தப் பாடல்களிலும் காணப்படுகிறது. பெயர் சுட்டா மரபும் தமிழ் அகமரபிற்கே உரியது. இவை சமஸ்கிருத மரபில் இல்லாததாகும். எனவே தொல்காப்பியமே முக்தகப் பாடல்களைக் கற்க ஏதுவான தரவுத்தளம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் தொல்காப்பியமே வடமொழிபாற்பட்டது என்பது இவர் கருத்தாக அமைகிறது.

வடமொழி இதிகாசப் பொருண்மைக்குச் சங்க இலக்கியத்தின் நன்கொடை எனும் மணவாளனின் கட்டுரை இராமாயணம், மகாபாரதம், பாகவதம் உள்ளிட்ட இதிகாசங்களுக்குச் சங்க இலக்கியங்கள் எவ்வாறு பங்களித்தன என்பதைக் குறிப்பிடுவதாக அமைகிறது. அதற்குச் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் இதிகாசச் செய்திகளைப் பட்டியலிடும் கட்டுரையாளர் அதனுடன் ஒத்தும் விலகியும் வரும் தன்மையினை விளக்குகிறார். சான்றாக அகலிகையைக் கல்லாக மாற்றியது, இந்திரன் ஆயிரம் கண்கள் பெற்றது உள்ளிட்ட செய்திகள் சங்க இலக்கியங்களிலேயே காணப்படுகின்றன. தென்புல இராமாயணங்களிலேயே இச்செய்திகள் இடம்பெறுகின்றன. வடபுலமரபில் அவ்வாறில்லை ஆகிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் வைதிக நெறியின் சூழலும் செல்வாக்கும் என்ற சங்கரேஸ்வரியின் கட்டுரை தமிழ் இலக்கியக் கொள்கைகள் பலவும் வேதங்களிலிருந்தும் சாத்திரங்களிலிருந்தும் பெறப்பட்டதே என்பதை நோக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சான்றாக மடலேறும் மரபும் தலைவி இரவுக் குறிக்கு அல்லற்குறிப்படுதலும் அதர்வண வேதத்திலிருந்து பெறப்பட்டனவே ஆகும். புறநானூறு, பதிற்றுப்பத்து, திருக்குறள் ஆகியவற்றில் விவாதிக்கப்படும் அரசியல் பற்றிய கருத்துகள் யாவும் அர்த்தசாத்திரத்திலிருந்து பெறப்பட்டவையே. ‘நாடாகொன்றா காடாகொன்றா’ எனும் பாடலுக்கு அடிப்படை தம்மபதமே. அங்குள்ள அருகன் இங்கு ஆடவனாயினான் எனும் தெ.பொ.மீ.யின் கருத்து ஏற்புடைத்து உள்ளிட்ட கருத்துகளை வாதிடுகிறது இக்கட்டுரை.

தமிழரின் சமஸ்கிருத ஆக்கங்கள் எனும் சீனிவாசனின் கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தவொன்று. இலக்கியம் எழுந்த மொழியை விடுத்து அது உருவான இடம், காலம், சூழல், உள்ளடக்கம், சமயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதன்வழியே அதன் வரலாற்றை உருவாக்கமுடியும் என்கிறார். அதற்கு 1. ஆகமம், 2. சிற்பநூல், 3. தலபுராணம் ஆகிய வகைமைகளை ஆய்வுப் பொருளாக்குகிறார். இதன்வழிக் கிடைக்கும் முடிவுகளாவன; இந்நூற்களின் உள்ளடக்கங்கள் தமிழ் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்நாட்டை மையமிட்டவை. தமிழ்நாட்டிலேயே அதன் சுவடிகள் கிடைக்கின்றன என்பதன்வழி சமஸ்கிருத நூலாயினும் அது தமிழரின் அறிவுக் கொடையே. அவை தமிழ் வழக்காறுகளிலிருந்து கிளைத்தவையே என்கிறார். இன்றைய தமிழர் ஆங்கில மொழியில் எழுதுவது போல அன்றைய தமிழர்கள் சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கலாம் உள்ளிட்ட கருத்துகளை ஆழமாக ஆராய்கிறார். இக்கட்டுரை இலக்கிய வரலாற்று வரைவியல் எனும் அவருடைய நூலிலிருந்து பெறப்பட்டதாகும். அந்நூலிலேயே நாட்டிய சாஸ்திரம் தமிழர்களால் தான் எழுதப்பட்டது என்று நிறுவியிருப்பார். அக்கட்டுரையும் மிகவும் முக்கியமானது.

தமிழர் வளர்த்த சமஸ்கிருதம் எனும் பத்மநாபனின் கட்டுரை விவாதிக்கும் கருத்துகள் மேலுள்ள சீனிவாசனின் கட்டுரையை அடியொற்றி அமைந்ததே ஆகும். சமஸ்கிருத மொழியை எழுதத் தமிழர்கள் உருவாக்கியதே கிரந்தம். வேத உரைகள், தல புராணங்கள், சாத்திர நூல்கள், மொழிபெயர்ப்புகள் யாவும் தமிழர்கள் சமஸ்கிருதத்திற்கு அளித்த கொடையே உள்ளிட்ட கருத்துகளை விவாதிக்கிறது இக்கட்டுரை.

மதிப்புரை

        மேலே அறிமுகஞ் செய்யப்பட்ட கட்டுரைகளை ஒருசேர நோக்குமிடத்து அதுனூடே பயணிக்கும் இழைகளையும் முரண்களையும் அடையாளப்படுத்தவியலும். அவ்வகையில் இக்கட்டுரைகளின் வழி எட்டப்படும் ஆய்வு முடிவுகளைப் பின்வரும் நிலையில் பகுக்கலாம்.

  1. சமஸ்கிருதத்திலிருந்து சென்றன
  2. தமிழிலிருந்து சென்றன
  3. இரண்டிலும் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளன
  4. பொதுமூலத்திலிருந்து பெற்றுக்கொண்டன

ஆகிய நான்கு நிலைகளில் அடையாளப்படுத்தலாம். அவற்றின் அடிப்படைகளைப் பின்வருமாறு விளக்கலாம்.

சமஸ்கிருதத்திலிருந்து சென்றன

இப்பொருண்மையிலமையும் கட்டுரைகளே இவற்றுள் மிகுதி எனலாம். இவ்வாறு உரைப்பதன்வழித் தமிழுக்குத் தனித்துவமில்லை எனும் தொனி எட்டப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. சான்றாக வையாபுரிப்பிள்ளை, .அண்ணாமலை, செ.வை.சண்முகம், மு.கு.ஜகந்நாதராஜா, பா.சங்கரேஸ்வரி ஆகியோரின் கருத்துகளின் சாரம், தமிழுக்குச் சமஸ்கிருதமே அடிப்படை என்பதே. அதாவது காரகத்திலிருந்து வேற்றுமை, ரஸத்திலிருந்து மெய்ப்பாடு, உபமாலங்காரத்திலிருந்து உவமை, நெடுங்கணக்குமுறை, அறம், அரசியல் நுட்பங்கள் என யாவும் சமஸ்கிருதத்திலிருந்தே தமிழ்க் கடனாகப் பெற்றது என்பதே ஆகும். இவ்வாறு உரைப்பதில் தவறேதுமில்லை. அதற்கு உரிய வரலாற்றுத் (அகப்புற) தரவுகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் இக்கட்டுரைகள் அவ்வாறு அமையப்பெறவில்லை. ஆய்வாளர்களின் அனுமானங்களும் விருப்பங்களுமே அடிப்படையாக அமைகின்றன. சிலவிடங்களில் வழங்கும் செய்திகளை மறுப்பதற்கும் இல்லை.

சங்கரேஸ்வரி சங்க இலக்கியக் கொள்கைகளில் வேதத்தாக்கம் காணப்படுவதாகக் கூறும் அதர்வண வேதத்தின் காலம், தோற்றச்சூழல் குறித்து விளக்காதது ஏனென்ற வினா எழுகிறது. நச்சினார்க்கினியர் தொடக்ககால வேதங்களாகத் தைத்ரிகம், பௌடிகம், தவளகாரம் போன்றவற்றைச் சுட்டுகிறார்[1]. இதுவே இக்கட்டுரையாளரின் வாதத்தை வலுவிழக்கச் செய்யுமிடம் எனலாம். அதாவது வேதங்கள் காலத்திற்குக் காலம் மாறியே வந்துள்ளன. அவற்றிலும் குறிப்பாக அதர்வண வேதம் என்பது காலத்தால் மிகவும் பிந்தியது என்பதே சமஸ்கிருத ஆய்வாளர்களின் கருத்து என்பது ஈண்டு கவனம்கொள்ளத் தக்கச் செய்தியாகும்.

ஜகந்நாதராஜா கிரந்தம் தென்னாட்டுப் பிராமணர்கள் மொழி என்று சொல்வதற்குச் சான்று என்ன என்பதை யாரிடம் கேட்பது. அவ்வாறெனில் சீனிவாசன், பத்மநாபன் ஆகியோர் தமிழர்களின் ஆக்கம் சமஸ்கிருதத்தில் உள்ளது என்பதிலிருந்து இதை நோக்க வேண்டும். ந்நாதராஜா கருத்தை ஏற்றால் அந்நூற்கள் பிராமணர்களால் எழுதப்பட்டது என்ற அதிகாரக் கருத்தே உருவாக்கம் பெறும். இதற்கான அடிப்படைச் சான்றுகளே இல்லை எனலாம். மேலும் ஔவையாரின் ‘நாடாகொன்றோ காடாகொன்றோ’ எனும் பாடல் தம்மபதத்திலிருந்தே ஔவை எடுத்துக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். தெ.பொ.மீ.யின் கருத்தும் அதுவே என்கிறார் சங்கரேஸ்வரி. இக்கருத்தின்வழி தம்மபதம் ஔவைக்கு முந்தியது என்பது இவர்களது கருத்தாம். பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுச் செய்திகள் தம்மபதத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்[2] என்பதும் ஈண்டு கவனிக்கத்தக்கது.

அண்ணாமலை, செ.வை.சண்முகம், நாச்சிமுத்து ஆகியோர் இன்று ஆங்கிலம் இருக்கும் இடத்தில் அன்று சமஸ்கிருதம் இருந்தது என்கின்றனர். இது அடிப்படைச் சிக்கலுள்ள கருத்து. சமஸ்கிருதம், ஆங்கிலம் இரண்டின்மேலும் தமிழர்களுக்கு மோகமிருந்தது, இருக்கிறது. இவ்விரு மொழிகளும் தமிழர்களை அடிமைப்படுத்தியது. ஆனாலும் ஆங்கிலம் தமிழர்களை வளர்க்கவும் தவறவில்லை. அப்படி சமஸ்கிருதம் தமிழர்களை வளர்த்துள்ளதா என்றால் இல்லை என்கிறார் அறவேந்தன்.

இவர்கள் யாவருக்குமான பொதுக்கருத்து பாணினீயத்திலிருந்து தொல்காப்பியம் பெற்றுகொண்டது என்பதே. பாணினி, தொல்காப்பியர் இருவரின் காலமும் என்ன என்பதை நோக்குதல் இன்றியமையாத பண்பாக அமையும். தொல்காப்பியரின் காலத்தைக் குறிப்பிடும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி தம் எழுத்திலக்கண ஆராய்ச்சிக் குறிப்புரையில் கி.பி.200 (1937. ப.xviii) என்கிறார். அவரே தன்னுடைய  வடமொழி நூல் வரலாறு எனும் நூலில் கி.மு.200 (1946. பக்.662-63) என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்து மாற்றத்திற்குக் காரணம் யாது என்பதை அவர் எங்கும் பதிவிடவில்லை என்பார் பொ.வேல்சாமி. இது உணர்த்தும் செய்தி காலவரையறை என்பது தெளிவுபட வரையறுப்பதற்கில்லை என்பதே. தொல்லியல் தரவுகளின் வழி தொல்காப்பியர் காலம் குறித்த ஆய்வுகள் பலவும் நிகழ்ந்துள்ளதை நாமறிவோம். அதேபோல் அஷ்டாத்யாயியிக்கும் நிகழ்ந்திருப்பின் பொறுத்திப் பின்னர் ஆய்வுகள் நிகழ்த்தலாம். இதுவன்றிரஸத்திலிருந்து மெய்ப்பாடு என்பது அடிப்படை வாதமற்றது. ரஸம் நாட்டியத்தின்மொழி மெய்ப்பாடு கவிதையின் மொழிஎன்பார் பொ.வேல்சாமி.[3] பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் உரையின்வழியேயும் அதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனவே, அதன் அடிப்படைகளைப் புரிந்துகொண்டுதான் இக்கட்டுரைகளை அணுகுதல் வேண்டும்.

தமிழிலிருந்து சென்றன

            இக்கருத்தில் அரங்கராஜ், ..மணவாளன் ஆகியோரின் கட்டுரைகள் அமைகின்றன. இவர்களின் கருத்துகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் பாங்கில் அமைந்திருப்பினும் மொழி உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருப்பதையும் தவிர்க்கமுடிவதில்லை. செ.வை.சண்முகத்தின் கட்டுரையை மறுத்தெழுதும் அரங்கராஜ் தமிழ் முதன்மை, இலங்கை முதன்மை எனும் நிலைகளிலான கருத்துகளையும் முன்வைக்கிறார். இது முதற் குரங்குக் கதைக்கு வழிவகுக்கும் வண்ணம் அமையும் என்ற அச்சமும் இல்லாமலில்லை. தமிழுக்குச் சமஸ்கிருதம் கேட்டைத் தவிர ஒன்றும் செய்யவில்லை எனும் அவரின் கூற்று வெறுப்புணர்வைத் தூண்டுவதாகவே அமைகிறது. மணவாளனின் கருத்துகள் ஏற்புடையனவாய் அமைகின்றன. அதாவது இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் தென்புலப் பதிப்புகள் வடபுலத்திலிருந்து வேறுபடுகின்றன. இவ்வேறுபாட்டிற்குக் காரணம் இங்கு சங்க இலக்கியத்தில் பதியப்பட்டுள்ள கருத்துகள் அவற்றுள் உள்ளன என்பது தான் என்கிறார். அதாவது தமிழ்நில வழக்காறுகளிலிருந்து அவைப் பெற்றுக்கொண்டன என்பதைத் தான் நம்மால் வருவித்துக்கொள்ள முடிகிறது. இக்கருத்து மிகவும் முக்கியமானதாகும். இருப்பினும் இன்னமும் விரிவாக எழுதி விவாதிக்கப்பட வேண்டிய பகுதியும் இதுவெனலாம்.

இரண்டிலும் ரிமாற்றம் நிகழ்ந்துள்ளன

            இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு கி.நாச்சிமுத்து, இரா.அறவேந்தன், சிலம்பு நா.செல்வராசு, கு.மீனாட்சி, .பாலசுப்பிரமணியன், வாசு.அரங்கநாதன், ஜார்ஜ் எல்.ஹார்ட், ஸிக்பிரட் லைன்ஹார்டு, ரா.ராமச்சந்திரன் ஆகியோரின் கட்டுரைகள் அமைகின்றன. இவை இருமரபிற்கிடையிலும் தாக்கமிருப்பதை நிறுவுகின்ற அதேவேளையில் இரண்டிற்குமிடையிலான வேறுபாடுகளையும் சுட்டத் தவறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். இவர்களுள் ஜார்ஜ் எல்.ஹார்ட், ஸிக்பிரடு லைன்ஹார்டு ஆகிய இருவரின் ஆய்வு முடிவுகள் சிலவிடங்களில் குழப்பம் விளைவிப்பனவாய் அமைகின்றன. சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டன என்பதை அழுத்தமாகச் சொல்லும்போது தமிழிலிருந்து சென்றது என்பதைச் சொல்ல ஏனோ இருவர் மனதிலும் தடை ஏற்படுகிறது. இவை தமிழில் தான் உள்ளன. ஆனால் சமஸ்கிருதத்திற்கு இங்கிருந்துதான் சென்றது என்று தங்களால் கூறமுடியவில்லை. ஏனெனில் தொல்காப்பியம் போன்ற தொல் இலக்கணமே சமஸ்கிருதத்திலிருந்து தான் தன்னைத் தகவமைத்துக்கொண்டது என்பது இவர்களின் கருத்து. அவ்வாறு தாக்கம் அடைந்ததற்கான உரிய சான்றெதுவும் இங்கு முன்வைக்கப்படவில்லை என்பது தான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் செய்தி.

கு.மீனாட்சி தொல்காப்பிய எழுத்து, சொல் வேறு வேறு நபர்களால் எழுதப்பட்டதென்கிறார். .பாலசுப்பிரமணியன் தன் ஆய்வில் அகக்கூறுகளின் அடிப்படையில் தொல்காப்பியம் முழுமையான பிரதியே என்று நிறுவியுள்ளார். மேலும் மீனாட்சியின்காரகம் என்பது வேறு வேற்றுமை என்பது வேறு. வேற்றுமை வடமொழி மரபை மறுப்பது’ எனும் கருத்து செ.வை.சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் ஆய்வு முடிவை மறுப்பதே ஆகும். .பாலசுப்பிரமணியனின் கட்டுரையும் அவ்வாறே அமைகிறது.

பொதுமூலத்திலிருந்து பெற்றுக்கொண்டன

            இக்கருத்துக்குச் சொந்தமானவர் என்று ஜார்ஜ் எல். ஹார்டைக் குறிப்பிடலாம். திராவிட, ஆரிய மரபுகள் இரண்டும் தக்காணப் பகுதிகளிலிருந்து தங்களுக்கான மூலங்களைப் பெற்றுக்கொண்டன என்கிறார். இதுபோன்றே சிலவிடங்களை அண்ணாமலையும் நாச்சிமுத்துவும் குறிப்பிடுகின்றனர். பொதுமூலம் என்பது ஒரு அனுமானமே ஆகும். கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் எது முந்தியிருக்கிறதோ அதை மூலமாகக் குறிப்பிடுவதே சரியெனப் படுகிறது.

            இந்நான்கு பண்புகளன்றி ஐந்தாவதாக ஒரு பண்பு உள்ளது. அது தோன்றிய சூழலை அடிப்படையாகப் பெறுதல். இந்நிலையிலேயே இரா.சீனிவாசன், .பத்மநாபன் ஆகிய இருவரின் கட்டுரையும் அமைகிறது. ஒருவகையில் இது தமிழிலிருந்து பெறப்பட்டது என்பதோடே இணையும் நிலையின என்றாலும் அதிலிருந்து வேறுபட்டு அமைவதாய்ப் பார்க்க வேண்டுமெனத் தோன்றுகிறது. இவ்வகையிலான ஆய்வு மேலுள்ள குழப்பங்களுக்கு வழிவகுக்கும். எனவே இந்நிலையில் பதிப்பாசிரியர்கள் தொடக்கத்தில் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் தான் இக்கட்டுரைகள் அமைந்துள்ளனவா என்பதை நோக்குதல் அவசியமாகிறது. என்னளவில் இல்லை என்றே சொல்வேன். செறிவுமிக்க ஆய்வுகளிலும் வன்மங்களும் உணர்வுமேலிடல்களும் இழையோடுவதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை.

            நூலாக்கத்தின் போது கட்டுரைகளின் வைப்புமுறை பொருண்மை அடிப்படையில் அமைத்திருப்பின் வாசகருக்கு எளிமையாக இருந்திருக்கும். தொடர்ந்து கட்டுரைகள் தோன்றிய காலம், சூழல், பெறப்பட்ட இடம் குறித்த விளக்கங்களும் தெளிவாக இடம்பெறுதலே பல குழப்பங்களைக் களைய வழிவகுக்கும். ஒரு கருத்து எங்கு தோன்றியது அது எவ்வாறு வளர்ந்தது / மாற்றமடைந்தது உள்ளிட்ட படிநிலைகளை அறிந்துகொள்ள இத்தகைய பண்பிலான பதிப்புகளே வழி வகுக்கும். இவை அடுத்த பதிப்பில் கவனப்படுத்தப்படின் நலமே என்க.

 

 

துணை நின்றவை

  • கோவிந்தசாமிப் பிள்ளை, இராம., (ப.ஆர்.), (1993), தொல்காப்பியம் எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும். தஞ்சாவூர்: சரஸ்வதி மகால் நூலகம்.
  • சுப்பிரமணிய சாஸ்திரி, பி.சா., (1937), தொல்காப்பியம் எழுத்ததிகாரம். திருச்சிராப்பள்ளி: முருகவிலாஸ் ஜனனுகூல பிரஸ்.
  • சுப்பிரமணிய சாஸ்திரி, பி.சா., (1946), வடமொழி நூல் வரலாறு. அண்ணாமலை நகர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  • வேங்கடசாமி, சீனி மயிலை., (1957), பௌத்தமும் தமிழும். திருநெல்வேலி. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
  • https://youtu.be/hjV-Nn1Zr7E?si=CS0JE-181cl6F45t

(18-01-2021 அன்று ஜே.என்.யு. தமிழ்ப் பிரிவின் இணையவழி நிகழ்வில் ‘சமஸ்கிருத இலக்கிய வரலாற்று நூற்கள்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் இணைப்பு)

 

குறிப்பு: இக்கட்டுரை ஜே.என்.யு. தமிழ்த்துறையில் 27-02-2024 அன்று வாசிக்கப்பெற்றது. அங்கு விவாதிக்கப்பட்ட கருத்துகளின்வழி மேலும் செம்மையாக்கம் செய்யப்பட்டது. கட்டுரை எழுதத் துணைநின்ற புலவர் பொ.வேல்சாமி அவர்களுக்கு நன்றி.

 

 

[1] “நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையாயினான் மறையென்றார். அவை தயித்திரியமும் பௌடிகமும் தலவகாரமும் சாமவேதமும். இனி இருக்கு மெசுருந் சாமமு மதர்தணமு மென்பாரு முளர். அது பொருந்தாது இவரிந்நூல் செய்த பின்னர் வேத வியாதர் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோ ருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராதலின்” என்கிறார் நச்சினார்க்கினியர். ப.15

[2] காண்க, தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார் எனும் பகுதியை – பக்.97-134

[3] https://youtu.be/hjV-Nn1Zr7E?si=CS0JE-181cl6F45t

18-01-2021 அன்று ஜே.என்.யு. தமிழ்ப் பிரிவின் இணையவழி நிகழ்வில் ‘சமஸ்கிருத இலக்கிய வரலாற்று நூற்கள்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் இணைப்பு.

Post Comment