விவேசினி – ஒரு அறிவார்ந்த திரை அனுபவம் – ஜமாலன்
‘மெய் நாக்குக் கண் மூக்குச் செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் தமக்கு விடயமாகிய திரவியங்களை அறிய அவற்றால் விளைந்த அனுபவம் உண்மை யனுபவம். இந்திரியங்களுக்கு விடயமில்லாத திரவியங்களும் உளவெனச் சத்தமாத்திரத்தானறிந்து பாவனா வாசனையாய் விளைந்த அனுபவம் பொய்யனுபவம். இப்பொய்யனுபவத்திற்குக் காரணம் சமய சாத்திரங்களும் சமய போதனையும் சமயவொழுக்கப் பயிற்சியும் சமயிகளுடைய சகவாசமுமாம்’ (தத்துவ விவேசினி 2, 43 மேற்கோள் ந. முத்துமோகனின் ‘தத்துவவிவேசினி இதழ்களில் மெய்யியல் விவாதங்கள்’ என்ற கட்டுரையிலிருந்து)

தமிழ் திரையியக்கத்தில் 2023ல் பல போராட்டங்களுக்குப்பின் வந்துள்ள தற்சார்புத் திரைப்படமான (independent film making) “விவேசினி” ஒரு முக்கியமானத் திரைப்படம். இந்த “முக்கியமான” என்ற சொல் வழக்கமான மனச்சாய்வுடன் எழுதப்பட்டதில்லை. காரணம் பல பகுத்தறிவு சார்ந்த மற்றும் உளவியல் அடிப்படைகளைப் பேசும் திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால், அவற்றில் இத்திரைப்படம் ஒரு சிறந்த பார்வையின்பத்தையும், பகுத்தறிவையும், மனிதர்களின் உளவியல் இயக்கத்தையும் காட்சிப் படிமங்களாக மாற்றி சிறந்ததொரு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்பட மொழியில் உளவியல் குறித்தும், திரை உருக்களின் (பாத்திரங்கள் என்பார்கள்) மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதற்கு சினிமா குறித்து நுட்பமான அறிவுள்ளவர்களால் மட்டுமே முடியும். அவ்வகையில் இத் திரைப்படத்தின் திரைமொழி உளவியல், குறிப்பாக பிராய்ட் கூறும் நனவிலி சார்ந்த படிமங்களை, காட்சிகளாக பல கட் ஷாட்டுகள் வழியாக ஒருவரது மனத்திரையில் ஒன்றின்மீது ஒன்று மேற்பொருந்தி அதாவது திரைப்பட மொழியில் சொன்னால் juxtapose செய்யப்பட்ட காட்சிகள் வழி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இயக்குநரின் இந்த அறிவார்ந்த வாசிப்பு இத்திரைப்படத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளது. அதற்கான உழைப்பை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். உளவியல் சார்ந்த நனவிலி பிம்பங்களை வெளிப்படுத்துவதற்கான திரைப்படக் கல்வியில் பயிற்சியாக இத் திபை்படத்தைப் பயன்படுத்தலாம். அதனால்தான், தமிழில் முக்கியமான என்ற சொல்லை பயன்படுத்தினேன்.
உலக வரலாற்றில் ‘பகுத்தறிவு’ என்ற நவீனமயமாதலின் கருத்தியல் மேற்கத்திய அறிவுவாத சமூகத்திலும், உணர்ச்சிகள் மேலிட்ட கீழைத்தேய சமூகத்திலும் சந்திக்கும் புள்ளியில் வரலாற்றுக் கணத்தில் இத் திரைக்கதையாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய சமூகம் உலகைப் புரிந்துகொள்ள முதலாளிய வளர்ச்சிக்கு அடிப்படையான அறிவியல் மனோபாவத்தை உருவாக்க உலகெங்கிலும் தனது காலனிய நாடுகளில் அறிவுவாதத்தை பரப்பியது. அதற்கு காரணமாக அமைந்தது இந்திய சனாதனக் கல்வியை ஒழித்து, அறிவை அடித்தட்டு மக்கள்வரைக் கொண்டு செல்வதற்கான பொதுக்கல்வி முறையை மெக்காலே உருவாக்கியதே. அதனால் கல்விப்பெற்ற விடுதலை, சமத்துவ, சனநாயகப் பண்புக் கொண்ட ஒரு தலைமுறையினர் உருவாக்கிய ‘நாத்திக வாதம்’ (‘நாஸ்தி’ என்ற அழிவைக் குறிக்கும் சமஸ்கிருத சொல்லில் இருந்து உருவானது, ‘ஆஸ்தி’ என்றால் சொத்து, அதனால் பகுத்தறிவுவாதம் என்பதே சரி) எப்படி தமிழ் சிந்தனை மரபின் அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை சொல்கிற ஒரு கதையாடலே இத்திரைப்படம். அதவாது ‘சென்னை இலௌகிக சங்க’த்தினரால் வெளியிடப்பட்ட ‘தத்துவ விவேசினி’ என்ற இதழின் வழியாகவே தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனை மரபிற்கும், மேற்கத்திய பிராட்லாவால் உருவாக்கப்பட்ட சிந்தனை மரபும் ஒன்றுபடும் புள்ளியை தற்கால கதையாடலாக வைத்துப் பேசுகிறது இத்திரைப்படம்.

தமிழில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு சொற்றொடர் “பெரியார் மண்” என்பது. உண்மையில் இந்த பெரியார் மண் என்பதற்கான உளவியலைப் புரிந்துகொள்வது அவசியம். சில மாதங்களுக்கு முன்பு இறந்து போன அமெரிக்க பேராசிரியரும், பின்நவீன மார்க்சியருமான பிரடரிக் ஜேம்சன் முன்வைக்கும் கருத்தாக்கமான அரசியல் நனவிலி (political unconscious) என்ற கருத்தாக்கமே இதனைப் புரிந்துகொள்ள பொறுத்தமானது. அதாவது ஒரு அரசியல் சமூகத்தில் சமூகநனவிலி என்பது அரசியல் நனவிலியால் கட்டப்படுகிறது. இதன்பொருள் பெரியார் ஒரு அரசியல் நனவிலியாக மாறி தமிழ் சமூகத்தின் கூட்டுநனவிலியை இயக்குபவராக மாறியுள்ளார். அதனால்தான் கடவுள் நம்பிக்கை என்கிற பாமர வேட்கை ஒரு புறம் ஆதிக்கம் வகித்தாலும், மற்றொருபுறம் இந்துத்துவ அரசியலை எதிர்க்கும் திராவிடம் சார்ந்த மனநிலை நிலவுகிறது. இந்த அரசியல் நனவிலியில் பகுத்தறிவின் பங்கு என்ன? என்பதையும் அது எப்படி கூட்டுநனவிலிக்குள் செயல்படுகிறது என்பதையும் ஒரு திரைப்படமாக முன்வைக்கிறது ‘விவேசினி’.
தமிழின் முதல் பகுத்தறிவு சார்ந்த இதழான ‘தத்துவவிவேசினி’ என்பதில் இருந்து இப்பெயரை எடுத்துள்ளனர். கதையின் நாயகிக்கு சக்தி என்ற பெயரை சூட்டியதைவிட ‘விவேசினி’ என்ற பெயரையே சூட்டியிருக்கலாம். ‘விவேசினி’ என்றால் “எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்” என்ற பொருள் கொண்ட பிராகிருதச் சொல். விவேகம் என்று சொல்லப்படும் வழக்குச் சொல்லின் அடிப்படையில் உருவான வினைச்சொல். விவேகம் உள்ளவர் நம்பிக்கையையோ அல்லது மூட நம்பிக்கையையோ ஏற்க மாட்டார். தனது சொந்த ஆராய்ச்சிகள், புலன் அனுபவங்கள் மூலம் பட்டறிவைக் கொண்டு பகுத்தறிவால் ஆராய்ந்தே ஒரு முடிவிற்கு வரவேண்டும். அவ்வகையில் இத் திரைப்படம் “பேய்பிடித்தல்” என்ற சிக்கலாகவும், இதுவரை அதற்கான அறிவார்ந்த காரணத்தை அறிய முடியாத நிலை இருப்பதையும் கொண்டு அதன் பின்னுள்ள பகுத்தறிவையும், அனுபவத்தையும் ஆராய்கிறது. கதை பேய்பிடித்தல் என்ற மூடநம்பிக்கையைத் தகர்க்க காட்டிற்குள் பேய் உள்ளதாக நம்பப்படும் இடத்திற்கு சென்று அதன் உண்மைகளை ஆராய்ந்து வெளிக் கொணர்வதே. பொதுவாக, இப்படியான திரைப்படங்கள் திட்டமிட்டு சிலர் தன் நலத்திற்காக பேய் என்ற பொய்யைக் கட்டமைத்து மக்களை பயமுறுத்துவார்கள் என்பதாக காட்டி கதையை முடிப்பார்கள். ஆனால், இத்திரைப்படம் நான்கு முக்கியத் தளங்களில் இதை ஆராய்கிறது. ஒன்று காட்டை தங்கள் வேட்டைக்காடாக மாற்ற முனையும் கார்பரேட் சாமியார்கள் இந்த மூட நம்பிக்கையை பயன்படுத்துவது என்கிற அரசியல் தளம். இரண்டு கார்பரேட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பசுமைப் போராளிகள் பேயாக மாறி அந்த இடத்தை பாதுகாப்பது என்கிற பழங்குடிகளின் நம்பிக்கை என்கிற சடங்கியல் தளம். மூன்று இதனை ஆராயப் போனவர்களின் மனதாக கட்டமைக்கப்பட்ட நனவிலி என்கிற உளவியல்தளம். நான்கு மரங்கள் உயிர்ப்புடன் எப்படி தன்மீதான அழிவை எதிர்கொள்கின்றன என்கிற பசுமை உயிர் சார்ந்த தளம். இத்தளமே திரைப்படத்தின் பகுத்தறிவிற்கான அடிப்படை.

இதில் முதல் இரண்டு தளங்கள் பலத் திரைப்படங்களில் மிகவும் மேலோட்டதாக தங்கள் அரசியல் நோக்கிலும், வணிக நோக்கிலும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொறுப்பற்ற அத்திரைப்படங்கள் மக்களின் உணர்ச்சிகளான பயம், எதிர்ப்பு, சுதந்திரம் போன்றவற்றை மூலதனமாக்கி தங்கள் கல்லாக்களை நிரப்ப முயன்றன. அவை எதிர்க்கும் மக்கள் குறித்தோ சமூகம் குறித்தோ அக்கறையில்லை. ஆனால், இத்திரைப்படம் சமூக அக்கறையுடன் பல கடினமான சூழல்களைக் கடந்து எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதன் மூன்றாவதுதளம்தான் இத்திரைப்படத்தை மூட நம்பிக்கை என்பதன் அரசியல், வணிகப் பயன்பாடுகள் தாண்டி அது முழுக்க பகுத்தறிவும், தன் அனுபவம் சார்ந்த ஒன்று என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது. இத்தளம்தான் முக்கியமானது. அதைப் புரிந்துகொள்ள நமது உடலுக்குள் உள்ளதாக நம்பப்படும் ‘மனம்’ என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதைச் சற்று சுருக்கமாகவேனும் புரிந்துகொள்வது இத் திரைப்படத்தை ஒரு பார்வையாளர் அதன் ஆழ்தளத்தில் புரிந்துகொள்ள உதவும்.
‘மனனே’ என்று கூறும் தொல்காப்பியத்திலிருந்து தமிழ்ச் சமூகத்தின் ‘மனம்’ என்ற ஒன்றின் வரலாறு துவங்குகிறது. இம் மனம் என்பது உடலுக்குள் உள்ள இதயம் என்பதைக் குறிப்பதாக பல இலக்கியங்கள் வழியாக உருவமைக்கப்பட்டுள்ளது. அதைக் கண்டுபிடிக்க இன்றைய நவீன அறிவியலின் முன்னொடியாகக் கருதப்படும் ரெனே தெகார்த் பல முயற்சிகள் செய்து அது மனிதர்களின் ‘பினைல் கிளாண்டி’ன் விளைவு என்றார். உண்மையில், மனம் என்பது மூளையின் உணர்வு சார்ந்த செயல்பாட்டையே குறிக்கிறது. மூளைதான் அறிவு, உணர்வு உள்ளிட்ட உடலின் அனைத்தையும் கட்டமைப்பது. மூளையின் நினைவகப் பதிவுகளாக உள்ள வேதியல் மற்றும் நரம்பியலே மனம் என்று வரையறுக்கலாம் நவீன அறிவியலில். இப்பதிவுகள் மூன்று அடுக்குகளாக இருப்பதாக சிக்மண்ட் பிராய்டின் உளவியல் மாதிரிகள் முன்வைப்பதுடன் இணைத்து நோக்கலாம்.
பிராய்டுதான் மனம் என்பதை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து விளக்கிய முதல் உளவியல் அறிஞர். அவர் மனம் என்பது நனவு (conscious), நனவடங்கு (sub conscious), நனவிலி (unconscious) என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது என்றார். மனதின் நனவுப் பகுதி நமது அன்றாடச் செயல்களை நிகழ்த்துவது. நனவடங்கு பகுதி நனவு மனத்தால் அடக்கப்பட்ட பகுதி. நனவிலி என்பது நனவுடன் தொடர்பில்லாத ஒருவரது குழந்தைப் பருவத்திலிருந்து சமூகம், குடும்பம், வரலாறு, சூழல், சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றிலிருந்து தன்னறிவோ, தன்னுணர்வோ இன்றிப் தனது புலன்கள் வழியாகப் பெறும் பாதிப்புகளால் உள்ளடங்கி கிடப்பது. பிறக்கும் குழந்தை ஒரு வெற்றுத்தாளைப் போன்றது. அதில் அது வளரும் சூழல்களால் எழுதப்படுவதே மனம் என்பது. அப்படி எழுதப்படும்போது சமூகம் அங்கீகரிப்பவை, நிராகரிப்பவை, தடைசெய்யப்பட்டவை என அனைத்தும் அக்குழந்தையின் மூன்று பகுதிகளாக உருவமையும். அதில் ஆழ்மனம் என்கிற நனவிலிதான் நம்மை அறியாமல் நாம் செய்யும் பல நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறது பிராய்டியம்.

இத்திரைப்படம் ஒரு மனிதருக்குள் ஏற்படும் கடவுள், பேய் போன்றவற்றின் உணர்வுகள் உருவாக அவர் வளர்ந்த சிறுபிராய நனவிலியின் ஒடுக்கமே காரணம் என்பதை அடிப்படையாகக் கொண்டது என்பதை காட்சிகள் வழி விளக்க முனைகிறது. பேய் பயம் என்பது சமூகத்தால் கட்டப்பட்ட பல கதைகளின் வழி உருவாகக் கூடியது. மொழிவழிக் கட்டப்பட்ட கதைகளே இத்தகைய பயம் துவங்கி அன்பு உள்ளிட்ட பல உணர்வுகளுக்கு காரணமாக அமைகிறது. அது ஒருவரது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் நனவற்றதான நனவிலிப் பதிவுகளினால் உருவாகும் பல பிம்பங்களின் ஊடாட்டமே என்பதை ஐந்து வெவ்வேறு திரை உருக்களின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்டு நிறுவுகிறது. காட்டிற்குள் செல்லும் ஐந்து பேரும் ஒரே பேய் பயத்தில் அவர்கள் காணுவதாக கருதும் வெவ்வேறு பிம்பங்களும் அதனால் உருவாகும் அமானுஷ்யமான உணர்வும் அது ஏற்படுத்தும் பயமும் அவர்களை பேயை நம்பவைக்கும் ஒன்றாக இருக்கிறது. பிறகு அவை அனைத்தும் அவர்களுக்குள் உள்ள சிறுபிராய உணர்வுச் சிக்கலால் உருவான மனப்பிராந்தியின் (டிராமா என்பார்கள் ஆங்கிலத்தில்) விளைவாக உருவானது என்பதை அவர்களது சிறுபிராயக் கதைகளுடன் இணைத்து நிறுவுகிறது இத்திரைப்படம். இந்த உலகில் மனிதர்கள் அனைவரும் நரம்புநோய்க் கொண்டவர்கள் என்று பிராய்ட் கூறியதற்குக் காரணம், பேய்Xகடவுள் என்ற இருமைகளால் கட்டப்பட்ட பல கதைகளே. இதனை சிறப்பாக காட்சிப் படுத்தி உள்ளனர். ஒரே பேய் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒருவித பிம்பங்கள் தோன்ற அந்த டிராமாவை உருவாக்குவது ஏன்? என்பதிலிருந்து இந்த தர்க்கம் கட்டப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழில் சிறப்பானதொரு அறிவியல் சார்ந்த உளவியல் படமாக வெளிவந்துள்ளது. நாம் அறியாததாக எண்ணும் அப்பாலையான பலவும் அதாவது கடவுள், பேய், மொழியால் கூறமுடியாத உணர்வுகள் என அனைத்தும் பகுத்தறிவு சார்ந்த ஓர் உளவியல் இயங்குமுறையின் விளைவுதான். குழந்தையிலிருந்து மனம் என்கிற கட்டமைப்பை இந்த சமூகம் தனக்கு ஏற்ப வடித்தெடுக்கிறது. அதன் பல கோணலான அதிகாரமும், வன்முறையும், இச்சைகளும் சிறுபிராயத்தவர்களிடம் ஒரு சிக்கலான மனநிலைக்கான நனவிலியைக் கட்டமைக்கிறது. அதனை அறிவார்ந்த தளத்தில் புரிந்துகொண்டால் இத்தகைய மூடநம்பிக்கைகள் முற்றிலுமாக அழிந்து ஓர் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க முடியும். அப்படியான சமூகமே கார்ப்பரேட் சாமியார்கள் வனத்தை வளைத்து சிவலிங்கம் வைத்து யோக மடங்கள் நடத்துவது, பெரிய நிறுவனங்கள் தொழிற்கூடங்கள் அமைப்பது, காட்டு மூலவளங்களை கொள்ளை அடிப்பது, மாதவிடாய் காரணம்காட்டி பெண்ணை கோவில்களுக்கு அனுமதிக்க மறுப்பது ஆகியவற்றை தடுத்து நிறுத்த முடியும்.
இத்திரைப்படத்தின் மிகமுக்கியமான நான்காவது தளம் சூழலியல் சார்ந்து இயற்கையின் உயிர்மச் சூழலில் மரங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள போரிடும் வழிமுறைகள் குறித்து பேசும் பகுதிதான். காட்டை கருவறையாகக் கருத வேண்டும் என்று தாய் என்ற பொருளில் உடலியல், இறையின் உறைவிடம் என்ற பொருளில் இறையியல் என்ற இரண்டையும் இணைக்கிறார் இயக்குநர். இந்த திரைக்கதை நூல் இப்படி இத்திரைப்படத்தின் குறிப்பு பொருளை அல்லது இறைச்சியாக உள்ள உட்பொருளை இயக்குநரின் பார்வையில் விளக்கிச் செல்கிறது. இந்நூல் அவ்வகையில் திரைப்படத்தின் பல ஆழமான உட்பொருளை, குறியீடுகளை உணர்ந்து அனுபவிப்பதற்கான ஒரு கையேடாக அமைந்துள்ளது. அடிப்படையில் சிக்கலான கதையும், உளவியலின் ஆழ்ந்த பொருளையும் கொண்ட இத்திரைப்படத்தை அதன் பல்வேறு பரிமாணங்களில் புரிந்துகொள்ள இந்நூல் உதவும். புதிதாக திரைக்கதை எழுதுபவர்களுக்கு ஒரு பயிற்சி ஏடாகவும் அமையும். இதனை நூலாக வெளியிடுவதின் வழியாக ஒரு திரைப்படத்தை காண்பதற்கான பயிற்சியையும் வழங்குவதாக அமைந்துள்ளது. இந்நூல் பல காட்சிகளை பார்வையாளருக்கு விளக்கும் விதமாகவும், அதன் நுண்பொருளை காட்சியில் அனுபவிப்பதற்கான வாய்ப்பை விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மரங்கள் எப்படி உயிர்ப்புடன் உரையாடுகின்றன, தன்னை கொல்பவனை எதிர்ப்பதற்கு அவை உருவாக்கும் உத்திமுறை ஆகியவை ஒரு புதிய சூழலியல் அறிவை தரக்கூடியதாக அமைந்துள்ளது. அதிகாரம் மரங்களை வெட்டி சாய்ப்பதும், அதை எதிர்த்துப் போராடுபவர்களையும் மரங்கள்போல வெட்டி சாய்ப்பதும் ஒரே நிகழ்வுதான். மரங்கள் இயற்கை பேரிடர்கள் அல்லது தங்கள் மரத்திலிருந்து வெளிப்படும் ஒருவித போதை வேதிமம் போன்றவற்றின் வழியாக தனது எதிரிகளிடம் போரிடுகிறது. நமக்குப் பரிச்சயமான மூணார் மற்றும் கொடைக்கானலுக்கு இடையிலான மதிகெட்டான் சோலை. அங்கு செல்பவர்கள் மதிமயங்கிவிடவதற்க்கு காரணம் அம்மரங்கள் வெளிப்படுத்தம் ஒரு மயக்க வேதிமமே. இப்படி அழவிலிருந்து மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கையோடு இயைந்து போராட வேண்டிய உணர்வை தருவதாக இத்திரை அனுபவம் அமைந்துள்ளது. நடிகர்கள் சிறப்பாக தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர். இதனை தானே தயாரித்து இயக்கிய இயக்குநரின் தன்னம்பிக்கையும் சமூக பொறுப்பும் பாராட்டுக்குறியது. இத் திரைப்படத்தை பள்ளிக் குழந்தைகளுக்கு காட்சிப்படுத்தி விளக்குவதன்மூலம் பகுத்தறிவிற்கான அடிப்படை விதைகளை ஊன்ற முடியும். அதை இன்றைய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இத்திரைப்படத்தை பகுத்தறிவுப் பின்னணியில், பல ஆய்வுகள் செய்து, அதற்காக லண்டன் வரை சென்று பல்வேறு சிரமங்கள், கஷ்டங்கள் வழியாக உருவாக்கிய படக் குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
jamalan.tamil@gmail.com
Post Comment