ஆதியிலே வார்த்தை இருந்தது:
‘வேடிக்கை பார்க்கும் இருள்’
கவிதைக்கான விமர்சனம்
சங்கர்தாஸ்
எனக்குத் தெரிந்து மூன்று இருள்கள் இருக்கின்றன. ஒன்று நாமே கண்களை மூடிக்கொண்டு வரவழைக்கும் இருள். இந்த இருள் செயற்கையானது; சுய விருப்பம் சார்ந்தது. இரண்டாவதாக, சூரியன் மறைந்த பிறகு வரும் இருள். இது இயற்கையானது; மனித வாழ்வுக்குத் தேவையானது. மூன்றாவதாக, மண்ணுக்குள் புதைத்த பின் கிடைக்கும் இருள். இந்த இருள்தான் படைப்புக்குச் சொந்தமானது. எந்த ஒரு விதையும் வெளிச்சத்தில் முளைக்காது. அதற்கு மண்ணுக்குள் புதைந்த பக்குவமான இருள் தேவை. இதில் பல அடுக்குகள் இருக்கின்றன. மிக ஆழமாகப் புதைந்தவை விலைமதிப்பானதாக மாறும், வைரம் போல.

கவிஞர் மு. ரமேஷின் இருள் நான்காவது வகை. ஏற்கனவே இருளில் இருப்பவனிடத்தில் தோன்றும் இருள். இதை ரமேஷ் வேடிக்கை பார்க்கும் இருள் என்கிறார். இந்தத் தொடரை இலக்கணத்தில் தடுமாறு தொழில்பெயர் என்பர். புலி கொள் யானை என்றால், புலியைக் கொன்ற யானையா? அல்லது புலியால் கொல்லப்பட்ட யானையா? என்று கேள்வி கேட்டு, இலக்கண ஆசிரியர்கள் ஒரு வகுப்பைக்கூட ஓட்டுவது உண்டு. அதேபோன்ற ஒரு தொடர்தான் வேடிக்கை பார்க்கும் இருள் என்பதும். வேடிக்கையைப் பார்க்கும் இருளா? அல்லது வேடிக்கையானது பார்க்கும் இருளா? எனப் பொருள்கொண்டு தடுமாறலாம்.
ஓர் இலக்கணவாதிக்கு ஒரு தொடரைக் கட்டுடைத்துத் தருக்கத்தை முன்வைப்பதுதான் பிடிக்கும். ஆனால், ரமேஷைப் பொறுத்தவரை ஓர் இலக்கணவாதியைப் போல இந்தத் தொடரை முன்வைக்கவில்லை என்பதையும், புனைவிலக்கியம் என்பது பொருளை விளங்க வைப்பதைவிட அனுபவம் தருவதை முதன்மையாகக் கொண்டது என்பதையும் தன் முன்னுரையில் சொல்லிவிடுகிறார்.
இதைப் புரிய வைப்பதற்குத் தொல்காப்பியர் என்னும் இலக்கணவாதியையே அழைத்து வருவதில் ரமேஷின் குறும்புத்தனம் தொடங்குகிறது. ஓர் இலக்கண விதியை அடித்து உடைத்துவிட்டு, அதற்கு இலக்கணவாதியின் ஆதாரத்தை எடுத்து வைப்பதற்குக் கவிஞனாக மட்டும் இருந்தால் போதாது. அதற்கு வாசிப்பை நேசிக்கும் கல்வியாளனாகவும் இருக்க வேண்டும்.
’மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா’ என்ற தொல்காப்பியரின் சொல்லதிகார உரியியல் நூற்பாவைத் தன் முன்னுரையில் எடுத்துக்காட்டுகிறார். என்னைப் பொறுத்தவரை உரியியலில் இந்த நூற்பாவிற்கு முன்னுள்ள நூற்பாவும் முக்கியமானது என்பேன். அது,
’பொருளுக்குப் பொருள் தெரியின் அது வரம்பு இன்றே’ என்ற நூற்பாவகும். “யாதானுமோர் ஆற்றான் உணரும் தன்மை அவர்க்கு இல்லையாயின் உணர்த்தற் பாலன அல்ல” என்று சேனாவரையர் விளக்கம் கூறுவர்.
இதை இப்படிப் புரிந்துகொள்ளுங்கள். “சாலப் பேசினான்” என்று ஒருவர் சொல்கிறார். “அப்படி என்றால் என்ன?” என மற்றொருவர் கேட்டால், “மிகுதியாகப் பேசினான்” என்று சொல்லலாம். அப்படி என்றால்?
அதிகம் பேசினான் – அப்படி என்றால்?
கூடுதலாகப் பேசினான் – அப்படி என்றால்?
நிரம்பப் பேசினான்….
இப்படியே சொல்லிக்கொண்டு போனால், பொருளுக்குப் பொருள் வரம்பு இன்றிப் போகும். அதனால்தான் தொல்காப்பியர் ’உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்து’ என்றும், ’மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா’ என்றும் கூறுகிறார். இதைத்தான் ரமேஷ் முன்னுரையில் சொல்கிறார். கவிதை என்பது விளக்கும்தன்மை அன்று; உணரும் தன்மை.
அந்த வகையில் வேடிக்கை பார்க்கும் இருள் என்பதில் எந்தப் பொருள் குழப்பமும் தேவையில்லை. இருளானது வேடிக்கை பார்க்கிறது. கூடுதலாக ஒன்று சொல்லலாம். அந்த இருள் பார்வையற்ற மாற்றுத் திறனாளியை வேடிக்கைப் பார்க்கிறது. என்னைப் பொறுத்தவரை, இதை உணர்ந்த தருணத்தில் வேடிக்கை பார்க்கும் இருள் என்ற தலைப்பு தத்துவமாக மாறியதைக் கண்டேன். பார்வையற்ற ஒன்று பார்வையற்ற ஒரு மனிதனை வேடிக்கைப் பார்க்கிறது என்பது சொல்பொருள் அடுக்குகளைக் கடந்த உச்சம். எனக்குத் தெரிந்து சமீபத்தில் வந்த எந்தக் கவிதைத் தலைப்பும் இவ்வளவு உன்னதமாக அமையவில்லை.
வேடிக்கை பார்க்கும் இருள் என்பதைப் படிமமாகக் கொண்டால், பார்வை மாற்றுத்திறனாளிக்குப் படிமம் எப்படிக் கைகூடும் என்ற கேள்வி சிலருக்கு வரலாம். இதை ரமேஷ் ஒரு தன்முனைப்பாக எடுத்துக்கொண்டு, “பார்வையற்றோரைக் கண்டால் கீழ்மைப்படுத்துவது, இழிவாகப் பார்ப்பது, ஒதுக்குவது, ஒடுக்குவது என்பதான நிலைகள். சமூகத்தின் பெரும்பகுதியினரால் இத்தகைய போக்கு கைக்கொள்ளப்படுகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு காட்சிக் கவிதைகளை இத்தொகுப்பில் அதிகமாக இடம்பெறச் செய்துள்ளேன்” என்கிறார்.
இருள் பலாவின்
ஒளிச் சொளையென
இனித்துக் கிடக்கிறது கடவுள்
என்று சொல்லும்போது தெரியும் காட்சி, அலாதியான படிமம். பிரமிளின் கவிதைகளில் இதுபோன்ற படிமத்தைப் பார்க்கலாம். ரமேஷிடம் தெரியும் தனித்துவம், இவரால் படிமத்தைக் கிண்டலடிதும் சொல்லமுடிகிறது என்பதுதான்.
காமம் கூட்டின்பம்
பக்தி சுய இன்பம்
என்பதனை ஆலய மணியோசையும்
நடைசாத்திய பிறகு நின்று எரியும் கற்பூரமும்
சொல்லுகின்றன
என்ற கவிதையின் முதல் இரண்டு வரிகள் அங்கதம். இந்த அங்கதத்தை ஆலயமணியோசையோடும், நின்று எரியும் கற்பூரத்தோடும் படிமமாக்குவது ரமேஷின் புதுமை.
ரமேஷின் கவிதைகளில் அங்கதம் என்பது கவிஞர் ஸ்ரீலஸ்ரீ கடவுள் பிள்ளை, கவிஞர் ஓட்டம், கவிஞர் தூங்கு மூஞ்சி, கவிஞர் தொலைந்தவன், கவிஞர் முடியாதவன் எனத் தலைப்பிடுவதிலும்;
பதவி ஏற்பு நிகழ்ச்சியை
முடிசூட்டு விழா என்கிறார்கள்
மயிர்சூட்டு விழா என்பதிலும் தவறில்லை
என்று கவிதை இயற்றுவதிலும் காணமுடிகிறது. மற்ற எந்தக் கவிஞரும் எடுத்துக்கொள்ளாத அங்கதம், கிண்டல், நகைச்சுவையை ரமேஷ் ஏன் தன் கவிதையின் பாடுபொருள்களில் வைக்கிறார் என்ற கேள்வி எனக்குள் தோன்றியது. பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் இந்த சமூகம் சுய கழிவிரக்கத்தையே அதிகம் கோருகிறது. பதிலுக்கு ரமேஷ் பகடிகளைத் தருகிறார். சமூகத்திற்கு மட்டுமல்ல கடவுளுக்கும் ஒரு பார்சல் கிண்டலைக் கொடுக்கிறார்.
ஒரு பொருளைப் பார்க்க முடியாவதன் அதனைப் பற்றிப் பேசக்கூடாது என சமூகம் எதிர்ப்பார்க்கிறது. “மனம் என்பது சொற்குறிகளால் கட்டப்படுவதைத் தவிர வேறென்ன? கண்பார்வையற்றோரைச் சமத்துவமாக நடத்த முடியாத உங்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். கடவுள் மயக்கத்திலும், காமத் திளைப்பிலும், இன்பக் களிப்பிலும் ஏன்? மரணப் படுக்கையிலும் முதலில் மூடப்படுவது கண்கள்தான்” என்கிறார் ரமேஷ். இருள் என்பது குறைந்த ஒளி என்கிறான் பாரதி. இருளில் நடக்கும் ஸ்பரிசம் கற்பனையின் ஊற்றாகின்றன. இருளே இல்லை என்றால் கனவுகள் ஏது?
இந்த புரிதலோடு
என் இருள் சாயலில்
நாள்தோறும் வந்து வந்து
போகின்றன நள்ளிரவுகள்.
ஓசை படபட
முதல் நாள் இரவில்
திறந்து கொண்டன இரண்டு காதுகளும்…!
வடிவரிய வாகான
கைகள் இரண்டும் விரிந்து கொண்டன
இரண்டாம் நாள் இரவில்…!
எச்சுவையும் அறிய
மூன்றாம் நாள் இரவில்
நாக்கிசைந்தது…!
நாய் போல முகர்ந்தறிய
நான்காம் நாள் இரவில் முந்திக் கொண்டது
மூக்கு…!
காற்றும் சூரியனும் நான் இருக்கும்
இடத்திற்கே வந்து தீண்டுகின்றன
என்னும் மெய்ம்மையை ஐந்தாம் நாள் இரவில்
யோசித்துக்கொண்டிருந்த போது
விடிந்திருந்தது…!”
என்ற கவிதையைப் படிக்கும் போது, அக இருளும் புற இருளும் வேடிக்கைப் பார்ப்பதுபோல எனக்குத் தெரியவில்லை. அக இருளும் புற இருளும் பகிர்ந்துகொள்ளும் ஞானத்தின் உரையாடலாக எனக்குத் தோன்றியது. இருள் என்பதுதான் இருப்பு. நாம்தான் அதைப் பழகிக்கொள்ள வேண்டும். அதனால்தான், “காட்டுவாசிகளின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுடைய கண்கள் எப்போதும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும். இருளில் உள்ள ஒளியை அவர்களுடைய கண்கள் பழகியதனால் அக்கண்களுக்குச் சிறப்பானதோரொளி உண்டாகியிருக்கிறது” என்று ரமேஷ் சொல்கிறார்.
பார்வையற்றவர்களால் வார்த்தைகளையோ படிமங்களையோ கவிதைகளோ உருவாக்க முடியாது என மற்றவர்கள் நினைப்பது தவறு. அவர்களுக்கு இருள் என்பது கண்களை மூடுவதாலோ, சூரியன் மறைவதாலோ தோன்றியதில்லை. அது ஒடுக்கப்படுவதாலும், அடக்கப்படுவதாலும் தோன்றியது. இந்த ஒடுக்குமுறைக்குக் கடவுளும் கூட்டாளி என்பதால்தான் ரமேஷ் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கடவுளைப் போட்டுத்தாக்குகிறார்.
இருளே படைப்பின் ஆதாரம். மண்ணுக்குள் புதைக்கப்பட்ட விதை முளைப்பதுபோல சொற்கள் உருவாகின்றன. வானம் தோன்றுவதற்கும், பூமி தோன்றுவதற்கும், சூரியன் தோன்றுவதற்கும் முன்பே இருந்த இருளில் சொற்கள் தோன்றிவிட்டன. ‘ஆதியிலே வார்த்தை இருந்தது’ என்றுதானே வேதாகமம் கூறுகிறது!
Post Comment